ஒரு பழைய சம்பாஷணை'' - நங்கநல்லூர் J K SIVAN
கிருஷ்ணனே கட்டுண்ட மந்திர சக்தியுடைய தூய பக்தி ராதையிடம் மட்டுமே இருந்தது.
ராதையின் உயிர் மூச்சு கிருஷ்ணன். கிருஷ்ணனின் ஜீவ சக்தி ராதை. இரண்டையும் எப்படி தனித் தனியாக பிரிக்க முடியும், பார்க்க முடியும்?.
கிஷ்ணனின் குழலோசையில் தனை மறந்து, உலகை மறந்து ஏதோ ஒரு நாக பாசத்தில் கட்டுண்ட எத்தனையோ ஜீவன்களில், கோபியரில், ராதை முதன்மையானவள். ''ஓஹோ, என்னைக் காட்டிலுமா, கிருஷ்ணன் இந்த புல்லாங்குழலை அதிகம் விரும்புகிறான்?' என்று எண்ணி கிருஷ்ணனின் மூங்கில் புல்லாங்குழல் மீதே பொறாமை கொண்டு அதை ஒளித்து வைத்தவள் ராதா. ராதா லக்ஷ்மி அவதாரம் என்பார்கள்.
ஒருதரம் கிருஷ்ணன் ராதா இருவரும் பிருந்தாவனத்தில் சந்தோஷமாக யமுனை நதிக்கரையில் ஓடியாடிவிட்டு மலர்க்கொடிகள் நடுவே அவர்களின் ஏகபோக சாம்ராஜ்யமான மது வனத்தில் மரத்தடியில் அமர்ந்து இருந்தனர். சுற்றிலும் மான்களும் , மயில்களும் புடை சூழ்ந்து இருந்தன. தலைக்கு மேலே பறவைகள் ஆனந்தமாக வட்டமிட்டுக்கொண்டு இருந்தன.
"உன் புல்லாங்குழல் வாசிப்பை கொஞ்சம் நிறுத்த
மாட்டாயா கிருஷ்ணா? "
"ஏன் ராதா, என் பாட்டு உனக்கு பிடிக்கவில்லையா?
''பிடித்ததால் தான் நிறுத்த சொன்னேன்!.
"பிடித்தால் ஏன் நிறுத்தவேண்டும்?
"உனக்கென்ன வீட்டுக்கு போய் விளையாடுவாய், தூங்குவாய், நான் எவ்வளவு வேலை செய்ய வேண்டும் தெரியுமா? உன் பாட்டில் மயங்கிவிட்டால் என்னால் அப்புறம் ஒரு வேலையும் செய்ய முடியவில்லை".
"அப்படி என்ன பெரிய வேலை உனக்கு?
"உன்னை மாதிரி சுதந்திரமாக விளையாடிக்கொண்டு ஓடி ஆடித் திரிபவளா நான்?, எனக்கு வீடு வாசல் குடும்பம் எல்லாம் இருக்கிறது உனக்குத் தெரியாதா?'
அப்போ என்னை கல்யாணம் பண்ணிக்கோ?"
''ஹா ஹா ஹா '' ராதை வாய் கொள்ளாமல் உரக்க சிரித்தாள்
ஏன் சிரிக்கிறாய் ராதா ?
"கிருஷ்ணா, ஒரூ ஜீவன் தன்னைத் தானே கல்யாணம் பண்ணிக்க முடியுமா? கல்யாணம் செய் து கொள்ள ரெண்டு பேர் வேண்டாமா? நாம் ரெண்டு பேருமே ஒண்ணு என்கிறபோது ரெண்டாவது ஆள் யாரு?
கல்யாணம் என்பதற்கு இரண்டு மனித ஜீவன்கள் அல்லவோ தேவை. நீ இல்லாமல் நான் இல்லை, நான் இல்லாமல் நீ இல்லை. இந்த உலகத்தில் இரு உடல்களுக்கு தான் கல்யாணம் பண்ணுகிறார்கள், உள்ளத்துக்கு கல்யாணம் எதற்கு?
''அடேடே ஆச்சர்யமா இருக்கே நீ சொல்வது? அப்புறம்??'
'அது சரி கிருஷ்ணா, நீ இன்னும் கொ ஞ்ச நாளில் ப்ருந்தாவனத்தை விட்டு போய்விடப் போகிறாயாமே ? ஊரில் பேசிக்கொள்கிறார்களே .
''ஆமாம்
'''ஹும் .. உனக்கென்ன? மதுராவிற்கு போய் அங்கே ராஜாவாகி விடுவாய். நிறைய பேரை கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போகிறாயே நான் எதற்கு?
“யார் சொன்னது அப்படி. ராதா நீ எனக்கு எப்போதும் வேண்டும் “
''நான் மட்டும் வேண்டாமென்றா சொன்னேன்?
என் மனத்தில், உன் உடலில் உயிர் உள்ளவரை நீ இருப்பாய், நானும் அவ்வாறே உன் மனத்தில், உன் உயிரோடு கலந்தவள் என்று நீ சொல்லவே வேண்டாம். எனக்கே அது தெரியும். நம் தூய நட்பை, பாசத்தை, நேசத்தை, அன்பை நாம் இருவருமே அறிவோம். சகல ஜீவன்களும் கூட அறியும். இதோ இந்த புல்லாங்குழலைக் கேட்டுப்பார். அதற்கும் நன்றாகவே தெரியும்.''
''எனக்குத் தெரியும்''
''கிருஷ்ணா, மதுராவிற்கு போனதும் .உனது ராஜ்ய பரிபாலனத்தில், உனது லோக க்ஷேம காரியங்களில், பிரபஞ்ச சம்ரக்ஷணத்தில் என் அடையாளமான இந்த புல்லாங்குழலை நீ தொடவே தொடாதே. கையில் எடுக்காதே. அதைப் பிரியாதே, இடுப்பிலேயே இருக்கட்டும். அது தான் நான்.!! உன் சங்கு சக்கரம் மட்டுமே உன் கையில் இருக்கட்டும்''
''ஆஹா அப்படியே ராதா ''
''கிருஷ்ணா, நீ சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் மட்டும் , நீ தனியாக உனக்கென்று நேரம் கிடைக்கும் போது மட்டும், இந்த குழலை எடு. வாசி, அதன் ஒலி நாம் எங்கிருந்தாலும் என்னை அது உன்னிடம் சேர்க்கும். நான் எங்கிருந்தாலும் அது என் காதில் தேன் மாரியாக பொழிந்து என் மனத்திலேயே அடைக்கலமாகும். செய்கிறாயா?''
"ஆஹா அப்படியே '
'''கிருஷ்ணா, இனி நீ என்னைத் தேடி வரவேண்டாம். நான் உன்னை நாடி வரவேண்டாம். அது பிரிந்து இருப்பவர்கள் செய்ய வேண்டிய வேலை, நமக்கு ஏன்? நாம் தான் பிரிக்கவே முடியாதவர்கள் ஆயிற்றே.''
ஒருநாள் கம்சன் அனுப்பிய அக்ரூரர் வந்தார். பிருந்தாவனத்தைப் பிரிந்து கிருஷ்ணன் மதுரா சென்றான் கம்சனை வதைத்தான். எண்ணற்ற அசுரர்களும் அரக்கர்களும் அவன் நேரத்தை எடுத்துக் கொண்டனர். சாந்தீப முனியிடம் சென்று பயின்றான். பின்னர் துவாரகை சென்றான் அரசனானான். எட்டு மனைவியரை மணந்தான். பாரதப்போரில் ஈடு பட்டான். ஒருதரம் கூட ராதையை நாடி பிரிந்தாவனம் செல்லவில்லை. அவளும் அவனைத் தேட வில்லை.
அவசியம் அதற்கு எங்கே இருந்தது?
வெளிநாடுகளிலிருந்தேல்லாம் கூட நிறைய பேர் இப்போதெல்லாம் கோவர்தன பரிக்ரமாவுக்கு செல்கிறார்கள். மறக்கமுடியாத அனுபவம் அது. அங்கு முதலில் குசும் சரோவர் என்று ஒரு ஏரி இன்னும் இருக்கிறது. இங்கு 5000 வருஷங்களுக்கு முன்பு கிருஷ்ணன் கோபியர்களோடு களித்து விளையாடி யிருக்கிறான். ஏரி இருக்கிறது. கிருஷ்ணனை நினைவு படுத்துகிறது. அவன் இன்னும் அங்கே நினைவில் தான் இருக்கிறான். சைதன்ய மகாபிரபு 500 வருஷங்களுக்கு முன்னர் ஆவலோடு இங்கு வந்து பார்த்து அதில் ஸ்நானம் செய்திருக்கிறார். அங்கிருந்து ஒரு சில மீட்டர் தூரத்தில் கோவர்தன கிரி பூமியிலிருந்து வெளிப்பட்ட இடம் உள்ளது. கர்க சம்ஹிதை சொல்லும் கோவர்தன மலையின் பிறப்பிடம் இங்கு தான். தொடர்ந்து சென்றால் வருவது மானஸி கங்கா. இதுவும் ஓர் அற்புத ஏரி. இதுவுமே கிருஷ்ணன் கோபியரோடு கூடிக் களித்து விளையாடிய இடம். இந்த ஏரி யைப்பற்றி ஒரு ருசிகர கதை அப்புறம் சொல்கிறேன்.
No comments:
Post a Comment