Sunday, February 6, 2022

VALLUVAN

 வள்ளுவன் வாக்கு  -   நங்கநல்லூர்   J K  SIVAN 



''யா காவாராயினும் நா காக்க, காவாக்கால்
சோகாப்பர்  சொல்லிழுக்கு பட்டு '' 


மேலே  சொன்னது  திருவள்ளுவரின்  திருக்குறளில் ஒன்று.   அடேயப்பா, இதை எத்தனை தரம், இத்தனை வருஷங்களில் படித்திருக்கிறேன், நினைத்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன்,  அதன் ருசி மட்டும் அல்ல, அதில் பொதிந்திருக்கும்  மறுக்க முடியாத, மறக்க முடியாத,  உண்மை காலம் காலமாக அதே  சக்தியோடு, எந்த காலத்திலும் எவருக்கும்  பொருத்தமான  அறிவுரையாகவே திகழ்கிறதே. பலர்  அனுபவத்தால், புண் பட்டு  புரிந்து கொண்டவர்கள்.  சிலர் பல  முறை அடிபட்டும், நாய் வால் போல் நிமிர்த்த முடியாத,  திருந்தாதவர்களாக  இருப்பதை  கண் கூடாக பார்க்கிறோம்.   

எலும்பில்லாத நாக்கு என்ன வேண்டுமானாலும் பேசும்  என்பது ரொம்ப சரி.   நாக்கிலே நரம்பில்லாமலே பேசறான் பாரு என்று சொல்கிறோமே.  தெரிந்தே  இப்படி பேசுபவர்கள் இன்றைக்கும் இருப்பதை,  வாட்சாப், யூ ட்யூப், செயதித்தாள், பத்திரிகைகள்,  டிவி  எல்லாம் அடையாளம் காட்டுகிறது.  திருத்தமுடியாத, திருந்தாத ஜென்மங்கள்.
  
ரொம்ப பெரிய மனிதன் ஒருவன், படித்தவன் என்றாலும், நாவடக்கம் இல்லாதவன் சமூகத்தில் இழிந்தவனாகவே கருதப்படுகிறான்.  அவன்  படிப்பால் , கல்வியால் என்ன பயன்?

இனிமையான சொல் நிறைய இருக்கிறதே. அவற்றை பயன் படுத்த எந்த பணமும் காசும் கொடுக்க வேண்டாமே.  சுலபமாக, இலவசமாகவே, கை நிறைய, வாய் நிறைய கிடைக்கிறதே.  அதனால் எவ்வளவு நன்மை அடையலாம். ஏன் தெரியவில்லை?

சிலர்  எதற்கெடுத்தாலும் தன்னையே  நொந்து கொள்பவர்கள். அவர்களால் மற்றவர்களின் இயற்கையான உற்சாகம், தன்னம்பிக்கை செத்து விடும். ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் அவர்களிடத்தில்.   அதிகம் பேச விடக்கூடாது. பேசினாலும் அதைக்  கேட்காமல் நழுவி விடவேண்டும்.

அதேசமயம் தன்னைப்பற்றியே  பேசி, தம்பட்டமடிப்பவர்களும் உண்டு.  அவர்களைத் தவிர மற்றவர்கள் அவர்களை மதிப்பதில்லை என்று உணராதவர்கள். ஒரு வகை  காமெடியன்கள்  

நல்ல சொற்கள் எவரையும் புண் படுத்துவதில்லை.  இனிக்க இனிக்க மகிழ்வு தருகிறது.  ஜன ரஞ்சகமாக இருக்கிறது.  வள்ளுவர் எங்கே  இதெல்லாம் எழுத கற்றார்?  இவ்வளவு சின்னூண்டு ஒன்றரை அடியில்  எவ்வளவு பெரிய உலகம் போன்ற உண்மையை அடக்கி வைத்திருக்கிறார்.  ஆயிரம் வருஷங்கள் ஆனாலும்  என்றும்  மாறாத உண்மைகளை இவ்வளவு எளிமையாக, குட்டி குட்டியாக  வேறு யார்  சொல்லி இருக்கிறார்கள்? 
 தெய்வப்புலவர் என்று யார் பேர் வைத்தது?  வாய்  நிறைய  ஒரு கிலோ சர்க்கரையை கொட்டலாம்.   இன்னொரு  விஷயம் கவனித்தீர்களா?  
வள்ளுவரின் வாக்கு  ஒரு நாடு, மக்கள், எல்லை, குலம் , மதம், எல்லாம்  கடந்து அனைவருக்கும் பொதுவாக  பொது சொத்தாக இருப்பதை  உணர்ந்து அவரை நமஸ்கரிக்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...