Sunday, February 20, 2022

VAINAVA VINNOLI

 வைணவ விண்ணொளி -  நங்கநல்லூர்  J K  SIVAN


தூதுவளை மூலம் ஒரு தூது.

யமுனாசார்யார்  நாதமுனிகளின் பேரன்.  இவர் பிறந்த காலம்  கி.பி 916 -  ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு இருந்தவர்.  இவருக்கு  ஆளவந்தார்  என்ற  பெயர் எப்படி வந்தது என்று முந்தைய கட்டுரையில் அறிந்தோம் அல்லவா?  ஸமஸ்க்ரிதம் , கிரந்தம், தமிழ்  ஆகியவற்றில் நிபுணர்.    விசிஷ்டாத்வைதத்தின் சாராம்சங்களை  விரிவாக 6  நூல்களாக  ராமானுஜருக்கு  முன்னரே
இயற்றி இருக்கிறார்.  இன்னொரு  அபூர்வ  விஷயம்   இவரைப்  பற்றி என்னவென்றால்  இவர்  தான்  வைணவ  ஆச்சர்யர்களுக்குள்ளே  முதலில்  ஸம்ஸ்க்ரிதத்தில்  நூல்களை  அளித்தவர். இவரது  நூல்களே  பிற்காலத்தில்  ராமானுஜர்  விசிஷ்டாத்வைத கோட்பாடுகளை  நிலைநாட்ட  பெருமள வில்  உதவின  என்பது  முக்கியம்.

ஸ்ரீ  வைஷ்ணவம் ஏற்கனவே இரு ந்தாலும் அதை பலப் படுத்த, ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தை ஒரு சிறந்த கோட்பாடாக உயர்த்தினவர் ஸ்ரீ ராமானுஜர். யுக புருஷர் என்று சொன்னால் அது மிகை ஸ்ரீ ராமானுஜர் ஒரு அபூர்வ, அதிசய மனிதர். ஆதிசேஷனின் அவதாரம். ஸ்ரீ ராமானுஜர் சங்கர பகவத் பாதருக்கு இணையாக ஸ்ரீ பாஷ்யம், பகவத் கீதை வேதாந்த சாரம் வேதார்த்த சங்க்ரஹ நூல் களையும் வேதாந்த வியாக்யானங்கள் பலவும் எழுதினவர். ஞானி. அத்வைதத்தை சற்றே வேறுபடுத்தி விசிஷ்டாத்வைதம் என்ற சித்தாந்தந்தை நிலை நாட்டியவர்.   ஸ்ரீ வைஷ்ணவத்தின் பலமான அஸ்திவார தூண்.   அவருக்குப் பின்னால் அவரைப் பற்றிய நூல்கள் அநேகம் வெளியாயின. அவற்றுள் சிறந்தவை அனந்தாச்சார்யார் எழுதிய ப்ரபன்னாம்ருதம் என்கிற    ஸம்ஸ்க்ருத நூல். அநேக தமிழ் நூல்களும் இவ்வாறு ஸ்ரீ ராமனுஜரின் வாழ்க்கை அவருடைய உபதேசங்க ள் அனுபவங்கள் பற்றி ஆதார பூர்வமாக சொல்கின்றன.     ராமா   னுஜரின் வாழ்க்கையை அறியும் முன் சில மஹனீயர்களை பற்றி முதலில் தெரிந்துகொண்டால் தான் சரித்திரம் பூரணமாகும்.

ஸ்ரீ நாதமுனிகள் 908 கி.பி. யில் பிறந்த ஒரு பிராமணர்.    ஆழ்வார் பாசுரங்களையும் ஸம்ஸ்க்ரித உபதேசங்களையும்  தேடித் திரட்டியவர். வைணவ உலகம் மிகவும் அவருடைய  இந்த பிரதான, பிரமாத  சேவைக்காக காலமெல்லாம் கடமைப் பட்டிருக்கிறது. ஆழ்வார்கள் சாதாரண பிறவிகள் அல்ல. விஷ்ணு அம்சம் கொண்டவர்கள், விஷ்ணுவின் சங்கம், சக்ரம், வைஜயந்தி மாலை, கதாயுதம், தாமரை, கௌஸ்துபம், சார்ங்கம் என்ற வில், நந்தகம் எனும் வாள் போன்றவற்றின் மனித உரு பிரதி பிம்பங்கள். பக்தியில் ஊறிய சிறந்த தமிழ் இலக்கிய அமுது வழங்கிய மா மேதைகள்.

தமிழ் வேதம் என்று உலகளாவிய புகழ் பெற்ற நாலாயிர திவ்ய பிரபந்தத்தை நாம் பெற்று அனுபவிக்க காரணமானவர் ஸ்ரீ நாதமுனிகள். ஸ்ரீ ரங்கத்தில் ஒவ்வொரு  நாள் காலையிலும் தமிழ் வேதம் ஒலிப்பதை செவி குளிரக் கேட்கும் ஒவ்வொருவரும் சிரமேற் கரம் குவித்து ரங்கநாதனோடு சேர்த்து வணங்க வேண்டியவர் ஸ்ரீ நாத முனிகள். 

ஸ்ரீ ரங்கன் ஆலய  நிர்வாக, பராமரிப்பு  பொறுப்பேற்று தனது அந்திம காலத்தில் பரமனடி சேரும் வரை வாழ்ந்தவர் ஸ்ரீ நாதமுனிகள். ஸ்ரீ நாதமுனிகளின் மகன் ஸ்ரீ ஈஸ்வர முனி. இளம் வயதிலேயே பரமபதம் அடைந்தவர். அவருக்கு மகனாக பிறந்தவர் ஸ்ரீ யாமுனாச்சர்யர். இவரே ஸ்ரீ ராமனுஜரின் மானசீக குரு. ஈஸ்வர முனி மறைவுக்குப் பின் நாதமுனிகள் சன்யாசம் மேற் கொண்டார். யோகிந் த
ரர் என்று போற்றப்பட்டார். அவரது ஸ்ரீ வைஷ்ணவ கோட்பாடுகள், வாதம், நியாய தத்வம், பக்திக்கும் யோகத்துக்கும் உண்டான சம்பந்தம் இவற்றை விளக்கி அவரால் எழுதப் பட்ட நூல் யோக ரஹஸ்யம்.,

இப்போது யமுனாசார்யர் பற்றி சில விஷயங்களை அறிவோம். ராமானுஜர் காலத்துக்கு முன்பாக இருந்த பிரதான ஸ்ரீ வைஷ்ணவ தூண்களில் நாதமுனிகளுக்கு பிறகு இவரும் ஒருவர். மதுரையில் 953 கி.பி.யில் பிறந்தவர். தாயும் பாட்டியும் எப்படியோ கஷ்ட ஜீவனத்தில் அவரை கல்வி கேள்விகளில் தேற உதவினர். சிறந்த அறிவாளி. அவரது குரு ஸ்ரீ பாஷ்யசார்யரின் பிரதான சிஷ்யனாக திகழ்ந்தவர். மென்மையான குணம் படைத்த ம்ருது பாஷி. எல்லோராலும் விரும்பப் பட்டவர். அவரைப் பற்றிய முந்தைய கட்டுரை  ரொம்ப ஸ்வராஸ்யமானது.  

பன்னிரண்டு வயதிலேயே மதுரை ராஜாவின் புகழ் வாய்ந்த வித்வான் கோலாஹலன் என்ற ஒரு பண்டிதனை வாதத்தில் வென்று பாண்டிய ராஜ்யத்தில் பாதிக்கு அதிபதியாக.  ராஜாவானவர் ஆளவந்தார் என்ற விருதைப் பெற்ற  யமுனாச்சார்யார் . எத்தனையோ பண்டிதர்களை தோல்வி பெறச்செய்து அவர்களிடம் கப்பம் பெற்று, அவர்களில் பலருக்கு மரண தண்டனையும் அளித்தவன் அந்த பண்டிதன். யமுனாச்ச்சார்யாரின் குரு ஸ்ரீ பாஷ்யாச் சாரியாரும் அவனிடம் தோற்று கப்பம் கட்டியவர்களில் ஒருவர்.
இன்றும் யமுனாச்சாரியர் பெற்ற ராஜ்யத்தின் ஒரு பகுதி ஆளவந்தார் மேடு என்று இருக்கிறது.

காலப் போக்கில் ஸ்ரீ நாதமுனிகள் விஷ்ணு பதம் அடைந்தார். மறையுமுன்பு தனது சிஷ்யர் ஸ்ரீ நம்பியை அழைத்து

'' இனி நீயே யமுனாசார்யனை ராஜ்யபாரம் எல்லாம் தவிர்த்து ஸ்ரீ வைஷ்ணவம் பரவ செயல் பட வைக்க வேண்டும். இந்த பொறுப்பை உன்னிடம் உன்னிடம் ஒப்புவிக்கிறேன்.'' என்றார்.

காலம் ஓடியது. நம்பிகள் ஆளவந்தார் அரண்மனை அடைந்தபோது  அரண்மனை  சேவகர்கள்  நம்பியை  உள்ளே சென்று  ராஜா  ஆளவந்தாரை  சந்திக்க  அனுமதிக்க வில்லை.  ஆளவந்தாரை பார்க்க முடியவில்லையே  எப்படி  குருநாதர் செய்தியை  அறிவிப்பது?  என்னசெய்வது என்று யோசித்த நம்பி அரண்மனை பரிசாரகர் ஒருநாள் காய்கறிகள் வாங்கிக்கொண்டு அரண்மனை திரும்பும்போது வழியில் கண்டு

''அப்பனே, நான் ஆளவந்தாரை மிகவும் நேசிப்பவன். அவர் நிரம்ப கல்வி கற்றவர். அவருக்காக இதைத்  தருகிறேன். என்று சில தூதுவளை கீரைகளை கொடுத்தார். தூதுவளை ஞாபசக்தி அதிகரிக்க உதவும். அந்த மேதாவி மேன்  மேலும் கற்று சிறப்புற வாழ்வது வையகத்துக்கும் வைணவத்துக்கும் நல்லது. ஆகவே அவற்றை தினமும் சமைத்து ஆளவந்தாருக்கு பரிமாற கேட்டுக் கொள்கிறேன்'' என்கிறார்

சமையலில் அன்றுமுதல் தூதுவளை கீரை இடம்பெற அந்த நல்ல சமையல் காரரும் ஒப்புக் கொண்டார். அன்றுமுதல் தினமும் நம்பிகளும் விடமால் தூதுவளை கீரையை ஆளவந்தார் உணவுக்கு சப்ளை செய்து வந்தார்.

ஒருநாள் நம்பிகளால் தக்க நேரத்தில் தூதுவளை கொண்டு வந்து கொடுக்க இயலவில்லை. ஆளவந்தார் ராஜாவுக்கு அன்று சாப்பாட்டில்  தூதுவளைக் கீரை இல்லை. ''

''ஏன் இன்று கீரை சமைக்க வில்லை?

''வழக்கமாக நம்பிகள் என்று ஒரு வைஷ்ணவ சாது தினமும் உங்களுக்கு சமைத்துப் போட கொண்டு தருவார். இன்று என்னமோ அவரை காணவில்லை''

''ஹும் சரி. அடுத்த முறை   அவர் இங்கு வரும்போது என்னிடம் அழைத்து வா''

அடுத்த நாள் தூதுவளைக் கீரையோடு நம்பிகள் ராஜா ஆளவந்தார் முன் கொண்டு வந்து நிறுத்தப் பட்டார்.

''என்னிடம் உங்களுக்கு என்ன வேண்டும்?' எதற்கு தினமும் எனக்கு தூதுவளை கீரை அனுப்புகிறீர் கள் ' என்றார் ராஜா.

''அரசே உங்களிடம் தனிமையில் ஒரு நிமிஷம் பேச வேண்டும்'. அனுமதிக்க வேண்டுகிறேன்''

''எல்லோரும் போகலாம்' என்று ஆளவந்தார் ராஜா உத்தரவிட தனிமை அங்கே நிலவியது.

''என்ன சொல்லவேண்டுமோ இப்போது சொல்லலாம்'' என்றார் யமுனாச்சர்யார் என்கிற ஆளவந்தார் மகாராஜா.

நம்பிகள் ஸ்ரீ நாதமுனிகளின் முக்தியைப்  பற்றி சொன்னார். அவரது கடைசி அபிலாஷையான ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய உத்தாரண சேவை யமுனாசார்யர் மூலம் நிறைவேற வேண்டும் என்பதைப் பற்றியும் கூறினார். மற்ற மதங்கள் போட்டியிடும் நிலையில் ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம் மக்களி டையே பிரபலமடைய  அதை பரப்பும்  தகுதி பெற்ற   ஆசார்யன் இல்லை என்ற குறை பற்றி விளக்கினார். யமுனாசார்யர் ஒருவரே அதற்கு உகந்தவர் என்றும் நாதமுனிகளின் விருப்பத்தையும்  எடுத்துக் கூறினார். அரச போகத்தில் கடமையை  மறக்க வேண்டாம் என்று எடுத்துரைத்தார்.

''யமுனாச்சார்யாரே,    நீங்கள் உங்களது அரசுரிமை துறந்து ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய உத்தாரணம் மேற்கொள்ள  தக்க  நேரம் வந்து விட்டது. இனியும் தாமதம் செய்வது முறையல்ல'' என்றார்  நம்பி.
 பகவத் கீதை உரைகளை எடுத்து சொல்லி நம்பிகள் அவரை ஸ்ரீ ரங்கம் ஆலயத்துக்கு வரவழைத்தார். நம்பிகளிடம் உபதேசம் பெற்று ஆளவந்தார் ராஜ போகம் துறந்து ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய சேவை மேற்கொண்டார். ஏற்கனவே சிறந்த ஞானி அல்லவா? ஸ்ரீ வைஷ்ணவத்தை பிரசாரப் படுத்த தக்க சமயத்தில்  ஆசார்யனாக கிடைத்தது பெரும் பாக்கியம் என்று ஸ்ரீ வைஷ்ணவ உலகம் மகிழ்ந்தது.

வேதங்களில் காணும் பாஞ்ச ராத்ர வழிபாடு முறை நிர்ணயமாகியது. கிருஷ்ண பக்தி உயிர்ப் பிக்கப் பட்டது. விஷ்ணுவைப் போற்றி அவர் எழுதிய ஸ்தோத்ர ரத்னம் என்கிற நூல்  பிரதான பிரார்த்தனை நூலாகியது. கீதா சங்க்ரஹம் பகவத் கீதை உரையாகியது.   ஆகம ப்ரமாண்யம் பாஞ்சராத்ர வழி  முறையை விளக்கியது. வைஷ்ண வேதாந்தம், ஸித்தித்ரயம் , ஆத்ம ஸித்தி, ஆகிய நூல்கள் ஈடு இணையற்ற ஸ்ரீ வைஷ்ணவ காவியங்கள் எனலாம். அவர் எழுதியவை பெரும்பாலும் ஸம்ஸ்க்ரித நூல்கள். இதில் ஒரு முக்ய அனுகூலம் ஏற்பட்டது. வேத சாஸ்திரங்கள் அநேகமாக வட மொழியிலேயே இருந்த காலம். வடமொழியில் வைஷ்ணவம் அதிகம் பரவ வாய்ப்பில்லை. தெற்கே தமிழில் ஆழ்வார்கள் பாசுரம் வடக்கே எல்லை தாண்டவில்லை. பிற்காலத்தில் ஸ்ரீ ராமானுஜர் தேசம் முழுதும் ஸ்ரீ வைஷ்ணவம் பரவ ஸ்ரீ யமுனாச்சார்யாரின் ஸம்ஸ்க்ரித கைங்கர்யம் பேருதவி செய்தது.

ஸ்ரீ வைஷ்ணவத்துக்கு ஆழமான அஸ்திவாரம் ஸ்ரீ யமுனாச்சர்யர் போட்டு வைத்ததால் ஸ்ரீ ராமானுஜ ருக்கு மேலே ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாய மாளிகைகள் எழுப்ப ரொம்ப ரொம்ப  சௌகர்யமாக போய்விட்டது.  ஸ்ரீ யமுனாச்ச்சார்யாரின் கனவை ஸ்ரீ ராமானுஜர் நிறைவேற்றினார்.

யமுனாசாரியாரின் சிஷ்யர்களில் பிரதானமானவர் ஸ்ரீ பெரிய திருமலை நம்பி. (ஸ்ரீ சைல பூர்ணர்) அவருக்கு இரண்டு சகோதரிகள். பூதேவி ஸ்ரீதேவி என்று பெயர் கொண்டவர்கள். ஸ்ரீ பெரும்புதூரில் இருந்த ஸ்ரீ ஆசுரி கேசவாச்சர்யர் என்பவருக்கு ஒரு சகோதரியை திருமணம் செய்து கொடுத்தார்., அவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு இளையாழ்வார் (லக்ஷ்மணன் பெயர்) என்று நம்பிகள் பெயர் சூட்டினார். லக்ஷ்மணன் ராமனுக்கு இளையவன் எனவே ராமானுஜன் என்ற பெயர் நிலைத்தது. உலகப் பிரசித்தி பெற்ற ஒரு பெயர் அல்லவா இது.  

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...