ஹிந்து ஸநாதன தர்மம் - ஈடிணையற்ற ஒரு தத்வம்.
நங்கநல்லூர் J K SIVAN
மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சி.
அட்வைஸ் அனந்தராமன் சொன்ன சில விஷயங்கள் பழைய டயரியில் அகப்பட்டது. எங்கே இருந்து இதெல்லாம் பிடித்து, படித்து, சொன்னானோ?, அவனுக்கே வெளிச்சம். அதில் சில உண்மைகள் பொதிந்திருப்பதை, இப்பவும் பொருந்துவதை, 60 வருஷங்களுக்குப் பின்னும் உணர முடிந்தது. அனந்தராமன் சின்ன வயதில் மறைந்தவன் அப்புறம் என்ன பிறவி எடுத்தானோ?, இன்னும், இப்போது, எங்கே யாருக்கு அட்வைஸ் பண்ணிக் கொண்டிருக்கிறானோ? யானறியேன் பராபரமே.
''சாமி மேலே நம்பிக்கையா. நீ ஆஸ்திகன்'' --- ஒப்புக்கொள்கிறேன்.
''சாமியாவது பூதமாவது, ஒண்ணும் கிடையாது'' -- -- நீ நாஸ்திகன் பா''
''இது தான் சாமி, வழிபடணும் . பூஜை பண்ணனும் ''--- நீ மூர்த்தி உபாசகன். சரி
''சாமி கல்லுலே, படத்திலே எல்லாம் இல்லே'' ---- ஓஹோ அதனாலென்ன.. நீ உருவ வழிபாடு இல்லாத நிர்குண ப்ரம்மனோ? சரியப்பா.
''மதத்தை பற்றி விவாதிக்கணுமா? சரி. தர்க்கவாதியோ, குதர்க்க வாதியோ, இருந்துட்டு போ. பரவாயில்லை''
'' இல்லே, காலா காலமா இருக்கிற பழக்க வழக்கத்தை நான் நம்பறேன். -- ரொம்ப சந்தோஷம் கன்டின்யூ பண்ணு .
''கீதை படிக்க ஆரம்பிச்சு என் வாழ்க்கையை துவங்கப்போகிறேன்'' --- பரம சந்தோஷம். செய்யப்பா''
'' கீதை மட்டும் இல்லை ஸார் , எனக்கு உபநிஷதங்களும் தெரிஞ்சுக்க விருப்பம் தான். அதையும் படிப்பேன்'' -- ஆஹா நல்ல பையன். உடனே ஆரம்பி.''
'' புராணங்களில் இருந்து தான் ஆரம்பிக்கணும் ஸார் , அது தான் படிப்படியா வளர்க்கும்'' --- அப்படியா? செய்யலாமே. வா என் வீட்டிலிருந்து படிக்கலாம் ''
''சார், எனக்கு அதிலே எல்லாம் உடன்பாடு இல்லே. புராணமோ வேறே எந்த புஸ்தகமுமோ வேண்டாம். டைம் கிடைச்சா, கண்ணை மூடிண்டு சாமியை நினைச்சா போதும்ங்கரேன்'' --ஓஹோ பக்தி மார்க்கமா? நடக்கட்டும் நடக்கட்டும்.
''கண்ணை மூடிண்டு உட்கார்ந்தா எல்லாம் சரியாயிடுமா? நெற்றி வியர்வை நிலத்திலே சிந்தி உழைக்கணும் ஸார். உழைப்பில் தான் உலகநாதன் தெரிவான்'' --- ஓஹோ நீ கர்மயோகி. பக்தி மார்க்கம் வேறேயாச்சே.
''இதோ பாருங்க ஸார் , இந்த உலகத்திலே பிறந்தது எதுக்கு? நன்றாக யோசியுங்க. சுகமா தின்னுட்டு தூங்க. வேறே எதைப்பத்தியும் யோசிக்கவே வேண்டாம். அவசியமில்லை ' ----' அப்பனே உன்னை தான் சார்வாகம் தத்துவவாதி என்று சொல்றாங்க.
''அவன் சொல்றதை எல்லாம் கேட்காதீங்க. இனிய சுக போக வாழ்க்கை வாழ நாம் பிறக்க வில்லை. உடலை லக்ஷியம் செய்யாமல் எல்லாவற்றையும் துறக்கவேண்டும். வாழ்வே மாயம். --- அடேயப்பா, நீ துறவி. சாது. சந்தோஷம். அப்படியே ஆயிடு.
''ப்ராக்டிகலா பேசணும். சாமி எங்கே இருக்குன்னு முதல்லே தெரிஞ்சுக்கணும்?. எதிரே பாருங்கோ, எத்தனை மரம் செடி கொடி , புல்லு பூண்டு, பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இயற்கை வளம். அது தான் சாமி. மரமே மஹாதேவன்.'' ---- ஆஹா இயற்கை உபாசகனா நீ. பலே பேஷ்.
''அவன் சொல்றது வாஸ்தவம். கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார். எல்லாம் அவர் ஒன்று தான், உன்னையும் என்னையும் சேர்த்து. கண்ணுக்கு தெரியாத ஒரு பரம்பொருள், பரம சக்தி '' ---- நீ தான் பா ஆதி சங்கரர் சொன்ன அத்வைதி.
''எது என்ன செய்தாலும் ப்ரயோஜனமே இல்லைங்க . எல்லாவற்றுக்கும் ஒரு குரு வேணும் . அவரை வணங்கி தான் ஆசியோடு வாழ வேண்டும்.'' ---- அப்பா நீ பக்தன். ஞானி.
''குரு என்று ஒருவர் அவசியமே இல்லை. உனக்கு நீயே குரு. சிஷ்யனும் கூட. -- ஓஹோ ப்ரம்ம ஞான, ஆத்ம ஞான தேடலா? சபாஷ். தியானம் பண்ணு .
''எல்லோரும் உண்மையை மறந்துட்டு என்னென்னவோ பேசறீங்க. இந்த உலகம் இயங்குவதே
அம்பாள் ஒருவளால் தான். அவளில்லையேல் எதுவுமில்லை. சக்தியே சிவன். '' நீங்கள் தான் சக்தி உபாசகர்..
'எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஓருடல், சம உரிமை எதிலும் எல்லோருக்கும் இருக்கு சார். நாம் ஒரே குடும்பம். '' மனித உரிமை ஸமத்வம் கொண்டாடுவதை தான் வஸுதைவ குடும்பகம் என்று சொல்வது'' -----. பரந்த மனசுப்பா உனக்கு ''
''சார் பண்டிகை எல்லாம் கொண்டாட நேரமில்லை. வருஷம் பூரா ஏதேதோ பண்டிகை எல்லாம் வருதே, அதிலே ஏதாவது கொண்டாடிக்கோங்கோ....-- விசேஷங்களை இப்படி அலசுபவரா நீங்கள்?. அவ்வளவு பிசியா நாள் கிழமை கூட கொண்டாட முடியாமல்? பரவாயில்லை ஒத்துக்கிடுவோம். அப்பவும் நீங்க ஹிந்து தான் .
கோயிலுக்கு போக நேரம் இருக்கா, போகணும்னு விருப்பமானது இருக்கா. உங்க பக்தியை மெச்சிடுவோம்.
கோவிலுக்கு போவதில் இஷ்டமில்லையா. பரவாயில்லை சார். அப்போவும் நீங்க ஹிந்து தான்.ஏன்னு கேட்டா, ஹிந்துயிசம் மதம் இல்லை. ஒரு நெறிமுறை. நிறைய சுதந்திரம் வாரி வழங்கி இருக்கு.
எல்லாமே கடவுள், எல்லோருமே கடவுள்னு சொல்றோமே. உங்க அப்பா அம்மாவை, வாத்யார், குரு, நதி, மரம், பூமி, பிரபஞ்சம் எல்லாத்தையும் வழிபடலாம் ஸார். எல்லாம் ஓகே தான்.
உங்களுக்கு எதிலுமே நம்பிக்கை இல்லையா, அப்பா அம்மாவை கூட. அப்போ கூட உங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம் சார். ஓகே.
"Sarve jana sukhino bhavantu " (May you all live happily) எல்லோரும் இன்புற்றிருக்கவே யன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே தான் எங்க தாரக மந்திரம்.
என் அன்புள்ள ஹிந்து வே, நீ மேலே சொன்ன எதுவாக இருந்தாலும் சுபிக்ஷமாக வாழவேண்டும் என்பது தான் எங்கள் உள்ளார்ந்த விருப்பம்.
இப்படி பெருந்தன்மையோடு தாராள உள்ளத்தோடு காலாகாலம் இருப்பதால் தான் ஆல் போல் தழைத்தோங்குவது நமது ஹிந்து சனாதன தர்மம். எத்தனை எதிர்ப்புகள், கத்தி வெட்டு, நெருப்பு, அழிப்பு, காயங்கள், நாச கார்யங்கள், எல்லாம் அமைதியாக ஏற்ற எம் முன்னோர் வாழ்க..
பொறுமையின் பூஷணம் அவர்கள். வெளியே இருந்து வந்த ஆபத்துகள் நீங்கி உள்ளேயே உடலில் புற்றுநோய் போல் தோன்றினாலும் பொறுத்தார் பூமி ஆள்வாராக இருக்கிறோம்.
காணும் யாவும் கண்ணனின் லீலையே என்று ஏற்கிறோம். நாம் அழிவற்ற சிரஞ்ஜீவிகள்.
மனித குலத்தின் முதல் வேதாந்த புத்தகம் ரிக்வேதம் என்ன சொல்கிறது காதில் விழுகிறதா:
आ नो भद्राः क्रतवो यन्तु विश्वतः -" Ano bhadrah Krathavo Yanthu Vishwathah"- Let the knowledge come to us from every direction " உலகத்தில் எல்லா பக்கத்திலிருந்தும் ஞானம் நம்மை வந்தடையட்டும்.
No comments:
Post a Comment