Tuesday, February 15, 2022

SRI LALITHA SAHASRANAMAM


 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -  நங்கநல்லூர்  J K SIVAN

ஸ்லோகங்கள் 179-180   நாமங்கள் 977-989

दशमुद्रा-समाराध्या त्रिपुराश्री-वशङ्करी ।
ज्ञानमुद्रा ज्ञानगम्या ज्ञानज्ञेय-स्वरूपिणी ॥ १७९॥

Dashamudra samaradhya tripura shrivanshankari
gynanamudra gynanagamya gynanagyneya svarupini – 179

தசமுத்ரா ஸமாராத்யா த்ரிபுராஸ்ரீவசங்கரீ
ஜ்ஞான-முத்ரா ஜ்ஞானகம்யா ஜ்ஞானஜ்ஞேயஸ்வரூபிணீ 179

योनिमुद्रा त्रिखण्डेशी त्रिगुणाम्बा त्रिकोणगा ।
अनघाऽद्भुत-चारित्रा वाञ्छितार्थ-प्रदायिनी ॥ १८०॥

Yonimudra trikhandeshi trigunanba trikonaga
anaghadbhuta charitra vanchitardha pradaeini – 180

யோநிமுத்ரா த்ரிகண்டேசீ த்ரிகுணாம்பா த்ரிகோணகா
அநகாSத்புத-சாரித்ரா வாஞ்சிதார்த்த-ப்ரதாயினீ 180

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்லோகங்கள் 977-989  அர்த்தம்

*977*  दशमुद्रा-समाराध्या   தசமுத்ரா ஸமாராத்யா
முத்திரை என்பது  கை  விரல்களால்  வழிபடும் தெய்வத்துக்கு  காட்டப்படும் பக்தி ஸ்ரத்தையான  மரியாதை சின்னங்கள்.. அம்பாளுக்கு  காட்டப்பட்டு முத்திரைகள் 10 வகை. ஸமாராதனை  என்றால் சேர்ந்து வழிபடுவது.  முத்திரைகளை தனி சக்தி உண்டு.  தக்ஷிணா மூர்த்தி சின் முத்திரை
அதி விசேஷமானது. மனிதர்களுக்கு  காட்டப்படுவதல்ல இவை.  மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு காட்டும்போது சூர்யசந்திர  ஒளி சக்தி கொண்டவை. அஞ்ஞானத்தை போக்குபவை.ஆகம சாஸ்திரம்  மூன்று வகை  வழிபாட்டு முறைகளை சொல்கிறது.வாம மார்க்கம், தந்த்ர மார்க்கம், கௌள  மார்க்கம் என்று அவற்றுக்கு பெயர். கை  விரல்களால்  உடலின் பல பாகங்களை தொட்டு அவற்றை பரிசுத்தமாக்க உச்சரிக்கும் மந்திரம் நியாஸம் .   அம்பாளை வழிபட   ஸ்ரீ வித்யா  உபாசனையில்  இந்த பத்து முத்திரைகள் சம்ப்ரதாயம்.    நவாவரணத்தில்  லலிதாம்பிகையாய்  வழிபட யோனிமுத்திரை உபாசனை முக்கியம். பல முக்கோண முத்திரங்களை ஒன்று சேர்த்து உபாசிப்பது  சர்வ த்ரிகண்ட முத்திரை.

*978*  त्रिपुरा-श्रिवशंकरी  த்ரிபுராஸ்ரீவசங்கரீ
நவாவரண பூஜையில் ஐந்தாவது ஆவாரணத்தில் அம்பாளின் பெயர் த்ரிபுராஸ்ரீ. கேட்டதெல்லாம் கொடுப்பவள். ஸர்வார்த்த ஸாதகி.  

*979*  ज्ञानमुद्रा 
ஜ்ஞான-முத்ரா 
ஞான முத்திரையை தான் சின்  முத்திரை என்பது. கட்டைவிரல் நுனி, ஆள்  காட்டிவிரல் நுனி இரண்டும் இணைத்து மற்ற மூன்று விரல்கள் தனித்து சேர்ந்து காட்டப்படுவது.  ஜீவாத்மா பரமாத்மா ஐக்கியத்தை  உணர்த்துவது. 

*980*  ज्ञान-गम्या  
ஜ்ஞானகம்யா 
ஞானம் என்பது ஒரு  வழிமுறை. ஞானத்தின் மூலம்  தான் அம்பாளை உணரமுடியும்.  யார் வேண்டுமானாலும் அம்பிகையை  ஞானத்தின் மூலம் தரிசிக்கலாம். பாவனா எனும் த்யானம், பக்தி, ஞானம்  என்ற மூன்று வழிகளில் ஞானவழி இது.

*981*  ज्ञान -ज्ञेय-स्वरूपिणी   ஜ்ஞானஜ்ஞேயஸ்வரூபிணீ  
லலிதா ஸஹஸ்ர நாமம்  நிறைவை  நெருங்கிக் கொண்டிருக்கிறது.    ஞானம் ரொம்ப அவசியம் . இதை  வாக் தேவிகள்  விடாமல்  அடிக்கடி  சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.  அம்பாள்  ஞான ஸ்வரூபிணி.  கீதையில்  (XIII.17) கிருஷ்ணன் சொல்வது விளங்கும்:  பரப்பிரம்மம் என்பது ஒளியின் ஒளி. மாயையைக் கடந்தது.  ஞானத்தின் மொத்த உருவம். எல்லோரும்  பெற  வேண்டுவது.  ஒவ்வொருவர்  ஹ்ருதயத்திலும்  குடியிருப்பது. ஞானத்தை விட  உயர்ந்தது வேறெதுவுமில்லை. அதுவே  ப்ரம்மமாக  நம்முள் நாம் உணராமலேயே ஒளிர்வது.  

*982*  योनि-मुद्रा  
யோநிமுத்ரா 
யோனி முத்ரை என்பது  பத்து முத்திரைகளில் ஒன்பதாவது.  ஆக்கத்திற்கு,  பெருக்கத்துக்கு  அவசியமான  சக்தி  தருவது.   அம்பாளை இந்த முத்ரை  காட்டி  வழிபட்டால் வம்சவிருத்தி அடையும். தெய்வீக  உணர்வு வளரும்.  

*983*  त्रिखण्डेशी   த்ரிகண்டேஸ்ரீ 
த்ரிகண்டா  என்பது  பத்தாவது முத்ரை.  வழிபாட்டு சடங்கின்  போது  அம்பாளை அழைப்பது.   பல முக்கோண களின்  ஒன்று சேர்க்கை தான்  த்ரிகண்டா முத்ரை. பஞ்சதசி மந்திரத்தின்  மூன்று குஜங்களை இது குறிக்கிறது என்பார்கள். 

*984* त्रि-गुणा  
த்ரிகுணா
சத்வ, ரஜோ, தமோ  எனும் முக்குணங்களின்  மொத்த உரு  அம்பாள்.   மூன்றும் கலந்திருந்தாலும், சத்வ குணம் உள்ளபோது மற்ற  ரஜோ தமோ குணங்கள் அதிகம் தலை நீட்டாது.  சத்வ குணம்  புனிதமானது.   ரஜோகுணம்  செயல்படவைக்கும், உணர்ச்சிமயம்.    தமோ குணம்  அஞ்ஞானம்.

*952*  अम्बा அம்பா 
உணர்ச்சி பொங்கும்  நாமம்   அம்பா.   ஆனந்தத்தின்  அதிர்வை பிரதிபலிக்கும் நாமம்.  தாயைத்தான்  அம்மா, அம்பா  என்கிறோம்.  வாக்தேவிகள்  அம்பாளின்  மஹிமையை  ஸ்தோத்ரம் செய்யும்போது  வார்த்தைகள் வராமல் பொங்கி எழும்  ஆனந்தத்தில் உச்சரிக்கும்  நாமம்   அம்பா.
பக்தியோடு  அம்பாளை வழிபடும்போது   தானாகவே வெளிப்படும் நாமம்  அம்மா, அம்பா 

*986*  त्रिकोणगा  த்ரிகோணகா
முக்கோணமாக  தென்படுபவள்.  முக்கோணத்தில் உறைபவள். ஸ்ரீ சக்ரத்தின் உள்ளடங்கிய மத்ய பாகத்தில்  ஸர்வஸித்தி ப்ரதா சக்கரமாக திகழ்பவள்.  எட்டாவது  ஆவாரணத்தில் காண்பவள்.  

*987*  अनघा அநகா
அகா என்றால் பாப்பம்.  அசுத்தம்.  துன்பம்  அம்பாள் இதெல்லாம் போக்குபவள். பரிபூர்ண ப்ரம்மம்.  பரமேஸ்வரன்  ஒரு பாதி.  

*988*  अद्भुत-चारित्रा 
Sத்புத-சாரித்ரா 
அதி உன்னதமான, ஈடற்ற, இயற்கையை மிஞ்சிய, அதிசய  விசேஷ  சரித்திரம் அம்பாளுடையது.  அற்புதமான  என்ற  ஒரு வார்த்தை இது அத்தனையையும்  தன்னுள் கொண்ட நாமம்.  அம்பாள்  சகுண ப்ரம்மம்.  

*989*  वाञ्चितार्थ-प्रदायिनी  
வாஞ்சிதார்த்த-ப்ரதாயினீ
கேட்டதை அருள்பவள்  அம்பாள்.   ஸௌந்தர்ய லஹரியில்  4வது ஸ்லோகம்:  அம்மா   ஈரேழு லோகங்களிலும்  நீ ஒருவள்  தான்  அடைக்கலம்.  மற்ற  எல்லா தெய்வங்களும் பக்தர்களுக்கு  கரங்களால் அருள் வழங்கும்போது நீ  உன் காலைப்  பிடித்தவர்களுக்கு,  திருவடியை நினைத்தவர்களுக்கு,  காலால் அருள் பாலிக்கிறாய்.  உன் திருவடிகளின் சக்தி அவ்வளவு உன்னதமானது.

மஹா பெரியவா சொன்னது கா தில் எதிரிலோலிக்கிறது:  '' மனசை  ஏதோ ஒரு உருவத்தை நினைத்து  தியானம் செய்ய  அப்பியாசப் படுத்துவது ரொம்ப கடினம். விடாமல் மந்திரம் உச்சரி என்றால் கேட்காது.  ஆனால் முதல் படி எடுத்து வைக்கவேண்டும். அது என்ன?  மனதுக்கு பிடித்த உருவத்தை முதலில் தேர்ந்தெடுக்கவேண்டும். அது கிருஷ்ணனோ, பிள்ளையாரே, அம்பாளோ சிவனோ, மாதவனோ, சுப்ரமணியனோ  ஏதாவது ஒரு உருவம்.  அம்பாளின் திருவடி சட்டென்று மனதில் பிடிபடும்.  சுலபமாக அவள் தாமரைத் திருவடிகள் மனதில் பதியும்.  அதன் அழகை  நினைத்து தியானம் செய்யலாம். அப்படியே  அது பழக்கமாகிவிடும். அப்புறம் என்ன?  அவள் அருளால் பிறப்பு இறப்பு எல்லாம்  விலகும்.  முதலில் ஸ்தோத்திரங்களை  படிக்க, மனப்பாடம் செய்ய  பழகவேண்டும். அப்பறம்  ஜபம்.  அப்புறம் தியானம்.   அம்மா பராசக்தி, என்னை கரை சேர்த்துவிடு.   அம்மா  என்  உடம்பிலிருந்து பிராணன்  போன பிறகும் உன் நாமம் என் ஆத்மாவில் விடாது ஒலித்துக்கொண்டே  இருக்கவேண்டும்.  அப்படி  வேண்டிக்கொண்டே இருந்தால், அவள்  திருவடி நெஞ்சிலிருந்து அகலாது.   இந்த உடலை விட்டபின் அவளோடு  ஒன்று சேர  முக்தி பெறலாம்..

சக்தி பீடம்:  அம்பிகா மாதா   ஆலயம்,  ஜகத் .

ராஜஸ்தான்  ராஜ்யத்தில்,   உதய்பூரிலிருந்து 50 கிமீ. தூரத்தில்  உள்ள  ஜகத்  என்கிற  ஊரில்,  இந்த அம்பாள் குடி கொண்டி ருக்கிறாள்.   ஆஹா நமது  பாரத தேசம் எவ்வளவு பழம் பெரும் புண்ய பூமி. எத்தனை  ஆலயங்கள், எத்தனை புண்ய நதிகள்! ஆன்மீக பொக்கிஷம்.  எவ்வளவு உயர்ந்த பண்பாடு,  வளமை, சகல ஐஸ்வர்யங்களும் கொண்ட பூமி.  ஐஸ்வர்யம் இருக்கிற  வீட்டுக்குள் தான்  திருடன் வந்து கொள்ளையடிப்பான்.  நமது நாடு எத்தனை ஊடுருவல்களை, ஆக்கிரமிப்புகளை சந்தித்திருக்கிறது. ஹிந்து சனாதன தர்மத்தை அழிக்க  இன்றுவரை எத்தனை முயற்சிகள்!. இதை முறியடிக்க நம்முள் ஒற்றுமை மிக மிக அவசியம். ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனினும்  அந்நியர் வந்து புகலென்ன  நீதி?  என்று கேட்டவரே  ஒரு பிராமண கவிஞர் பாரதியார் தானே.

கிர்வா எனும் மலைத்தொடர் நடுவே  உள்ள கிராமம் தான் ஜகத். அதில் மலையில் குகைக் கோவிலாக  அமைந்துள்ளது  அம்பாளின் ஆலயம்.  10ம்  நூற்றாண்டு கோவில்,  இன்னும்  அநேக கோவில்கள் இருக்கும்  ஊர்.    சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட  ஆலயம்.   அதி அற்புதமான  ஸரஸ்வதி ,  மகிஷாசுர மர்த்தினி, வீணா தாரிணி, நவ தர்கா,   நர்த்தன கணபதி விக்ரஹங்கள் தவிர  வாயு, குபேரன், யமன் ஆகியோருக்கும்  சிலைகள் உள்ளன. 
961ல் இந்த  அம்பிகா கோயில்  அப்போது ஆண்ட  ராஜாக்களால்  நிர்மாணிக்கப்பட்டது.  
ஒரு பெரிய மண்டபம், அதை ஒட்டி ஒரு  விசாலமான பிரார்த்தனை ஹால் . ஜன்னல்கள் வேலைப்பாடுகள் கொண்டவை.  மேலே  விதானம்  பிரமிட் மாதிரி கும்பாச்சியாக காண்கிறது.  உள்ளூர் சாயம் இன்னும் கலர் மாறவில்லை. கதவுகள் நேர்த்தியாக  செய்யப்பட்டவை.   ஜகதாம்பிகை தரிசனத்துக்கு எண்ணற்ற பக்தர்கள்  விடுமுறை நாட்களில் இங்கே  அம்முகிறார்கள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...