Monday, February 28, 2022

SIVALAYA OTTAM


 சிவராத்திரி நினைவுகள்  -   நங்கநல்லூர்   J K  SIVAN


தூக்கம் என்பது  ஒரு சில மணி நேரங்கள் என்பதால் எனக்கு தினமுமே சிவராத்திரியாக தான் இருக்கிறது.சும்மா  படுக்கையில் படுத்து , எதையெல்லாமோ நினைத்துக்கொண்டு  உருள்வதற்கு பதில்  கம்பியூட்டர்  எதிரே அமர்ந்தால் என்னை மறந்து, எனக்குத் தெரிந்த, நான் படித்து புரிந்துகொண்ட, கேட்ட, பாடிய  சில  ஆன்மீக  விஷயங்களை எழுத ஆர்வமாக இருக்கிறது.  இந்த ஆர்வம் எட்டு வருஷத்துக்கு மேலாக  தொடர்வதால் 105-110  புத்தகங்கள் எழுதி அச்சேர தயாராக உள்ளது. 35 புத்தகங்கள் இதுவரை அச்சேறி வெளியாகிவிட்டது.  தினமும் 20 மணி நேரம் குறைவில்லாமல்  படிப்பதிலும் எழுதுவதிலும் செலவாவது ஒரு  தனி  சுகம்  தான்.  கொரோனாவுக்கு  கோடி நமஸ்காரம். எங்கும் வெளியே நகராமல் செய்துவிட்டதால் அதிக நேரம்  என் காட்டில்  ஆன்மீக மழை.
இன்று சிவராத்திரி.  வருஷா வருஷம் முன்பெல்லாம் சிவராத்திரிக்கு    சில  நண்பர்களோடு ஒரு வண்டி வைத்துக்கொண்டு  மாலை 6 மணிமுதல் மறுநாள் காலை 7 மணி வரை  பல சிவாலயங்கள் செல்வோம்.  வழியெல்லாம் பாட்டு, பஜன், நாம ஸ்மரணம், கோவில் பிரசாதங்கள் மட்டுமே  உணவு.

கோவில்களில்  நிறைய வில்வம் எடுத்துக்கொண்டு போய் கொடுப்போம்.  தேவார, திருவாசக, சிவபுராண கோரஸ்,  ருத்ரம் சமகம் சேர்ந்து சொல்வோம்.   இது நின்றுபோய் இது மூன்றாவது சிவராத்திரி.  தேங்க்ஸ் டு கொரோனா.   சிவனும் கிருஷ்ணனும் எனக்கு இரு கண்கள்.  ரமாபதியும் உமாபதியும்   ரமாபதி பற்றி எழுதாத நாளே கிடையாது.  

ஹரி ஹரன்  பற்றிய  சில  ஒற்றுமை வேற்றுமைகளை சொல்லட்டுமா, கேட்கிறீர்களா?
நமது பாரத தேசத்தில் எத்தனையோ  சிவன் கோவில்களில் விஷ்ணு இருக்கிறார்.   சென்னையில் கூட  சில இடங்களில் சிவ விஷ்ணு ஆலயங்கள் உள்ளன. ஹரிஹரனும்  இணை புரியாதவர்கள், இருவரும் ஒருவரே என்று கூட  சொல்கிறோம்.

இந்து மதத்தில் சைவம்  என்று  சிவனை உபாசிப்பவர்களும்  வைஷ்ணவர்கள்  என்று  விஷ்ணு அம்சமான   கிருஷ்ணன்,  பாண்டுரங்கன்,  விட்டலன் ,  ராமன், கிருஷ்ணன், நரசிம்ஹன்  என்று  பல  அவதார மூர்த்திகளையும்  மூலமான  நாராயணனையும் வழிபடும்  ரெண்டு வித  பக்தர்கள் கோஷ்டி இருக்கிறதே.   ரெண்டும்  ஒன்றே என்று  கொள்வோர்களும், இல்லை  வேறு வேறு  என்போர்களும்  இருந்து விட்டு போகட்டும்.  அவரவர் போக்கு அவரவர்  நம்பிக்கையைப் பொருத்தது.  இவர்கள்  இருவருமே  கிட்டத்தட்ட  ஒன்றே  அல்லது  ஒரே  மாதிரியே  என்று  புலப்பட்டால்  ஆச்சர்யமில்லை. கொஞ்சம்  அலசுவோமா?

விஷ்ணு   ஹரி                                                                                          
சிவன்   ஹரன்
விஷ்ணு துளசி மாலை  தரிப்பவர்                                                                    
சிவன் வில்வமாலை தரிப்பவர்
விஷ்ணுவுக்கு   சுதர்சன சக்ரம்  ஆயுதம்                                                                        
சிவனுக்கு  திரிசூலம்  ஆயுதம்
விஷ்ணுவுக்கு லக்ஷ்மி  மார்பில்                                                                                    
சிவனுக்கு  பார்வதி பாதி உடம்பில்
விஷ்ணு செய்தது   சப்தம் நிறைந்த  போர்க்களத்தில் கீதோபதேசம்                
சிவன் செய்தது   கல் ஆல  மரத்தடியில்  ரிஷிகளுக்கு  மௌன உபதேசம்
விஷ்ணு பக்தர்களுக்காக  நிறைய அவதாரங்களில்   லீலைகள்புரிந்தவர் .                                          
சிவன் தனது அடியாரை  சோதித்து நிகழ்த்தியவை  திரு விளையாடல்கள்
விஷ்ணு  பாற்கடலில்  பள்ளி கொள்பவர்                                                      
சிவனோ  பனிமலையில்  வாசம் செய்பவர்
விஷ்ணு இருக்குமிடம்  பாற்கடலில்  வைகுண்டம்                                                                
சிவன்  இருப்பது  பனிமலைகள் நிறைந்த கைலாசம்
விஷ்ணு  அர்ஜுனனுக்கு  சாரதி                                                                        
சிவன்  அர்ஜுனனுக்கு பாசுபதம்  கொடுத்தவர்
விஷ்ணு என்றாலே  வேணுகானம் செய்பவர்                                                                  
சிவன்  சாமகானத்தில் மயங்குபவர்
விஷ்ணு  பாற்கடலில்  அம்ருதத்தை  வழங்கியவர் :                                  
சிவனோ  பாற்கடலில்  வாசுகியால்  பாற்கடலில் வெளிவந்த ஹாலஹால விஷத்தை உண்டவர்.
விஷ்ணுவுக்கு  (கிருஷ்ணன்)பசுக்களுடன்  நேசம்                                                                            
ரிஷபமே  வாகனம்  சிவனுக்கு
விஷ்ணு  விஸ்வரூபமாக மூன்றாம்  காலடிக்கு மண்  எங்கே என்று கேட்டவர்.          
ப்ரம்மா விஷ்ணு தேடியும்  அடி முடி  காண முடியாத  ஸ்தாணு சிவன்
விஷ்ணு அலங்காரப் பிரியர்                                                                          
சிவன்  அபிஷேகப்ரியர்    
விஷ்ணு  பெயர்  கண்ணன்                                                                        
சிவன்  பெயர்  முக்கண்ணன்
கிருஷ்ணன் யமுனைநதி வாசப்ரியர்                                                                  
சிவன் கங்கையையே சூடியவர்
கிருஷ்ணன் சந்தனம்  பூசுபவர்                                                                            
சிவன்   சாம்பலைப் பூசுபவர்
விஷ்ணு கௌஸ்துப மாலை அணிபவர்                                                  
சிவனுக்கு  ருத்ராக்ஷமாலை
இன்னும்  எத்தனை  எத்தனையோ  இருக்கு  சொல்வதற்கு.  நேரமோ, இடமோ  தான்  போதாது.

 சிவராத்திரியின் போது   சைவ-வைணவ ஒற்று மையை வலியுறுத்தும் வகையில் கன்யா குமரியில் நடைபெறும்  ஒரு பிரபல  சம்பவம்   சிவாலய  ஓட்டம்.   இவ்வழிபாடு மாசி மாதம் நடைபெறுகிறது. சிவராத்திரியின் முதல் நாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவி உடை அணிந்து, பத்மனாதபுரத்தைச் சுற்றியுள்ள பன்னிரு சைவத் திருத்தலங்களையும் 24 மணி நேரத்தில் ஓடி வலம் வருகின்றனர்.

சிவாலய ஓட்டத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். மேலும் இவ்வோட்டத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். கையில் ஓலை விசிறியுடனும் ஒரு சிறிய பண முடிச்சுடனும் ஓடுகின்றனர்.

சிவாலய ஓட்டத்தில் ஓடும் பக்தர்கள் ஏகாதசி விரதம் இருப்பவர்கள். இவர்கள் தீயினால் சுடப்பட்ட பொருள்களை சாப்பிட மாட்டார்கள். இளநீர், நுங்கு, வாழைப்பழம் ஆகியவற்றை மட்டுமே சாப்பிடுவர். சைவ, வைணவ ஒற்றுமையை உணர்த்தும் வகையில் சிவனை தரிசிக்க வரும் பக்தர்கள் விஷ்ணுவின் நாமத்தை ‘கோவிந்தா! கோபாலா!!’ எனச் சொல்லி ஓடுவர்.

பக்தர்கள் புனிதப் பயணம் செல்லும் போது, கையில் விசிறி ஏந்திச் செல்வது சமண மதத்திலுள்ள ஒரு வழக்கம். மேலும் திருநந்திக்கரையில் உள்ள குடவரைக் கோயில், திற்பரப்பில் உள்ள குகைக் கோயில், பன்னிப்பாக்கம் அருகில் உள்ள பாதச் சுவடு திருமலையில் கல்லிலே பொறிக்கப்பட்டுள்ள கண்கள் ஆகியவை இவ்வோட்டம் சமண சமயத்திலிருந்து வந்ததை உறுதி செய்வதாய் உள்ளது.

  குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணையும் முன்பு அன்றைய திருவிதாங்கூர், கொச்சியுடன் (இன்றைய கேரளா) இணைந்திருந்தது. அப்போது, தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு ஆகிய 4 தாலுகாக்கள் இருந்தன. இதில் தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஆகிய இரண்டையும் நாஞ்சில் நாடு என்றும், கல்குளம், விளவங்கோடு ஆகிய இரண் டையும் ‘வேணாடு’ என்றும் அழைத்து வந்தனர். வேணாட் டின் தலைநகரமாக தற்போது பத்மநாபபுரம் என்று அழைக் கப்படும் கல்குளம் விளங்கியது.
கல்குளத்தை சுற்றி
1. திருமலை மகாதேவர் கோவில்
2. திக்குறிச்சி மகாதேவர் கோவில்
3. திற்பரப்பு மகாதேவர் கோவில்
4. திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில்
5. பொன் மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில்
6. திருப்பன்றிப்பாகம் சிவன் கோவில்
7. கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில்
8. மேலாங்கோடு சிவன் கோவில்
9. திருவிடைக்கோடு சடையப்பமகாதேவர் கோவில்
10. திருவிதாங்கோடு மகாதேவர் கோவில்
11. திருப்பன்றிக்கோடு மகாதேவர் கோவில்
12. திருநட்டாலம் சங்கர நாராயணர் கோவில்
உள்பட 12 சிவாலயங்கள் உள்ளன.
                                                                                                                                    

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...