ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - நங்கநல்லூர் J K SIVAN
ஸ்லோகங்கள் 173-174 நாமங்கள் 934- 947
विश्वमाता जगद्धात्री विशालाक्षी विरागिणी ।
प्रगल्भा परमोदारा परामोदा मनोमयी ॥ १७३॥
Vishvamata jagadhatri vishalakshi viragini
pragalbha paramodara paramoda manomaei – 173
விச்வமாதா ஜகத்தாத்ரீ விசாலாக்ஷீவிராகிணீ
ப்ரகல்பா பரமோதாரா பராமோதா மனோமயீ 173
व्योमकेशी विमानस्था वज्रिणी वामकेश्वरी ।வது
पञ्चयज्ञ-प्रिया पञ्च-प्रेत-मञ्चाधिशायिनी ॥ १७४॥
Vyomakeshi vimanasdha vajrini vamakeshvari
panchayagyna priya panchapreta manchadhishaeini – 174
வ்யோமகேசீ விமானஸ்தா வஜ்ரிணீ வாமகேச்வரீ
பஞ்சயஜ்ஞப்ரியா பஞ்ச-ப்ரேத-மஞ்சாதிசாயிநீ 174
*934* विश्वमाता விச்வமாதா
அம்பாள் சர்வ வ்யாபி. எல்லா உருவத்திலும் காணப்படுபவள். பிரபஞ்சமே அவள் தேகம். அவள் அதனால் தான் விஸ்வமூர்த்தியான தாயார். பிரம்மமே விஷ்ணு என்றால் விஷ்ணுவின் தாயாக போற்றப்படும் அம்பாள் விஸ்வ மாதா.
*935* जगद्धात्री ஜகத்தாத்ரீ
இந்த பிரபஞ்சத்தை ஆதரிப்பவள், அதை ரக்ஷிப்பவள் அம்பாள். ப்ரகாதாரண்யக உபநிஷத் எதை (IV.iv.22)ஸ்லோகத்தில் '' அதுவே பிரபஞ்ச நாயகன், பிரபஞ்ச ரக்ஷகன், என்கிறதோ'' அதுவே அம்பாள்.
*936* विशालाक्षी விசாலாக்ஷீ
விசாலமான கடலினும் பெரிய கண்களை உடையவள் அம்பாள். சௌந்தர்ய லஹரியில் 49வது ஸ்லோகம் அம்பாளை '' பெரிய நேத்ரங்களை உடையவள், காருண்யம் நிறைந்த ஒளிவீசும் கண்கள், இரக்கம் தயை நிறைந்தவை ''என்கிறது. பயத்தை போக்குபவள் என்பதால் அம்பாள் அபயம் எனப்படுகிறாள்.
*937* विरागिणी விராகிணீ
உணர்ச்சிகளுக்கு இடமில்லை அம்பாளிடம். வைராக்கிய திடமான மனதுடையவள். உலக ஈர்ப்புகளிலிருந்து விலகியவள்.
*938* प्रगल्भा ப்ரகல்பா
தைரியத்தின் மறு உரு அம்பாள். திட சித்தம் கொண்டவள். அவள் விதிகளை அவளே மீறாதவள்.
*939* परमोदारा பரமோதாரா
தாராளமான மனதை ஏராளமாக கொண்டவள். உதார குணம் படைத்தவள். பெறுவதைக்காட்டிலும், எதையும் பெற விரும்பாமலும் அள்ளி அள்ளி வாரி வழங்குபவள்.
*940* परा-मोदा பராமோதா
பரா என்றால் மிக உன்னத, உயர்ந்த. மோதா சந்தோஷம், திருப்தி, மகிழ்ச்சி, ஆனந்தம். அம்பாள் மிக உன்னத ஆனந்த மயமானவள். பக்தர்களுக்கும் அனைவருக்கும் அத்தகைய ஆனந்தம் அருள்பவள்.
*941* मनोमयी மனோமயீ
அம்பாள் தான் நம் ஒவ்வொருவர் மனதிலும் உருக்கொண்டவள். பதஞ்சலி யோகா சூத்ரம் ஒரு ஸ்லோகத்தில் (IV.24) நமது மனது எண்ணற்றவகையில் ஆசைகள், விருப்பங்களை எதிர்கொண்டு அவற்றில் எது அவசியமோ, தேவையோ அதை திருப்தி செய்யும் சக்தி கொண்டது. அதை அறியாமல் அதை போகிற போக்கில் கட்டுப்பாடில்லாமல் விட்டுவிட்டால் அதனால் துன்பம் ஏமாற்றம் கோபம் தான் மிஞ்சும் என்பதை உணர்த்துகிறது. தறி கெட்டு ஓடும் குதிரையாக அலையும் மனதை கடிவாளம் போட்டு அடக்கி சரியான பாதையில் போகச் செய்ய வேண்டும் என்கிறது கிருஷ்ணனின் கீதை. பிரம்மத்தை மனதின் மூலமாக தான் அறிய முடியும் என்கிறது ப்ரஹதாரண்யக உபநிஷத். அதற்கு அந்த மனதை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.ஸ்லோகம் எண் (IV.iv.20).
*942* व्योम-केशी வ்யோமகேசீ
ஆகாசத்தில் உருவம் தான் அம்பாள். ஆகாசம் எல்லையாதது அல்லவா? அதையே அம்பாளின் விராட் ஸ்வரூபமாக கொள்கிறார் ஹயக்ரீவர். பிரம்மத்தை பெரிதாக காட்டுவது விராட் ஸ்வரூபம். அதையே விஸ்வரூபம் என்கிறோம். பரமேஸ்வரனை வ்யோமகேசன் என்கிறோம். விரித்தசெஞ்சடை ஆட, என்று பாடும்போது அவனது எல்லையற்ற பரந்த நீண்ட கேசத்தை குறிக்கிறது. அவனின் பாகமாக உள்ளவள் அம்பாள், வ்யோமகேசி.
*943* विमानस्था விமானஸ்தா
விண்ணில் சஞ்சரிக்கும் தேரில் , விமானங்களில் பறக்கும் மற்ற தெய்வங்கள், தேவதைகள் மாதிரி தான் அம்பாளும். ஒவ்வொரு தெய்வத்துக்கு, தேவதைக்கு ஒரு தனிப்பட்ட வாஹனம் உண்டு. விஷ்ணுவுக்கு கருடன், சிவனுக்கு ரிஷபம் மாதிரி. அம்பாள் சிம்ஹவாஹினி.
*944* वज्रिणी வஜ்ரிணீ
சிவனை வஜ்ரன் என்போம். ஆகவே அம்பாள் வஜ்ரிணி
*945* वामकेश्वरी வாமகேச்வரீ
வாமா என்பதற்கு எத்தனையோ அர்த்தங்கள் உண்டு. அழகிய, பிரமாதமான, சிவன், துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி, போன்று எத்தனையோ. சிவனுக்கு வாமகேஸ்வரன் என்று ஒரு நாமம். அதனால் அம்பாளுக்கு இந்த நாமம்.
*946* पञ्च-यज्ञ-प्रिया பஞ்சயஜ்ஞப்ரியா
பஞ்ச என்றால் ஐந்து என்று தெரியுமல்லவா? யஞம் என்பது வேதகாலத்தில் அனைவராலும் செய்யப்பட்ட யாகம் ஹோமம் ஆகியவை. தேவதைகளை திருப்திப்படுத்த பக்தி ஸ்ரத்தையாக மந்திர உச்சாடனங்களுடன் கூடிய வழிபாடு. வாழையடி வாழையாக பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வந்த வழிபாடு. வேதங்கள் ஐந்து வித யஞங்களை குறிப்பிடுகிறது. அக்னிஹோத்ரம், தர்சபூர்ணமாஸ, சாதுர்மாஸ்ய, பசுபந்த, சோமா யஞங்கள். சோமயாகம் அனைத்திலும் முதன்மையானது.
ஸ்ம்ரிதிக்களில் பஞ்ச மஹா யஞங்கள் சொல்லப்பட்டுள்ளது. அவை. தேவ யஞம், குலதெய்வங்கள், மற்றும் இதர தெய்வங்களை திருப்திப்படுத்த, ப்ரம்ம யஞம், வேதங்களை அறிந்த ரிஷிகள், தேவதைகளுக்கு திருப்தி அளிக்க செய்வது, பித்ரு யஞம், முன்னோர்களை திருப்தி செய்வித்து ஆசி பெற பூதயஞம், மற்ற உயிரினங்களுக்காக, நர/ அதிதி யஞம். மனிதர்களுக்கு விருந்தினர்களுக்கு, அதிதிகளுக்கு, உபசாரத்துக்காக. இது போலவே பாஞ்ச ராத்ர ஆகமமும் ஐந்து வழிபாடுகளை குறிப்பிடுகிறது. அபீகமனம் விஷ்ணுவை அணுக, உபாதானம், பூஜை தரவையங்களை சேகரிக்க, இஜ்யா, பூஜை வழிபாட்டுக்கு, ஸ்வாத்யாய, வேதம், மந்திரங்கள் உச்சரிக்க. கத்யம், விலாவரியாக உச்சரிக்க.
*947* पञ्च-प्रेत-मञ्चाधि-शायिनी பஞ்ச-ப்ரேத-மஞ்சாதிசாயிநீ
உயிருள்ளவரை தான் இந்த தேஹத்துக்கு மதிப்பு. பிராணன் நீங்கிய அடுத்த கணமே இது அழிக்கப்படவேண்டிய கட்டை. எதற்கும் ப்ரயோஜனமில்லாதது. பிரேதம் என்று பட்டம் சூட்டப்படுகிறது. யமன் தான் ப்ரேதாதிபதி . ப்ரம்மா விஷ்ணு, சிவன் எல்லோருமே பிரம்மத்தின் உருவங்களாக சித்திரிக்கப்பட்ட நாமங்கள். பிரம்மத்தின் அம்சங்கள். ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹார காரியங்களுக்கு பொறுப்பாக உருவாக்கபட்டவை. அம்பாள் ப்ரம்மா விஷ்ணு, சிவன், ருத்ரன், சதாசிவன் எனும் ஐந்து தொழில்களை புரிபவர்களை பஞ்ச அதிபதிகளாக்கி அவர்களை அடக்கி ஆள்பவள். ப்ரம்மஸ்வரூபிணி .
சக்தி பீடம்: சாமளேஸ்வரி ஆலயம். சம்பல்பூர். ஒரிஸ்ஸா .
மேற்கு ஒரிஸ்ஸாவில் சம்பல்பூரில் அமைந்துள்ளது இந்த சக்தி பீடம். அம்பாள் சாமளேஸ்வரி. சாமளை அம்மா என்று அன்போடு பக்தர்கள் அழைக்கிறார்கள். சம்பல்பூரில் பிரதான தெய்வம் அம்மா. ஒரிஸ்ஸா மற்றும் அருகாமையில் உள்ள ஜார்கண்ட், சட்டிஸ்கர், பிரதேசங்களிலும் சாமளேஸ்வரி அம்பாள் பக்தர்கள் அநேகர். மகாநதி கரையில் உள்ள இந்த அம்பாளை வெகுகாலமாக ஜகத்ஜனனி, ஆதி சக்தி, மஹாலக்ஷ்மி, மஹா ஸரஸ்வதி , பிரபஞ்ச நாயகி என்று போற்றி வணங்குகிறார்கள். பூரி ஜெகந்நாதரை அடுத்து மிகவும் எல்லோராலும் அறியப்பட்ட தெய்வம் ஒரிஸ்ஸாவில் சாமளேஸ்வரி தான். பண்டை காலத்தில் சம்பல் பூரின் பெயர் ஹீரகாண்டம். பல்லாயிரம் வருஷங்களாக உள்ளது. சில ஆலயங்கள் பழைய காலத்தில் சதுர வடிவ சந்நிதிகளை கொண்டவையாக இருந்தன. சந்தார வகை என்று பெயர். பிரதக்ஷணம் செய்ய சுற்றிவர நிறைய தூண்கள் இருக்கும். பன்னிரண்டு தூண்களுக்கு நடுவே பத்து அடி அகலம் நடக்க இடம் இருக்கும். ப்ரஹார கோஷ்டத்தில் விக்ரஹங்கள் ப்ரதிஷ்டை பண்ணி இருக்கிறது. அம்பாள் கரு நிற கிரானைட் கல்லில் உருவானவள். நவராத்ரி விசேஷ பண்டிகை. எண்ணற்ற பக்தர்கள் கூடும் சமயம் அது.
No comments:
Post a Comment