Thursday, February 24, 2022

RADHA

 



'' தனித்திரு, விழித்திரு பசித்திரு''    --நங்கநல்லூர்   J.K. SIVAN


உடம்புக்கு   உணவு தேவை என்றால் அதுவே கேட்கும். பசி  என்று அதற்கு பெயர். வயிற்றை கிள்ளும். மனத்தை தூண்டி விட்டு  ஏதேனும் சாப்பிட, குடிக்க, விழுங்க தேடு என்று கட்டளையிடும்.  இந்த பசியைப் பற்றி ஒளவை கிழவி பாடியது அற்புதமான ஒரு பாட்டு நினைவுக்கு வருகிறது.

'' ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்-ஒரு நாளும்
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே!
உன்னோடு வாழ்தல் அரிது.''

''ஏகாதசி , ஷஷ்டி  ஏதாவது ஒருநாள்  சாப்பிடாமல் உபவாசம் இருங்கோ''  என்று எவரிடமாவது சொன்னால்  முறைத்துப் பார்த்துவிட்டு  ஓடிவிடுவார். அப்புறம் பேசவே மாட்டார்.  ஆமாம், சாப்பிடாமல் ஒருநாள் கூட இருக்க முடியவில்லை.  என்னுடைய  இந்த சின்ன வயிறே! இன்று உணவு கிடைக்கவில்லை. இன்று ஒரு நாளைக்கு மட்டும் சாப்பிடாமல் இரு என்று சொன்னால் நீ  கேட்கவே மாட்டேன் என்கிறாயே.? பசி வயிற்றைக் கிள்ளுகிறது.  அதே சமயம் இன்னொரு ஆச்சர்யம்.  
அடேடே இன்று ராஜபோகம்,  ரெண்டு   மூன்று இடத்தில் கூப்பிட்டு  கொடுத்தார்கள். வித விதமான  பலகாரங்கள்.  நிறைய உணவு கிடைத்திருக்கிறது.    இந்த  வயிறே  ''அத்தனையும் உனக்கு தான் இரண்டு நாளைக்குச் சாப்பிட்டு மீதி  ஸ்டாக்  வைத்துக்கொள் '' என்றாலும் உன்னால் முடியவில்லை. அத்தனையும்  சாப்பிடமாட்டேன் என்கிறாய்.  உன்னை திருப்தி படுத்த   உணவுக்காக நான் போராடும் துன்பம் உணவுக்கும் தெரியவில்லை உனக்கும் தெரியவில்லை.   மேலே மேலே  அன்னை சித்ரவதை   செய்கிறாயே.   என் பைத்தியக்கார  வயிறே! எப்படி  உன்னோடு  நான் நிம்மதியாக வாழ முடியும் ?  முடியவே முடியாது.

பசி  உணவு உண்பதில் மட்டும் அல்ல,  நிறைய  தெரிந்து கொள்ளவேண்டும்  ஆர்வம் மனதில் இருந்தால் அது ஞானப்பசி.  பகவானை எப்படியும் அடையவேண்டும் என்ற தாகம் பசி இருந்தால் அது பக்திப் பசி. 

ராதைக்கு அப்படி  கிருஷ்ணன் மேல் பக்தி. தலைகீழாக நின்று தவம் செய்து என்னதான் ப்ரயத்தனப்பட்டாலும் எவ்வளவு படித்திருந்தாலும், எழுதி இருந்தாலும், கேட்டாலும், பேசினாலும், ராதா--கிருஷ்ணன் பிரேம பந்தம் விளக்க முடியாதது. புரிந்து கொள்ள புரியாது. புரிய வைக்கவும் முடியாது. பாதம் ஹல்வா என்று அதன் படத்தை பல விதத்தில் வண்ணத்தில் பிரசுரித்தாலும், நாள்  கணக்கில் அதன் ருசியை பற்றி எடுத்துரைத்தாலும், அதன் செய்முறை பக்குவம் பற்றி எழுதினாலும், அதன் உண்மையான ருசி தெரியப்போவதில்லை. ஒரு விள்ளல் வாய்க்குள் போனால் அன்றி ருசி அறியமுடியாது. பாதம் ஹல்வா ருசியாக இனித்தது என்று எழுதினால் அதன் ருசி தெரியவா போகிறது?.

இது போல் ராதா-கிருஷ்ண பிரேமையை மனத்தில் உருவகப்படுத்திக்கொண்டு கண் மூடி ரசித்தால் மட்டுமே அதன் ருசி புரிபடும். நாமே ராதாவாக மாறி கண்ணனை நேசிக்க வேண்டும். அப்போது தான் அன்பு பாசம் நேசம் என்றால் என்ன என்று தெரியவரும். இது அவரவர் அனுபவிக்க வேண்டியது. உனக்காக நானோ எனக்காக நீயோ அனுபவிக்க முடியாது. அளவில்லாமல் எண்ணற்ற இன்ப அனுபவங்கள் பிரவாகமாக ஒவ்வொரு மனத்திலும் வெவ்வேறாக உருவாகும் போது தான் பக்தி என்பதன் உள்ளர்த்தம் புரியும். அப்போது தான் நெருப்பு என்று சொன்னால் அதன் உஷ்ணம் புரியும்.

கடவுளிடம் எதாவது ஒன்று நமக்கு தேவை என்ற போது மட்டும் வேண்டிக் கொண்டால் அவர் எப்படி இதை நிறைவேற்றுவார்?  இது தான் நம்முடைய  ப்ராப்ளம்.   
எங்கு, என்றைக்கு, எவர் மூலம் கொடுப்பாய்?  என்று அவனை வேண்டினால் அந்த எதிர்பார்ப்பு முழு மனதுடன், நம்பிக்கையுடன் கடவுளை வேண்டுவது ஆகாது. கடவுளை நாம் சந்தேகிப்பதைத்தான் அது தெரிவிக்கிறது.

ராதா கண்ணனை முழுமையாக   தன்னுடைய உயிர் மூச்சாக நம்பினாள், தானே கண்ணன். அவன் வேறு தான் வேறு என்ற எண்ணம் எப்போதும் அவள் மனதில் எழவில்லை. அவள் எண்ணத்தில் அதனால் தான் கண்ணன் பிரதிபலித்தான் .  சரணாகதியின் உச்ச நிலை இது. மீராவின் பாடல்களிலும் இந்த த்வனி எதிரொலிக்கும்.  ஆண்டலில்ன் பாசுரங்களும் அவ்வாறே.

ராதை எப்போதும் தன்னை மற்ற கோபியர்களை விட உயர்ந்தவள், சிறந்தவள், தலைவி, எனக் கருதவில்லை. சொல்லவில்லை.  அப்படி ஒரு நினைப்பு அவளுக்குள் எழவே இல்லை . அவளது கிருஷ்ண பக்தியும் பிரேமையும் தானாகவே மற்ற கோபியரை அவளை வணங்கச் செய்தது. அடி தொட்டு பின்பற்றச்  செய்தது.

ஒரு சிறு வேண்டுகோள். எந்த காரணத்தைக் கொண்டும் நம்மிடையே உலவுகின்ற சில படங்களில், நாட்டி யங்களில், நாடகங்களில், தொலைக் காட்சிகளில், கதைகளில், கவிதைகளில், சினிமா பாடல்களில் வர்ணிக்கப்படுகின்ற ராதாவை ரசித்து விட்டு இது தான் , '' ராதா கிருஷ்ணன் காதலா , பிரேமையா , அப்பட்டமாக இது தானா'?''  மட்டரகமாக  இருக்கிறதே''  என்று எடை போட வேண்டாம்

உங்கள் மனதில் நீங்கள் போடும் எடை உங்களுடையதாகவே இருக்க வேண்டும். மற்றவரிடம் கடன் வாங்கிய கருத்தாக அமைய வேண்டாம். அதாவது மேலே சொன்ன, படம் கதை, பாட்டு, நாடகம், நாட்டியம் இத்யாதி இத்யாதி...அவரவர் மனநிலையை பிரதிபலிப்பது. உண்மையை வெளிப்படுத்துவது இல்லை.  அது முடியாது. ஏன் என்றால் அவரவர் அதை அனுபவிக்க வேண்டும் அப்போது சொல்லமுடியாது, எழுத முடியாது. அந்த ஆனந்தத்தை  வார்த்தைகளில் படங்களில் கொண்டுவரமுடியாது.. ஸ்வானுபவம்.

விரகத்தை விரசமாக்க கூடாது. புனிதம் கெட்டுவிடும். பெருமை மங்கிவிடும். உயர்ச்சி தாழ்ந்து விடும். ஆங்கிலத்தில் ஒருவர் எழுதின RADHA என்கிற எழுத்தை திருப்பிப்போட்டால் ARADH என்று வருகிறதே ஓஹோ ராதா என்ற சொல்லே கிருஷ்ண ஆராதனை யின் பிரதிபலிப்போ, தத்துவமோ? ADHAR என்று வருவதால் கிருஷ்ணனுக்கு ராதா தான் ஆதாரமா? ராதா ஒவ்வொரு செயலிலும் சொல்லிலும் எண்ணத்திலும் கண்ணனையே ''ஆராதி''த்தவள், 'ஆதார'' மாக கொண்டவள் என்று இப்படி கூட அறிய முடிகிறதே. இப்படி தான் சிந்திக்கவேண்டும். அப்போது தான் உங்கள் மனதில் ராதா க்ரிஷ்ணன் பிரேமை ஒருவாறு அஸ்திவாரம் பெறும். ராதாவை உண்மையாக உணரமுடியும்.

ஒரு குட்டிக்கதை சொல்லாவிட்டால்  என் மண்டை வெடித்து விடும்.

ராதா ஏதோ ஒரு கிராமத்துக்கு நடந்து போனாள் . நேரம் ஆக ஆக சுடு மணலில் நடந்து கொண்டிருந்த ராதாவிற்கு எங்காவது ஒரு மர நிழலில் சற்று இளைப்பாறலாமே என்று தோன்ற எங்குமே மரமோ நிழலோ எதுவுமே இல்லை. அவள் விடுவிடுவென்று சுடு மணலில் மேலும் நடந்தாள். அவள் ஏன் கண்ணனை அப்போது நினைக்கவில்லை? கண்ணனை நினைத்தால் கால் சுடாதே. ஏன் அப்படிச் செய்யவில்லை? காரணம் தெரியுமா?

'' மாட்டேன், மாட்டவே மாட்டேன், அவனை நினைத்தால் அவன் இங்கு என்னோடு வந்து பாவம் அவனும் இந்த சுடுமணலில் வாடுவான். இது என்னோடு போகட்டும். நிழலில் சென்று அங்கே அவனை நினைக்கிறேன். அவனோடு இளைப்பாருகிறேன்'' - இது தான் ராதா. .

''கண்ணா நீ என் கண்ணின் பாவை. என்னுள்ளே இருப்பவன். உன்னை உணர நீ என்னெதிரே தோன்றிய சிறு குழந்தை என்று வைத்துக்கொண்டால், என் விழியின் சக்தியின்றி, கண்ணில் பாவையின்றி, பார்வை இன்றி, உன்னை எவ்வாறு காண்பேன்? சிறு குழந்தையாக நிற்கும் உன்னை எவ்வாறு கண்டு ரசிப்பேன்? எனக்கு பார்வையும் நீ, நான் பார்க்கும் காட்சியும் நீ. உன்னுடைய
மனித உருவை எனக்கு காட்டுகிறாயா? '' 

ராதா இவ்வாறு காண ஏங்கும்போது அவன் மதுராவில் அல்லவா இருந்தான். ஆனாலும் அவள் இவ்வாறு எண்ணி கண்ணை மூடி திறந்தாள். எதிரே கண்ணன் தோன்றினான்.

'கோபாலன் வந்தான் கோவிந்தன் வந்தான்'' என்று எப்போது கோபியர் ஆடிப்  பாடினாலும் ராதை அவன் வந்ததை பரிபூர்ணமாக உணர்ந்தாள். அவனை வழக்கமாக சந்திக்கும் மதுவனத்துக்கு ஒரே ஓட்டம் ஓடினாள். கண்ணன் இருந்த இடம், அவன் இன்னும் அங்கேயே இருப்பான் என்று கால மெல்லாம் யமுனையின் சுடுமணலில், கொட்டும் மழையில் நின்றாள் . வனங்களில் அலைந்து தேடினாள்.   ''ஹே, பறவைகளே , பசு கன்றுகளே , நீங்கள் என்  கண்ணனைக் கண்டீர்களா''  என  வினவினாள் .

நம்மால் முடியுமா. முயற்சிக்கிறோமா.  ' முயற்சி திருவினை'  ஆக்குமே, கண்ணன் தோன்றுவானே!
அவனை நினைக்கும்போது ஒரு புத்துணர்ச்சி என்னுள் உணர்கிறேனே. ராதாவை நெஞ்சில் நிரப்பிக்  கொண்டு இருக்கிறேனே.

''ராதா, உனக்கு என்ன வேண்டும் சொல்'' என்றான் கிருஷ்ணன்.
''நீ. உன் நினைவு கண்ணா. அது போதும் ' 

அவள் பாடினாள். பாடிக்கொண்டே இருந்தாள்.  
 ''கிருஷ்ணா உனக்கு நினைவிருக்கிறதா? நீ அந்த காளிங்கன் பாம்பின் மீது நர்த்தனம் ஆடினாயே, நீ ஆடிய ஆட்டத்தில் உன் காலில் நீ அணிந்திருந்த தண்டை கொலுசு ஜிங் ஜிங் என்று ஒலித்ததே அதை இன்னொரு முறை கேட்கவேண்டுமே?''

அடுத்த கணமே ராதையின் காதில் அந்த ''சலங் சலங்'' ஒலி மீண்டும் கணீர் என்று கேட்டது. நாம் இப்போது எதற்கெடுத்தாலும் '' தேங்க்ஸ்'' என்கிறோம்.   நாம்  சொல்லும்  ''தேங்க்ஸ் குட் மார்னிங், ஈவினிங்,  நைட்''   இதற்கெல்லாம் அர்த்தமே இல்லை. உண்மையில் அப்படி வாழ்த்த மனதில் எண்ணம்  இல்லை.. வாய் மாட்டும் மெஷின் மாதிரி சொல்கிறது.  எந்த அர்த்தம் தெரிவிக்க அதை உபயோகிக்கிறோம்?. யோசித்து பாருங்கள். ராதையின் தேங்க்ஸ் அவள் பேசாமல் உகுத்த ஆனந்தக் கண்ணீர். தனை மறந்த நிலை.  அப்படி தான் அவள்  கண்ணனை அனுபவித்தாள்.. .

ராதாவை உணர அவளுக்கிருந்த கிருஷ்ண ''பசியும் தாகமும்'' நமக்குள் இருக்க வேண்டும். அவள் பக்தியும் பிரேமையும் எவ்வாளவு ஆழம் என்பதை நாமும் மூழ்கினால் தான் புரியும். '

ரொம்ப  நீளமாக எழுதிவிட்டேனோ?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...