Wednesday, February 23, 2022


 தொடர்பு அறுந்தது  -  நங்கநல்லூர் J K   SIVAN 


மசால் தோசை மாசிலா மணியின் ஏக்கம்: 

''ஒரு  வீடியோ பார்த்தேன்.  மஹா பெரிய  தோசை மொறு மொறுவென்று.  நீளமான  கல்லில்  மாவு ஊற்றி  பலபேர்  தோசை வார்க்கிறார்கள். அதன் மேல் மசாலா, வெண்ணை, சில  ருசிகர சமாச்சாரங்கள் எல்லாம்  நிரப்பி,  பரப்பி,  கீழே  காஸ் அடுப்பு நீளமாக   சிவப்பாக எரிகிறது.  சில நிமிஷங்களில் மொறுமொறுவென்று  பிரவுன் கலரில் பெரிய தோசை சுருட்டப்படுகிறது.  அப்படியே அதை பல தட்டுகளில் ஏந்தி  ஒரு பெரிய  டேபிளில் வைக்கிறார்கள். பல கைகள் வரிசையாக எதிரே அமர்ந்தவாறு   கிண்ணம் கிண்ணமாக   சட்னி, சாம்பாருடன்  காலி செய்துவிடுகிறது.  இதில் எச்சில் என்ற சொல்லுக்கு எங்கே இடம்.? 

தோசை ஒரு அருமையான கண்டுபிடிப்பு.  நமது பாரத தேசத்துக்கே  அதுவும் தென்னகத்துக்கே  சொந்தமான சொத்து. சூரியன்  தோன்றுவது தப்பினாலும் தோசை சாப்பிடாமல் காலைப்  பொழுது சிலருக்கு  போவதில்லை.  தோசையில் எத்தனையோ ரகங்கள்.  அதன் பெயரை சொல்லி மாளாது. சில தோசைகளுக்கு எனக்கு பேரே  தெரியாமல்  ருசித்து சாப்பிட்டு இருக்கிறேன்.   அடேயப்பா ஒவ்வொன்றுக்கும்  ஒரு தனி ருசி, பொடி  தோசை, மசாலா தோசை, வெந்தய தோசை, கல்தோசை, பெசரட்  தோசை, ரவா தோசை,  அதிலேயே  வெங்காய ரவா, கோவில் கோபுரம் மாதிரி கீ ரோஸ்ட்  என்று ஒன்று,  பேப்பர் ரோஸ்ட் என்று முறுகலாக ஒரு தோசை,  கோதுமை மாவு  தோசை,  நீர் தோசை,  அரைத்த தோசை,  கரைத்த மாவு தோசை,  ஊத்தப்பம்,  பிளைன் தோசை.  இன்னும் என்னன்னவோ.

ஹே  மசாலா தோசையே, உன் சகவாசம் கூடாது என்று  டாக்டர்கள்  சொல்லியதால்   என்னைப்போல எத்தனை  மசாலா தோசை பிரியர்கள்  நாக்கில் நீர் ஊற உன்னை தூரத்திலிருந்தே பார்க்கிறார்கள்.  

''உனைக்கண்டு மயங்காத பேர்கள் உண்டோ?'' எம்.கே தியாகராஜ பாகவதரைப் போல நான் பாடா விட்டாலும் இதே கேள்வியை உன்னைப் பார்த்து கேட்டிருக்கிறேன். ஞாபகம் இருக்கிறதா? உன் உருவம், உன் திண்மை, கமகம மணம். உனக்காக எத்தனை இடத்தில் எவ்வளவு நாள் காத்திருந்து அடைந்திருக்கிறேன்.

மசாலா தோசை  ஆர்டர் கொடுத்ததும் ஒரு குரல் ''  ஒரு ஸ்பெஷல் மசாலா.....'' என்று  அடுப்படியை நோக்கி கத்தியது காதுக்கு கர்ணாம்ருதமாக இருந்தது எல்லாம் மறக்க முடியுமா?

வீட்டிலே உன்னை அடிக்கடி சந்திக்க முடியாது. ஆனால் எத்தனை ஊர்களில் எத்தனை ஓட்டல்களில்....... ஆஹா அந்த நினைவு என்னை விட்டு கடைசி நிமிஷம் வரை மறக்காது.

நீ ஒரு அரிய சிருஷ்டி. அடே பிரம்மா எப்டியடா இப்படி ஒரு அபூர்வத்தை சிருஷ்டி செய்தாய்? முதலில் யார் உன்னை தோற்றுவித்தது.எப்படி நீ என் மனத்தை இவ்வளவு கவர்ந்தாய். உன் பெயரை நினைக்கும்போதே என் நாவில் நீர் சுரக்க செயதாய். என் முகம் மலரும்.
இப்போது ....... ஆச்சு. எல்லாம் முடிஞ்சு போச்சு.

எவ்வளவுக்கு எவ்வளவு உன்னை அடைய ஆசைப்
பட்டேனோ, உன்னை ரசித்து ருசிக்க கனவு கண்டேனோ, என்னில் நீ கலந்த போது இன்பம் அடைந்தேனோ, அதெல்லாம் இனி பழைய நினைவுகள். 

ஹே,  மசால் தோசையே, இனி உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை. அதோ அருகில் நிற்கும் உன் சகோதரன்   மசால் வடை....''அதனுடனும்''....என் உறவை முறித்துக் கொண்டேன்.  யோசித்துப் பார்,  யார்,  நானாகவா உன்னை வேண்டாம் என்றேன்? அல்லது நீ தான் என்னை வேண்டாம் அவனிடம் போகமாட்டேன் என்று விலகினாயா? ரெண்டும் இல்லை. 

யோசித்துப் பார். இந்தியாவிலோ வெளி நாடுகளிலோ கூட உன்னை தேடி  அலைந்து அதிக விலை கொடுத்து அடைந்தது மறந்து விட்டதா எத்தனை வருஷங்கள் உனக்கும் எனக்கும் உறவு?

இதோ அதற்கெல்லாம் முடிவு வந்துவிட்டது. ஏன் எனக்கு வயதாகி விட்டதாலா? சே சே அதெல்லாம் இல்லை. யார் எனக்கு வயதாகி விட்டது என்று சொன்னது?

உனக்கும் எனக்கும் உள்ள உறவை பிரித்தவனை உனக்கு ஞாபகம் இருக்கிறதா? பார்ப்பதற்கு நல்ல பையனாக   சிரித்துக்கொண்டு , வரவேற்று,  கருப்பு பிரேம்   கனமான  கண்ணாடிக்குள்ளிருந்து அன்பு பார்வை பார்த்த அவன் ஜெகதீசன், டாக்டராக பணி புரிபவன், ஒருநாள் மனத்தில் கொஞ்சமும் ஈவு இரக்கம் இல்லாமல் உன் உறவு எனக்கு இனி கூடாது என்று   அழுத்தம் திருத்தமாக சொல்லி விட்டானே. நம்பியார் பயல்.
தலை கவிழ்ந்து மறு வார்த்தை பேசாமல் ஒப்புக்கொண்டேனே.
ஏன் ஜெகதீசனுக்கும் உனக்கும் ஏதாவது கோபமா தாபமா? இல்லை போல் இருக்கிறதே. எனக்கும் உனக்கும் உள்ள பாசம், நேசம், தவறானது என்று ஏன் சொன்னான், இனியும் வேண்டாம் இந்த உறவு என்று ஏன் சொன்னான்?
எனக்கு உடல் கெட்டுவிட்டதாம் இனி நீயாகிய ''மசால் தோசையோ, உன் நெருங்கிய உறவான ''மசால் வடையோ '' உடம்புக்கு உங்களுக்கு நல்லதில்லை. வேண்டாமாம்.    தோசை  நீ  எனக்கு கூடாது என்று சொல்லி அவன் என்  காசை வாங்கிக்  கொண்டான்.
ஆகவே என் ஆசை நட்புகளே, இனி நாம் அடுத்த ஜென்மத்தில் எங்காவது ஒரு ஹோட்டலில் மீண்டும் சந்திக்கும் வரை உங்கள் அன்பு தோழன்  மாசிலாமணி  
https://youtu.be/w_pyIBNwji8

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...