Friday, February 25, 2022

AVVAIYAR

 பாட்டி சொல் தட்டாதே  -   நங்கநல்லூர்  J K  SIVAN 


''ஆற்றங் கரையின் மரமும் அரசு அறிய
வீற்றிருந்த வாழ்வும் வீழும் அன்றே - ஏற்றம்
உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை கண்டீர்
பழுது உண்டு வேறு ஓர் பணிக்கு.''

ஒரு நாட்டுக்கு  வேளாண்மை, விவசாயம் எவ்வளவு முக்கியம்  என்று வாய் கிழிய  வானளாவ  பேசிக்கொண்டே  விளை நிலங்களை  பட்டா போட்டு  விற்று தின்று  ஏப்பம் விடுகிறோம்.  அது எவ்வளவு முக்கியமானது என்று  அந்த காலத்திலேயே  ஒரு பாட்டி சொல்லியிருக்கிறாள்
ஆற்றங்கரையில் ஆற்றுநீரை  தரைக்கு கீழே  உறிஞ்சி குடித்துக் கொண்டு வளமோடு இருந்த மரமும் ஒருநாள் விழுந்துவிடும். அரசனே எண்ணிப் பார்க்கும்படி பெருமிதத்தோடு வாழ்ந்த வாழ்வும் ஒருநாள் விழுந்துவிடும். பின் எது தான் விழாது என்கிறீர்களா?   விவசாயம், வேளாண்மை ஒன்று தான் சாஸ்வதம்.   நிலத்தை பண்பட்டு  உழுது, அதன் விளைச்சலைக்  கண்டு ஆனந்தித்து, உண்டு வாழ்தலே ரொம்ப  உசத்தி.  பெருமை. இதற்கு ஒப்பான வாழ்வு வேறு எதுவும் இல்லை. வேறு எந்தப் பணியாக இருந்தாலும் அதற்குப் பழுது உண்டு என்கிறாள் பாட்டி.
''ஆவாரை யாரே அழிப்பார்? அது அன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்? ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்?
மெய் அம்புவி அதன் மேல்''

நன்மை அடைபவரை யாரால் தடுக்க முடியும்,  அழிக்கமுடியும்? சாவாரை யாரால்  சாகாமல் காக்க முடியும், தடுக்கமுடியும்? பிச்சை எடுப்பவரை யாரால் விலக்க முடியும்? உலகில் இவை எல்லாம்  நிகழத்தான் செய்யும். அதற்கு தான் விதி என்று பெயர் வேறு வைத்திருக்கிறார்கள்.

''பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால்
இச்சை பல சொல்லி இடித்து உண்கை - சீச்சி
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர் விடுகை சால உறும்.''

நமது நாடு ஒன்றில் தான் உலகிலேயே  அதிகமாக  பிச்சைக்காரர்கள்  தென்படுகிறார்கள் என்று நமக்கு கின்னஸ் ரெகார்ட் வேறே.   இப்படி ஒரு பட்டம் விருது நமக்கு தேவையா? பிச்சை எடுக்கும் வாழ்க்கை மிகமிக இழிவு.  இதை அந்த காலத்திலேயே  பாட்டி  ஒழிக்க வேண்டும் என்று சொன்னவள்.அந்த  பிச்சைக்கார  வாழ்க்கைக்கு மூத்த குடிவாழ்க்கை எது தெரியுமா? சொல்கிறேன் கேள். பலப்பல ஆசைகளைக் காட்டி கேட்போர் மனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இடித்து நப்பாசை கொள்ளும்படிச் செய்து அவர்கள் தரும் பொருளால் தன் வயிற்றை வளர்த்தல் ஆகும். சீச்சீ! இப்படி வாழ்வது மானக்கேடு. இந்த மானக்கேட்டோடு வாழ்வதைக் காட்டிலும் தன் உயிரை விட்டுவிடுவது மேலானது என்கிறாள்.  அந்தக்  காலத்திலும்   இப்படிப்பட்ட  அட்வர்டைஸ்மென்ட் ஆட்கள் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

''சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை - உபாயம்
இதுவே; மதியாகும்; அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்''

ஓம்  நமசிவாய   என்னும் பஞ்சாக்ஷர   சிந்தனையில் ஆழ்ந்திருப்பவனுக்கு  எந்த நாளும்  ஒரு ஆபத்து,  அபாயம்  கிடையாது. மகிழ்ச்சியோடு  வாழ்வதற்கு உரிய தந்திர மந்திரம் இதுதான். இதுவே நமது அறிவுக்கெட்டிய  நல்ல  வழி.  மீதி எல்லாம்  விதி வசத்தால் ஏற்படுவதை அப்படியே  ஏற்றுக்கொள்ளும்  விஷயம்  ஆகிவிடும்.  கர்ம பலன் தான் விதி. 


''தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணம் கொடையால்
கண் நீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பு அழியா ஆற்றால்; கடல் சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி''

உலகத்தில்  எத்தனையோ  அதிசயங்கள்  அற்புதங்கள்  என்று பெரிய  லிஸ்ட் வைத்திருக்கிறோம். சிலதைப் பார்க்க முடிகிறது, மற்றதெல்லாம் படத்தில் பார்க்க வேண்டியது  தான்.எது அற்புதம்  என்று பாட்டி ஒரு லிஸ்ட் வைத்திருக்கிறாள். பூமியிலிருந்து நமக்கு கிடைக்கும்  தண்ணீரின்  அளவு, அதன் சுவை  எதுவுமே  நல்ல நிலத்தின்  தன்மையால் அமைகிறது.  அது போல தான்   தாராளமாக வாரி வழங்கும்  வள்ளல்களை  நல்ல குணம் படைக்கிறது.  அவர்களை தான் தக்கோர் என்கிறோம்.  உள்ளம் நல்ல தாக இருந்து  அதில்  கருணை, இரக்கம், தயை  நிறைந்திருந்தால்  பலருக்கு நன்மை கிடைக்கிறது.   பெண்ணிடம் நல்ல குணம் நேர்மை, கற்பு நெறி, இருந்தால்  குடும்பமே, உலகமே  அதனால் பயனுறுகிறது. இதெல்லாம்  அல்லவோ  இந்த உலகத்துக்கு  பாதுகாப்பு.  நாலு பக்கம் உப்பு தண்ணி நிறைந்த  கடலாபாதுகாப்பு? 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...