Wednesday, February 9, 2022

COOKERY BOOK

 ''சுசி ருசி - நளபாகம்''  -   நங்கநல்லூர்  J K  SIVAN 


சாப்பாடு  என்பது உயிருள்ள  ஜீவன்களின்  உடன் பிறப்பு.  ஒவ்வொரு  வயதிலும்  ஒவ்வொரு  வித  உணவு பிடிக்கிறது.  வயதாக ஆக ,  வித வித  ருசிகளை  நாக்கு தேடுகிறது.  நோய் உடலில் உண்டாக காரணமே  சாப்பாடு என்பதும் உண்டு. நோய்  தீர  நன்றாக நல்ல உணவாக சாப்பிடவேண்டும் என்று சொல்லும்போது உணவே மருந்தாகி விடுகிறது.  இணை பிரியாமல் மனிதனோடு இணைந்தது உணவு.

பசி தீர்க்க உணவு அவசியம். உயிர்வாழ ஆகாரம் அவசியம்.  அதே சமயம் அந்த உணவு ருசிக்கவேண்டும். அதில் அலாதி சந்தோஷம்.  

உனக்கு சர்க்கரை, அதை சாப்பிடாதே  இதை சாப்பிடாதே, நீ பத்தியம் இருக்க  வேண்டும், அந்த காய் இந்த பழம் எல்லாம் தொடாதே, கண்ணால் கூட பார்க்காதே..  இப்படி சொல்லும்போது  மனதை கட்டுப் படுத்திக்க கொள்ள ரொம்ப  வைராக்யம் வேண்டும். 

ஒவ்வொரு ஹிந்து பண்டிகைக்கும் விசேஷமாக  ஒரு பக்ஷணம்,  தீபாவளியா  நிறைய  ஸ்வீட் வெரைட்டி.  நவராத்ரியா  வித விதமான சுண்டல் தினமும்.  கோகுலாஷ்டமியா,  சீடை,  விநாயக சதுர்த்தியா, கொழுக்கட்டை,  ராமநவமியா பானகம்,   திருவாதிரையா,  களி , ஏழு கறி காய் கூட்டு, பொங்கல்  சமயமா,  வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், திருப்பதி தரிசனமா, லட்டு,  பெருமாள் கோவிலா அருமையான  புளியோதரை, ஆஞ்சநேயர் கோவிலா  வடை,  சில கோவில்களில் தயிர் சாதம், இப்படி  விட்டுப்போனது போக எத்தனையோ வித ருசிகர உணவு. 

அதே போல  எந்த விசேஷமாக இருந்தாலும்  நல்ல சாப்பாடு உண்டா என்று தெரிந்துகொண்டு  தான்  அந்த நேரம் வரை கூட்டம் இருக்கும்.  சாப்பாடு முடிந்ததும் நிறைய பேர்  காணாமல் போய் விடுவார் கள்.   கல்யாணங்கள் மற்றும்  உறவினர்  நண்பர்  அளிக்கும்  விருந்துகளில் பல வித  ஐட்டங்கள் இலையில் விழும்போது மலைத்து போய் விடுகிறோம். எப்படி அத்தனையும் சாப்பிடுவது? ஒரே நாளில் ரெண்டு மூன்று  கல்யாணங்கள்  விழாக்கள் கூட  சென்றிருக்கிறேன்.  எல்லா இடத்திலும் சாப்பிடுவது என்பது முடியாத காரியம். எத்தனை உணவு வீணாகிறது என்று யோசிக்கும்போது கண்ணில் ரத்தம் வரும். மனதில் விரிசல் தெரியும்.

சேர்ந்து சாப்பிடுவது ஒரு தனி இன்பம்.  பெரிய பெரிய  ஹோட்டல்களில்,  மணிக்கணக்காக காத்திருந்து இடம் பிடித்து உண்கிறோம்.   திருவல்லிக்கேணி ரத்னா கேப்  இட்லி சாம்பாருக்கு  பல மைல் தூரத்திலிருந்து வருவார்கள்.  ஆர்யபவன்  பாதம் ஹல்வா, அம்பி'ஸ் கேப்  ரவா தோசை, கிருஷ்ணய்யர்  ஹோட்டல் மசால் வடை,  நாதன்ஸ்   கேபி  இட்டிலி  மிளகாப்பொடி,  அடேயப்பா லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.  

ரொம்ப சிம்பிள் சார் எங்க வீட்டில் இன்று சமையல்,  வெந்தய  குழம்பு, சுட்டஅப்பளம் , சுண்டக்கா வற்றல் குழம்பு, பருப்பு துவையல் ,

எண்ணெய் தேய் த்துக்கொண்டு சனிக்கிழமைகளில் சுடசுட   மிளகு ரசம் தேங்காய் துவையல் சாப்பிடுவது தேவலோக அமிர்தம்.

இன்று  இதெல்லாம் என் ஞாபகத்துக்கு வர என்ன காரணம்? 
கோயம்பத்தூரில் இருக்கும் ஒரு நண்பர்  சேஷாத்திரி,  அவர் அம்மா ஸ்ரீமதி ரங்கநாயகி ராகவன்,  86க்கு மேல்  வயது  அற்புதமாக சமைப்பவர்,  பாடுபவர், நன்றாக படித்தவர், சரளமாக  ஆங்கிலம் பல மொழிகள் பேசுபவர்,  சிறந்த நிர்வாகியாக  சில  அமைப்புகளை நடத்தியவர்,  ஆன்மீக  எழுத்தாளர்,  அவர் புகழ்  அவர் சமையல் போலவே ருசிகரமான நீள்கிறது.  சேஷாத்திரி  அம்மா  எழுதிய   ''சமைத்துப் பார்''  போல  ஒரு  புத்தகத்தை  அனுப்பினார். புத்தகத்தின் பெயர்  
''சுசி ருசி  நளபாகம்''

அடிக்கடி  யூ ட்யூபில்  விதவிதமான  பக்ஷணங்கள் செய்முறையை படங்களோடு   யாரெல்லாமோ விதவிதமான  பக்ஷணங்களை   செய்வதை, விளக்குவதை பார்த்து சிறிது நேரம் நாக்கில் நீர்  சுரக்கும். அதெப்படி  அவர்களுக்கு மட்டும்  அவ்வளவு மொறுமொறு ஐட்டம்கள் செய்ய முடிகிறது என்று அதிசயிக்க வைக்கும்.  நாமும் செய்து பார்ப்போமே என்று ஒரு சில அயிட்டங்களை எப்போதாவது செய்ய முயற்சித்து படு தோல்வி அடைந்ததும் உண்டு.

ரங்கநாயகி அம்மாளின் ''சுசி ருசி''  படிக்கும்  போதே எனக்கு வயிறு நிறைந்து விட்டது. கனமான புத்தகம்  344 பக்கம். 29 வித  தலைப்புகளில், எத்தனையோ குழம்புகள், கூட்டுகள்,  ரசம், பொரியல், பொடி , வறுவல், பச்சடி, பல வித வடைகள் , கலந்த சாதங்கள்,  இட்டலி தோசை, சட்னி ஊறுகாய்  வகையறா,  அடேயப்பா இவ்வளவும் இதற்கு மேலும் தெரியும் போல் இருக்கிறது மாமிக்கு.  உண்மையிலேயே  புத்தகமே  ஒரு நளபாகம் தான். 

ஏதோ ஒரு பக்கத்தை புரட்டி  அதில் உள்ள ஒரு  அயிட்டம் எப்படி செய்வது என்று ரங்கநாயகி மாமி சொல்வதை  உங்களுக்கு  சொல்லிவிட்டு   இதை  நிறைவு செய்கிறேன்.

''வாழைக்காய் பொடி 
தேவை:  வாழைக்காய் 2, எண்ணெய்  4 டீ ஸ்பூன், கடுகு   கால்  டீ  ஸ்பூன், உ.பருப்பு 1 டீ  ஸ்பூன்.  க. பருப்பு  1 டீ  ஸ்பூன்.  மி. வற்றல் 2 , பெருங்காயம்   கால் டீ  ஸ்பூன். கருவேப்பிலை  1 ஆர்க்கு கிள்ளியது.  உப்பு தேவைக்கு. 

வாழைக்காயை நான்காக வெட்டி தோலுடன் வேக வைக்கவும். வெந்தபின் தோல் உரிக்கவும் .  மற்ற சாமான்களை  எண்ணையில் வறுக்கவும். (கருவேப்பிலை தவிர). ஆறியபின் மிக்ஸியில் முதலில்  மிளகாயைப் போட்டு நன்கு பொடிக்கவும்.  பிறகு உ.பருப்பு,  க. பருப்பு, பெருங்காயம், சாமான்களை போட்டு 2 அல்லது 3 சுற்று சுற்றவும். நறநறப்பாக இருக்கும்போது  உப்பு சேர்த்து, காயை ஒன்று இரண்டாக உடைத்து போட்டு சேர்ந்து இருக்கும்படி  2-3 சுற்று  சுற்றி எடுக்கவும். பிறகு கையால் நன்கு பிசிறி, எடுத்து உதிர்த்து வைக்கவும். இதற்கு வாழைக்காய்  முக்கால்  பதம்  தான் வேகவேண்டும் . கடைசியில் கடுகு, உ.பருப்பு, தாளித்து கொட்டவும்.''

இதை எழுதும்போதே  வாழைக்காய் பொடி  ''நற நற வென்று''  செய்து  சுடச்சுட  விரை  விரையான  சாதத்தில் கலந்து நல்லெண்ணெய் விட்டு சாப்பிடுவது போல் இருக்கிறது.    வாழைக்காய் பொடி  எப்போது கடைசியாக சாப்பிட்டேன்.  குறைந்தது சில வருஷங்கள் ஆகியிருக்குமோ?  

ரங்கநாயகி மாமியின்  ''சுசி ருசி நளபாகம் ஐயங்கார் சமையல் எனும் புத்தகத்தை   B 224 பிருந்தாவன்   பாம் க்ரோவ், பிரிந்தவன் சீனியர் சிடிஸன் பவுண்டேஷன், தொண்டாமுத்தூர்,   கோயம்பத்தூர், விலாசத்தில் கிடைக்கலாம். PHONE:  9962628930 .  விலை கண்ணில் படவில்லை,  விலையில்லா பொக்கிஷம், எவ்வளவு விலை கொடுத்தாலும் இதில் ருசிக்கும் விஷயங்களுக்கு அது உரை போடக்கூட காணாது என தாராளமாக சொல்லலாம்.   

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...