Saturday, February 19, 2022

u ve sa



 தமிழ்த் தாத்தாவுடன் எங்கள் தாத்தா - நங்கநல்லூர் J K SIVAN

இன்று பெப்ரவரி 19 தமிழ்த் தாத்தா ஸ்ரீ மஹா மஹோபாத்யாய தக்ஷிணாத்ய கலாநிதி, ஸ்ரீ உத்தம தானபுரம் வேங்கடசுப்பையர் ஸ்வாமிநாதய்யர் (உ வே சா) பிறந்த நாள். இன்றைக்கு 167 வருஷங்களுக்கு முன்பு 19.2.1855ல் பிறந்தவர் ஸ்ரீ உ.வே.சா எனும் அமரர்.
என் தாய் வழித் தாத்தா பிரம்மஸ்ரீ வசிஷ்ட பாரதி அவர்கள் ஒரு தமிழ்க்கடல். பரம்பரை பரம்பரையாக ராமனையே நம்பி வாழ்ந்த ராம குடும்பம். குடும்பத்தில் முதலாவதாக பிறந்த மகன், பேரன் எல்லோருக்கும் ஏதாவது ஒரு ராமன் பெயர் வைத்தவர். என் தாத்தா தன்னுடைய பழைய நினைவு பற்றி 1930களில் எழுதியது இங்கே எனது வழியில் தருகிறேன்.
''புதுக்கோட்டையில், கீழ மூன்றாம் வீதியில் நல்லாசாரி மண்டபத்தில் மஹாபாரதம் பிரசங்கம்.
சில கவிதைகளை விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார் அந்தப் பிரவசனகர்த்தா. பிரசங்கம் முடிந்து வெளியே வரும்போது ஒருவர் வழி மறித்து. ''ஐயா எனக்கு வெகுநாளாக ஒரு சந்தேகம். நீங்கள் சொன்ன ஒரு கவியின் பொருள் விளங்காமல் இருந்தது. இன்று தான் உங்களால் விளக்கம் புரிந்துகொள்ளும்படியாக கிடைத்தது. நீங்கள் யார் தெரிந்துகொள்ளலாமா?''
''என்னை வசிஷ்ட பாரதி என்பார்கள். இந்த ஊர் தான் .நீங்கள் யார்?
''நான் அனந்தராம அய்யர். ஊர் தெற்கே விடையாத்தி மங்கலம். நெடுங்காலம் தமிழ் படித்து வருகிறேன். இன்னும் படிக்க ஆசை. அதுவும் கும்பகோணம் காலேஜ் தமிழ் பண்டிதர் உ.வே. சுவாமிநாதய்யரிடம் பாடம் கற்க ஆசை. அவரை உங்களுக்கு தெரியுமா?' நல்லவரா?''
''நெருக்கமாக பழக்கமில்லை. தெரியும். நம் சாதியர். எங்கள் பந்து வர்க்கம். ஒன்றிரண்டு முறை பார்த்திருக்கிறேன். நல்ல ஸ்வபாவம் உடையவர். நீங்கள் போனால் வித்யா தானம் செய்வார்.''
அந்த நண்பர் சில தினங்களில் கும்பகோணம் சென்றார். அய்யரிடம் பாடம் கற்றார். அதற்கு பிறகு சில காலம் சென்று எனது ''ஒரு துறைக் கோவை'' யில் புதிதாக எழுதிய சில கவிகளை எழுதி கும்பகோணம் சுவாமி நாத அய்யரின் பார்வைக்கு அதைக் கொண்டு செல்ல நானும் (வஸிஷ்ட பாரதிகள்)என் தமையனும் (சீதாராம பாரதி) நேரே சென்று அவரைப் பார்த்தோம். ஐயரவர்கள் அதை பார்த்துவிட்டு
''பேஷ்...நன்றாக இருக்கிறது. மற்றுமுள்ள கவிகளோடு நேரில் பார்க்க நேர்ந்தால் இதைப் பற்றி ஆராயலாம்'' என்றார்.
குடும்பத்தில் ஒரு கல்யாணம் கும்பகோணத்தில் நடந்த சமயம், அதை முடித்துக்கொண்டு அப்படியே உ.வே.சா ஐயர் அவர்களையும் சந்திக்க உத்தமதானபுரம் சென்றோம்.சென்றோம். காலை ஏழரை மணி. அவர் வீட்டு வாசல் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். போய் பார்த்தோம்.
''வாங்கோ, உக்காருங்கோ. நீங்க யார் தெரியலே. ஏற்கனவே சந்தித்த மாதிரி இருக்கே ?''
''தஞ்சாவூர் சங்கீத பரம்பரை. ரெட்டைப்பல்லவி தோடி சீதாராமய்யர் பௌத்ரர்கள்.''
''அடாடா அப்படியா . ரொம்ப சந்தோஷம். அவர் நம்ம குடும்பத்தில் பெரிய வித்வானாச்சே. அவர் புகழைப் பல காலும் கேட்டிருக்கிறோமே'' நீங்களும் பாடுவீர்களா?''
என் தமையனார் சீதாராம பாரதி உடனே ஒரு கீர்த்தனம் பாடிக் காட்டினார்
ஐயரவர்கள் கேட்டு விட்டு ''கோபால கிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரத்தில் ஒரு கீர்த்தனம் பாடுங்களேன்'' என்றார்.
என் தமையனார் சங்கீத வித்வானாச்சே. நன்றாக பாடுவாரே. அவர் உடனே நந்தன் சரித்திரத்தில் புன்னாகவராளி ராகத்தில் ''ஐயே மெத்தக் கடினம்'' என்ற நந்தனார் வாக்கினால் நாடகத்தில் வரும் அந்தணர்க்கு உபதேசித்த அரும் பத பாடல் ஒன்றை பாடினார்.
( இந்த அருமையான பாட்டை தண்டபாணி தேசிகர் நந்தனார் சினிமாவில் அக்காலத்தில் பாடியுள்ளதை பல முறை நான் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். நீங்களும் கேட்டிருப்பீர்கள். சமீபத்தில் அருணா சாய்ராம் அவர்களும் இதை வெகு நன்றாக பாடிய ஒலி நாடா என்னிடம் இருக்கிறது. இந்த பாடலை என் தமையன் ரத்னம் அய்யர் நன்றாக சிறுவயதில் பாடி எங்கள் தாத்தா வசிஷ்ட பாரதியே கேட்டு மெச்சினது ஞாபகத்தில் உள்ளது...ஜே.கே.சிவன்)
பாட்டைக் கேட்ட ஐயரவர்கள் கண்களில் நீர் ததும்ப ரசித்துவிட்டு. என்னைப் பார்த்தார். பிறகு என் தமையனாரிடம் ''உங்கள் தம்பிக்கும் பாட்டு தெரியுமா?'' என்று வசிஷ்ட பாரதியைச் சுட்டிக்
காட்டி கேட்டார்.
''தமிழ் ஞானம் உண்டு. பிரசங்கங்கள் பண்ணுவான். நான் கதா காலக்ஷேபம் பண்ணுவேன்.''
''எங்கே ஒரு கவி சொல்லுங்கள் '' என்று வசிஷ்டபாரதியைப் பார்த்து கேட்டார்.
''இரணிய நாட்டன் இரணியன் ஈரைந்தலையன் கஞ்சன்
முரணிய கோட்டில் நகத்தில் கரத்தில் முன் நாளில் துஞ்ச
தரணியில் குத்தியிடந்து எய்து உதைத்தவன் சர்ப்ப வெற்பன்
அரணிய கேடில் அரி ராகவன் கண்ணன் ஆகிவந்தே ''
என்ற கம்ப ராமாயண கவியைச் சொல்லி, கதைகளையும் சுருங்க நான் சொன்னபோது ஐயரவர்கள் சந்தோஷித்து வாக்கு நன்றாக இருக்கிறது. விடாமல் படிக்க வேண்டும் என்றார். இதில் என்ன அணி அமைந்திருக்கிறது தெரியுமா?''''நான் ''நிரல் நிறை என்ற கிரமலங்காரம்'' என்றேன்
சிரித்துக்கொண்டே ஐயரவர்கள் ''வடமொழிப் பயிற்சி உண்டா?''
''சிறிது உளது. இப்போது தான் ''காவ்யம்'' ஆரம்பம், பெரிய வித்வான்கள், ஸம்ஸ்க்ரித சிம்மங்கள், ப்ரும்ம வித்யா ஸ்ரீனிவாச ஸாஸ்த்ரிகள் பழக்கங்கள் அதிகம் இருப்பதை பெரிய பாக்கியம் என்று கருதுகிறோம்'' என்று என் தமையனார் பதில் அளித்தார்.
இதை எல்லாம் ஐயரவர்கள் சகோதரர் சுந்தரேசய்யர் கேட்டுக்கொண்டிருந்தவர் பிறகு எப்போது என்னைப் பார்த்தாலும் இந்த சம்பவத்தை ஞாபகப்படுத்துவார்.
வீட்டின் உள்ளே அப்போது ஐயரவர்களின் அப்பா உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர் (உ.வே. சா அப்பா ) இதை எல்லாம் கேட்டார். அவரை நாங்கள் வணங்கி நானும் என் தமையனாரும் நின்றோம். அவர் பெரிய பெரிய சங்கீத பரம்பரை வித்வாங்களுடைய அருமை பெருமை நன்றாக உணர்ந்தவர்கள் ஆயிற்றே. ஆதலால் மிக சந்தோஷத்துடன் அளவளாவி எங்களை ஆசிர்வதித்தார். திரும்பி புதுக்கோட்டை வந்தோம்.
(இந்த கட்டுரை எனது தாத்தா பிரம ஸ்ரீ வசிஷ்ட பாரதியார் 1930 களில் இந்து நேசன் என்ற தமிழ் பத்திரிகையில் தனது வம்சாவளி பற்றி தொடர்ச்சியாக எழுதிய நினைவு மஞ்சரியை பிரதி எடுத்து என் மாமாக்கள் சிலர் இதை போற்றி வைத்திருந்து எனக்கும் ஒரு நகல் கிடைத்ததிலிருந்து உங்களுக்கு இதெல்லாம் எடுத்துச் சொல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.
மஹா பெரியவாளிடமிருந்து ''புராண சாகரம்'' விருது பெற்ற எங்கள் தாத்தா தனது 75ம் வயதில் இயற்கை எய்தினார் 18.10.1945). காலத்தின் வேகம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறதே.
3.5.2016 எங்கள் தாத்தாவின் 150வது நினைவு விழா உறவினர் நண்பர்களோடு சேர்ந்து கொண்டாடி ''எங்கள் பாரதி வம்சம் '' என்ற அவர் எழுதிய வாழ்க்கை குறிப்புகளை திரட்டி ஒரு புத்தகமாக வெளியிட்டேன். என் நண்பர் ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா சொசைட்டி தலைவர் திரு கீரனுர் ராமமூர்த்தி வந்திருந்து சொற்பொழிவாற்றி என்னை கௌரவித்தார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...