ஒரு புழுவின் சரித்திரம்'' - நங்கநல்லூர் J K SIVAN
எனது ''ஐந்தாம் வேதம்'' (2ம் பாகம்) என்னும் வியாசர் எழுதிய மஹா பாரதத்திலிருந்து ஒரு கதை:
''ஜனமேஜயா, ஒரு சமயம் பிரஹஸ்பதியை யுதிஷ்டிரன், திருதராஷ்டிரன் மற்றும் பாண்டவர்கள் சகிதம் சந்தித்து அவருக்கு தக்க உபசாரங்கள் அளித்து வணங்கினான். அப்போது யுதிஷ்டிரன் ப்ரஹஸ்பதியை கேட்ட ஒரு கேள்வி:
''மகரிஷி, ஒரு மனிதனின் உற்ற துணை யார், அப்பாவா, அம்மாவா, நண்பனா வேறு யார்? இந்த உடலை விட்டு அவன் பிரிந்தபோது யார் அவன் கூட வருவார்கள்?
"யுதிஷ்டிரா, எவனும் தனியே பிறந்து தனித்தே இறக்கிறான். எதிர்கொண்ட இன்ப துன்பங்களை தனித்தே அனுபவிக்கிறான். உடன் பிறந்தவர், தோற்றுவித்த பெற்றோர் யாரும் அவனருகில் இருந்தாலும் அவன் தனித்தே ஒவ்வொன்றையும் சந்தித்தாக வேண்டும். யாருமே கூட வரமாட்டார்கள். வரவும் முடியாது. அவன் செய்த தர்மம் நற் கர்மங்கள் மட்டுமே அவன் உடலைத் துறந்த பின் ஸ்வர்கத்தில் அவனைத் தொடரும். அவனது துஷ்கர்மங்கள் அவனை நரகத்தில் கொண்டு தள்ளும்.
அவன் ஆசையோடு அக்கறையோடு வளர்த்த உடல், எலும்பு, சதை, தோலோடு அழியும், உருவம் இவ்வாறு பஞ்ச பூதங்களை சேர்ந்து அடைந்த பின், அழிந்த பின், அவனது தர்ம கர்மம் அவனது சூக்ஷ்ம சரீரத்தோடு ஒட்டிக் கொண்டு செல்லும். மற்றொரு சரீரத்தில் குடி புகும். ஜீவன் கர்மங்களோடு இணைந்து செயல் படாதபோது மறைந்து விடும். இணைந்தால் உடல் பெற்று ஜீவன் உடலோடு மீண்டும் வளரும்.
யுதிஷ்டிரா, ஒருவன் அன்ன தானம் செய்வதன் மூலம் தனது பாபங்களிலிருந்து விடுபடுகிறான். அன்னம், உணவு ஒன்றே சர்வ ஜீவாதாரம். நிறைந்த மனத்தோடு அளிக்கப்பட்ட உணவு அவ்வளவு சக்தி வாய்ந்தது. பிராண சக்தி அளிக்கிறது அல்லவா? தேவதைகள், பித்ருக்கள், ரிஷிகள், எல்லோருமே திருப்தி அடைகிற ஒரே விஷயம் அன்னம், அதாவது உணவு. அதனால் தான் ரந்தி தேவன் ஸ்வர்கம் அடைந்தான். 'உண்டி கொடுத் தோர் உயிர் கொடுத்தோர்' என்று நம் மூதாதையர் சொன்னது இதனால் தான்.
உயிர்களிடம் இரக்கமும் தயையும் கொண்டவன் ஸ்ரேஷ்டன். தன்னைப் போல் பிறரை நினை. உனக்கு எப்படி காயப்படாமல் பார்த்துக் கொள்வாயோ அப்படியே பிறரையும் காயப் படுத்தாதே, எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும்.
வேத வியாசர் ஒரு புழுவைப் பார்த்தார். அது வேகமாக முடிந்தவரை சீக்கிரமாக பறந்து ஓட முயற்சித்தது.
''ஏ புழுவே, எதற்கு இந்த அவசரம், என்ன பயம் உனக்கு, எதைக் கண்டு, சொல் என்னிடம்?''
'' மகரிஷி, என் காதில் ஒரு பெரிய சப்தம் கேட்கிறது. அது அருகில் வந்தால் அதால் ஏதாவது உன் உயிருக்கு ஆபத்து ஏற்பாடாதா? அதால் தான் இங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தேன். அதோ பாருங்கள்'' என்றது புழு.
அங்கே தூரத்தில் ஒரு தேர் வந்து கொண்டிருந்தது. குதிரைகள் அதை இழுத்து ஓடி வந்தன. வாயில் நுரை தள்ள அவை வேகமாக பறந்து வந்தன. அதை ஒருவன் அடித்து வேகமாக ஓட வைத்தான். எங்கே அவற்றின் கால்களில் மிதி படுவோமோ, அந்த சக்கரங்கள் அரைத்து விடுமோ என்று அஞ்சி தான் நான் ஓடினேன். மரணம் வலியைத் தொடர்ந்து தான் வரும். வலி எதற்கு எனக்கு? இப்போது இருக்கும் சுகத்திலிருந்து எதற்கு துக்கத்துக்கு நான் மாறவேண்டும்? '' என்றது புழு.
'' அப்படி இல்லை, புழுவே, உனது இந்த ஜென்மமே உன் பாபத்தில் உண்டானது. இதை விட உயர்ந்த பிறவி கிடைக்க நீ இதை இழக்கலாம். அதற்கு மரணம் உனக்கு உதவுமே. லாபம் தானே''.
' முனிவரே, எந்த உயிரினமாக இருந்தாலும், தற்போதைக்கு அதனதன் உடல் அதற்கு முக்கியமானது. அதை இழந்து விட முயலாது விரும்பாது. . மரணம் வரும்போது வரட்டுமே. அதை எதற்காக எதிர்கொண்டு வரவழைக்க வேண்டும்.
நான் என் முற்பிறவியில் ஒரு மனிதனாகவே இருந்தவன். கொடியவன். கெடுதல் செய்பவன். அலட்சியமாக எல்லோரையும் வார்த்தைகளால் புண் படுத்தியவன். பிறர் பொருள் அபகரித்தவன். அப்படியிருந்தும், என் தாயை மதித்தேன், வழிபட்டேன். ஒரு பிராமணனுக்கு உதவி, அதிதி உபச்சாரம் செய்தேன் . அது என்னை மீண்டும் நற் பிறவி எடுக்க உதவும்.
முனிவரே என் கதை கேட்டீர்கள், என் தவறான செய்கைகளுக்கு வருந்துகிறேன். எனக்கு ஏதாவது நன்மை செய்து அருளவேண்டும். '' என்றது புழு.
''புழுவே, உனக்கு நற்கதி கிட்டும். ப்ரம்மாவிடம் உனைப் பற்றி சொல்வேன்.உனக்கு சீக்கிரம் விடிவு காத்தி ருக்கிறது'' என்றார் வியாசர்.
இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போது தேர் அருகே வந்து விட்டது. புழு வேகமாக நகர இயலவில்லை. தேர் சக்கரத்தில் நசுங்கி புழு தனது பிராணனை விட்டது. அடுத்த பிறவியில் ஒரு க்ஷத்ரிய னாயிற்று. வியாசர் அருளால் மேன்மை அடைந்த புழு வியாசரை அணுகி அவர் பாதத்தில் நன்றியோடு வணங்கியது.
'முனிவரே நான் இப்போது ஒரு ராஜா. சகல சுக போகங்களுடன் தங்கள் ஆசியால்அனுபவிக்கிறேன்' என்றான் புழுவாக இருந்த க்ஷத்திரியன்.
''உன் நற்குணத்திற்காக உன்னை பிராமணனாக பிறவி எடுக்க ஆசிர்வதிக்கிறேன். நீ ஒரு யுத்தத்தில் உயிர் துறந்தவுடன் உனக்கு இந்த மேன்மை கிடைக்கும்.'' என்றார் வியாசர். அவ்வாறே அந்த க்ஷத்ரியனும் ஒரு போர்க்களத்தில் உயிர் நீங்கி பிராமணனாகி விட்டான். பூர்வ ஜென்ம வாசனை ஞாபகங்கள் அவனுக்கு தோன்றியதால், தனது ஜென்மங்கள் அப்போது நடந்த நிகழ்ந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தது. புழுவிலிருந்து, அதற்கு முன்பிருந்து, பிறகு பிராமணனாக பிறந்தது வரை நிழல் படமாக மனதில் விரைந்ததால் நன்றியோடு வியாசரை வணங்கினான்.
'' குருதேவா, பீஷ்ம பிதாமகரே, உங்களிடமிருந்து எவ்வளவு சிறந்த விஷயங்கள் அறிகிறேன். எனக்கு எல்லா அறிவுரைகளும் அளிக்க வேண்டுகிறேன்'' என்று யுதிஷ்டிரன் பீஷ்மரை வணங்கி நின்றான். |
|
No comments:
Post a Comment