Wednesday, December 1, 2021

VAINAVA VINNOLI

வைணவ விண்ணொளி  -  நங்கநல்லூர்   J K   SIVAN  
10.  சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது! 
நமது சென்னையிலிருந்து சற்றே தூரத்தில் ஒரு ஊர். பூந்தமல்லி என்று பெயர். இது அதன் இயற் பெயர் இல்லை. ஹமில்டன் வாராவதி அம்பட்டன் வாராவதி (ஒரு சிலர் இதை மறுபடியும் ஆங்கிலத்தில் ''Barber's bridge என மொழி பெயர்ப்பு வேறு!!) ஆனது போல், பூவிருந்த வல்லி பழைய அழகிய செடி கொடி மலிந்து கம்மென்ற மணமிழந்து தனது பேரையும் அடையாளம் இழந்து விட்டது.

இதன் அருகே மற்றொரு அருமையான புனித கிராமம் திருமழிசை.  வெள்ளைக்காரன் வாயில் நுழையாத ' ழ''   அவன் பெயர் வைத்து  நம்மவரும் வெட்கமில்லாமல்  ஆங்கிலத்தில் சொன்ன பெயர்   திருமுஷி! 
 திருமழிசை பூந்தமல்லி தேசிய சாலையில் திடீரென்று வலக்கை பக்கம் திரும்பும். ஊசி குத்த இடம் இல்லாமல் ஒரு பெரிய தொழில் பேட்டையாகவும் திருவள்ளூர்,திருத்தணி போகும் வேகப் பாதையாகவும் இருப்பது மட்டும் தான் நமக்கு தெரியும். .ஆனால் இதெல்லாம் அதற்கு பெருமை சேர்க்காது. .

7ம் நூற்றாண்டில் இந்த கிராமம் வெறும் மூங்கில் காடாக இருந்த சமயம். ஒரு நாள் பார்கவ ரிஷி என்ற ஒரு பக்தர் கனகாங்கி என்னும் தனது பத்னி யோடு மனம் நொந்து அந்த காட்டிற்கு வந்தார்.அவள் கண்ணில் காவேரி .அவர் கையிலோ 12 மாசம் கருவில் இருந்தும் உடல் உறுப்புகள் இன்றி ஒரு உயிரற்ற மாமிச பிண்டமாக ( கிட்டத் தட்ட நாம் இப்போது சொல்கிறோமே ஸ்டில் பார்ன் என்று அதுபோல்) பிறந்த ஒரு சிசு.

''இறைவா, இதுவும் உன் செயலாலே என்றால் அப்படியே ஆட்டும்".
ஒரு மூங்கில் புதரில் அந்த சிசு கை விடப்பட்டது. இதயம் வெடித்து சிதற பெற்றவர்கள் பார்கவ ரிஷியும் கனகாங்கியும் இனி அந்த குழந்தை வைகுண்டம் செல்லட்டும் என்று வேண்டிக்கொண்டு அங்கே காட்டில் அதை விட்டு விட்டு கண்ணில் நீர் மல்க மனம் உடைந்து திரும்பி சென்றனர்.

நாராயணன் சித்தம் வேறாக இருந்தது அவர்களுக்கு எப்படித் தெரியும்? எம்பெருமானின் கருணையை வார்த்தைகளில் நிரப்ப  முடியுமா? தனித்து விடப்பட்ட "அது",  அந்த குறைப் பிரசவ சிசு, சில மணி நேரத்திலேயே பூரண தேஜஸோடு முழு வளர்ச்சியடைந்த குழந்தையாக அழுதது.

காட்டில் உலவிக்கொண்டிருந்த குழந்தைச்  செல்வ மில்லாத இரு வயதான காட்டு வாசிகளான திருவாளன், பங்கயற்செல்வி ஆகிய தம்பதியர் அந்தப் பக்கமாக அப்போது தான் வரவேண்டுமா?
அவர்கள் காதில் மூங்கில் காட்டில் ஒரு குழந்தை அழும் ஒலி ஸ்பஷ்டமாக கேட்கவேண்டுமா?
கேட்டதும் ஆச்சர்யத்தோடு குழந்தையை தேடி கண்டு பிடிக்க வேண்டுமா?
யார் இந்த குழந்தையை இங்கே விட்டு விட்டு சென்றது என்று தேட வேண்டுமா?
யாரும் உரிமை கொள்ள இல்லையே என்று வருந்தவேண்டுமா?
அவர்களுக்கு குழந்தைச் செல்வம் இல்லாமல் இப்படி திடீரென்று ஒரு அபூர்வ குழந்தை கிடைக்க வேண்டுமா?
இதற்கெல்லாம் ஒரே பதில் எல்லாம் சர்வேசன் நாராயணன் செயல்.
காட்டுவாசிகள் அந்த குழந்தையை தங்கள் குடிசைக்கு எடுத்து சென்றனர்.. திருமழிசையில் கிடைத்ததால் அதற்கு திருமழிசையான் என்றே பெயரிட்டனர். மிக்க ஆனந்தத்தோடு அதற்கு பசும்பால் ஊட்டினர்
''ஐயோ இதென்ன சோதனை? குழந்தை பால் கூட பருக மறுக்கிறதே. ஆகாரமே உட்கொள்ளாததால் அவர்களுக்கு கவலை வந்துவிட்டது.
"ஹே! திருமழிசையானே நீயே அருளவேண்டும், இந்த சிசு பாலுண்ண வேண்டும்'' என அந்த கிழ தம்பதியர் அந்த ஊர் பெருமாளையே தஞ்சமென வேண்டியவுடன், குழந்தை சிறிது பால் அருந்தி விட்டு மீதியை அவர்களே குடிக்க வைத்தது.

தொடர்ந்து இன்னொரு ஆச்சர்யம்! குழந்தை  குடிக்க மறுத்து அவர்களுக்கு அளித்த பாலை  இருவரும்  அருந்தியவுடன் அந்த கிழ வேடுவர்கள் உருவில்  இளம் தம்பதிகள் ஆகி அவர்களுக்கு விரைவில் ஒரு குழந்தையும் பிறந்து அவனுக்கு கணிக்கண்ணன் என்று பெயரிட்டு அவன் திருமழிசையானுடன் இளைய சகோதரனாக வளர்ந்தான் என்று ஒருவரியில் கதையை சுருக்கி விட்டேன்.

திருமழிசையான் கல்வி கேள்விகளில் சிறந்தவனாகி பல மதங்களை ஆராய்ந்து பின்னர் சிவபக்த சிரோமணியாக மாறி சிவவாக்யர் ஆனார் என்று சொல்வதுண்டு. நிறைய சிவ வாக்கியர் பாடல்கள் உங்களுக்கு ஏற்கனவே எழுதியிருக்கிறேன். மிகவும் சக்திவாய்ந்தவை.  சொற்கட்டு நிரம்பியவை.  அர்த்த புஷ்டியானவை.  எனக்கும் உங்களுக்கும் மிகவும் பிடித்தவை. மீண்டும் ஒரு சில பாடல்களை மட்டும் அலசுவோம். எழுத்திலே பல 'டன்' சுமையும் வலிமையையும் கொண்டவை.

''இல்லை இல்லை இல்லையென்று இயம்புகின்ற ஏழைகாள்
இல்லையென்று நின்ற தொன்றை இல்லையென்ன லாகுமோ
இல்லையல்ல வொன்று மல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லைகண்டு கொண்டபேர் இனிப்பிறப்பது இல்லையே''.

(அவன் இல்லாதது போல் இருக்கிறான். இல்லை என்று சொல்வதனால் இல்லாதவனாகி விடுவானா? எல்லாமாக இருக்கும் ஒன்று என்றாலும் இல்லவே இல்லை என்றாலும் இரண்டும் அவனே என்று முடிவாக தெரிந்தவர்கள் ஜனனம் மரணம் சுழற்சி முடிந்து இனி பிறவாவரம் பெற்றவர் என்கிறார் சிவ வாக்யர் )

''தில்லைநாயகன் னவன் திருவரங் கனும் அவன்
எல்லையான புவனமும் ஏகமுத்தி யானவன்
பல்லுநாவும் உள்ளபேர் பகுந்துகூறி மகிழுவார்
வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே.

(அரியும் அரனும் ஒண்ணு.இந்த புவனமே அவன். எல்லாமும் தானான ஒருவன். பல்லும் நாக்கும் புரட்டிப் பேசும் மனிதர்களே , கபர்தார்!! நீங்கள் யாரேனும் அந்த அரியும் அரனும் வேறு என்று பங்கு போட்டு பேசி மகிழ்வதாக இருந்தால் , ஞாபகம் இருக்கட்டும் வாய் புழுத்து விடும். அப்புறம் அபோல்லோ உங்களை விழுங்க வாய்ப்பு ஏற்படும் என்கிறார். )

இந்த சிவ வாக்கியரை பேயாழ்வார் நாராயணனின் மகத்வம் உணர வைத்து வைணவராக மாற்றி திருமழிசை ஆழ்வார் என்று நாமகரணம் செய்தார் என்று சொல்வதுண்டு.  ஸம்ஸ்க்ரிதத்தில் மழிசை என்பது 'மஹீஸாரம்' என்று பெயர் கொண்டது. திரு மழிசை  '' மஹீஸார க்ஷேத்ரம் " (பூமிக்கே ஸாரமான ஊர்) என்று புகழ் பெற்றது.

மஹீஸாரத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் திருமழிசை ஆழ்வாருக்கு பக்தி ஸாரர் என்றும் பேயாழ்வார் நாம மிட்டார். .ஆழ்வார் கூடவே இருக்கும் அவரது இளைய சகோதரன் கணிக்கண்ணன் ஆழ்வாரின் பிரதம சிஷ்யனானான். இனி திருமழிசை ஆழ்வார் என்றே அழைப்போம்.

ஒரு முறை அவர் காஞ்சீபுரத்துக்கு வந்து அங்கே வாஸம் பண்ணிக் கொண்டிருந்தார். அங்கேயிருக்கிற ஒரு பெருமாள் கோவிலில் பாசுரம் பாடிக் கொண்டும், உபதேசம் பண்ணிக்கொண்டும் அவ்வப்போது அப்படியே யோக ஸமாதியில் ஆழ்ந்து கொண்டவாறும் இருந்தார்.

ஒரு வயதான பெண்மணி பிரதி தினமும் அந்த ஆலயத்துக்கு வந்து பெருமாளுக்கு தொண்டு விடாமல் செய்வது கண்டு மகிழ்வுற்ற ஆழ்வார் அவளுக்கு இளமை திரும்ப பெருமாளிடம் வேண்டுகிறார். அழகிய யுவதியாக அந்த பெண் மாறுகிறாள். இந்த செய்தி காட்டுத்தீயாக எங்கும் பரவி அந்த ஊர் அரசன் காதிலும் புகுந்தது. பல்லவ ராஜா அவளது அழகில் மயங்கி அவளை மணக்கிறான். அவள் மூலம் அவள் எழில் ரகசியம் அறிகிறான். அந்த ராஜாவுக்கு இப்போது தனக்கும் இளமை திரும்ப வேண்டும் என்ற ஆவல் வந்து, அவள் மூலம் அந்த கோவிலுக்கு வருகிறான்.

பெருமாளை வழிபடும்போது கணிக்கண்ணனின் அழகு தமிழில் செவிக்கினிய பாசுர மியற்றும் பாங்கில் மயங்கி ராஜா தன் மீதும் புகழ்ந்து ஒரு பாடல் இயற்ற உத்தரவிட்டதும், கணிக்கண்ணன் பவ்யமாக ''அரசே இறைவன் மீதன்றி மற்றவர் மேல் புகழாரம் பாடும் வழக்கம் இல்லையே'' என மறுத்ததும்,அரசன் கோபம் கொண்டான்.

''யாரங்கே, மந்திரி, இதை கவனித்தாயா? நமது நாட்டின் பிரஜை ஒருவன், அதுவும் ஏழைப் புலவன், இந்த கணிக்கண்ணன்,  என்னை அவமானப் படுத்திவிட்டான். இவனை தண்டிக்காமல் விடக்கூடாது. ஆனால் அவன் அறியாமையால் செய்த பிழைக்காக அவன் மீது கருணை கொண்டு இன்னுமொரு வாய்ப்பு தருகிறேன். நாளைக்  காலைக்குள் இவன் என் மீது பாட்டியற்றி பாட வில்லை என்றால், நாளையே இவன் இந்த ஊரை விட்டே வெளியேற வேண்டும். இல்லையேல் அவனுக்கு சிரச்சேதம்'' என்று உத்தரவு போட்டுவிட்டு சென்று விட்டான்.

கணிக்கண்ணன் அதிர்ந்து போனான். தன் குருவான திருமழிசை ஆழ்வாரிடம் சென்று நடந்ததை சொன்னான். பிறகு அவர் திருவடிகளில் விழுந்து வணங்கி "ஸ்வாமின், நான் உங்கள் நிழல், எவ்வாறு உங்களை விட்டு பிரிந்து செல்ல முடியும்'? ' என்றதும், ஆழ்வார் அமைதியாக பெருமாளை நோக்கினார் 'என்ன பார்க்கிறாய்?
''கணிகண்ணன் போகின்றான் காமரு பூங் கச்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா
செந்நாப் புலவனும் போகின்றேன் நீயும் உன்றன்
பை நாகப்பாயை சுருட்டிக் கொள்''

"ஹே!! நாகசயனா, என் அருமை தம்பி, ஸ்ரீ வைஷ்ணவன், கணிக்கண்ணன் போகின்றான்,  அவனின்றி நானில்லை.  நானின்றி அவனில்லை. எனவே நானும் போகிறேன், நீயின்றி நானில்லை எனவே நீயும் சட்டு புட்டு என்று உன்னுடைய இந்த நாகப் பாம்பு  படுக்கையை சுருட்டி கொண்டு ஐந்தே நிமிஷத்தில் கிளம்பு மூவருமே இந்த ஊரை விட்டு செல்லலாம்" என்று ஆர்டர் போட்டார்!

கணிக்கண்ணன் முன்னால்  நடக்க அவன் பின்னே திருமழிசை ஆழ்வார் தொடர, அவர்கள் பின்னே தனது சேஷ சயன படுக்கையை தோளில் தூக்கிக் கொண்டு பெருமாள் ஆகிய மூவரும் காஞ்சியை விட்டு அகன்றனர்.

அடுத்த கணமே அந்த ஊரே அஸ்தமித்து விட்டது. மண்மாரி பெய்தது. ராஜாவுக்கு விஷயம் தெரிந்து அலறிப்  புடைத்துக்கொண்டு ஓடினான். பெருமாள்,ஆழ்வார் கணிக்கண்ணன் மூவர் திருவடிகளிலும்  விழுந்து புரண்டான். அழுது தீர்த்தான். ''புண்யா ,பாதகன் நான் மாபெரும் தவறிழைத்தேன். செய்த தவறை உணர்ந்து உங்கள் திருவடி களில் சரணடைந்து திருந்தினேன். என் தவறை மன்னித்தருளவேண்டும்'' என்று அலறினான். நீங்கள் வராமல் ஊர் திரும்பேன்'' என்று கெஞ்சினான்.

ஆழ்வார் ''கணிக்கண்ணா, வா திரும்புவோம்" என்றார். பின்னால் நின்ற பெருமாளைப்  பார்த்து " என்ன பார்க்கிறாய், நீயும் தான், நீ இல்லாமல் நாங்கள் ஏது? சுருட்டிய உன் பாம்பு படுக்கையை மீண்டும் தூக்கிண்டு வா திரும்புவோம். உன் இடத்துக்கே மீண்டும் போவோம். அங்கு வந்து படுக்கையை விரித்துக் கொள்" என்றார். அந்த பாடல்:

''கணிக்கண்ணன் போக்கொழிந்தான், காமருபூங் கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டும்- துணிவுடைய
செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன், நீயுன் உன்றன்
பைந்நாகப் பாயில் படுத்துக் கொள்''

மூவரும் திரும்பினர். இந்த பெருமாள் அந்தக் கணம் முதல் "சொன்ன வண்ணம் செய்த பெருமாள்" (யதோக்த காரி'.   யதா உக்த''= சொன்னபடி', 'சொன்ன வண்ணம்';காரி'=செய்பவர்) என்று பெயர் வாங்கினான்.

திரு வெக்கா என்று இந்த கோவில் க்ஷேத்ரத்துக்கு பெயர். 108 திவ்ய தேசங்களில் ஒன்று. ஏறக்குறைய ஆயிரம் வருட வயதுள்ள வைஷ்ணவ திவ்ய தேச கோவில். வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து ஒரு கி.மீ தூரம் தான். விஷ்ணு காஞ்சி பஸ் நிலையத்திலிருந்து 2 கி.மீ. எதிரே அஷ்ட புஜம் பெருமாள் கோவில் அசாத்யமாக இருக்கிறது. நான் சென்று மகிழ்ந்தேன். நீங்கள்?  ஒன்று நிச்சயம். காஞ்சிபுரம் சென்றும் இதை தரிசிக்காதவர்கள் மூச்சிருந்தும் பேச்சில்லாதவர்களுக்கு சமம். நின் கடன் அடியே  னையும் தாங்குதல் என்கடன் பணி செய்து கிடப்பதே என்று இறைவனே மூச்சாக வாழ்வோர்க்கு இறைவன் சொன்னதையும் மட்டும் அல்ல,  ஏன் சொல்லாததையும் செய்வான். இறைவன் பக்தனுக்கு அடிமை என்பதற்கு இந்த கதை ஒன்றே போதுமே!
ஒரு முக்கிய  விஷயம்:  திருமழிசை ஆழ்வார் நாராயணனின் சுதர்சன சக்ர அம்சம்.

ஆழ்வார் பிராமணர் இல்லை என்று சிலருக்கு  ஆழ்வாரை கோவிலில் அர்ச்சகர் கௌரவிப்பது பொறுக்க முடியவில்லை. தாறுமாறாக பேசினார்கள். ஆழ்வார் அப்போது இயற்றிய ஒரு பாடல் பொருள் செறிந்தது:
அக்கரங்கள் அக்கரங்கள் என்றும் ஆவது என்கொலோ
இக்குறும்பை நீக்கி என்னை ஈசனாக்க வல்லையேல்
சக்கரம் கொள் கையனே, சடங்கர் வாய் அடங்கிட
உட்கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காத்திடே -

''ஹே, நாராயணா , உனக்கு நாற்கரங்கள் இருந்தும் என்ன பயன் சொல்?. உன்னால் இந்த வீணர்கள் வாயை உன் கைகளால் ''நிறுத்துங்கள்'' என்று சொல்லி பொத்த முடிந்ததா? உன்கையில் சக்கரம் வேறு! நீ என்னுள்ளே புகுந்தால் நானே இவர்களுக்கு என் வாயால் அவர்கள் வாயை மூட வைப்பேனே!

நாராயணன் அவ்வாறே ஆழ்வாரின் உடல் புகுவதை எல்லோரும் பார்த்தார்களாம். பிறகென்ன அத்தனை பேரும் அவர் திருவடிகளில் ''எங்களை மன்னித்துவிடுங்கள் '' என்று கூறி ' தடால்'' தான்.

ஆழ்வார் கும்பகோணம் சென்றார். தனது திருச் சந்த விருத்த பாசுரங்களை ஓலைச் சுவடியில் எழுதி வைத்திருந்த தெல்லாம் அப்படியே சுழியிட்டு ஓடும் காவேரியில் எறிந்து விட்டார். உனக்கு பிடித்திருந்தால் மீண்டு வரட்டுமே.!

''நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்று இருந்து தீவினைகள் தீர்த்த தேவ தேவனே
குன்று இருந்த மாடம் நீடு பாடகத்தும் ஊரகத்தும்
நின்றிருந்து வெஹ்கணைக் கிடந்ததென்னை நீர்மையே?''

''இதோ இருக்கிறாரே இந்த நாராயணன் என்ன பண்ணினார்? நான் பிறப்பதற்கு முன்பாகவே ஊரகத்தில் நின்றவர், பாட கத்தில் போய் உட்கார்ந்தவர், திருவெட்காவில் கால் நீட்டி படுத்தவர், எனக்கு அப்போது எது ஞானம்?கொஞ்சம் ஞானம் கிட்டியதும் மறப்பேனா? அவர் அப்புறம் என்ன செய்தார் என்று சொல்லவில்லையே, எனக்கு அவர் பற்றிய ஞானம் வந்ததும் மேலே சொன்ன எல்லா இடத்தையும் விட்டு நேராக வந்து என் இதயத்தில் குடிபுகுந்து விட்டார், அதுவும் நிரந்தரமாக..!!".

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...