Friday, December 31, 2021

new year wish

 வாழ்க  வளமுடன்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 


நாம்  வெள்ளைக்காரர்கள்  அல்ல.  
ஜனவரி முதல் நாள்  எந்த விதத்திலும்  நமது  புத்தாண்டு அல்ல. 
ஆனால்  பல  நூறு ஆண்டுகள்  வெள்ளையர் ஆண்ட  நாடு  இது. அவர்கள்   அறிமுகப்படுத்திய பழக்க வழக்கங்கள் இன்றும் நம்மை விட்டு போகவில்லையே.   

 வீட்டில்  ஆங்கிலத்தில்  பேசும்  தமிழ்க் குடும்பங்கள்  அதை  நாகரிகமாக கருதுகிறதா? ஆங்கிலச் பேசாவிட்டால் அநாகரிகமா?  
 தமிழுக்கு பிறகு ஏன்  மதர் டங்   mother tongue .  தாய் மொழி  என்று பொருந்தாத பெயர்?   தாயே வேண்டாமா?  அதன்  சிறப்பு  ஏன் புரியவில்லை?  
கொஞ்சம் கொஞ்சமாக நாம் மேற்கு நோக்கி  ஏன்  நகர்கிறோம்?   உடை, உணவு, பாஷை, உறவு முறை  எல்லாம் மேனாட்டு பாணியிலா ?
இதெல்லாம்  இல்லாவிட்டால்  நாம்  கௌரவம் பெறாதவர்களா?    காட்டு மிராண்டிகளா இன்னும்?   எனக்கு இதற்கெல்லாம் விடை தெரியாது. ஏனெனில்  நானும்  கும்பலில்  ஒருத்தன் தானே.

இந்த புது வருஷம் எத்தனை வினோத செயல்களை செய்ய வைத்திருக்கிறது.

காலண்டர்  என்று பன்னிரண்டு மாசங்களை காட்டும்  12 காகிதங்களோடு, அல்லது ஒரே பக்கத்தில் மேலே படத்தோடு கீழே  12 கட்டங்களோடு அல்லது  தினசரி ஒரு சீட்டு கிழிக்கும் படியாக  அட்டையில் சாமி படத்தோடு  கிடைப்பதற்கு எங்கெல்லாம்  தேடி அலைந்திருக்கிறேன்.  

 காலண்டரை எப்படியாவது நிறைய  வாங்கி  சேர்த்துவிட  வேண்டும் என்று  ஒரு பசி.   கடை கடையாக  அலைந்திருக்கிறேன்.  
அதேபோல்  டயரி எழுதும் பழக்கமே இல்லாவிட்டாலும்  யாரைப்பார்த்தாலும்  டயரி கிடைக்குமா என்று கெஞ்சி இருக்கிறேன்.  
 டயரிகள் , எனக்கு தெரிந்து   சலவைத் துணி  கணக்கு எழுத  பால் தயிர் கணக்கு  மற்றும்  அட்ரஸ் எல்லாம் எழுத தான் நிறைய குடும்பங்களில் பயன் பட்டது.   
டயரி என்பது நாட்குறிப்பு.  என்ன நாள் என்ன குறிப்பு?  
சிலர்  பொன்மொழிகள் எழுதி வைப்பார்கள். 
அநேக  குடும்ப ஸ்த்ரீகள்  கையில் இந்த  பழைய டயரிகள்  ஸ்தோத்ர  புஸ்தகமாக, மற்றவர்கள் கையில்  சினிமா பாட்டு எழுதி வைத்துக்கொள்ளும் புத்தகமாக தான் பார்த்திருக்கிறேன்.  

பலர்  பல நாட்கள் என்னை காலண்டர்களுக்காகவும்,  டயரிகளுக்காகவும் நடக்க விட்டிருக்கிறார்கள். அதெல்லாம் நினைத்துப் பார்த்தால்  இப்போது வேடிக்கையாக  சிரிப்பு வருகிறது.  

இப்போது யாரும்  காலண்டர்  தேடுவதில்லை, '' வீட்டில் மாட்ட இடமில்லை சார். காலண்டர்  வேண்டாம்.  டயரி வேண்டாம்.  எழுதுவதில்லை. '' என்று தான் பதில் வருகிறது.

எழுதும்  பழக்கமே போய்விட்டது.   எல்லாம் மொபைலில் இருப்பதால், எல்லோரிடமும்  மொபைல் டெலிபோன் இருப்பதால்,  வீட்டில் கடிகாரம், கைக்கடிகாரம் எல்லாம்  நிறைய காணாமல் போய்விட்டது.  
 கைக்கடிகாரம் கட்டும் பழக்கமும்  நின்று விட்டது. 

புத்தாண்டில் அடுத்து ,முக்கியம் வகித்தது  வாழ்த்து அட்டைகள் .  முன்பு காசு  கொடுத்து வாங்கி முக்யமானவர்க ளுக்கு  அனுப்புவேன் .  போஸ்ட்  கார்டில்  புத்தாண்டு வாழ்த்துகள் எழுதி நிறைய  பேருக்கு  அனுப்பி இருக்கிறேன்.  15 பைசாவில்  முடிந்த  விஷயம்.

இப்போது  வாட்சாப்  எல்லாவற்றையும்  தூக்கி சாப்பிட்டு விட்டது. வித விதமான  வினோத வகையில்  புத்தாண்டு வாழ்த்துக்கள், இது எத்தனை நாளைக்கோ.

எது எப்படியோ,  சரி, வழக்கம் போலவே பழக்க தோஷத்தில்  ''ஹாப்பி நியூ இயர்''  சொல்கிறேன்.  க்ஷேமமாக  இருங்கள், சுபிக்ஷமாக  தேக ஆரோக்கியத்தோடு  இறைவன் அருளால்  குடும்பத்தில்  எல்லோரும் சுகமாக வாழ்க.
லோகா சமஸ்தா சுகினோ பயந்து:   உலகத்தில் எல்லா உயிர்களும்  சுகமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.  



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...