Monday, December 27, 2021

SURDAS

  

ஸூர்தாஸ்  -  நங்கநல்லூர்  J  K SIVAN 

 2.  கை தூக்கி  ஆள்பவன்.  

எண்ணற்ற கிருஷ்ண  பக்தர்களில்   ஒரு சிலரை  நம்மால்  மறக்க முடியவில்லை. 
உண்மையான  பக்தன் மனதில்  ஊற்றாக பக்தி பெருகும்போது அதை வெளிப்படுத்த  அவனுக்கு தனியாக  ஒரு குளுகுளு  அறை , நிறைய  பேனா, பேப்பர் வேண்டியதில்லை.  வயிறு நிறைய  ஆகாரம்  தாக  சாந்தி..... எதுவும் வேண்டாம்.  நினைத்த இடத்தில் அமர்ந்து அவன் கண்ணை மூடி வாய் திறந்தால்  மடை திறந்த வெள்ளமாக பாடல்களும் பாசுரங்களும், பதிகங்களும் வெளி வருவதைப்  பற்றி நாம் அறிவோம். நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள் அவை.

ஸூர்தாஸ் இப்படித்தான்  ஒரு மரத்தடியில் அமர்ந்து மனதில் தோன்றிய கற்பனை வளத்தை உபயோகித்து இட்டு கட்டி  மெட்டு போட்டு  கிருஷ்ணன் வாழ்க்கை பற்றிய  சம்பவங்களை  பாடல்களாக  பாடினார்    .ஒரே ஒரு  வித்யாசம் அவர்  கண்ணை மூடிக்கொண்டு  பாடவில்லை,  கண்  திறந்திருந்தாலும் உலகம் கண்ணில் படவில்லை.  அவருக்கு தான்  கண் பார்வை பிறவியிலிருந்தே கிடையாதே.  

அவர் பாடல்களைக் கேட்டு வருவோர் போவோர் கொடுத்த ஆகாரம் தான் ஜீவனம். அருகே ஒரு பெரிய ஏரி. பிருந்தாவனம் மதுரா போவோர்  செல்லும் வழி. அங்கே வந்து மரத்தடியில் தங்கி ஓய்வெடுப்பார்கள். அவர்கள் பேச்சுகள்  மூலம் காதில் விழுவது தான்  கிருஷ்ணனைப் பற்றிய  செயதிகள், சரித்திரம், உலக ஞானம்.

பதினாலு வயதில் ஏதோ குறி சொல்ல வந்தது. சொன்னது நடந்தது. ஊர் மக்கள் அவரை போற்றி பாதுகாத்தனர். கிருஷ்ணன் தன்னை நம்பினோரை ஏமாற்றுவானா? ஒரு வழி காட்டினான்  . ''இவன் ஒரு அதிசய பையன்'' என்று  அந்த ஊரே நம்பியது.

அந்த ஊர் பஞ்சாயத்து தலைவனின் பிள்ளை  ஒரு சிறு பையன் ஒருநாள் வழி தவறி எங்கோ போய் விட்டான். பஞ்சாயத்து தலைவன்  திண்டாடுகிறான்.  ஸூர்தாஸ்   மனதில் தோன்றிய  ஏதோ ஒரு இடத்தின் பெயர் சொல்லி அங்கே போய் பார் உனக்காக அழுகிறான் என்று சொல்லி, அவன் அங்கே சென்று பார்த்தபோது   அந்த பையன்  அழுது கொண்டு நின்றான்.   அப்புறம் என்ன  கிருஷ்ணன் அருளால்  ஸூர்தாஸுக்கு ஒரு கூரை போட்ட ஆஸ்ரமம் கிடைத்தது. ஊர்க்காரர்கள் ஒரு ஒற்றை கம்பி  ''டொய்ங்   டொய்ங் ''  வாத்யம் ஸுர் தாஸிடம்   கொடுத்தார்கள். அதை உபயோகித்துக் கொண்டே ஏதோ ஒரு சுருதியில் அதை சேர்த்து,  அதோடு கூடவே  பாடுவார் ஸூர்தாஸ். நிறைய சிஷ்ய பிள்ளைகள் சேர்ந்தார்கள். அவர்கள் தான்  ஸூர்தாஸ் பாடப்  பாட  அதெல்லாவற்றையும்  எழுதி வைத்தவர்கள்.  அதில் தான் நமக்கு  8000 மிஞ்சியது  என்று சொன்னேன்.  அதில்  ஒரு  நூறாவது எனக்கு  ஆங்கில அர்த்தத்துடன் கிடைத்ததால் எவ்வளவு சந்தோஷமாக உங்களுக்கு எழுதுகிறேன்!!எல்லாம் கிருஷ்ணன் அருள்!

''ஸூர் தாஸ்,    இங்கிருந்து கிளம்பி நீ பிருந்தாவன் வா. நான் அங்கே உனக்காக காத்திருக்கிறேன்.'' இப்படி  ஒரு இரவு கண்ணன்  ஸூர் தாசை  அழைத்தான்.
''ஆஹா அப்படியே '' -- ஸூர் தாஸ் கிளம்ப சிஷ்யர்கள் வருந்தினார்கள். '
'ஏன் எங்களை விட்டு போகிறீர்கள். நாங்கள் என்ன தப்பு, அவமரியாதை செய்தோம்?''
''அதெல்லாம் ஒன்றுமில்லை. எனக்கு பிருந்தாவனம் செல்ல வேண்டும். நடக்க ஆரம்பிக்கிறேன்''

 வழி யெல்லாம்  கண்ணனை பாடிக்கொண்டே செல்கிறார். இங்கேயே இருங்கள் என்று போகும் வழியெல்லாம் அழைப்பு

 ''நான் ஒரு பர தேசி. ஒரு இடத்திலும் நிற்காதவன்'' என்று ஒரே பதில் அனைவருக்கும் கிடைக்கிறது.  ஸூ ர்தாஸின் கால்கள் பிருந்தாவனத்தை நோக்கியே நகர்கின்றன. வழியே காட்டில் ஒரு பெரிய கிணறு. யாரும் இல்லாத இடம். கண்ணில்லாத ஸூர்தாஸை அந்த கிணறு விழுங்கியது. உடலில் காயம். எப்படி மேலே ஏறி வருவது? பசியோடு ஏழு நாள் கிணற்றில்.

''தாத்தா உன் கையை நீட்டு. மேலே இழுக்கிறேன்''

எங்கிருந்தோ அந்தப்பக்கம் வந்த ஒரு மாடு மேய்க்கும் பையன் குரல் காது அருகில் கேட்கிறது. கிணற்றில் இறங்கி உதவுகிறான்.  அப்புறம்  என்ன?  மேலே ஏற்றிவிட்ட பையன் ஏன் காணாமல் போய் விட்டான்? . கோபால கிருஷ்ணன் ஒரே இடத்தில் இருப்பவனா? . எங்கெல்லாமோ யாருக்கெல்லாமோ உதவ ஓடுபவ னாச்சே!  ஸூர்தாசுக்கு யாரோ ஒரு பையன் உதவினான் என்று தான் தெரியும். யார் என்றோ, அவன் வந்ததும் போனதும் தெரிய கண் இல்லையே.

ஒருநாள்  யாரோ  சொன்னார்கள்.
''ஸூர்தாஸ்,   விஷயம் தெரியுமா உங்களுக்கு? இன்று பிரபல கிருஷ்ண பக்தர் சுவாமி வல்லபாச்சாரியார் இந்த ஊர் வருகிறார்.''
''ஹாஹா....நான் அவரை சென்று நமஸ்காரம் பண்ண முடியுமா?''
ஸூர்தாஸ் எப்படியோ தட்டு தடுமாறி தன்னை சந்திக்க வரும் முன்பே வல்லபாச்சாரியார்,  ஸூர்தாஸை தேடி வந்துவிட்டார். வல்லபாச்சார்யர் திருவடிகளை பிடித்துக்கொண்டு கதறுகிறார்  ஸூர்தாஸ்.

''ஸூர்தாஸ், நான் வந்ததே உங்கள் திவ்ய கிருஷ்ண கானத்தை கேட்கத்தான்''.  தொடர்ந்து வெகுநேரம் ஸூர் சமுத்திர சுனாமி அங்கே கான  வெள்ளமாக பெருகுகிறது.  

 வல்லபாச்சார்யர் சில நாள் தங்கிய போது கிருஷ்ணனை பற்றிய சகல சரித்திரங்களையும் விஷயங்களை
யும்  அவர் மூலம்  ஸூர்தாஸ் காதால்  கேட்டு மனதி  இருத்தி வைத்துக் கொள்கிறார்.  அவ்வளவும் பாடல்களாகி  நமக்கு  கிடைத்துள்ளதே.

வல்லபாச்சாரியார் ஸூர்தாஸை பிருந்தாவனம் அழைத்துச்  செல்கிறார். பிருந்தாவனத்தில் கோவர்தன கிரிதாரி ஆலயத்தில்  ஸூர்தாஸ் ஆஸ்தான வித்துவான் ஆகிறார்.

தான்சேன் மூலம் ஸூர் தாஸ் கீர்த்தனங்களை கேட்ட அக்பர்  '' ஸூர்தாஸ் நீங்கள் எனது சாம்ராஜ்ய அரண்மனை  வந்து பாடுங்கள்'' என்று செய்தி அனுப்புகிறார்.  

''சக்ரவர்த்தி, என்மேல் இவ்வளவு அன்பா?. எனக்கு கிருஷ்ணனின் சமஸ்தானம் ஒன்றில் தான் பாட்டே வரும் '' என்று பதில் அனுப்புகிறார் ஸூர்தாஸ்.
 அக்பர் நேரில் வந்து ஸூர்தாஸை ஆலயத்தில் சந்தித்து அவர் கிருஷ்ண கானாம்ருதத்தை கேட்டு மகிழ்கிறார்.

ஸூர்தாஸ் இயற்றிய கிருஷ்ண கான சமுத்திர அலை இன்னும் பல இல்லங்களில் ஒலித்துக் கொண்டிருக் கிறதே. தமிழ்நாட்டிலும்  பரவ வேண்டாமா?  நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து பரப்புவோமா?  நான் எழுதுகிறேன். நீங்கள் பாடுங்கள், புத்தகமாக்குவோம், எல்லோரும் படிக்கட்டும்.  நமது கைகள் ஒன்று சேர்ந்தால் எதுவேண்டுமானாலும் நிறைவேறும்.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...