திருவெம்பாவை. - நங்கநல்லூர் J K SIVAN
மார்கழி 16ம் நாள்.
16. மணி மணியான மணி வாசகம்
16. முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவணமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்.
மணி வாசகரின் இந்த 16வது திருவெம்பாவை பாடல் எவ்வளவு பொருள் செறிவு கொண்டு அவறது பரந்த திறந்த மனத்தை வெளிப்படுத்தும் எளிய பாடலாக பக்திச் சுவை மிளிர அமைந்திருக்கிறது பாருங்கள்.
''மேகமே! முதலில் இந்தக் கடல் நீரைக் குடி. நிறைய குடி. பிறகு எழுந்து எம்மையுடையாளாகிய அம்மையினது திருமேனி போல நீல நிறத்தோடு, ( நாகப்பட்டினத்தில் நீலாயதாக்ஷி நினைவிலிருக்கிறாளா? ) மேலே இருந்து எங்களுக்கு உன் திவ்ய காட்சி தா. எம்மை அடிமையாக உடையவளது சிற்றிடை போல மின்னி ஒளிவிட்டு, மின்னலாக பளிச்சிடு . எம்பிராட்டி திருவடிமேல் அணிந்த பொன்னினால் செய்யப்பட்ட சிலம்பு போல ஒலித்து, இடி இடித்து சப்தம் செய். அவளது திருப்புருவம் போல் வானவில் விட்டு, நம்மை அடிமையாக உடையாளாகிய அவ்வம்மையினின்றும் பிரிதல் இல்லாத, எங்கள் தலைவனாகிய அண்ணாமலையாரது அடியார்களுக்கும், பெண்களாகிய நமக்கும், அவள் திருவுளம் கொண்டு முந்திச் சுரக்கின்ற இனிய அருளே போன்று தேன் மழையாக நிறைய விடாமல் பூமி குளிர பொழிவாயா?
நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் இந்த உலகத்தில். நம் ஒருவருக்குத்தான் ஒரு பக்கம் ஆண்டாள் பாடல் மறுபக்கம் ஆண்டவன் பாடல் . மார்கழியே நீ உண்மையிலேயே சிறந்த மாதம் தான். சந்தேகமே இல்லை. அதற்காகவே உன் குளிரைப் பொறுத்துக் கொள்ளலாம்.
அழகு தமிழை, ஆர்வமுடன், அன்பும் பக்தியும் கலந்து அளித்தவர்கள் ஆழ்வார்களும் அடியார்களும் தான். இவற்றை ஒருவன் ஆழ்ந்து ருசித்து அறிந்தால் வேறெதுவும் கற்க தேவையில்லை. பன்னிரு ஆழ்வார்களும் நான்கு சைவ சமய குரவர்களும் பாடியதை அறிந்து கொண்டாலே நம் வாழ்வு பண்பட்டுவிடும். அவற்றை மனப்பாடம் செய்ய வாழ்நாள் போதவே போதாது.
மார்கழி மாதம் முழுதும் இதை முடிந்தவரை அனுபவித்தோம். திருப்பாவையும் திருவெம்பாவையையும் சேர்த்தே அனுபவிக்கிறோம். திருப்பாவை நமக்கு இன்னும் 13 நாள் காட்சி தருவாள் மணிவாசகர் ஏனோ 20 திருவெம்பாவை மட்டும் தந்தாலும் மீதி பத்து நாளும் நான் அவரை விடமாட்டேன். அவரது திருச்சாழலை அளிக்கப் போகிறேன்.
மார்கழி முழுதும் நாம் அவருடன் இருப்போம். எல்லாமே இறைவன் அருள். எதை எப்போது செய்யவேண்டும் என்பதெல்லாம் அவன் கட்டளை அல்லவா?.
No comments:
Post a Comment