Wednesday, December 22, 2021

VAINAVA VINNOLI



 வைணவ விண்ணொளி --  நங்கநல்லூர்  J K  SIVAN 

   
 'ஐயோ உள்ளம் கொள்ளை போகுதே...!!

கி பி 8ம் நூற்றாண்டில் ஒரு நிகழ்ச்சி. சோணாடு சோறுடைத்து. அன்றல்ல, இன்றும். (என்றுமா என்று இப்போதிருக்
கும் சூழ்நிலையில் சொல்ல முடியாது). 

சீர்காழி ஜில்லாவில் திருவாலி திருநகரி நாடு என்ற பெரிய ஊரில் ஒரு சிற்றூர். அதன் பெயர் திருக்குறையலூர். இயற்கை வளம் கொழிக்கும் பூமி. அதில் விஷ்ணு பக்தர்கள் சிலர் வாழ்ந்து வந்தனர். சோழ ராஜாவின் சேனைத் தலைவன் ஆலிநாடர்  என்பவரும் அவர்களில் ஒருவர். அவருக்கும் அவர் மனைவி வல்லித்திருவுக்கும் இறைவன் ஒரு பரிசு வழங்கினான். அந்த சிறந்த விஷ்ணு பக்த குடும்பத்திற்கு ஒரு அருமையான ஆண் குழந்தையை பெருமாள் அருளினார்.
ஆம். நள வருஷம்,கார்த்திகை பௌர்ணமி, வியாழனன்று கார்த்திகை நக்ஷத்திரம் அன்று நாராயணனின் முக்கிய அம்சமான சாரங்கமே அந்த குழந்தையானது. நீலமேக ஸ்யாமளனின் சார்ங்கம் அல்லவா? எனவே நீலன் என்று பெயர் குழந்தைக்கு அமைந்தது.

கல்வி கேள்விகளோடு ஆயுதப் பயிற்சி, மல்யுத்தமும் பயின்றான் நீலன். சேனாதிபதி பிள்ளை ஆச்சே. திருமங்கை நாட்டின் அரசன் நீலனை தனது படைத் தலைவனாக நியமித்தான்.

அந்த காலத்தில் அங்கே ஒரு புலவர். 'நாற்கவிப் பெருமாள்' என்று புகழ் பெற்றவர் நீலனின் கல்வி கேள்வி திறமை களை பற்றி கேள்விப்பட்டு அவனைப் போட்டிக்கு அழைத்தார். என்ன ஆச்சர்யம்! நீலனின் கவித்திறமையில் புலவர் தோற்றார். ராஜா நீலனை பாராட்டி '' இனி நீ தான் எனக்கு ''நாற்கவிப்பெ ருமாள்'' என்று பட்டம் அளித்தான்.

சோழ ராஜா வேறு ராஜ்யங்கள்  மீது படையெடுத்தபோது நீலன் சோழனுக்காக யுத்தத்தில் தனது பராக்கிரமத்தை காட்டி வென்றதால் சோழ ராஜா மிக மகிழ்வுற்றான். நீலனை அழைத்தான்.

''நீலா, இனி நீ தான் உன் திருவாலி நாட்டின் சிற்றரசன்'' என்று நியமித்தான். அதன் தலைநகரம் திருமங்கை. இனி நீலனை திருமங்கை மன்னன் என்று அழைப்போம். அவனது வீரத்தால் மற்ற நாட்டரசர்கள் அவனிடம் அஞ்சினார்கள். அவன் எதிரிகளுக்கு ''காலன் '' என்பதால் 'பரகாலன்' என்றும் பெயர் பெற்றான்.
ஒரு பழங்கதை இங்கு அவசியமாகிவிட்டது..
தேவலோகத்தில் ''சுமங்கலி'' என்ற ஒரு அழகி பூலோகத்துக்கு விஜயம் செய்தாள். அவள் இமயமலைப் பிரதேசத்தில் கபில முனிவர் மற்ற சில முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் ஸ்ரீ மந் நாராயணனின் கம்பீரம், பராக்ரமம் பற்றி எல்லாம் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டாள் . சும்மா இருந்திருக்கலாம் அல்லவா? அங்கே இருந்தவர்களில் ஒருவர் அங்க ஹீனர். குரூபி. அவரை சுமங்கலியும் அவள் தேவலோக தோழிகளும் பார்த்து கேலி செய்தனர்.
கபிலர் இதை கவனித்து விட்டார். கோபமேலிட்டது சுமங்கலியின் மீது.
''சுமங்கலி, நீ தேவ கன்னிகையாயிருந்தும் இந்த புனிதரின் அங்க குறைவுகளை பற்றி கேலி செய்து பரிகசித்ததால், பூமியில் ஒரு பெண்ணாக பிறந்து ஒரு சாதாரண மனிதனை மணப்பாய் என்று சபிக்க, அவள் அழுது மன்னிப்பு கேட்க, ''சாபம் மாற்றுவதற்கில்லை, வேண்டுமானால் நீ ஒரு திடகாத்ர போர் வீரனை சந்திப்பாய், அவன் ஸ்ரீமந் நாராயணின் சாரங்க அம்சம். சிறந்த புத்திமான். இதற்கு மேல் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. அந்த வீரனின் சிந்தனை எப்போதும் போர், யுத்தம் இவற்றில் தான் இருக்கும். ஆகவே நீ அவனை எப்படியாவது திருத்தி ஒரு விஷ்ணு பக்தனாக மாற்றினால் மீண்டும் விண்ணுலகம் எய்தலாம். வேறு வழியில்லை'' என்கிறார் கபிலர். சுமங்கலி நிம்மதியாக ஒரு பெரு மூச்சு விட்டாள் .

சாபம் தீர, அவளும் தோழியர்களும் திருநாங்கூர் அருகே திருவெள்ளக்குளம் என்றும் அண்ணன்கோயில் என்றும் இப்போது வழங்கப்பட்டு ஓர் திவ்யதேசமாக இருக்கும் ஊருக்கு சென்றனர். அங்கே ஒரு அல்லிக்குளம் அவர்களை ஈர்த்தது. அந்த திரு அல்லிக்குளம் தான்  காலப்போக்கில் ஒரு வேளை திரு வெள்ளக் குளமாகிவிட்டதோ? அந்த தடாகத்தில் இறங்கி ஆசை தீர நீராடி அல்லி மலர்களோடு குலாவி மகிழ்ந்தனர். சற்று நேரம் கழித்து, சாபம் பெறாத மற்ற தேவ கன்னியர்கள் சுமங்கலியை அங்கேயே விட்டுவிட்டு தேவலோகம் சென்றார்கள். அவர்கள் சென்றதை அறிந்த சுமங்கலி அங்கேயே ஒரு சிறு குழந்தையாக மாறினாள் .

அந்த ஊரில் ஒரு வைத்தியர். குழந்தை பாக்யம் இல்லாதவர்,  அந்தப் பக்கமாக வந்தவர். அவளை அல்லிக்குளத்தில் கண்டு வியந்து இறைவன் அருளே இது,  என்று போற்றி அந்த பெண் குழந்தையை வீட்டுக்கு எடுத்து சென்றார். (அந்த அல்லிக்குளத்தை நான் ஸ்ரீ அண்ணன்கோவில் திவ்ய தேசத்தில் தரிசித்தேன். நிறைய குமுத மலர்கள் இன்னும் அந்த குளத்தில் இருக்கிறது. குமுத மலர்கள் இடையே கிடைத்ததால் குமுதவல்லி என்று வைத்தியர் பேர் வைத்தார். வளர்ந்தாள் . வளர்த்த தந்தை திருமணத்துக்கு ஏற்பாடு செய்யும்போது தனது கதையை வளர்ப்பு தந்தையிடம் சொன்ன குமுதவல்லி ஒரு நாள் திருமங்கை மன்னன் வருவான் தன்னைத் தேடி என்றாள் .
குமுதவல்லியின் அழகு எங்கும் பரவியபோது, திருமங்கை மன்னன் செவியிலும் அந்த சேதி விழ அவனுக்கும்  அவள் மேல் ஒரு பற்றுதல் உண்டாயிற்று . அவளை சந்திக்க ஆவல் கொண்டான். ''ஆடல் மா'' என்று அவன் குதிரைக்குப் பெயர். அதன் மேல் அமர்ந்து வைத்தியன் வீடு வந்த திருமங்கை மன்னன், நீலன் என்னும் பரகாலன், திருவெள்ளக்குளத்தில் குமுதவல்லியை பார்க்கிறான். அவள் அழகு அவன் உள்ளத்தைக்  கொள்ளை கொண்டது. முடிவெடுத்தான் மன்னன்.
''இவளே என் மனைவி'' என்று வைத்தியரிடம் சொல்கிறான். வைத்தியர் வானில் பறந்தார். அவ்வளவு சந்தோஷம் அவருக்கு. மகளை அழைத்தார். வந்தாள் .விஷயம் கேட்டாள் .

''அரசே நான் உங்களை மணக்க வேண்டுமானால் ஒரு நிபந்தனை'' என்றாள் குமுதவல்லி.

''என்ன நிபந்தனை சொல் பெண்ணே''

''நீர் ஒரு பலம் வாய்ந்த வீர மன்னர். இருந்தாலும் அது போதாது. எம்பெருமானார்க்கு பக்தனாக மாற வேண்டும். விஷ்ணு பக்தர்களுக்கு சேவை புரியவேண்டும்.

''பெண்ணே, உன்னை அடைய என்ன நிபந்தனையானாலும் நான் ஏற்பேன். இப்போது முதல் நான் விஷ்ணு பக்தன் போதுமா?'' என்றான் திருமங்கை மன்னன்.
''போதாதே...'' என்றாள் குமுதவல்லி.
''போதாதா, இன்னும் என்ன செய்யவேண்டும் நான்?'' கவலையோடு கேட்டான் திருமங்கை மன்னன் நீலன்.
''தினமும் நான் 1008 விஷ்ணு பக்தர்களுக்கு அமுது படைத்து அவர்கள் திருவடிகளுக்கு பாத பூஜை செய்யவேண்டும். அந்த திருப்பாத தீர்த்தத்தை சிரசில் ப்ரோக்ஷித்து புண்ணியம் பெற வேண்டுமே. ஏற்பாடு செய்வீர்களா இதற்கு தினமும்? முடிந்தால் சொல்லுங்கள், நான் உங்கள் மனைவி ஆகிவிடுகிறேன் அரசே'' என்றாள் குமுதவல்லி.
மறு வார்த்தை பேசாமல் ஒப்புக்கொண்ட திருமங்கை மன்னன் மனைவியானாள் குமுதவல்லி.

நாள் தோறும் 1008 விஷ்ணு பாகவதர்களுக்கு அமுது படைப்பது அவ்வளவு சுலபமா? செய்தானே அந்த  திருமங்கைமன்னன். இப்படி அன்றாட அன்னதான பாத பூஜை செய்த திருமங்கை மன்னனின் தனது செல்வம் எல்லாம் கரைந்தது. மேற்கொண்டு இந்த சேவையை எப்படி தொடர்வது? செல்வம் கரைந்த அவனால் சோழ மன்னனுக்கு கப்பம் கட்டவும் வழியில்லை. சோழ ராஜா வெகுண்டான். சோழனின் படை திருமங்கை வந்தது. நீலனுடன் சோழராஜாவின் படை மோதியது. திருமங்கை மன்னன் வீரன் பலசாலி, அவனிடமும் படை கொஞ்சமாக இருந்தாலும் கட்டுக்கோப்புடன் இருந்ததால்  அவன் தோற்க வில்லை. சோழ ராஜா அவனை மன்னித்து கப்பம் பாக்கியை விரைவில் செலுத்து'' என்று அனுப்பினான்.

பணம் தேவைப் பட்டது. ஒருபக்கம் அன்றாட அமுது படையலுக்கும் இன்னொரு பக்கம் ராஜாவுக்கு கப்பம் கட்டவும். என்ன வழி? யோசித்து மண்டை வெடித்து விட்டது நீலனுக்கு . கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான். இனிமேல் செல்வந்தர்களை கொள்ளை அடிப்பது ஒன்றே பணம் திரட்ட வழி என்று தீர்மானித்த திருமங்கை மன்னன் நீலன் அவ்வாறே பல கொள்ளைகள் நடத்தி அவற்றின் மூலம் பணம் திரட்டி நித்ய விஷ்ணு பக்த போஜனம் செயது வந்தான்.

ஸ்ரீமந் நாராயணனுக்கு இதில் விருப்பம் இல்லை. திருடி, கொள்ளையடித்து செய்யப்படும் விஷ்ணு பக்த சேவை திருப்தி அளிக்குமா? திருமங்கை  மன்னன் நீலனைத் திருத்த வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டான். தானே பிராட்டியுடன் ஒரு புதிதாக திருமணம் நடந்த தம்பதிகளாக திருமணக் கோலத்துடன் நகைகள், செல்வம், மற்ற விலை உயர்ந்த பொருள்களுடன் காட்டு வழியாக சென்றான்.

ஒரு புது திருமண தம்பதி தனது எல்லையில் காட்டுவழியே வரும் விஷயம் தனது ஆட்கள் மூலமாக நீலனுக்குத் தெரிந்தது. ''ஆஹா இந்த புது மண தம்பதிகளை கொள்ளை அடித்தால் கொஞ்சம் ஆபரணங்கள் பொருள் கிடைக்குமே, சில நாட்கள் நிம்மதியாக திருவமுது சேவைக்கு உதவுமே'' என்று மகிழ்ந்தான். கொள்ளைக்கூட்டத்தோடு அன்றிரவு அவர்களை மடக்கினான்.

''உங்கள் நகைகள், ஆபரணங்கள், பொருள்கள், பணம் எது இருந்தாலும் ஒன்றுவிடாமல் கொடுத்தால் உயிர் தப்பலாம் '' என்றான் திருமங்கை மன்னன் நீலன் .
'ஆஹா அப்படியே'' என்றான் உயிருக்கு பயந்த அந்த புது திருமண மாப்பிள்ளை. மணமகளும் தங்களது  எல்லா நகைகளையும் எடுத்து  நீலன் முன்பாக வைத்தாள். அவர்களிடமிருந்து எல்லா நகைகளையும் உருவி விட்டான். மூட்டை கட்டினான் அந்த நேரம் தான் மாப்பிள்ளை காலில் இருந்த ஒரு கணையாழி விலை உயர்ந்தது  நீலன் கண்ணில் பட்டது.
''கழட்டு அதையும் ''
''ஐயா என்னால் அதை கழற்ற  முடியவில்லையே. தாங்களே கழற்ற  முடிந்தால் எடுத்துக் கொள்ளுங்கள் '' என்றான் மணமகன்.
நீலன் பலசாலி. ஆனால் எவ்வளவோ முயன்றும் அது மசியவில்லை. பல்லால் அந்த மாப்பிள்ளை காலில் விரல்களில் கடித்து இழுத்தும் பயனில்லை.

இவ்வளவு பலம் வாய்ந்தவனை அதிசயத்தோடு பார்த்தான் நீலன். மாப்பிள்ளையும் மனதில் மெச்சி 'கலியா'' என்று மனதுக்குள் அன்பாக அழைத்தான். ஸ்ரீமந் நாராயணன் திருவடி சம்பந்தம் ஏற்பட்டவுடன் கலியன் புதியவன் ஆனான் !.

'சரி இந்த கணையாழி இல்லாவிட்டால் பரவாயில்லை. அகப்பட்டதே போதும்'' ன்று தீர்மானித்து தனது உதவியாளனிடம் 'அடே தோழா, அகப்பட்டதை எல்லாம்  சுருட்டு , போகலாம்'' என்று நீலன் சொல்ல, அவனும் முயன்று தரையில் எதிரே மூட்டை கட்டிய நகைகள், ஆபரணங்கள்  ஆகியவற்றை தூக்க முயற்சித்தான். எதையும் நகர்த்த முடியவில்லை. என்னது இது கண்கட்டி வித்தை என்று நீலன் தானும் பலத்தோடு அவற்றை பெயர்த்தெடுக்க முயன்று தோற்ற நீலனுக்கு கோபம் வந்தது.
''என்னடா மாப்பிள்ளை, என்னுடன் விளையாடுகிறாயா? என்ன மந்திரம் போட்டு இதை நகர்த்த விடாமல் செய்தாய் சொல்'' என்று மிரட்ட பயந்து நடுங்கிய புது திருமண மாப்பிள்ளை,

'அய்யா எனக்கு தெரிந்த ஒரே மந்திரம் இது தான். இங்கே வாருங்கள் சொல்கிறேன் என்று அருகே அழைத்து நீலன் காதில் ஸ்ரீமந் நாராயணன் தானே 'ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய' என்ற தனது அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசிக்கிறார். அந்த கணம் முதல் எம்பெருமானிடம் உபதேசம் பெற்ற இந்த சிறந்த பாக்யம் பெற்ற, நீலன் என்கிற கொள்ளையன், திருமங்கை மன்னன், கலியன், இனி என்றும் நாமறியும் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் பெருமாளையும் பிராட்டியையும் அந்த புதிதாக கல்யாணம் ஆன தம்பதிகளில் அடையாளம் கண்டு கொள்கிறார். கண்கள் ஆனந்த பாஷ்பத்தில் மலர்கின்றன. ஆற்று வெள்ளமாக பாசுரங்கள் நாவிலிருந்து கொட்டுகிறதே!

" வாடினேன், வாடி வருந்தினேன், மனத்தாற் பெருந்துயர் ........... நாடினேன்; நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா எனும் நாமம்...'' என்று பத்து பாசுரங்கள் தேனாக மனம் உருகி அவர் நாவிலிருந்து நமக்கு கிடைக்கிறது. கருடாரூடராக பெருமாள் பிராட்டியுடன் ஆழ்வாருக்கு காட்சி அளிக்கிறார்.
''கலியா, எல்லா விஷ்ணு க்ஷேத்ரங்களும் சென்று எமைப் பாடு '' என்று கட்டளையிடுகிறார். பிறகு என்ன?
ஸ்ரீ வைஷ்ணவ வரலாறு தான் நிறைய கூறுகிறதே. நான் வேறு சொல்ல வேண்டுமா?
86 திவ்ய தேசங்கள் செல்கிறார் கலியன் எனும் திருமங்கை ஆழ்வார். . ஆறு பிரபந்தங்கள், அதாவது பெரிய திருமொழி, திருக் குறுந்தாண்டகம், திரு நெடுந்தாண்டகம் திரு வெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், எல்லாமாக சேர்ந்து 1253 திருப் பாசுரங்கள். இவை நாம் கொள்ளை அடிக்காமலேயே திருமங்கை ஆழ்வார் ''கொள்ளை கொள்ளையாக '' நமக்கு கொடுத்தவை.
ஸ்ரீ ரங்கத்து ஆலயத்திற்கு மதில் சுவர் கட்டினார். ஆலய சொத்து பிறர் கொள்ளை அடிக்காமல் தப்பியது. நம்மாழ்வார் ஐம்பொன் சிலையை பத்து நாள் மார்கழி விழாவுக்கு திருநகரியிலிருந்து கொண்டுவந்து பிறகு திரும்ப செய்தவர். இவரைப் பற்றி நிறைய சொல்லவேண்டும். நீண்ட தொடர்கதை தான் தேவை இவரைப் பற்றி எழுத.

(திருநாங்கூர் 11 கருட சேவை இந்த வருஷம் சேவிக்க எனக்கு பாக்கியம் கொடுத்தவர் திருமங்கை ஆழ்வார். இதைத்தான் சொன்னேன் எனக்கும் இந்த ஆழ்வாருக்கும்  சம்பந்தம் உண்டு என்று. 10.2.2016 அன்று  அண்ணன் கோயில் (திருவெள்ளக்குளம்) என்ற திவ்ய தேசத்தில் ''குமுதவல்லி நாச்சியார் அரங்கத்தில்  நடை பெற்ற  அந்த  ஆண்டு ''கலியன் ஒலி மாலை '' ஸ்ரீ வைணவ  விழாவில் அடியேன் படைத்த ' ''பாவையும் பரமனும் '' என்ற ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை கற்பனை விளக்க நூல் 2ம் பதிப்பு, பெரியோர்களால் மதிக்கப் பெற்று வைணவச்செம்மல் வித்துவான் ஸ்ரீ கு. அரங்கநாதாச்சாரியார் ஸ்வாமி தலைமையில், பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீ உ.வே. அண்ணா ஸ்ரீநிவாஸாச்சாரியாரின் பாராட்டை பெற்று , ஸ்ரீ அண்ணன் பெருமாள் கோவில் மேலத் திருமாளிகை வர்த்தமான ஆச்சாரிய பீடாதிபதி எம்பார் ஸ்ரீ உ.வே. ரங்காச்சாரியார் ஸ்வாமி ஆசியுடன் வெளிவந்து அடியேன் ''வைணவ சேவா ரத்நா '' என்று கௌரவிக்கப் பட்டேன்.)

திருமங்கை ஆழ்வார் குமுதவல்லி நாச்சியாருடன் சுற்றுவட்டார 11 திவ்ய தேசங்களுக்கு கருட  வாகனத்தோடு சென்று பெருமாளையும் பிராட்டியையும் அழைத்து வந்து திரு நாங்கூரில் கருட சேவை செய்வித்து திரும்ப அந்த திவ்யதேசங்களுக்கு தம்பதி சமேதராக சென்று கருடாரூடராக அவர்களை ஸ்தலத்தில் திரும்பச் சென்று விடை பெற்ற திவ்ய அனுபவத்தை நான் நேரில் முதல் முறையாக கண்டு களித்தேன். இது பற்றி தனியாக எழுதி இருக்கிறேன்.

                                     

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...