அறுபத்து நாலாம் நாயன்மார். - நங்கநல்லூர் J K SIVAN
திருமுருக கிருபானந்த வாரியார்.
ஆங்கில வருஷம் எப்போதும் டிசம்பர் 31 அன்று முடிகிறது. அடுத்த நாள் புது வருஷம் HAPPY NEW YEAR கோஷம் அர்த்தமில்லாமல் கைகுலுக்கி சொல்கிறோம். அது வெள்ளைக்காரன் குதூகலமாக சொல்வது. முன்பெல்லாம் நிறைய கலர் கலர் வண்ண எழுதது வாழ்த்து அட்டைகள் பரிமாறிக் கொள்வார்கள்.இப்போது அது குறைந்து விட்டது. வாட்ஸாப்ப் தான் பொங்கி வழிகிறது.. கிட்டத்தட்ட 400 வருஷங்கள் வெள்ளைக்காரனுக்கு அடிமையாக வாழ்ந்து பல தலைமுறைகள் வெள்ளைக்கார பழக்கவழக்கங்களை பின் பற்றி வருகிறோம். அதில் இது ஒன்று.
பாரத தேசத்தில் பல மொழிகள் பல நூற்றாண்டுகளாக உள்ளவை. அந்தந்த பிரதேசத்தில் அந்தந்த மொழி பிரஹாரம் புத்தாண்டு தினங்கள் மாறி மாறி வரும்.
நமக்கு சித்திரை முதல் தமிழ் வருஷங்கள் 60 சுற்றி சுற்றி வரும். நமது வாழ்க்கையில் எந்த வருஷம் எந்த மாசம் எந்த நக்ஷத்திரத்தில் பிறந்தோம் என்பதிலிருந்து வயது துவங்குகிறது.
எனக்கு தெரிந்து 31 டிசம்பர் அன்று திருத்தணி படிகளில் திருப்புகழ் பாடல்கள் பாடிக்கொண்டே இரவு முழுதும் நடப்பது ஒரு அற்புத அனுபவம். கல்லிடைக்குறிச்சி கடையம் பகுதி மஜீத் என்பவர் ஒரு முஸ்லீம் ஆனாலும் அற்புதமாக முருகன் பாடல்கள் திருப்புகழ் எல்லாம் பாடுவார். நாற்பது ஐம்பது வருஷங்கள் முன்பு எங்கள் நங்கநல்லூர் வீட்டுக்கு வந்திருக்கிறார். இடுப்பில் வேஷ்டியில் விபூதி பை இருக்கும். முருகா முருகா என்று மனதார எல்லோருக்கும் வழங்குவார். நெற்றியில் பூசுவார்.
திருத்தணி 365 படிகளிலும் அற்புதமான 365 திருப்புகழ் பாடல்கள் அவரது கணீர் குரலில் ஒலிக்கும். இரவெல்லாம் கோலாகலம்.
முருகன் எனும்போது மற்றுமொரு மகானின் பெயர் மறக்க முடியாதது. திருமுருக கிருபானந்த வாரியார். அறுபத்து நாயன்மார்களோடு 64வது நாயன்மாராக போற்றப்படுபவர்..
நாஸ்திக வாதம் தலை தூக்கி தமிழகத்தில் பக்தர்கள் நெஞ்சத்தை புண்படுத்திய காலத்தில் தனியொருவராக பட்டி தொட்டிகள் எல்லாம் சென்று முருகன் புகழ் பாடி மக்கள் உள்ளத்தை கொள்ளை கொண்ட மஹான்.
அவரை துளைத்த நாஸ்திக வாதிகளின் கேலி கேள்விகளும் அவர் பதிலும்:
''ஒரு கல்யாண வீட்டில் வாரியாரை ஒரு நாஸ்திகர்
''உங்கள் முருகன் ஆறு தலையோடு எப்படி தூங்க முடிந்துதூங்குவார் ? ஒரே சிரிப்பு.
வாரியார் கோபப்படாமல் பெண்வீட்டு பெற்றோரை அழைத்தார்.
'' இந்த கல்யாணம் இன்று சிறப்பாக நடைபெறுகிறது. கொஞ்ச நாளாக சந்தோஷமாக தூங்கினீர்களா? என்று கேட்க, அவர்கள்
''சுவாமி பெண் கல்யாணம் நல்லபடி நடக்கவேண்டும் என்ற கவலையில் எப்படி எங்களால் தூங்க முடியும்?'' என்று சொல்ல, நாஸ்திக வாதியிடம் வாரியார்
'கேட்டியா அப்பா, ஒரு தலை உள்ள இவர்களால் தங்கள் பெண்ணைப் பற்றிய நல்வாழ்வு, சுகம் பற்றிய பொறுப்பில், தூங்க முடியவில்லையே, இந்த உலகத்தில் அனைவருக்கும் நல்வாழ்வு தரும் பெற்றோராக பொறுப்பேற்ற முருகன் எப்படியப்பா தூங்க முடியும்.? நீயே சொல் , ஆறுதலை அளிக்கும் ஆறுமுகம் எப்படி தூங்குவான்? சொல் '' என்கிறார்.
திருப்பரங்குன்றத்தில் சொற்பொழிவில் ஒரு சிலர் வேண்டுமென்றே ''ஐயா இது பரங்குன்றம் இல்லை, சிக்கந்தர் மலை என்ற பெயர் கொண்டது? புரிந்து கொள்ளவேண்டும். என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்ட போது துளியும் யோசிக்காமல் வாரியார் சிரித்துக்கொண்டே
''நீங்கள் சொல்வது ரொம்ப சரி, இது சிகந்தர் மலை தான். கந்தரின் அப்பா சிவன். ஆகவே இனிஷியல் ''சி. கந்தர் '' அவர் பெயரில் இப்படி மலை இருப்பது பொருத்தமே என்கிறார்''
ஒரு சொற்பொழிவில் ஒரு பையனை கேள்வி கேட்டார்:
'பையா குருகனின் அப்பா பெயர் தெரியுமா?''
பையன் சிவாஜி கணேசன் படம் திருவிளையாடல் பார்த்தவன். ஆகவே அதில் முருகனின் தந்தையாக சிவாஜி வருவதால் பளிச்சென
''முருகனின் அப்பா சிவாஜி '' என்று சொல்லிவிட்டான். எல்லோரும் சிரிக்க வாரியார் நிலையை புரிந்து கொண்டு வெட்கமோ,கவலையோ வருத்தமோ படவில்லை.
''பையனுக்கு பரிசு கொடுக்கிறேன். சரியான விடையை சொன்னதற்கு'' என்கிறார்.
எல்லோருக்கும் ஆச்சர்யம் எப்படி வாரியார் பையன் சொன்னது சரி என்கிறார்.
வாரியார் உடனே விளக்கினார்.
'முருகனின் அப்பா சிவன். அவனை வடமொழியில் ''ஜி'' என்று மரியாதையாக அழைப்பதை பையன் சொல்கிறான். முருகனின் அப்பா ''சிவாஜி'' ரொம்ப சரிதான். என்கிறார்.
அப்படிப்பட்ட வாரியார் மறைந்தபோது கண்ணதாசன் எங்கள் ஊரில் வந்து பேசும்போது
''ஆஹா வாரியார் போல் ஆன்மீக விஷயங்கள் ஹாஸ்யம் கலந்து எளிய மொழியில் இனி வாரி ''வாரி யார்'' கொடுப்பார்'' என்றார்.
எனது நண்பர் ஸ்ரீ வித்யா சாகர் பம்பாயில் பல வருஷங்களாக வாழும் முருக பக்தர். வாரியார் பக்தர். வாரியார் பம்பாய் செல்லும்போது அவர் வீட்டில் தான் தங்குவார் வாரியார் கடைசி வெளிநாடு பயணம் லண்டன் சென்றபோது அவரை ஜாக்கிரதையாக பிளேனில் சாய்வு நாற்காலியில் அமர்த்தி விமானத்தில் அமர்த்தி விடை கொடுத்தவர். உடல் நலம் குன்றி வாரியார் ஏர் இந்தியா விமானத்தில் சென்னை திரும்பினார். அப்போது நடந்த அதிசயத்தை அடுத்த பதிவில் சொல்கிறேன் .
No comments:
Post a Comment