Wednesday, December 8, 2021

THANK YOU GOD



பகவானே உனக்கு நன்றி  -   நங்கநல்லூர்  J K  SIVAN 

சுப்ரமணிய  ராவ்  நிறைய  வேதாந்தம், தத்வம் பேசுவார். வந்தால்  லேசில் போகமாட்டார். குறைந்தது  பத்து பதினைந்து தத்துவங்கள், பொன்  மொழிகளையாவது உதிர்த்து விட்டு தான் நகர்வார்.  நிச்சயம் அவருக்கு என் வீட்டில் எப்போதும் சூடாக ஒரு கப் காப்பி உண்டு. 

நேற்று மாலை ஐந்து மணிக்கு ராவ் வருவார் என்று  நான் எதிர்பார்க்கவே இல்லை. 

அவரிடம் ஒரு பழக்கம், எதிரே அமர்ந்தவர் மார்பில் வலது கை  ஆள் காட்டி விரலால்  குத்தி குத்தி  உணர்ச்சி வசப்பட்டு பேசுவார்.  ஏனோ  அவருக்கு அப்படி ஒரு பழக்கம்.  ஆகவே  அனுபவஸ்தனான  நான் சற்று தள்ளி அவர் கைக்கெட்டாமல்  மேஜைக்கு  அந்தப் பக்கம்  தள்ளி   அவரை ஒரு  நாற்காலியில் அமர்த்திவிட்டு  அவரிடம் பேசினேன்.


 ரஷ்யா, அமெரிக்கா, மோடி, தமிழ்நாடு, எலெக்ஷன், வெண்டைக்காய் இருநூறு ரூபாய் கிலோ எல்லாம் பேசியதை  தள்ளி விட்டு  அவர் உதிர்த்த சில தத்வ விஷயங்கள் மட்டும் சொல்கிறேன்.

''ஸார், நாம்  பகவானுக்கு நன்றி சொல்ல மறக்கவே கூடாது''
''ஆமாம். வாஸ்தவம் தான்  ராவ் ''
''கண்ணெதிரே  ஒரு பிச்சைக்காரன் பாருங்கள் குப்பைகளை குடைந்து ஏதாவது பசிக்கு சாப்பிட கிடைக்குமா  என்று தேடுகிறான்.  ஆஹா  நாம்  எவ்வளவு புண்யம்  செய்திருக்கிறோம், பகவானே  உன் கருணையே கருணை.  அப்படி  எல்லாம்  நான் அவஸ்தை படாமல்  என்னை வைத்ததற்கு என்று நன்றி தெரிவிக்கணும் இல்லையா?
''ஆமாம்  ராவ், வாஸ்தவம்''
''அந்த பிச்சைக்காரன் கண்ணெதிரே  ஒரு அரை கிறுக்கு, சித்த ஸ்வாதீனம் இல்லாதவன்  உடுத்தி இருக்கும் துணியை   கிழித்துவிட்டு நிர்வாணமாக ஓடுகிறான். சில பையன்கள் குச்சியால் அவனை அடிக்க  விரட்டுவதை பார்க்கிறான்.   அந்த பிச்சைக்காரன் கூட  பகவானுக்கு அப்போது  என்ன நன்றி தெரிவிக்கிறான்?
''என்ன சொல்கிறான், நீங்களே சொல்லுங்கள்''
''பகவானே நான் ஏழையாக இருந்தாலும்  சித்தத்தை ஸ்வாதீனத்தில் வைத்திருக்கிறாய், நன்றி, அந்த பைத்தியத்துக்கு நான் எவ்வளவோ மேல்''
'அந்த பைத்தியத்துக்கு எதிரே  ஒரு ஆம்புலன்ஸ் வண்டி அதில் உயிருக்கு மன்றாடி  ஒருவன் செல்கிறான். அதைப் பார்த்து விட்டு ஒரு க்ஷணம் அந்த  கிறுக்கனுக்கு  கூட அப்போது  என்ன தோன்றுகிறது?''
''என்ன தோன்றுகிறது ராவ்,  நீங்களே சொல்லுங்கள்?''
''நான்  உடல் ஆரோக்கியத்தோடு உயிரோடு இருக்கிறேன். பகவானே உனக்கு நன்றி''
''அந்த  ஆம்புலன்ஸின்  உள்ளே  படுத்திருக்கும் நோயாளி  எதிரே  ஒரு  ஸ்ட்ரெச்சரில்  முகமெல்லாம் மூடி  ஒருவனின் இறந்த  உடல்  குளிர் சாதன அறைக்கு செல்கிறதை  பார்க்கிறான். ஒ, தெய்வமே,  நீ  என் உயிரைக் காப்பாற்றினாய், நல்லவேளை நான் சாகவில்லை'' என்று நன்றி தெரிவிக்கிறான் ஸார்'' 
''ராவ்  அடுத்தது  நீங்கள்  என்ன சொல்வீர்கள் என்று  நானே ஊகித்து சொல்லிவிடுகிறேன். ''அந்த  இறந்த மனிதன் பகவானுக்கு நன்றி தெரிவிக்கவில்லை''
ஆமாம் ஸார். பகவானுக்கு நன்றி தெரிவிக்காதவர்கள்  இறந்தவர்களுக்கு சமம் ஸார் .  
நாம்   ஒவ்வொரு நாளும்  ''பகவானே,  இன்றைய பொழுதை எனக்கு  பரிசாக  அளித்தாய் என்று நன்றி தெரிவிக்கவேண்டும் ஸார். நீங்க    ஆஸ்பத்திரி, ஜெயில், மயானம் எல்லாம் சென்றிருக் கிறீர்களா ஸார் ''
''என்ன கேள்வி இது  ராவ்? ஆஸ்பத்திரி மயானம் எல்லாம் சென்றது  உண்டு. ( உங்களை ஏதாவது செய்துவிட்டு அப்புறம் தான் இனிமேல்  ஜெயிலுக்கு போகவேண்டும்' என்று நினைத்துக் கொண்டேன்)
''ஸார்,   ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தால் தான் ஸார்  உடம்பு என்ற எவ்வளவு அருமையான உறுப்பை பகவான் நமக்கு கொடுத்து எவ்வளவு  ஆரோக்யமாக நம்மை வைத்திருக்கிறான்என்பது புரியும்.. ஜெயிலில் இருப்பவனுக்கு தான் சார்  வெளி உலகின்  சுதந்திரத்தின் அருமை தெரியும்.  மயானத்தில் தான் ஸார்   மனித  வாழ்க்கை  எவ்வளவு வீணானது, பயனற்றது என்று புரியும்''

நாம்  இன்று எதன் மேல் நடக்கிறோமோ, ஒருநாள் அதுவே நமக்கு கூரை ஸார் .  ( உடலைப் புதைப் பதை சொல்கிறார் ராவ் ) . ஒன்றுமில்லாமல் வந்து ஒன்றும் இல்லாமல் போகிறோம் ஸார் .

''ராவ், நான் கொஞ்சம் அர்ஜண்டாக வெளியே செல்லவேண்டும். மறுபடியும்  சந்திப்போம்'' என்று எழுந்தேன். அவரும்  குடையை  மறக்காமல் எடுத்துக் கொண்டு  நடந்தார்.  

ஒன்று நிச்சயம்.  பகவானுக்கு எப்போதும் அவன் நம் மீது கருணை கொண்டு அளித்த, அளிக்கும்,  எல்லாவற்றிற்காகவும் நன்றி நன்றி நன்றி என்று சொல்வோம். ராவ் சொல்லும் விதம் தான் ஒரு மாதிரி இருக்கிறதே தவிர அது அப்பட்டமான உண்மை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...