மார்க்க பந்து - நங்கநல்லூர் J K SIVAN
நாங்கள் பல வீடுகளில் குடி இருந்தவர்கள். என் இளமைக்காலம் குழந்தைப் பருவத்தில் திருவல்லிக்கேணியில் பெல்ஸ் ரோடில் என்று அறிந்தேன். பிறகு எனக்கு நினைவு தெரிந்து நான் விளையாடியது கோடம்பாக்கத்தில், வடபழனி ஆண்டவர் கோவில் அருகாமையில் பிள்ளைமார் தெருவில். அப்புறம் சிவன் கோவில் அருகே, ஆற்காட் ரோடு பக்கம், சமரபுரி முதலியார் வீட்டில்.அப்புறம் சூளைமேட்டில், அஜீஸ் நகரில் என்று முடிந்தது.
என் தந்தை ஸ்ரீமான் ஜே .கிருஷ்ணய்யர் மும்மொழிகளில் வல்லுநர், ஸமஸ்க்ரிதம் , ஆங்கிலம், தமிழ் இவற்றில் சரளமாக பேசுவார் எழுதுவார். பலராலும் விரும்பப்பட்ட சிறந்த ஆசிரியர். அவரது மாணவர்கள் இன்னும் முகநூலில் இருக்கிறார்கள், என்னோடு தொடர்பு கொள்கிறார்கள் என்பதில் எனக்கு மிகவும் பெருமை .
அப்பாவுக்கு கடைசி காலத்தில் காது முக்கால்வாசி கேட்கவில்லை. 83 வயது வாழ்ந்தார். தனியாக தெருவில் போகவேண்டாம் என்று நாங்கள் எத்தனை முறை சொன்னாலும் விடுவிடுவென்று தெருவில் நடக்க கிளம்பிவிடுவார். ரெண்டு கிமீ. தூரத்தில் என் சகோதரர்கள் இருவர் வீட்டுக்கு அடிக்கடி போய் வருவார்.
ஏதாவது ஒரு ஸ்லோகத்தை சொல்லிக்கொண்டே நடப்பார். அதிகம் கைத்தடியை உபயோகிப் பதில்லை.
''அப்பா இப்படி தனியாக போகாதீர்கள். கண் பார்வை போதாது, காதும் கேட்கவில்லை. தெருவில் வண்டிகள் வேகமாக போகிறதே, விபத்து நேரிடலாம் என்று நாங்கள் கவலைப்படும் போதெல்லாம் ''எனக்கென்னடா கவலை, முன்னால் விநாயகர் வழிகாட்டுகிறார், பின்னால் ஆஞ்சநேயர் துணை வருகிறார்'' என்பார்.
அது உண்மை என்று இன்று ஒரு சம்பவத்தை பற்றி படித்தபோது புரிந்தது.
ஒரு வெள்ளைக்கார பெண் தனியாக வேலைக்கு செல்கிறாள். பரம ஏழை. வாகனங்கள் வாங்க வசதி இல்லாதவள். வீட்டில் சிறு குழந்தைகள் இருவர் தனியாக இருக்கிறார்கள் அடுத்த வீட்டுக்காரி கருணையால் அவள் பாதுகாப்பில் விட்டுவிட்டு வேலைக்கு செல்கிறாள். எப்படியும் தினமும் சாயந்திரம் ஆறு மணிக்குள் திரும்பிவிடுவாள்.
ஒருநாள் இரவு ஒன்பது மணியாகிவிட்டது. முதலாளி சக்கையாக பிழிந்து வேலை வாங்கிவிட்டு தான் அனுப்பினான். வேறு வழியில்லாமல் பயந்து பயந்து இரவில் தனியாக நடந்து வந்தாள். அவள் வீடு எங்கோ ஒரு ஒதுக்குப்புறம். இருண்ட பகுதி. அதிக ஜனநடமாட்டம் இல்லை. ஒரு சந்து வழியாக போனாள். தூரத்தில் யாரோ ஒரு குடிகாரன் எதிரே தெரு முனையில் நின்றுகொண்டிருந்தான். வழிப்பறி, கொள்ளை, கொலை, கற்பழிப்பு, எல்லாம் சர்வ சகஜமான ஊர் அது.
அந்த பெண் பயத்தில் நடுங்கினாள். எங்கும் ஓடமுடியாது . ''பகவானே எனக்கு உன்னை விட்டால் வேறு கதி இல்லை. எப்படியாவது என் உயிரைக் காப்பாற்று. என் குழந்தைகளுக்கு என்னைவிட்டால் வேறு கதி இல்லை. அவர்களை அனாதைகளாக்கி விடாதே. ப்ளீஸ். என்னை ஜாக்கிரதையாக வீடு போய்ச் சேர உதவு, தெய்வமே'' என்று வேண்டிக்கொண்டு விடுவிடுவென்று அந்த ஆளைத் தண்டி வேகமாக நடந்தாள் . அவன் அவளை தூரத்திலேயே பார்த்து விட்டான். பாக்கெட்டில் கூரான கத்தி இருந்தது. அவன் கை அதைத் தொட்டுக்கொண்டிருந்தது. அவள் செல்வதை அவன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் அதிர்ஷ்டம் அவன் அவளை ஒன்றும் செய்யவில்லை. அவன் கொடூர முகம் அவள் மனதில் படமாகிவிட்டது.
வீடு வந்து சேர்ந்ததும் பகவானுக்கு நன்றி செலுத்தினாள் . அடுத்த நாள் காலை ஒரு செய்தி. அவள் நடந்து வந்த சந்தில் யாரோ ஒரு பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்தாள் . இந்த சம்பவம் ஏழைப் பெண் அந்த சந்தில் நடந்து வந்த பிறகு அரை மணி நேரத்தில் நடந்திருக்கிறது.
எவ்வளவு அதிர்ஷ்டம் எனக்கு. பகவான் எப்படி என்னை காப்பாற்றியிருக்கிறார் என்று மனதார நன்றி செலுத்தினாள் . அந்த கொலைகாரனை அடையாளம் தெரியாமல் தேடிவருவதாக செய்தித்தாளில் அறிந்ததால் நேராக காவல் நிலையம் சென்றாள் . முதல் நாள் இரவு நடந்ததை விவரித்தாள். போலீஸ் அதிகாரி அவளை பாராட்டி நாங்கள் சிலரை சந்தேகத்தில் பிடித்து வைத்திருக்கிறோம். உன்னால் அடையாளம் காட்டமுடியுமா பார் என்றபோது ''ஆஹா எனக்கு அவன் முகம் மனதில் இருக்கிறது '' என்று நான்கு பேரில் அவனை தவறாமல் அடையாளம் காட்டினாள்.
அவனை போலீஸ் ''அவர்கள் முறையில் விசாரித்த போது'' குற்றத்தை ஒப்புக்கொண்டான். அப்போது அந்தப் பெண் அவனை ஒரு கேள்வி கேட்க விரும்பினாள் . போலீஸ் அனுமதித்தது.
''சரி கேள்''
''நான் அதே சந்தில் அரை மணி நேரம் முன்பு தனியாக நடந்து வந்தேனே என்னை நீ ஏன் தடுத்து நிறுத்தவில்லை, என்னை ஒன்றும் செய்யவில்லை? அதற்கு என்ன காரணம்?'' .
அவன் சொன்ன பதில்:
''நான் உன்னைப் பார்த்தவுடன் என் கத்தியை வெளியே எடுத்தேன். உன்னைக் கற்பழித்து கொன்று உன்னிடம் இருந்த பணம், நகைகளை பறிக்க எண்ணினேன். ஆனால் நீ தனியாக நடக்கவில்லையே. போய் சொல்கிறாய். உன் இருபக்கமும் பலம் வாய்ந்த இரு ஆண்கள் உனக்கு பாதுகாப்பாக நடக்கும்போது உன்னைத் தாக்க நான் என்ன முட்டாளா?''
No comments:
Post a Comment