Tuesday, December 7, 2021

THIRUMOOLAR



திருமந்திரம் _நங்கநல்லூர் J K  SIVAN


திருமூலர்      

தமிழ் யாருக்கெல்லாம்  பிடிக்குமோ, அவர்கள்  நிச்சயம்  என்னைப்போல  திருமூல நாயனார்   விசிறிகளாக இருப்பார்கள்.  திருமூலர்  18 சித்தர்களில் ஒருவர்.  
நம்பியாண்டார் நம்பி  திருத்தொண்டர்  திருவந்தாதியில் அவரை புகழ்கிறார். நிச்சயம்  5000 வருஷங்களுக்கு முந்தியவர்.   அவரது  3000 பாடல்களும்  திருமந்திரம் என்று புகழ் பெற்றவை. வருஷத்துக்கு ஒன்று  என்று  3000 வருஷங்கள் வாழ்ந்தவர் என்கிறார்கள்.  திருமூலர்  திருமந்திரம்  பன்னிரு திருமுறைகளில் 10வது திருமுறை. இன்னும் என்ன?
திருமூலருக்குத் தெரியாததே ஒன்றுமில்லை.  வைத்தியம், யோகம், ஞானம், சிவபக்தி, ஆன்ம தத்வம், உலக வாழ்க்கை, எல்லாம் நாலு வரிகளில்  ரொம்ப எளிமையாக சொல்பவர்.
ஒரு கதை சொல்கிறேன். 
கயிலையில்  நந்தியம்பெருமானின் மாணாக்கர்  ஒருவர் பரமேஸ்வர பக்தர் சிவயோகி.  அஷ்ட சித்திகள் கைவரப்  பெற்ற  பரம ஞானி.  அகஸ்தியரின்  நண்பர் என்பதால் அவரோடு பொதிகை மலையில் சிலகாலம் தங்க  எண்ணம் கொண்டு  கயிலையிலிருந்துகிளம்பி  தெற்கே நடந்தார் .  வழியில்  கேதார்நாத்,  நேபாளத்தில் பசுபதிநாத் ஆலயம், காசி,  விந்தியமலை,காளஹஸ்தி, திருவாலங்காடு, காஞ்சிபுரம், திருவதிகை, பெரும்பற்றப் புலியூர்,சிதம்பரம்  போன்ற பல ஸ்தலங்களுக்கும் விஜயம் செய்து சிவனை வணங்கினார். 
தெற்கு வந்த அந்த சிவயோகி,  காவிரி நதியில் ஸ்னானம் செய்து தென்கரையில் பார்வதி தேவி  கன்றுக் குட்டியாக  சிவனை வழிபட்ட  திருவாவடு துறை  சென்றார். அங்கே சிவதரிசனம் செய்து விட்டு  அங்கிருந்து செல்லும் வழியில்  ஒரு சோலையில்  நிறைய  பசுக்கள் கதறி அழுவதைப் பார்த்து திகைத்தார்.  அது சாத்தனூர் எனும் கிராமம்.  அருகே சென்று என்னவென்று கவனித்தார். 
மூலன் என்ற  ஒரு  மாடு மேய்க்கும்  ஆயன் அந்த பசுக்களை  அன்போடு மேய்ப்பவன்.  அன்று அவன் போதாத காலம் அவனை ஒரு கொடிய விஷப்பாம்பு  தீண்டி அங்கே மரணமடைந்து கிடந்தான்.  அவன் உடம்பை சுற்றி சுற்றி வந்து நக்கியவாறு பசுக்கள்  கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தன. சிவயோகியின் மனது இதைக் கண்டு இளகியது.  மூலன் உயிர் பெற்றால் தான் பசுக்களின் துயரம் தீரும் என்று புரிந்து கொண்டார். 
கூடு விட்டு கூடு பாயும் சித்து அறிந்தவர் அவர்.  தனது உடலை ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு மூலன் உடலில் அவர் ஆன்மா புகுந்தது.  மூலன் எழுந்து உட்கார்ந்தான். பசுக்கள்  ஆனந்தத்தில்  துள்ளி குதித்து புல்  மேய்ந்தன.   சாயங்காலம்  பசுக்களை சாத்தனூருக்கு பசுக்களோடு திரும்பினான்.  பசுக்கள்   தத்தம்  வீடுகளை  அடைந்தன.  மூலன்  ஒரு மரத்தடியில் அமர்ந்தான்.
வீடு திரும்பாததால் மூலனைத் தேடிக்கொண்டு அவன் மனைவி வந்தாள் .  மூலனுக்கு அவளைத் தெரியவில்லை. அவனிடம் உள்ள மாறுதலை உணர்ந்த அந்தப்  பெண்  தன்னோடு அவன் வீடு திரும்ப மறுத்ததைக் கண்டு பயந்து போய்  ''மூலா, உனக்கு  என்ன ஆயிற்று சொல் ?'' எனக் கேட்கிறாள்.
''அம்மா  நான் உன் கணவன் அல்ல'' என்று மட்டும்  சொல்லிவிட்டு  அந்த ஊர்  மடத்தில் சென்று அமர்கிறார் மூலன் உடலில் இருந்த சிவயோகி. ஊர் பஞ்சாயத்தில்  முறையிட்டாள் அந்தப்  பெண்.ஊரார்  மூலனோடு பேசி அந்த உடலில் இருப்பவர் ஒரு  முற்றும் துறந்த ப்ரம்ம  ஞானி என்பதை  அறிகிறார்கள். மனைவிக்கு  அறிவுரை கூறுகிறார்கள்.  ஊரும் உலகமும் இனி அவரை திருமூலர் என்று அறிந்து கொண்டது.
திருமூலர்  திருவாவடுதுறை  சிவன் கோவிலில்  மேற்கு பக்கம்  மதில் சுவர் அருகே  ஒரு அரசமரத்தின் அடியில் அமர்ந்து சிவயோகத்தில் ஈடுபட்டார். திருமந்திர மாலை உருவாகியது. சரியை கிரியை யோகம் ஞானம் எனும் நால்வகை நன்னெறிகளை விளக்கினார்.
''ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்துவென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்சென்றனன் தானிருந் தானுணர்ந் தேட்டே'  (அர்த்தம் அப்புறம் சொல்கிறேன்)  என்னும் திருமந்திரம்  தோன்றியது.  அப்புறம்  வருஷத்துக்கு ஒன்று. மூவாயிரம் திருப்பாடல்கள் திருமூலர்  திருமந்திரமாகி  திருமூலர்  கயிலை திரும்பினார். 
''குல மேய்ப்போன் குரம்பைபுக்குமுடிமன்னு கூனற் பிறையாளன் றன்னை முழுத்தமிழின்படிமன்னு வேதத்தின் சொற்படி யேபர விட்டெனுச்சிஅடிமன்ன வைத்த பிரான்மூல நாகின்ற அங்கணனே” என்று புகழ்ந்தார்  நம்பியாண்டார் நம்பிகள்.
எனக்கு அவ்வப்போது  திருமூலர் திருமந்திரமாக  கண்ணில் படுவார்.  அற்புத சித்தர். ஆழ்ந்த சிந்தனையாளர். அருமைத்  தமிழ். அழகிய  சந்தம்.  ஆனந்தமான தெளிவான உபதேசம்.  அதனால் தான் திருமூலர்  இன்னும்  கோடிக்கணக்கான தமிழ் இதயங்களில் குடி கொண்டிருக்கிறார்.

இன்று  ஒரு சில தீருமந்திரங்கள் அறிவோம்:   
கூகையும்  பாம்பும் கிளியோடு பூனையும்நாகையும் பூழு நடுவி லுறைபவன்
நாகையைக்  கூகை நணுக லுறுதலும்
கூகையைக்  கண்டெலி  கூப்பிடுமாறே''

ஒன்றுக்கொன்று ஒவ்வாத  சேர்ந்து இருக்க  முடியாத ஜீவன்கள் இந்த பூமியில் வாழ்கின்றன.  மனிதர்களே, அதுவும் ஒரே குடும்பத்தில் ஒரு தாய் வயிற்றில் பிறந்த மக்களே  சேர்ந்து வாழ முடியவில்லையே.  எல்லாம் இறைவன் சித்தம்.  உதாரணமாக  ஒரு கோட்டானும், அதை விழுங்கும்  பாம்பும்,  அழகிய  பச்சைக் கிளியும்  அதைக்  கொல்லும்  பூனையும், நாகணவாய் பறவையும்,  காடையும் ஒன்றால் ஒன்று பாதிக்கப்படாமல்  சேர்ந்து  மொத்தமாக   உயிர் வாழ்கின்றன.    இது உதாரணம்.   இதை எதற்காக சொல்கிறார் தெரியுமா?  அது தான் விசேஷம்.
நம் உடல் எனும் உலகத்தில் எத்தனையோ வஸ்துக்கள்,  இப்படி ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமாக வாழ்கின்றன.  அறியாமை என்பது கோட்டான் என்றால், காமம் என்பது ஒரு பாம்பு.  தர்மம் சாத்வீகம்  கிளி என்றால்,  அதர்மம்  என்பது பூனை.   அதிகம் வளராத, சிற்றறிவுதான்  நம்மில் நாகணவாய் பறவை. அதை அறியாமை எனும் கோட்டான்  அணுகும்.  அந்த நேரத்தில் தான் அறியாமையாகிய  கோட்டானை, ஞானம் ஆகிய  எலி  ஓங்கார நாதமாகிய ஒலியை  எழுப்பி, சிற்றறிவை  சிதறாமல்   பாதுகாக்கும்.

அர்த்தம் புரியவில்லை என்றால் இப்போதைக்கு விட்டுவிடுங்கள். பிறகு கொஞ்சம் நிதானமாக  படியுங்கள் சிந்தியுங்கள். தானாகவே புரியும்.மூவாயிரம் இருக்கிறதே.  ஒரு நூறாவது புரியாதா நமக்கு? 

''காடு புக்காரினி  காணார் கடுவெளி
 கூடு புக்கானது ஐந்து குதிரையும்
 மூடு புக்கானது ஆறு உள ஒட்டகம்
 மூடு புகாவிடின்   மூவணையாமே''

 அஞ்ஞான இருளில் மூழ்கி, அறியாமையில் தவிப்போர், திக்குத்  தெரியாத காட்டில் உள்ளவர்கள். அவர்கள் அதிலே உழல்கின்ற போது எப்படி பரவெளியான  ஞான ஜோதியைக்  காண்பார்கள். ஞான ஒளி எங்கே தெரியப்போகிறது?  இந்த  உடல் எனும் கூண்டு வண்டியை ஐந்து குதிரைகள் திசைக்கு ஒன்றாக இழுத்து செல்கிறது. இந்த ஐந்து குதிரைகள் நம் ஐம்புலன்கள்.  அவற்றின் வசம்  சிக்கி அங்குமிங்கும்  அலைகிறோம். இழுத்துச் செல்லப்படுகிறோம். 
இந்த உடலைசூழ்ந்துகொண்டிருக்கிற  மனம் எனும்  கூடாரத்தில்  ஏற்கனவே ஆறு ஒட்டகங்கள் உள்ளே தலை நீட்டிக்கொண்டே  நுழைந்து வந்துவிட்டன.  காம, க்ரோதம், மோகம், மதம், மாற்சர்யம், அகம்பாவம்  இவை தான் அந்த ஆறு  ஒட்டகங்கள். இவை வசம் அந்த மனம் மாட்டிக்கொண்டு தவிக்கிறது.  மனமெனும்  கூடாரத்தை  ஆறு ஒட்டகங்கள் புகாமல் திரை போட்டு மறைப்பது தான்  துரீய ஸக்தி . ஞானம் த்யானம் ஒன்றே அதை  நமக்குத் பெற்று தரும்.

இன்னும் ஒன்றோடு இப்போதைக்கு நிறுத்திக் கொள்கிறேன்.
''அண்டங்கள் ஏழும்,  அகண்டமும்  ஆவியும்
கொண்ட சராசர  முற்றும்  குணங்களும்
பண்டை மறையும் படைத்து அளிப்பு ஆதியும்
கண்ட சிவனும்  என்கண் அன்றி இல்லையே ''

கீழே ஏழு உலகம், மேலே  ஏழுலகம்,   மொத்தம்  பதினான்கு உலகங்கள் என்று சொல்வார்கள்.  ஆகாசம் எனும் எல்லையற்ற பெருவெளியும், உயிர்கள் அனைத்தும்  ஆவி என்று அழைக்கப் படுகின்றனவே அவையும் சேர்ந்து  இதெல்லாம் தான் சராசரம்.  அதாவது அசைவது  அசையாதது எல்லாம் சேர்ந்த வஸ்துக்கள். தாவர ஜங்கமம்  என்பது.  அசைவது எல்லாமே முக்குணங்கள் நிரம்பியது.  தமோ, ரஜோ சத்வ குணங்கள் பொருந்தியது

வேதங்களின் பிரமாணம் நிறைந்தது இந்த பிரபஞ்சம்.  இதில் இறைவனின் முத்தொழில் விடாமல் தொடர்கிறது. ஆக்கல் , காத்தல், அழித்தல் தொடர்ந்து நடைபெறுகிறது. இதை  பொறுப்பாக நடைபெற செய்வது பரமேஸ்வரன் எனும் ஆதி சிவன்.   அவன் என்னிடமும் உள்ளான் என்பதில் எத்தனை பெருமைப் பட வேண்டும், சிவன் என்னுள் இருக்கிறான் என்று ஆடுகிறார்  திருமூலர்.திருமந்திரம் பிடிக்கிறதா? 
தொடரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...