திருவெம்பாவை - நங்கநல்லூர் J K SIVAN
மாணிக்க வாசகர்
5 ஞாலமே, விண்ணே, பிறவே -
மாலறியா, நான்முகனும் காணா மலையினை, நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ! கடைதிறவாய்
ஞாலமே, விண்ணே, பிறவே அறிவரியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலமிடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்
'கமகம'வென்று மணக்கும் வாசனையான கூந்தலை உடையவளே! திருமாலும் நான்முகனும் கூடத் தேடி அடைய முடியாத அந்த அண்ணாமலையானை அறியும் தன்மை நமக்கு உள்ளது என்று, பாலும் தேனும் கலந்தாற் போல இனிக்க இனிக்கப் பொய் பேசுபவளே! கதவைத் திறப்பாயாக!
இவ்வுலகத்தாரும், தேவர்களும், பிறரும் அறிந்து கொள்வதற்கு அரியவனான சிவபெருமானின் திருவுருவத்தையும், நம் குற்றங்களைப் பொறுத்து நம்மை ஏற்றுக் கொண்டு நம்மைப் புனிதமாக்கிய அவனுடைய அருள் குணத்தையும், பலவாறு புகழ்ந்து, 'சிவனே சிவனே' என்று உரக்கப் பாடினாலும், அதனை உணர்ந்து கொள்ளாமல் உறங்குபவளே ! இதுதானோ உன் தன்மை?
இப்படி மாணிக்கவாசகர் அண்ணாமலையானை பற்றி பாடும் போது அண்ணாமலையார் அருளி குபேரன் புதல்வர்களுக்கு பொன் வில்வ சாரம் பற்றிய ஒரு தகவல் ஒன்று சொல்ல வேண்டாமா?.
ஒரு அற்புதமான மரகத லிங்கம், மிகப் பெரிய ஆவுடையார், சமீபத்தில் என்னுடைய வாளாடி யாத்திரையின் போது பார்த்தேன். அற்புதமான சிவனை எங்கே பார்த்தாலும் அதை ஓடி வந்து உங்களிடம் சொல்ல ஒரு ஆசை என்னுள் எப்போதும் உண்டு.
ஒரு சுந்தரேஸ்வரர் ஆலயம் நன்னிமங்கலம் என்ற கிராமத்தில் உள்ளது . 1200 வருஷ பழமையான சிவாலயம். அம்பாள் பொருத்தமான பேர் கொண்ட மீனாட்சி. எங்கோ எதற்கோ சாபம் பெற்ற குபேரனின் பிள்ளைகள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கிருபையால் நன்னிமங்கலம் வந்து பொன்வில் சாரத்தின் ரகசியத்தையும் மகிமையையும் உணர்ந்து வழிபட்ட ஸ்தலம்..
இப்போதே நிறைய தோப்புகளும் மரங்களும், பச்சை வயல்களும், பசு கன்று, மாட்டு வண்டிகள், வைக்கோல் போர்கள் குவிந்துள்ள இந்த கிராமம் ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு எவ்வளவு வளமையோடு சுற்றிலும் நீர் நிலைகள் நிறைந்து அற்புதமாக காட்சி தந்திருக்கும் என்று யோசிக்கும்போது மனம் இனிக்கிறது. எவ்வளவு சிவ பக்தர்கள் எங்கும் கண்ணில் பட்டிருப்பார்கள்?.
நல்லவேளை, எந்த ராஜா கட்டினானோ, சுந்தரேஸ்வரர் ஆலயத்தைச் சுற்றி, உயரமான மதில் சுவர்கள் கட்டியதால் அது இன்னும் உடையாமல் நிற்பதால், இன்னும் ஆக்கிரமிப்பு நடத்த அனுமதிக்க வில்லை. மேற்கு பார்த்த கோவில். வாயிலில் நுழைந்தால் நீளமான நடைபாதை, அப்புறம் இன்னொரு வாயில். அதை தாண்டி அகல பிரஹாரம் , ஒரு மஹா மண்டபம், அதன் நடுவே நந்தியும் பீடமும். அப்புறம் தான் அர்த்த மண்டபம். கற்பகிரஹத்தில் சுந்தரேஸ்வரர் மேற்கே பார்த்த ஐந்தடி உயர, கரும்பச்சை நிற மரகத லிங்கமாக அருள் பாலிக்கிறார். கற்பூர ஜோதியில் கண் கொள்ளா காட்சி. மார்ச் மாத கடைசி வாரத்தில் இருந்து ஏப்ரல் முதல் வாரம் வரை ஏறக்குறைய சுமார் 15 தினங்களுக்கு மாலையில் சூரிய கதிர்கள் இறைவன் மீது நேராக படும்போது கரும்பச்சை வண்ணத்தில் இறைவன் ஜொலிப்பது கண்கொள்ளா காட்சி.
ஆலய அர்ச்சகர் கணேச குருக்கள் நன்றாக பாடுகிறார். இவர் தலைமுறை தலைமுறையாக சுந்தரேஸ்வரரை அர்ச்சிக்கும் புண்ய குடும்பத்தவர். இங்கே தான் நான் முன்பு சொன்ன பெரிய ராஜ நாகம் தினமும் சிவனை தரிசித்து லிங்கத்தின் மேல் படுகிறது.
''நாகா, எழுந்து போ அப்புறம் வா '' என்று கணேச குருக்கள் சொன்னால் நாய்க்குட்டி போல் போகிறது என்கிறார். கேட்கும்போது நடுங்கினேன். ஒரு சிறு பூரானைப் பார்த்தாலெ அச்சமாக இருக்கிறது நமக்கு.
மார்கழி மாதம் அமைதியான சூழ்நிலையில் கணேச குருக்களின் இனிய குரலில் தேவார, சமஸ்க்ரித ஸ்லோகங்களை கேட்டவாறு கற்பூர ஜோதியில் மரகத லிங்க சுந்தரேஸ்வரரை தரிசிக்க நான் எவ்வளவோ புண்யம் செயதிருக்க வேண்டும். எனக்குள் இனம் புரியாத ஒரு சந்தோஷம் உணர்ந்தேன்.
மீனாட்சி அம்மனின் சன்னிதி இடது புறத்தில் உள்ளது. முன் கை அபய முத்திரை காட்ட, மறு கையில் மலர் கொண்டு, கால்கட்டை விரல்களில் மெட்டி அணிந்து நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி புன்னகைத்து அருள்கிறாள்.
ஒரு சிறு புராண விஷயம். பொன்னாலாகிய மூன்று வில்வ தளங்கள் கொண்ட தங்க வில்வ சாரம் தேவ லோகத்தில் தேடினாலும் கிடைக்காதது. எங்காவது ஒரு சுயம்பு லிங்கத்தின் மீது வைத்து ‘ஓம் நமசிவாய’ என்று உச்சரித்து ஒரு தடவை அர்ச்சனை செய்து வணங்கினால் அது உடனே பலமடங்காக உருவெடுத்து நிறைய செல்வத்தைத் தரும்.. யோகிகள் ஞானி, தவ ஸ்ரேஷ்டர்கள் கண்ணில் மட்டும் தான் இந்த பொன்வில்வ சாரம் படும். நாம் தேட முயற்சிக்க வேண்டாம்.
சிவன் ''இந்தா இதை வைத்துக் கொள் '' என்று அதை குபேரனிடம் கொடுக்க, அவனோ அதைத் தன் பிள்ளைகள் மணிக்ரீவன், நளகூபன் ரெண்டு பேரிடமும் கொடுத்து ''ரெண்டு பெரும் பூலோகம் சென்று எங்கே சுயம்பு லிங்கம் கண்டாலும் இதை அந்த லிங்க மூர்த்திகள் மேல் வைத்து வணங்குங்கள். அதன் மகிமையை என்ன என்று அறிந்து வாருங்கள் '' என்றான்.
சிறந்த சிவ பக்தர்கள் என்பதால் பொன் வில்வ சாரம் அவர்கள் கண்ணில் தெரிய, புறப்பட்டார்கள்.
எங்கெல்லாமோ சுயம்பு சிவலிங்கங்கள் மேல் பொன்வில்வத்தை வைத்து பூஜித்தார்கள். ஒன்றும் மாறுதல் தெரியவில்லை. சில இடங்களில் பசுமையாக இருந்தது. பல இடங்களில் மறைந்து விட்டது. என்ன செய்வது? எத்தனையோ நூறு வருஷங்கள் இப்படிச் செல்ல, சரி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் உதவியை நாடுவோம் என்று அங்கே சென்றார்கள். அன்று பவுர்ணமி. ஆகவே சந்தர்ப்பத்தை வீணாகாமல் கிரிவலம் வந்தார்கள். பொன் வில்வத்தை அண்ணாமலையார் பாதங்களில் வைத்து ‘ஓம் நமசிவாய’ என்று பிரார்த்தித்தார்கள்.
''எம்பெருமானே, நீங்கள் தான் இதன் மகிமையையும் தேவ ரகசியத்தையும் உணர்த்தவேண்டும்'' என கெஞ்சினார்கள். அவர் பாதத்தில் வில்வதளம் சொர்ணமாகப் பிரகாசித்தது. ''நீங்கள் இருவரும் சென்னி வளநாடு செல்லுங்கள் '' என அருள் வழங்கினார் அண்ணாமலையார்.
குபேர புத்திரர்கள் சோழ நாட்டிற்கு வந்து திருத்தவத்துறை எனப் பெயர் கொண்ட இப்போதைய லால்குடி சப்தரிஷீஸ்வரர் ஆலயத்தின் சிவகங்கை தீர்த்தத்தில் ஸ்னானம் செய்தார்கள். என்ன ஆச்சர்யம். நீரில் மூழ்கி எழுந்தபோது அவர்கள் எப்படி வேறொரு சிவன் கோவிலில் இருந்தார்கள்? எங்கே பொன்வில்வம் ?? அடடா என்ன இப்படி ஆகிவிட்டதே ? சிவனே நீயே கதி '' என அந்த சிவன் கோவிலின் கருவறைக்குள் சென்றார்கள்.
அங்கே ஒரு பெரிய சிவலிங்கம். கரும்பச்சை மரகத லிங்கம்..... மேலே தான் நன்னிமங்கலம் சுந்தரேஸ்வரர் விவரம் கொடுத்து விட்டேனே. நன்னிமங்கலம் சுந்தரேஸ்வரர் மீது பொன்வில்வம் இருந்தது. பல மடங்கு பெருகி கண்ணைக் கூசும் தங்க மயமாக பொன்வில்வங்கள் அநேகமாக நிறைந்திருந்தது. மனம் களித்த குபேர புத்திரர்கள் தேவ லோகம் சென்றனர். பௌர்ணமி கிரிவலம் மிக முக்கியமான விசேஷம் இங்கே.
கோஷ்டத்தில் துர்க்கை , தட்சிணாமூர்த்தி, ப்ரஹாரத்தின் மேற்கே, லட்சுமி நாராயணப் பெருமாள் ,வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி- பூதேவியுடன் சந்நிதிகளில் அருள் பாலிக்கிறார்கள். முருகன் வள்ளி-தெய்வானையுடன் தனி சன்னிதியில் .
வடக்கு பிரகாரத்தில் ரெண்டு சண்டிகேஸ்வரர்கள் . கடாசனத்திலும், அர்த்த பத்மாசனத்திலும் தெற்கு மேற்காக காட்சி தருகிறார்கள். வடகிழக்கு மூலையில் நவக் கிரக சன்னிதி, மேற்கே, செவி சாய்த்த விநாயகர்.
ஸ்தல விருட்சம் மூன்று தள வில்வ மரம். பவுர்ணமி அன்று இந்த ஸ்தலவிருட்சத்திற்கு அரைத்த சந்தனம், மஞ்சள், குங்குமம் சாத்தி, அடிப்பிரதக்ஷிணம் செய்கிறார்கள். குபேரன் லட்சுமி தேவி கடாக்ஷம் கிடைக்க வேண்டாமா?
சிவபெருமானுக்கு சிவகாமப்படி, லட்சுமி நாராயணருக்கு வைகானஸ ஆகம முறைப்படி நித்ய பூஜைகள். தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் ஆலயம் திறந்திருக்கும்.
நன்னிமங்கலம் திருச்சியிலிருந்து 23 கி.மீ. தூரத்தில் உள்ள கிராமம். லால்குடியிலிருந்து 3 கி.மீ. தூரம் தான்.லால்குடி வழியாக பஸ் வசதி உண்டு. ஆட்டோ ரிக்ஷாக்கள் மஞ்சளாக நிறைய கண்ணில் படுகிறது.
நன்னிமங்கலம் சிவாலயத்திற்கு அருகே, உள்ள சென்னிவாய்க்காலில் ஒரு நடுக்கல் கிடைத்து அதை ஆலயத்தில் வைத்திருக்கிறார்கள். பல்லவர் கால நடுக்கல்லில் கல்வெட்டுகள் என்ன சொல்கிறது?
'' நந்தி வர்மனின் 21-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி.867) மைசூரிலிருந்து ஹொய்சாலர்கள் இங்கே வந்து இவ்வாலய நிலங்களுக்கு மதகு அமைத்து கொடுத்து விவசாயம் தழைக்க உதவி செய்தார்கள்''.
உள்மண்டப மேல்நிலையில் உள்ள கல்வெட்டு ராஜ ராஜ சோழன் காலத்தது என்பதால் 1200 ஆண்டுகளாக தொடர்ந்து சிவாகம பூஜை நடந்திருக்கிறது.
நன்னிமங்கலம் திருச்சியிலிருந்து 23 கி.மீ. தூரத்தில் உள்ள கிராமம். லால்குடியிலிருந்து 3 கி.மீ. தூரம் தான்.லால்குடி வழியாக பஸ் வசதி உண்டு. ஆட்டோ ரிக்ஷாக்கள் மஞ்சளாக நிறைய கண்ணில் படுகிறது.
நன்னிமங்கலம் சிவாலயத்திற்கு அருகே, உள்ள சென்னிவாய்க்காலில் ஒரு நடுக்கல் கிடைத்து அதை ஆலயத்தில் வைத்திருக்கிறார்கள். பல்லவர் கால நடுக்கல்லில் கல்வெட்டுகள் என்ன சொல்கிறது?
'' நந்தி வர்மனின் 21-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி.867) மைசூரிலிருந்து ஹொய்சாலர்கள் இங்கே வந்து இவ்வாலய நிலங்களுக்கு மதகு அமைத்து கொடுத்து விவசாயம் தழைக்க உதவி செய்தார்கள்''.
உள்மண்டப மேல்நிலையில் உள்ள கல்வெட்டு ராஜ ராஜ சோழன் காலத்தது என்பதால் 1200 ஆண்டுகளாக தொடர்ந்து சிவாகம பூஜை நடந்திருக்கிறது.
No comments:
Post a Comment