Sunday, December 12, 2021

NOSTALGIC RECOLLECTION

ஒரு  பழைய  நினைவு    நங்கநல்லூர்  J K  SIVAN 



ஒவ்வொருவர்  குடும்பத்திலும்  முன்னோர்கள் பற்றிய  சுவாரஸ்ய சம்பவங்கள் உண்டு.  அநேகர்  அதை நினைத்துப்பார்ப்பதோ, தேடி ரசிப்பதோ இல்லை, எழுதாமல், சொல்லாமல், கேளாமல் அநேக அற்புதங்கள் மறைந்துவிட்டன. 

இந்த   எழுத்துக்கள்  ஒரு குறிப்பிட்ட  சம்பவத்தையோ,  குறிப்பிட்ட  கால வரையறையை பின் பற்றியோ  எழுதப்படுபவை  அல்ல.  பிரளயமாக  ஓடும் எண்ணமெனும்  காட்டாற்றில்  சேகரிக்கப்பட்ட  சிறு  திவலைகள்.  எனவே  முன்னுக்கும்   பின்னுக்குமாக இருந்தாலும்   ஒன்றுக்கு ஒன்று  எப்படியோ  தொடர்பு கொண்டவையாகத்தான்  வரும்.  பிரவாகத்தில் மிதக்கும் நீர்க்குமிழிகளில் எது அண்ணா  எது தம்பி? ஆகவே  இவை  
வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக  சீராக  வருகிற  தொடர்  நிகழ்ச்சிகள்  அல்ல. இதன்  பின்னணி என்னவென்றால்   நம்  எல்லோருடைய  முன்னோர்களும்  ஒரு  கால  கட்டத்தில்  வாழ்ந்த தலைமுறையில்  சில  நம்பிக்கைகள்  சில பழக்க  வழக்கங்களை  பின் பற்றியவர்கள்.  அவைகள் இன்று  நமக்கு   விசித்ரமாக, மூடத்தனமாக  இருக்கும்  ஏனென்றால். காலத்தின்  ஓட்டத்தில்  பழையன  கழிந்தன  புதியன  புகுந்தன  அல்லவா?  எனினும் சில சந்தர்ப்பங்களில்  நினைவு  ஒரு  தனிப்பட்டவரைப்  பற்றி   நினைக்கும்போது அவர்களைப்  பற்றியும் கொஞ்சம்  விவரங்கள்  உள்ளே  புகும்.  

ஜம்புநாத  அய்யர்  பாரஸ்ட் ரேஞ்சர்.  வெள்ளைக்காரன் ஆட்சியில்   தென்னிந்தியாவில் காடுகள்  அதிதிகம்,  தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் என்ற  பிரிவுகள் எதுவும் கிடையாது. எல்லோரும் எல்லா மொழிகளும் பேசினார்கள். புரிந்துகொண்டார்கள். எங்கு வேண்டுமானாலும் வாழ்ந்தார்கள்.  எனது நதி, உனது காற்று , அவனுடைய  சூரியன் என்று வித்யாசம் எதிர்ப்பு இல்லை.
ஜம்புநாதய்யர் தமிழக கர்நாடக எல்லை காடுகளில்  சந்தன மரம் பாதுகாப்புக்காக  பணியாற்றியவர்.  வெள்ளைக்காரர்கள் காலத்திலும் சந்தனமரங்களை வெட்டி  திருடி விற்பது பழக்கம் தான்.

அடர்ந்த காட்டுப் பிரதேசத்தில்  அவரது உத்யோகம்  இரவும் பகலும்  காடுகளில்  சுற்றி  விலை உயர்ந்த  சந்தன  தேக்கு மரங்களை  யாரும்  வெட்டிச்  செல்லாமல்  பார்த்துக்கொள்வது. வெள்ளைக்கார  அரசாங்கத்தின் காட்டிலாகா அவர் மீது  இந்த  அதிகாரத்தை திணித்தபோது  அவரது  பாதுகாப்புக்கு  அவர்கள்   எந்த உதவியும்  அளிக்கவில்லை.  வேலைக்கு  எடுக்கும்போது  ஆசாமி  எப்படி இருக்கிறான்.  தனது வேலையைச்  செய்யும்போது  அவன் தன்னைக்  காப்பா ற்றிக் கொள்ளும்  சாமர்த்தியமும்  உடல்  வலிமையையும்  பெற்றிருக்கிறானா  என்று  மட்டும்  தான்  பார்தார்கள்.   இந்த  காலத்து தற்காப்பு  வசதிகள்  அப்போது இல்லை.  ஒரு  டார்ச்,  ஒரு  துப்பாக்கி,  கத்தி  இது வெல்லாம்  தெரியாது.  காலுக்கு  பூட்ஸ், ஷூ  எல்லாம்  கிடையாது.  அவர் வேலைக்கு சேர்ந்ததே  ஒரு  கதை.  வாழ்க்கையில்  கற்றுக்கொண்ட து தான்  படிப்பும் அனுபவமும்..

காட்டிலேயே  சுற்றிக்  கொண்டிருப்பார்.  அது  அவருக்குப் பிடிக்கும்.  ஒரு  நாள்  காட்டில் ஏதோ  மான் சத்தம்  கேட்டு  உள்ளே ஓடினார்.  ஒரு பெண்  மான் எங்கோ   நின்று கொண்டு கத்திக்கொண்டிருந்தது.  அவரைக்கண்டதும்  ஓட முயற்சித்தாலும்  அதன் எண்ணம்  அங்கேயே  நிற்கவேண்டும்  என்று இருந்ததை  புரிந்து கொண்டார்.  எது அந்த  மானை   அங்கே கட்டிப்போட்டது என்று  ஆராய்ந்தார்.  அருகே ஒரு  பள்ளத்தில் அதன் குட்டி  மேலே  வரமுடியாமல்  பள்ளத்தில் உள்ளே விழுந்து  தடுமாறிக்கொண்டிருந்தது.  இரக்க மனம் கொண்ட  அந்த  ஜம்புநாதய்யர்   அந்த  பள்ளத்தில்  குதித்தார்.  மேலே ஏறுவதற்கு  சரியான  பிடிப்பு  கிடையாது. எனினும்  அந்த  மான் குட்டியைத்  தூக்கிக்கொண்டு  எப்படியோ  மேலே வந்து விட்டார்.  அதன்  தாயிடம் அதை விட்ட  அடுத்த கணமே  ரெண்டும்  சிட்டாக  ஓடிவிட்டன. அவரது இந்த செய்கையை  ஒரு வெள்ளைக்கார  துரையும்  பார்த்துக்கொண்டிருந்தது ஜம்புநாதய்யருக்கு தெரியாது.  அவன்  தான்  அந்த  காட்டுப்பகுதி  தலைமை அதிகாரி.  அவரை அழைத்தான்.  கொஞ்சம் கொஞ்சம்  அவன் ஆங்கிலத்தில்  பேசுவது  அவருக்குப் புரிந்தது.  அது தான்  அங்கு  ந டந்த  இண்டர்வியூ.   அவர்  வேலைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டார்.    FORREST RANGER உத்யோகம் நிலைத்தது.

இந்த  வேலை  தனக்கு  கிடைத்ததில்  ஐயர் வானில்  பறந்தார்  அவர்.  அவரது  முண்டாசு,  ஆஜானு பாகுவான  உருவம்.   கூர்மையான கண்கள்.  புஸ்தி மீசை.  கன்னம்,  தாடை  எல்லாம்   மறைத்த கழுத்து தெரியாத  கரு கரு வென்ற  தாடி.  நிறைய  பித்தளை பட்டன்கள்  வைத்து  கழுத்திலிருந்து முழங்கால்  வரையான  கருப்பு  கோட்டு   பஞ்ச கச்சம். காலில்  மரத்தால்  ஆன   பாத ரோட்டுகட்டை தான்  செருப்பு (மரப்பாதுகை).  ஆறு அடி  உயர  தடிமனான ஒரு   பழுக்காத்  தடி   ம்ருத்யுஞ்சய  ஸ்லோகம்  உரக்க  சொல்லிக்கொண்டே  காட்டுக்குள்  நுழைவார்.  சந்தன மரங்களை  எண்ணி வைத்திருப்பார்.  எங்கு  எந்த  மரம்  இருக்கிறது  என்று  அவருக்கு இருட்டிலும் கூட   அத்துபடி.   கரடிகள்  நிறைந்த  பிரதேசம்  அது. கரடிகள்  இருட்டில்  இருப்பதே  தெரியாது.  அவரையும்  ஒரு   கரடியாக நினைத்து தாக்கா  விட்டால் அது  அவர்  அதிர்ஷ்டம்.  சில சமயம்  அவற்றை  எதிர்த்து  விரட்ட  வேண்டியிருக்கும்.  எந்த  நேரமும்  திடீரென்று  ஏதாவது  மரத்தின் மீது ஏறி  கரடி  கீழே  அவர் மேல்  குதித்து  தாக்கும்  என்று எதிர்பார்த்துக் கொண்டே  இருக்க வேண்டும்.  வளர்ந்த கரடி  மேலே இருந்து  ஒரு  ஆள்  மீது  குதித்தால்  அவன்  அதைச் சமாளிக்க முடியாது.  அதன்  எடை  அத்தனை  அதிகம்.  மேலும்  அதன் பிடியிலிருந்து அவன்  தப்ப முடியாது. கரடிப்பிடி, உடும்புப்பிடி எல்லாம் பெயர்போனவை. 

நிறைய  கரடிகள்  ஜம்புநாதய்யரிடம் மோதி  தோற்று ஓடியிருக்கிறது.  இரவில்  ஹரிக்கன்  விளக்குடன்  அலைவார்.  கள்ளர்கள் குறுக்கிடுவார்கள்.  அவர்களைக்கண்டு  அவர்  பயப்படுவ தற்குப்  பதிலாக  அவரைக் கண்டு  அவர்கள்  நடுங்குவார்கள்.  மனிதன்  ஒரே  சமயம் ஏழு  எட்டு  கள்ளர்களைக் கூட  அடித்து நொறுக்குவார். அவ்வளவு  தைரிய சாலி.  பலசாலி. 

  விடிகாலை காவிரியில்  4மணிக்கு  இறங்கி  நீந்தி  குளித்து விட்டு  தனது  ஸ்லோகங்களைச் சொல்லி வீட்டில்   நூறு வருடங்களுக்கும்  மேலாக  இருக்கும்  இமயமலைக் கல்லில்  வடித்த  பிளையாருக்கு  பூஜை செய்து விட்டு  புறப்படுவார்.  ரெண்டு மூன்று  லோட்டா நீராகாரம்  (மோரில்  பழையது  சாதம் உப்பு  இஞ்சி, பெருங்காயம்  வெந்தியம்  எல்லாம்  கலந்து கையால்  கரைத்தது)  மிக்ஸி  தான் கிடையாதே  அப்போது.  சில இரவுகள்  வீடு திரும்ப மாட்டார்.  அவருக்கு மாதம்  3 ரூபாய் சம்பளம். அதில்   அந்த குடும்பம்  வெகு  நன்றாக  ஜீவனம்  செய்தது.

 ஒரு  தடவை  சந்தன மரத்தை   வெட்டிக்  கொண்டிருந்த ஒரு  கள்ளர் கூட்டத்தை தன்னந்தனியனாக  அடித்து  எலும்பை நொறுக்கினார்.  அவர்கள்  விட்டுச் சென்ற  அந்த  பெரிய  சந்தன  மரத்தை  திருவானைக்காவல் பகுதி  கோவில் ஒன்றுக்கு  துவஜஸ்தம்பமாக  கொடுத்தார் என்று  கேள்வி.  
ஜம்புநாதய்யர், மிருத்யுஞ்சயஅய்யரின் மூன்று குமாரர்களில் ஒருவர்.  தஞ்சாவூர்க்காரர்  அவர்.  அப்பா  ம்ருத்யுஞ்சய  அய்யர்  சரபோஜி ராஜா அரண்மனையில் கண்டா  மணி அடிப்பவர்.  அரண்மனை  மணி சப்தம்  தான், நேரம் காலம் மணி   என்ன  என்பதை  தெரிவிக்கும்.  கடிகாரம் இல்லாத  காலம்.    அவரது  மாத  வருமானம்   மூன்று கலம்  நெல். நெல்லைக் கொடுத்து  தான்  மீதி  பொருள்கள்  பண்டமாற்று வகையில்  பெறுவார்கள்.   கஷ்டம்  என்று அந்த கால மக்கள்  எதையும்  நினைக்கவில்லை.  கிடைத்ததில் மகிழ்ந்தனர்.  கிடைத்ததற்காக  இறைவனுக்கு  நன்றி கூறி  கிடைத்ததை  மற்றவரோடு பங்கு கொண்டு  வாழ்ந்தனர்.  நாளைக்கு,  எதிர்காலத்துக்கு  என்று  ஒரு  சேமிப்பு  எண்ணம் மனதில்  தோன்றாத  காலம்  அது.  

அவரது  நீண்ட கனமான  தடி, சில  கரடி  நகங்கள்,  அவரது  புகைப்படம் - கருப்பில்  வெள்ளை வெள்ளையாக அங்கங்கு  அந்து பூச்சி அழித்து,  முகமே  சரியாக  தெரியாத படமாக  இருந்த. அதை  எனது சிறிய வயதில்  பார்த்த  ஞாபகம்  இருக்கிறது.  அவரை நேரில்  பார்க்க  கொடுத்து வைக்கவில்லை.   சிறந்த தர்மிஷ்டர்  நிறைய  கோவில்களுக்கு  வாரி கொடுத்திருக்கிறார் என்று  கேள்விப்பட்டிருக்கிறேன்.  நிறைய  ஜபங்கள் செய்வார்.  மல்யுத்தம்  ரொம்ப  பிடிக்கும்.  அந்த  பகுதியில்  அவரை வெல்ல  ஆள்  கிடையாது  என்பார்கள்.  

சீதாலட்சுமி அம்மாளுக்கு  கணவரிடம் பயம்  கலந்த மரியாதை.  அந்தக்காலத்து மனைவிகள் கணவன் எதிரே  நேரில்  நின்றே  பேசமாட்டார்கள்.   கதவுக்கு  பின்னாலிருந்து  பதில் சொல்வாள். ஐயரின் குரல்  சிம்ம  கர்ஜனை  போல்  இருக்குமாம்.  காட்டில்  தனியாக  பாடிக்கொண்டே  செல்வார்.  கர்நாடக  சங்கீதம்  அந்தக் காலத்தில்  நிறைய  பேருக்குத்  தெரிந்திருந்தது.   குழந்தை மனசு.  யார்  கஷ்டப்பட்டாலும்  மனசு  தாங்காது.  நிறைய சமயங்களில்  உடம்பு  முடியாதவர்களை   பல மைல்கள்  தானே தோளிலும்  முதுகிலும்  தூக்கிக்கொண்டு வெள்ளைக்காரன்  ஆஸ்பத்திரிகளில்  விட்டிருக்கிறார்.  திரும்ப  தூக்கிக்  கொண்டு வந்திருக்கிறார்.  வண்டி  மாடெல்லாம்  எதிர்பார்த்தது  இல்லைஅவரது பிறந்த  நாளோ, வயதோ மற்ற  எந்த விவரமோ  என்னை அடையவில்லை. . அவர்  தாத்தா. இன்றும்  அவருடைய பெயருக்கு  அமாவாசைகளில்  மற்ற   மாத  பிறப்புகளில்  மஹாலயத் தில்  என்  பித்ரு பிதாமகராக  தர்ப்பணம் உண்டு.

தாத்தா அடிக்கடி  சொல்லும்  பிடித்த  வார்த்தை ''ஜெய்  ராம்  சீதாராம்''  என்பது மட்டும்  தெரிந்தது.  எனது தந்தை வழி பாட்டனார் பெயரின் முதல் எழுத்தைத்   தாங்கிக் கொண்டு தான்  இன்றும்  J .K  சிவனாக  உலவுகிறேன்.
 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...