Sunday, December 19, 2021

SRI LALITHA SAHASRANAMAM

 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் -  நங்கநல்லூர் J K  SIVAN 

ஸ்லோகங்கள்: 122-125    நாமங்கள்:  607-621


देवेशी दण्डनीतिस्था  दहराकाश-रूपिणी । प्रतिपन्मुख्य -
राकान्त-तिथि-मण्डल-पूजिता ॥ १२२॥

Deveshi dandanitisdha daharakasha rupini
Pratipanmukhyarakanta idhimandala pujita – 122

தேவேஶீ, தம்டனீதிஸ்தா,  தஹராகாஶ ரூபிணீ |
ப்ரதிபன்முக்ய ராகாம்த  திதிமம்டல பூஜிதா || 122 ||

कलात्मिका कलानाथा  काव्यालाप-विनोदिनी । or विमोदिनी
सचामर-रमा-वाणी-  सव्य-दक्षिण-सेविता ॥ १२३

Kalatmika kalanadha kavyalapa vinodini
Sachamara ramavani  savyadakshini sevita – 123

களாத்மிகா, களாநாதா, காவ்யாலாப வினோதினீ |
ஸசாமர ரமாவாணீ  ஸவ்யதக்ஷிண ஸேவிதா || 123 ||


आदिशक्तिर् अमेयाऽऽत्मा परमा पावनाकृतिः ।
अनेककोटि-ब्रह्माण्ड-जननी दिव्यविग्रहा ॥ १२४॥


Aadishakti rameyatma parama pavanakruti 
Anekakoti bramhanda janani divyavigraha – 124

ஆதிஶக்தி, ரமேயாத்மா, பரமா, பாவனாக்றுதிஃ |
அனேககோடி ப்ரஹ்மாண்ட  ஜனனீ, திவ்யவிக்ரஹா || 124 ||

क्लींकारी केवला गुह्या कैवल्य-पददायिनी ।
त्रिपुरा त्रिजगद्वन्द्या त्रिमूर्तिस् त्रिदशेश्वरी ॥ १२५॥

Klinkari kevala  guhyakaivalya padadaeini
Tripura trijagadvandya trimurti stridasheshvari – 125

க்லீம்காரீ, கேவலா, குஹ்யா, கைவல்ய பததாயினீ |
த்ரிபுரா, த்ரிஜகத்வம்த்யா, த்ரிமூர்தி, ஸ்த்ரிதஶேஶ்வரீ || 125 ||

லலிதா ஸஹஸ்ரநாமம் - (607 -621 ) அர்த்தம்

*607* देवेशी தேவேஶீ - 
அம்பாள் ஸ்ரீ லலிதாம்பிகை தேவ தேவி. கடவுளர்க்கு கடவுள். ஈஸ்வரி அல்லவா?

* 608 * ण्डनीतिस्था  தண்ட நீதிஸ்தா --
 குற்றங்களை விசாரித்து தண்டனைகளை வழங்கி நீதியை நிலை நாட்டுபவள் ஸ்ரீ அம்பாள். தவறானவர்களை திருத்த தண்டனை வழங்கினால் தான் திருந்துவார்கள்.

* 609*
 दहराकाश-रूपिणी । தஹராகாஶ ரூபிணீ -
 பரந்த ஆகாசமாக தோன்றுபவள் அம்பாள் என்கிறது இந்த நாமம். பெரியதில் பெரியவள் அணுவில் அணு. எல்லோர் மனத்திலும் இதயத்திலும் சூக்ஷ்மமாக வீற்றிருப்பவள் அம்பாள். எல்லா சாஸ்திரங்களும், வேத, உபநிஷத
பு,ராணங்களும் நிறைய சொல்கிறதே. கடோபநிஷத் (I.iii.1) என்ன சொல்கிறது?  

இதயமெனும் உயர்ந்த ஸ்தலத்தில் ஆழத்தில் குகையில், ஒரு கட்டை விரல் அளவில் காணப்படுபவள் ஸ்ரீ அம்பாள். ப்ரம்ம ஸ்வரூபமாக இருப்பவள்'' என்கிறது. நமது உடல் ஒரு நகரம்.அதில் தாமரை வடிவில் ஒரு இடம். அதன் இடைவெளியில் என்ன இருக்கிறது. அது தான் ப்ரம்மம். ஆத்ம ஸ்வரூபம். அம்பாள்.

*610*
 प्रतिपन्मुख्य -राकान्त-तिथि-मण्डल-पूजिता   ப்ரதிபன்முக்யராகாந்த திதிமண்டல பூஜிதா - 
பௌர்ணமியிலிருந்து அ மாவாஸ்யா வரை கிருஷ்ண பக்ஷத்தில் ஸ்ரீ சக்ர உபாசனையில் முக்கியமாக கொண்டாடப் படுபவள் அம்பாள். அவளை திதி நித்ய தேவிகள் பதினைந்து பேர் சூழ்ந்திருப்பவர்கள். இந்து எனும் ஸ்ரீ சக்ரா மத்ய பாகத்தில் உள்ளே காணும் முக்கோணத்தில் சிவபிரானின் மடிமேல் அமர்ந்திருக்கிறாள் அம்பாள். கிருஷ்ண பக்ஷ ஒவ்வொரு திதியிலும் ஒவ்வொரு திதி நித்ய தேவி பொறுப்பேற்கிறாள். ஸ்ரீ வித்யா உபாசனையில் ஸ்ரீ லலிதாம் பிகையே மஹா நித்யா என்று வணங்குவார்கள்.

* 611 * 
कलात्मिका கலாத்மிகா, - 
கலைகளின் ஆத்மாவாக இருப்பவள் ஸ்ரீ லலிதாம்பிகை என்கிறார் ஹயக்ரீவர். ஒரு வஸ்துவின் பல நுண்ணிய பிரிவுகளில் ஒவ்வொன்றும் கலா எனப்படும். சந்திரன் 16 கலைகளை கொண்டது. சூரியன் அக்னி ஆகியவை 10 கலைகளை கொண்டது.

*612* 
कलानाथा  கலா நாதா - 
அம்பாளை கலைகளுக்கெல்லாம் தலைவி, அரசி எனும் நாமம் இது. அம்பாள் ஸ்ரீ சக்ரத்தின் ஒவ்வொரு நுண்ணிய பாகத்திலும் உறைபவன்.

* 613 *
काव्यालाप-विनोदिनी । or विमोदिनी  காவ்யாலாப வினோதினீ -
 மகா காவியங்கள் என்று போற்றப்படும் நமது இதிகாசங்கள், புராணங்களில் எல்லாம் போற்றப்படும் அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை. வால்மீகி முனிவர் எழுதிய ராமாயணம் 18 உயர்வான அம்சங்களைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது. அந்த பதினெட்டு மேன்மை பெற்ற அம்சங்கள் என்ன தெரியுமா?
 அமைதி, சீர்மை, ஆடம்பரம் இன்மை, நேர்மை, எளிமை, வீரம், சம பாவனை, உறுதி, பொறுமை, சகிப்பு தன்மை, நேரம் காலத்திற்க்கு ஏற்ப அனுசரிப்பு, கர்வமின்மை, நம்பகம், பரந்த மனப்பான்மை , தாராளம், ஒழுக்கம், பரிசுத்தம், போன்றவற்றை வெளிப்படுத்தல்.

* 614 *
सचामर-रमा-वाणी-  सव्य-दक्षिण-सेविता   ஸசாமர ரமாவாணீ ஸவ்யதக்ஷிண ஸேவிதா-
லலிதாம்பிகையின் இரு மருங்கிலும் யார் நின்று உபசரிக்கிறார்கள் தெரியுமா ?   கேட்கிறார் ஹயக்ரீவர்.   பிறகு  தானே  பதில் சொல்கிறார்.
ஒரு புறம் அலைமகள், திருமகள் லக்ஷ்மி தேவி சாமரம் விசிறுகிறாள். மற்றொருபுறம் கலைமகள் சரஸ்வதி சாமரம் வீசி மகிழ்கிறார்கள்.

* 615 * 
आदिशक्तिर्  ஆதிஶக்தி - 
முதன் முதலான பரம சக்தி அம்பாள். பிரபஞ்ச சிருஷ்டி காரணி. சக்தி ஸ்வரூபம். சிவனால் விளைந்தவள் சக்தி, சிவனோடு சக்தியால் விளைந்தது சகல உயிர்களும். எனவே அவளை ஆதி சக்தி என்கிற இந்த நாமம் போற்றுகிறது. சக்தி சிவனை எண்ணற்ற கேள்விகள் கேட்டு அவரது விடைகளாக அமைந்தது தான் தந்த்ர சாஸ்திரங்கள் . சிவனின் அருகே அமர்ந்து சக்தி பெற்ற சாஸ்திரங்கள் ஆரம்ப பிரிவு. பரமேஸ்வரனின் மடி மேல் அமர்ந்து சக்தி பெற்ற தந்த்ர சாஸ்திரங்கள் இன்னொரு பிரிவு. இவை எப்படி சிவனை அடைவது என்பது பற்றியவை. மூன்றாவதாக சிவனோடு கலந்து விடுகிறாள் சக்தி. அர்தநாரிஸ்வர உருவம். அது முழுமையாக ஒன்று சேர்ந்து கலந்து உருவமற்ற லிங்கமாகிறது. இதன் தத்துவம் முதலில் பிரம்மமும் அதை தேடுபவனும் வேறாக இருந்து பிறகு ஒன்று சேர்ந்து கடைசியில் இரண்டறக்கலந்து ''அன்பே சிவமாவதை ஆரும் அறிகிலார்'' நிலை.

*616*अमेयाऽ  அமேயா - 
அளவிடமுடியாதவள் அம்பாள். எல்லையற்றவள். ஆரம்பம் முடிவு அற்றவள்.

*617* 
ऽत्मा पஆத்மா - 
ஜீவனில் கலந்த ஆத்மாவானவள் அம்பாள். ஜீவனில் ஆத்மா தான் ப்ரம்மம். ஜீவனுக்கும் ஆத்மாவுக்கும் என்ன வித்யாசம் என்றால் ஜீவனுக்கு உடல் போர்வை. ஆத்மாவுக்கு அது கிடையாது. எனவே அதற்கு பிறப்பு இறப்பு இல்லை.

ஆத்மாவுக்கு புருஷன் என்று ஒரு பெயர். ஜீவன் ஆத்மாவை தியானத்தால் அடையலாம். அப்போதுதான் ஆத்மா எஜமானன் ஆகிறது. ஆத்மா தான் பரமேஸ்வரன் சிவனும் சக்தியும் இணைந்த கோலம். இது மனித உடலில் உச்சியில் ஸஹஸ்ராரத்தில் நிகழ்வது.

* 618 *
 परमा     பரமா - 
எல்லோரிலும் உயர்ந்தவள் அம்பாள். முதலில் ஆத்மா என்கிறோம் பிறகு பரமா என்கிறோம். அம்பாள் சகுண நிர்குண ப்ரஹ்மம் என்று புரிவதற்காக.

* 619 * 
पावनाकृतिः ।பாவனாக்ருதி - 
பரிசுத்தத்தின் உருவம். சிருஷ்டி ஸ்திதி லயம் காரிய கர்த்தா அம்பாள். மோக்ஷதாயினி. சிவனை உணர்வது அவள் மூலமாகத்தான் முடியும். தவம், த்யானம் அண்ட் ஞானம் மூலமே சிவனை அதாவது பிரம்மத்தை உணரமுடியும். அம்பாளே அதற்கு வழி காட்டி.

* 620 * 
अनेककोटि-ब्रह्माण्ड-जननी அனேககோடி ப்ரஹ்மாண்ட ஜனனீ -
 பெரிய நீளமான நாமம் இது. அற்புதமான அர்த்தம் கொண்டது. எத்தனையோ கோடி மகா பெரிய மண்டலங்களின் தாய் அம்பாள் ஸ்ரீ லலிதை என்கிறார் ஹயக்ரீவர். ப்ரம்மத்திற்கு நான்கு நிலைகள். அவ்யக்தம் (பிரபஞ்சத்தின் வெளிப்படில்லாத மூன்று குணங்களும் சமமாக காணும் வெறுமை நிலை, துரியம் என்பது இதைத்தான். சர்வம் ப்ரம்மமயம்) , ஈஸ்வரா (கடவுள் என்று அறியும் நிலை, முத்தொழில்கள் ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் துவக்கமாகி செயல்படும் நிலை.மாயை தோன்றி ஆட்டுவிக்கும் நிலை. இதில் தான் காரண சரீரம் புலப்படுகிறது), ஹிரன்யகர்பா ( உலகம், பிரபஞ்சத்தையம், ஜீவனையும் பிணைக்கும் நிலை, எல்லா உயிரும் சேரும் நிலை, ஒன்றையொன்று இணைவது. இந்த நிலையில் தான் லிங்க சரீரம், சூக்ஷ்ம சரீரம் தெளிவாகிறது), கடைசியாக விராட் , இதை வைஸ்வாநரம் என்றும் சொல்வது. இதில் தான் நாம் காணும் அனைத்து உருவங்களும் ஜீவன் பெறுகின்ற நிலை. கண்ணால் பார்க்க முடிந்த நிலை. எல்லாமே பிரம்மத்தின் துக்கிணியூண்டு. ஸ்தூல சரீரம் இதில் தான் காணலாம். புருஷன் எனும் ஆத்மா ப்ரக்ரிதியோடு இணைந்தால் தான் உலகில் ஜீவன் தோன்றுகிறது.

*621*
दिव्यविग्रहा திவ்யவிக்ரஹா - 
அழகே உருவான திவ்ய ஸ்வரூபமாக கண் முன் தோன்றும் சௌந்தர்ய ராணி அம்பாள். சிலை உருவத்தில் உயிர் பெற்ற உயிரோவியமாக காண்பவள் அம்பாள் ஸ்ரீ லலிதை என்கிறது இந்த நாமம். நாம் செய்துகொள்கிற அழகு சிங்காரம் வேறு, தானாகவே இயற்கையில் நமது தவத்தின், தியானத்தின், பக்தியின், பயனாக உண்டாகிற உருவம் வேறு. அந்த அழகைத் தான் தெய்வீக அழகு என்கிறோம்.

சக்தி பீடம்: உஜ்ஜயினி மஹா காளி  --
உச்சினி மாகாளி என்பார்கள் கிராமங்களில். மத்திய பிரதேச உஜ்ஜயினி ராஜ்யத்தில் உள்ள அம்பாள் மஹா காளி . தேவிக்கு இங்கே ஹர சித்தி மாதா என்று பெயர். இந்த பெயர் சொல்லி கேட்டால் தான் வழி காட்டுவார்கள் இல்லையென்றால் வேறு எங்காவது ஒரு திசை காட்டி சுற்ற வைப்பார்கள். சிலர் பேந்த பேந்த ஏதோ அவர்களை தமிழில் திட்டியது மாதிரி விழிப்பார்கள். இது வேறு ஆந்திராவில் செகந்திராபாத் தில் உள்ள உஜ்ஜயினி மகாகாளி கோவில் வேறு. வேதாளம் கதையில் வரும் விக்ரமாதித்தன் வழிபட்டவள் இந்த உஜ்ஜயினி மஹா காளி. அவன் பதினோரு முறை தனது தலையை வெட்டி அவள் காலடியில் வைத்து அந்த பதினோரு முறையும் தலை திரும்ப ஒட்டிக்கொண்டது அவளால் தான். மேற்கொண்டு விவரத்தை வேதாளத்தை கேட்டு பெறவும். இங்கே அம்பாளுக்கு ரக்த தந்திகா, சாமுண்டா என்று கூட பெயர். அந்தகாசுரன் எனும் ராக்ஷஸன் உஜ்ஜயினியை ஆண்டு எல்லோரையும் வாட்டி வதைத்தான். அவன் பெற்ற விபரீத வரம் அவனுடம்பில் இருந்து ஒரு சொட்டு ரத்தம் கீழே விழுந்தால் அதிலிருந்து நூறு அந்தகாசுரர்கள் பிறப்பார்கள். என்ன அக்கிரமம்? விடுவாளா அம்பாள்? சிவனின் திரிசூலம் அவனை கொன்றது. சொட்டிய கொட்டிய ரத்தம் அனைத்தும் மஹா காளி உறிஞ்சிவிட்டாள் . தப்பித்தவறி தரையில் சொட்டிய ரத்தத்தில் இருந்து பிறந்த அந்தகாசுரர்களையும் விழுங்கி விட்டாள் . ஆலயத்தில் மகா லட்சுமிக்கும் சரஸ்வதிக்கும் இடையே மஹா காளி. அன்னபூர்ணாவாக. சிவப்பு குங்கும காப்பு. ஸ்ரீ சக்ர யந்திரம் இங்கே ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. சிவன் சதியின் உடலைச்சுமந்து கோபத்தோடு ருத்ர தாண்டவம் ஆடியபோது அவளது வலது கை முழங்கை முட்டி விழுந்த இடமாம் இந்த சக்தி பீடம்.

கைலாயத்தில் ஒரு முறை சண்டன் ப்ரசண்டன் என்ற ரெண்டு ராக்ஷஸர்கள் நுழைய முனைந்தபோது சிவன் சண்டி யை அனுப்பி அவர்களை அழிக்க அனுப்புகிறார். அவளும் அவர்களை முடிக்கிறாள். அதனால் அவளுக்கு ''ஹர சித்தி' என்ற பெயர் நிலைத்தது. மராட்டிய ராஜாக்கள் காலத்து கோவில். விளக்குகள் தூண்கள் எல்லாமே மராத்திய கலாச்சாரப்படி தான். அந்த தூண்களில் 726 விளக்குகள். அத்தனையும் நவராத்ரி சமயம் ஏற்றினால் எப்படி கோலாகலமாக இருக்கும் யோசியுங்கள். அங்கேயிருக்கும் பழங்கால கிணறு இதைச் சொல்கிறது. எவ்வளவோ வருஷம் இந்த விளக்குகளின் தீபத்தை பார்த்திருக்கிறதே. ஆலயத்திற்கு வெளியே பூமிக்கடியில் மாஹாமாயாதேவி ஆலயம். பாதாள குகை மாதிரி. ஒரு ஆள் பூசாரி மட்டும் நுழைந்து வெளியே வரமுடியும்.
இந்த உஜ்ஜயினி மஹாகாளியை ஆகாயவிமானத்தில் இந்தூர் வரை சென்று அங்கிருந்து அணுகலாம். ரயில் உஜ்ஜயினி நிலையத்தில் நிற்கிறது. பஸ்கள் ஓடுகிறது.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...