Monday, December 13, 2021

ARUPATHTHU MOOVAR SAMBANDHAR

 அறுபத்து மூவர் J K  SIVAN 


ஒரு குழந்தையின் அதிசயங்கள் 

அறுபத்து நாயன்மார்களில்  நான்கு சைவ சமய குரவர்களில் சிறிய குழந்தையாக  அறியப்படுபவர்  திரு ஞான சம்பந்தர்.  ஒரு சாதாரண  பிராமண குழந்தை பாலுக்கு அழும்போது  ககன மார்க்கத்தில் பறந்து சென்ற  பார்வதி தேவியே  அந்த குழந்தைக்கு ஞானப்பால் அளித்தது சீர்காழியில்.  இன்றும்  அந்த சட்டநாதர் சிவாலயத்தின்  குளக்கரையில்  பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த  இந்த சம்பவத்தை நினைவு கூருகிறோம். சில வருஷங்களுக்கு முன்பு கொரோனா வருகைக்கு முன்பே ஞான சம்பந்தர்   பார்வதி தேவி அளிக்க,  ஞானப்பால் பருகிய குளக்கரையை வணங்கி தரிசித்தேன். 
   
ஞான சம்பந்தர் குழந்தை ஞானியாகி  மூன்று வயதிலேயே ஞானப்பாடல்கள் இயற்றியவர். எத்தனையோ குழந்தை மேதாவிகள் பற்றி அறிகிறோம். ஆனால் சம்பந்தர் போல் அவர்கள் ஆக முடியாதே. பெயரே ஞான சம்பந்தன்.  1300- 1400  வருஷங்களுக்கு முன் அவர் எழுதிய தேவாரங்கள் இன்றும் கோடிக்கணக்கான பக்தர்கள் மகிழ்ந்து பாடுகிறார்களே.  எளிதான காரியமா இது? இதற்கு காரணம் அவரது பாடல்களின் வார்த்தைகள் மந்திர சக்தி வாய்ந்தவை.  விரும்பியதை அவருக்கே கூட தந்தது. சிறந்த நீதி நெறிகள் அவற்றால் பொதிந்துள்ளது.  எவ்வளவோ  சம்பந்தர் போன்றோர் நமக்கு வாரி வழங்கினாலும்  நாம் வழக்கம்போல் கோட்டை விட்டுவிட்டோம்.  கோட்டை விடுவதற்கே ஒரு சமுதாயம் இருந்தது,  இன்னும்  இருக்கிறது என்றால் அது நமது  ஹிந்து சனாதன தர்ம  கூட்டமே.  ஆனால்  அது அழியாது, ஆல்  போல் பெருகும். அது இறைவனருளே.

ஏதோ சுமார் 4000 பாடல்கள் தேவாரங்கள் நமக்கு கிடைத்ததே நமது மிகப்பெரிய  பாக்யம் என்று கருதுவோம்.  ஒரு சில முன்னோர்கள் ஸ்ரத்தையாக எதிர்காலத்தை மனதில் கொண்டு இதையாவது நமக்கு காப்பாற்றி கொடுத்ததற்கு அவர்களுக்கு சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

சம்பந்தர் வாழ்வில் நிறைய அதிசயங்கள் நடந்திருக்கிறது. தமிழகத்தில் அவர் தரிசிக்காத சிவன் கோவிலே இல்லை எனலாம்.  அவரது பாடல் ஒலித்த ஆலயங்கள் நிறைய உள்ளது.  அக்கால நிலை, சரித்திரம், மக்கள் வாழ்க்கை, ராஜாங்கம், நீதி,  நேர்மை  எல்லாம் அவற்றின் மூலம் அறியமுடிகிறது.
சேக்கிழார்,  இப்படிப்பட்ட ஞானிகளுடைய  வாழ்க்கை,  அவர்களால்  நிகழ்ந்த அதிசயங்கள், அவர்கள் பாடல்கள்  எல்லாவற்றையும்  முடிந்தவரை  அழகாக ஒரு ''பெரிய''  புராணமாக படைத்திருக்கிறார்.

பாண்டியன் நெடுமாறன் மதுரையை ஆண்டு கொண்டிருந்த போது  சமணமதத்தில் அவன்  பற்றுக் கொண்டிருந்தான்.  அவனை சமண  மதத்திலிருந்து விலக்கி  மீண்டும் சைவனாக்கிய பெருமை சம்பந்தருக்கு உண்டு.  சமணர்கள்  பொதுவாக  சாதுக்கள். அஹிம்ஸா  வாதிகள். தமிழ் பற்று அதிகம் கொண்டவர்கள்.  நாம் தான் நாலடியார் அடிக்கடி படிக்கிறோமே. ஆனால் நெடுமாறன் காலத்தில் இருந்த அவன்  அரசவை புலவர்கள் சமணர்கள் ஆக்ரோஷமாக இருந்தார்கள்.  அவர்களோடு வாதத்தில் ஈடுபட்ட சம்பந்தர் அவர்களை வென்றார்.  அதனால் தான் பாண்டியனும்   சைவனானான்.  சம்பந்தர் மதுரை வந்திருப்பதை அறிந்த சமணர்கள் அவர் தங்கியிருந்த மடத்திற்கு  தீ மூட்டினர்.  சைவ சமண விரோதம் தலை தூக்கியிருந்த காலம் அது.  இந்த தீ மூட்டிய விஷயம் எங்கும் பரவி விரோதம் வலுத்தது. சம்பந்தர் மதுரை  விஜயத்தால் அது ஒடுங்கியது.

திருவோத்தூர் என்கிற ஊரில் ஒரு அதிசயம். ஒரு சிவபக்தன் பனை மரங்கள் வளர்த்தான். அவற்றின் கனிகளை விற்று ஜீவனம். அதில் கிடைப்பதில் சிவன் கோவிலுக்கு பக்தர்களுக்கு கைங்கர்யம் பண்ணுபவன்.  மேற்கொண்டு  சேவை அதிகரிக்க எண்ணி, நிறைய பனை விதைத்தான். என்ன துரதிர்ஷ்டம்... அத்தனை பனை மரங்களும் ஆண் பனை. எப்படி காய்க்கும்?   அவன் தன் சிவத்தொண்டுக்கு  இப்படி ஒரு சோதனையா என்று அழுதான்.

''என்னய்யா, நீ சிவ பக்தனாயிற்றே. உன் கடவுள் உனக்கு உதவவில்லையா?'' என்று ஊரார் ஏளனம் வேறு செய்தார்கள்.
அந்த ஊருக்கு ஞான சம்பந்தர் வந்திருப்பதை அறிந்து அவரிடம் சென்று முறையிட்டு அழுதான். சம்பந்தர் நேராக  திருவோத்தூர் சிவன் கோவிலுக்கு சென்றார். பதிகம் பாடினார். அவனது குறையை நீக்க வேண்டினார்.  சிவன் சாதாரணமானவனா?  சம்பந்தர் பாடல்களை கேட்க அல்லவோ இந்த நாடகம் ஆடியவன்.  சம்பந்தரின் பதிகங்களில் மகிழ்ந்து 
''குரும்பை ஆண் பனை ஈனும் ''என அருளினார் சிவபெருமான்  என்கிறார் சேக்கிழார். 
சம்பந்தர் அந்த பக்தனோடு நடந்து பனைமரங்களைச்  சென்று பார்த்தபோது அவற்றில் பனம்பழங்கள் தொங்கின. அந்த சிவ பக்தன் சந்தோஷத்தை,   ஸாரி , என்னால் எழுத முடியவில்லை. எழுத தெரியவில்லை.  ''உபமன்யு பக்த விலாசம்'' என்ற  ஸம்ஸ்க்ரித ஸ்லோகத்தில்  இது குறிப்பிடப்படுவதை பழம்பெரும்  சரித்திர, புதை பொருள் ஆராய்ச்சி நிபுணர்,   டாக்டர்  R . நாகசாமி  எடுத்துக்காட்டி இருக்கிறார்:  ''Tala: pumamsa: sruthvai they bhavanthu paritha: palai'' .

அடுத்து திருக்கோயிலூர் சென்ற சம்பந்தர் தூரத்தில்  ஒரு   ஆலய கோபுரம் கண்ணில் பட்டவுடனேயே விழுந்து வணங்கினார்.  அருகில் இருந்தவர்களுக்கு ஆச்சர்யம்.

''என்ன இது. தெரிவது  சமணர் கோவில்  கோபுரம் , இந்த சிவபக்தர் விழுந்து வணங்குகிறாரே. ஒருவேளை அவருக்கு   இது சைவ கோயிலா வேறு ஏதாவதா என்று சரியாக தெரியாதோ?''

''சுவாமி  எதிரில் தெரிவது சமணர்களின் கோவில்.'' என்று அவருக்கு எடுத்துரைத்தார்கள்.  சம்பந்தர் காதில் வாங்கவில்லை. நேராக அந்த ஆலயத்திற்குள் நுழைந்தார்.  என்ன ஆச்சர்யம். கர்ப்ப கிரஹத்தில்  சிவன் காட்சி தந்தார்.  என்ன ஞான சக்தி? எப்படி காலம் காலமாக இருந்த சமண சிலை  திடீரென சிவலிங்கமாயிற்று.. இது உபமன்ய பக்த விலாசத்தில் வருகிறது.
திருஞான சம்பந்தர் நிகழ்த்திய  அதிசயங்கள் பற்றி எழுதப்போனால் அது ஒரு தலைகாணி புஸ்தமாகிவிட நிறைய  வாய்ப்பு உண்டு. இருந்தாலும் விடப்போவதில்லை. அதில்  சிலதையாவது அவ்வப்போது  அறிந்து கொள்வோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...