Saturday, December 25, 2021

PESUM DEIVAM

 பேசும்  தெய்வம் -  நங்கநல்லூர்  J K  SIVAN 


இன்று கிறிஸ்துமஸ்.   இது ஒரு விசேஷ  பதிவு.  தவறாமல் இதை படிக்க வேண்டுகிறேன்.

கொரோனா வந்த பிறகு எந்த பண்டிகையும் சோபிக்கவில்லை.  அதில்  இருந்த ஆர்வம்  ரெண்டு மூணு வருஷத்தில் அதிகமாகி குறைந்து போய்விட்டது.  இன்று கிறிஸ்துமஸ்.  இயேசு நாதர் பிறந்த நாள்.  எனக்கு  இன்னொரு  மற்றொரு நாள் என்று என் அறையிலேயே அமர்ந்திருந்தபோது   மஹா பெரியவா  கிறிஸ்துமஸ்  இயேசு நாதர் பற்றி சொன்னது நினைவுக்கு வந்தது.
. ''ஆஹா  இவரை பார்க்கும்போது நான் ஜீசஸ் கிறிஸ்துவை தான் பார்த்தேன்'. இந்தியா ஒன்றில் தான் இப்படிப்பட்ட  காருண்ய பரமாத்மாக்கள் தோன்றுவார்கள்''  என்றார் .,  

'' கிறிஸ்துவுக்கு பெயர்  ஜீஸஸ் க்ரைஸ்ட்’.   ஜெர்மானிக் , ட்யூடானிக்,  Teutonic    ஜெர்மன் பாஷையில். ஆங்கிலம்  டச்சு, ஸ்காண்டினேவியன் பாஷைகளிலும் அதே பெயர் தான்.  ஆரம்பத்தில்  ஹீப்ரு மொழியில் அவர் பெயர் தான் அப்படி பின்னால்  மாறி இருக்கிறது.  ஸம்ஸ்க்ருத ‘ச்ராவணீ’ தமிழ் ‘ஆவணி’யாக உருமாறின மாதிரி.  கிறிஸ்து  ஐரோப்பாவை சேர்ந்தவர் இல்லை.   நமது  ஆசியா கண்டத்துக்காரர்  தான்.  அவர் தாய் மொழி அர்மீனியன். ஹீப்ருக்களின் பாஷை.  அதில் அவர்  ஒரிஜினல் பெயர் ‘யீஷுவ  (Yeshua).   அது  ஐரோப்பிய பாஷைகளில் ‘ஜோஷுவா’,  ’ஜீஸஸ்’ என்று திரிந்து விட்டது. .

‘ய’கர வரிசை ‘ஜ’கர வரிசையாவது எல்லா இடத்திலேயும் உண்டு. வேதத்திலேயே மற்ற சாகைகளில் (கிளைப் பிரிவுகளில்) ‘ய’ என்று வருவது  சுக்லயஜுர் வேதத்தின் மாத்யந்தின சாகையில் ‘ஜ’  ஆகிவிடும். யமுனாவை ஜமுனா  என்பது போல். யந்த்ர மந்திர்   ஜந்தர்மந்தர்  ஆன மாதிரி.   தமிழிலே  ‘ஜ’வை ‘ய’ ஆக்குகிறோம்.  ஸமஸ்க்ரித  ‘யாமம்’ தமிழில்  ''ஜாமம்’ .  அது போல் தான் , ‘யீஷுவ’வின் ‘யீ’தான் ‘ஜீஸ’ஸில் ‘ஜீ’யாகியிருக்கிறது. அந்த ‘ஜீ’யை  மீண்டும் ‘ய’காரப்படுத்தி, வித்யாஸமாக, ‘யேசு’ என்கிறோம்.

ஆரம்பத்தில் இருந்த   ‘யீஷுஅ’ நம்முடைய ‘ஈச’ .   சிவ நாமா.எனலாமா?    சொல்லலாம்  ஆனால் யாராவது அபிப் ராய பேதமாகச் சொல்வார்கள் .  பேதம்  வேண்டாம். ‘ஜீஸஸ் க்ரைஸ்ட்’டில் ‘ஜீஸ’ஸை ‘ஈச’னாக  அபேதமாகவும்  சொல்லலாம். அபிப்ராயங்கள் வேறுபடும்.

‘க்ரைஸ்ட்’  ஐரோப்பிய பாஷை.  நாம் பட்டாபிஷேகம் என்று விசேஷ அபிஷேகம்,  மங்கள  ஸ்நானம் என்று தலைக்குத் தைலம் வைத்து பண்ணுகிறது போல  எல்லா தேசங்களிலும் மத சாஸ்த்ரபூர்வமாக  கொஞ்சம்  தைலம் தேய்ப் பதுண்டு. ஸ்நானம் இல்லாமல் வெறும் தைலம்  மட்டும். அது தான்  ‘அனாயிண்ட்’  செய்வது.. ஈச்வரனே அந்த மாதிரிச் சில பேரை லோகோத்தாரணம் பண்ணுவதற்காக ‘அனாயிண்ட்’ பண்ணி, அதாவது பட்டாபிஷேகம் பண்ணி, ‘மெஸையா’ (Messiah) என்று அனுப்புவதாகச் சொல்வார்கள். ஹீப்ரு ‘மேஷியா’ என்ற பெயர் இங்கிலீஷில் ‘மெஸையா’ ஆனது.  கிரீக்   (Greek)பாஷையில் இது ‘க்ரைஸ்டோஸ்’ . அதன் தொடர்ச்சியாக இங்கிலீஷில் ‘க்ரைஸ்ட்’ என்ற பெயர்வந்தது.

‘ஜீஸ’ஸுக்கு ‘ஈச’ ஸம்பந்தம் காட்டின மாதிரி இந்த ‘க்ரைஸ்டு’க்கு   கிருஷ்ண ஸம்பந்தம் காட்டினாலென்ன? என்று எனக்கு  தோன்றுகிறது.

கிருஷ்ணனை நாம் கிஷ்டன், கிட்டன், கிருட்டிணன்  என்கிறோம். அதுமாதிரி  ‘க்ரிஸ்டன்’ என்று சொன்னால் என்ன.  முடிவிலே சொல்லும் ‘அன்’ விகுதி தமிழில்தான் உண்டு. நாம் ‘ஈச்வரன்’ என்பது வடக்கத்திக்காரர்களுக்கு ‘ஈச்வர்’தான்; நம் சங்கரன், ராமன் எல்லாமே சங்கர், ராம் என்றிப்படித் தான்! வர வர இங்கேயும் அதுவே ஃபாஷனாகி வருகிறது… அது இருக்கட்டும்…. ‘அன்’ விகுதி போய்விட்டால் க்ரிஸ்டன் ஆன க்ருஷ்ணன் என்ன ஆவான்? ‘க்ரிஸ்ட்’ என்று தானே ஆவான்? ‘சிவ’ ஸம்பந்தமானது ‘சைவம்’, ‘விஷ்ணு’ ஸம்பந்தமானது ‘வைஷ்ணவம்’ என்று ஆரம்ப இகாரம் ஐகாரமாகிற மாதிரி ‘க்ரிஸ்ட்’ ஸம்பந்தமானது ‘க்ரைஸ்ட்’ என்றே ஆகும்! அப்படித்தானே?  ஆகக்கூடி, ‘ஜீஸஸ் க்ரைஸ்ட்’ = ‘ஈச க்ருஷ்ணன்’.

(இதை சொல்லிவிட்டு  பரமாச்சார்யர்  சிறிது நேரம் தாமும் சிரித்து உடனிருந்தோரையும் சிரிக்க வைத்து விட்டு தொடர்கிறார்: )

''சிவ-விஷ்ணு அபேதம் காட்டுகிற மாஸத்திலே  திருப்பாவை  திருவெம்பாவை  பாடும் இந்த  மார்கழியிலேயே மத்தியில்  வரும்  கிறிஸ்துமஸ் பண்டிகையின் காரண புருஷர் தம்முடைய பெயரிலேயே ஈச்வரன் என்று சொல்லப்படும் சிவன், விஷ்ணுவின் பூர்ணாவதாரமான க்ருஷ்ணன் ஆகிய இரண்டு பேரின் பேர்களையும் பேதம் பார்க்காமல் ஒன்று சேர்த்து வைத்துக் கொண்ட மாதிரிக் காட்டுகிறார் என்று ஸமய ஸமரஸத்தை மேலும் கொஞ்சம் நீட்டிப் பார்க்கலாமோ என்று தோன்றிற்று. தோன்றினதைச் சொன்னேன்''.

இது இருக்கட்டும் ;  DR ஆல்பர்ட் பிராங்க்ளின் ,US  கான்சல் ஜெனெரல்,
 US Consul General in Madras,  சொன்னது இது:
 1963ல்  மஹா பெரியவாளை  மதுரை மீனாக்ஷி  ஆலய  பீடாதி கும்பாபிஷேக வைபவத்தில்  தரிசித்தார்.  மறுபடியும்  28.2.1967 அன்று  சென்னையில்  மஹா பெரியவா காமகோடி பீடாதிபதியாகி  50 வருஷ   டைமண்ட் ஜூப்ளி விழாவுக்கு தலைமை வகித்து பேசினார் . (Dr. Albert Franklin, former US Consul General in Madras decades ago said, after personally meeting Jagadguru Sri Sankaracharya Swami of Kanchi Kamakoti Peetham, His Holiness Sri Chandrasekharendra Saraswati, that,“He saw Lord Christ in the Swami”.  

''நான்  மத்திய அமெரிக்காவில்    இயேசு கிருஷ்ணு மேல் பக்தியும்  நம்பிக்கையும்  கொண்ட   புதிய இங்கிலாந்து எனும் பகுதியிலிருந்து  வருபவன். அங்கிருந்து பல  வேதாந்திகள், தத்துவ மேதைகள்   எமர்சன், தோரு,   போன்றவர்கள்  இந்தியாவின் வேதாந்தங்களை அறிந்து  அதை அறிவது ஒரு அற்புத  இனிய  புது அனுபவம் என்று கூறியுள்ளார்கள்.   அவர்களின் ஆன்மாக்கள்  இந்த மாலையில் இங்குள்ளதை என்னால் உணரமுடிகிறது. நான்  ஒரு  ஆசிரியன். போதகன். 17ம் நூற்றாண்டில்  வாழ்ந்த   போதகர்கள் ஆசிரியர்கள்எல்லோரும்  இத்தகைய மனிதர்களே  இருந்தார்கள். இந்த முன்னோர்களிடையே சில கருத்து வேற்றுமைகள் இருக்கத்தான் செய்தன. எமர்சன் இந்த மாலை இங்கிருந்தாலும்  என்னைப்போல் நான் இந்த  மாலையின் அற்புத அனுபவத்தை ரசித்திருப்பார்.  ஏகோபித்து எல்லோரும் என்ன சொல்வார்கள் தெரியுமா?  ஆஹா  இந்த  விழாவின் நாயகன் போன்ற ஒரு புண்யாத்மாவை, மனித குலத்தின்  உன்னத  லக்ஷிய  புருஷனை காணமுடியாது என்று தான் என்னோடு சேர்ந்து சொல்வார்கள்.

''நான்  இந்த  மஹா புருஷரை பார்க்கும்போது என் கண்ணுக்கு  காஞ்சி மஹா சுவாமி  என் தெய்வம்  ஜீசஸ் கிறிஸ்துவாக தான்  எனக்கு தரிசனம் அளித்தார்.''



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...