Thursday, December 9, 2021

thirumoolar


 #திருமூலர்திருமந்திரம்_ நங்கநல்லூர் J K SIVAN

2. இது தான் வாழ்க்கை. திருமூலர் எழுதிய மூவாயிரத்தையும் நான் விளக்கப் போவதில்லை. நேரமும் இல்லை. முடிந்த வரை சில அற்புதமான பாடல்களை எளிதில் புரியக்கூடிய விஷயங்களை மட்டும் தொடுகிறேன். சில சமயம் எனக்கு திருமூலரின் எழுத்தும் அதன் பலமும் சிவவாக்கியரை நினைவு படுத்தும். ஒன்றை ஒன்று மிஞ்சுவது போல் இருக்கும். திருமூலர் பாடல்களில் உபமானம் உபமேயம் அசாத்தியமாக ஆழ்கடலில் மிதக்கும் கப்பலாக பயணம் செய்ய வைக்கும். சிவவாக்கியர் தமிழ் வேகமாக ஓடும் ரயில் வண்டி. இன்றும் திருமூலரை தொடர்வோம்.
''பெண் அல்ல ஆண் அல்ல பேடு அல்ல மூடத்துள் உள் நின்ற சோதி ஒருவர்க்கு அறி ஓணாக் கண் இன்றி காணும் செவி இன்றி கேட்டிடும் அண்ணல் பெருமையை ஆய்ந்து மூப்பே '' இந்த பாடலின் கருத்து நம்மாழ்வாரை நினைவு படுத்து கிறதா? அப்படியென்றால் நாம் இருவரும் ஒரே படகில் பயணிக்கிறோம்.
நம்மாழ்வாரை விட முந்திய காலத்தவர் திருமூலர். ஆகவே ஆழ்வார் முதலில் எழுதினாரா திருமூலரா என்றால் நிச்சயம் திருமூலர் தான். சந்தேகத்துக்கு இடமில்லை .திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தவர் எத்தனையோ நூற்றாண்டுகள் முன் மறைந்தவர் எனும்போது பழமை இங்கே தான் ஜொலிக்கிறது. கடவுள் என்பவன் ஒரு ஆண் உருவம் கொண்டவனோ, பெண் உருவம் கொண்டவளோ அல்ல . இரண்டும் கெட்டானும் இல்லை. எந்த வித்தியாசமும் அற்றவன். நமக்கு உள்ளே நிறைந்து நின்று ஒளி வீசும் அவனை நமது மனதில் பஞ்ச கோஸங்கள் எனும் திரைகள் மறைத்து விடுவதால் உள்ளிருந்து வீசும் ஒளி நமக்கு வெளியே புலப்படுவதில்லை. உள் நின்று ஒளிரும் அவனை உணர்ந்து விட்டால் மனிதனின் தேகத்திலும் முகத்திலும் ஒரு தனி ஒளி வீசும். அவனை உணர, அனுபவிக்க, சாதாரண வஸ்துக்களை காட்டும் கண் வேண்டாம். அகக்கண் மூலம் ஆனந்தமாக காணலாம். உலக சமாச்சாரங்களைக் கேட்டு மகிழும் செவிகள் இல்லாமலேயே அவன் நர்த்தனம், தாண்டவம் காதில் ஒலிக்கும். ரிஷிகளும் யோகிகளும் ஞானிகளும் அப்படி ஆனந்தமாக அனுபவித்தவர்கள். ஆஹா அந்த பரமேஸ்வரன் புகழை எவன் நன்றாக உணர்ந்து அனுபவிக்கிறானோ அவனே முதிர்ந்த ப்ரம்ம ஞானி. 'ஹர ஹர மகாதேவ் '' என்ற சத்தம் கேட்டால் ஒரு காலத்தில் கூட்டமாக குதிரை வீரர்கள் இதை உச்சரித்துக் கொண்டு வாளை உருவி கையில் ஏந்திக்கொண்டு சிவாஜி மகாராஜா வின் பின்னால் குதிரைப் படையாக சென்று கொண்டிருக்கிறார்கள் என்று தெரியும். முகலாய சாம்ராஜ்யமே கதி கலங்கியது. இந்த உச்சரிப்போடு தான் சிவாஜியின் மராத்திய வீரர்கள் எதிரியின் மீது தாக்குதல் செய்வார்கள். உயிரைத் திரணமாக மதித்து போரிடுவர். எனவே வெற்றி நிச்சயமாக பெற்றனர். சிவாலயங்களில் கோவிலுக்குள் சென்று சிவன் சந்நிதியில் 'ஓம் நமச்சிவாய'' , ''நம பார்வதி பதயே'', என்று அடிவயிற்றிலிருந்து எழும் சப்தம் கேட்கும் போதும், என்றும் ''ஹர ஹர மகாதேவா என்று உணர்ச்சிபூர்வமாக சொல்லும் போதும் கிடைக்கும் ஆனந்தம் எழுத முடியாது. அந்த அனுபவம் அலாதியானது.
திருவையாற்றில் ஒரு பிரஹார சுவற்றில் ஒரு துளையில் ''ஐயாறப்பா'' என்று குரல் கொடுத்தால் மூன்று முறைக்கு மேல் எங்கெல்லாமோ எதிரொ லிக்கும். ''ஹர ஹர'' என்றால் கிடைக்காதது ஏதாவதுஉண்டா? ஏன் இது தெரியவில்லை பலருக்கு? ஹர ஹர என்று சொல்பவன் உண்மையிலேயே உணர்ந்து போற்றி வணங்கி சொல்வானேயானால் அவன் மனிதனல்ல, தேவன். இன்னொரு அருமையான ரகசியம். ஹர ஹர என்று மனமும் நாவும் உவந்து சொல்வார்க்கு பிறப்பே இனி கிடையாது. இந்த ரகசியம் நான் சொல்ல வில்லை. திருமூலர் தனது திருமந்திரத்தில் சொல்லியிருப்பதைப் பாருங்கள்: ''அரகர என்ன அரியதொன்று இல்லை அரகர என்ன அறிகிலர் மாந்தர் அரகர என்ன அமரரும் ஆவர் அரகர என்ன அறும்பிறப்பு அன்றே'' மகா பெரியவர் போல் ஒரு நடமாடும், பேசும் தெய்வத் தின் தரிசனம் காண்பதே ஒருவனுக்கு பாட்டரி ரீ சார்ஜ் செய்ததுபோல் ஆகிவிடும். முற்றிலும் அவனை மாற்றி விடும் அந்த ஒரு தரிசனம். இன்னும் கொஞ்சம் அவனை உயர்த்திக்கொள்ள அவன் செய்யவேண்டுவது வேறொன்றும் இல்லை. அந்த குருவின் பெயரைச்சொல்லி வணங்குவது. அதற்கும் மேலே ஸ்ரேஷ்டமானது அந்த மகா பெரியவரின் வார்த்தைகளை தெய்வத்தின் குரல் போன்ற புத்தகங்களிலும், இப்போது தான் அடிக்கடி வருகிறதே வாட்ஸாப்பில், யூ ட்யூபில், அதுமாதிரி அவர் ஒரு காலத்தில் பேசிய வார்த்தைகளை காதாரக் கேட்பது. கடைசியில் அவன் முற்றிலும் முதிர்ச்சி பெற அவன் அவர் பற்றிய நினைவுகளில் வாழ்வது. அவர் பேசியதின் எழுத்து வடிவங்களை அனுபவிப்பது. எவ்வளவு அழகாக படிப் படியாக சொல்லியிருக்கிறார் பாருங்கள் திருமூலர். இத்தகைய பாடல்களுக்கு, தப்பு தப்பு, மந்திரங்களுக்கு அர்த்தமே தேவையில்லை. அதுமாதிரியான எளிய அர்த்தம் நிறைந்த அமுதங்க ளைத் தான் எனக்கு பிடித்து பிரயாசைப்பட்டு தேடி அதை உங்களுக்கும் அளிக்கிறேன். இது ஒன்றே என்னால் முடிந்தது. தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே நமது வாழ்க்கை செடியின் பச்சை இலையின் மேல் வாழும் பனித்துளி போன்றது. இரவு ஜனித்தது. விடியலில் சூரியன் ஒளியில் மறைந்தது. இவ்வளவு நிச்சயமில்லாத சுருக்கமான வாழ்க்கையில் எத்தனை திட்டங்கள், நம்பிக்கைகள், கோபம், தாபம், எரிச்சல், பொறாமை, சுயநலம்.விரோதம். இதெல்லாம் விட்டொழிக்க வேண்டியவை. நிரந்தரம் இல்லாததை விட்டு நித்யமானதைத் தேடவேண்டும். நமது வாழ்க்கை எப்படியாம் தெரியுமா? நேற்று பார்த்தேனே, நன்றாக பேசினானே, அடுத்தவாரம் வீடு வாங்குவதாக சொன்னானே. தண்டு, அதற்குள் இப்படி பொசுக்கென்று போய் விட்டானா? ''---- என்று சொல்லும் நிலையற்ற வாழ்க்கை. இறந்து போனவனைச் சுற்றி ஏகக் கூட்டம். ஊரே திரண்டு விட்டது. 'ஓ' வென்று பேரிரைச்சல். அழுகை, எவ்வளவுநேரம். ஒரு நாள் கூட தாங்காது. அவன் பெற்ற பெயர், பட்டம், எல்லாம் அவன் மரணத் தோடு மறைந்து விட்டதே. அவன் அடைந்த பெயர் இப்போது பிணம். இந்த பெயர் கூட அவனை இடு காட்டிற்குத் தூக்கிச் செல்லும் வரை தான். தண்டு
இப்போது இல்லை. அவனைத் தீக்கிரையாக்கியாச்சு. வேலை முடிந்தது. எல்லோரும் திரும்பிவிட்டார்கள். வீடு திரும்பினார்கள். குளித்தார்கள், ரசம் சாதம் பருப்பு துவையலை தொட்டுக்கொண்டு இன்னும் கொஞ்சம் என்று கேட்டு வாங்கி வயிறார சூடாக சாப்பிட்டார்கள். உப்பு கொஞ்சம் கூட என்றும் சொன்னார்கள். மேற் கொண்டு தங்கள் வழக்கமான வேலையைத் தொடர் ந்தார்கள். இருந்தவன் இறந்த பின் நினைவானான். நினைவும் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கியது. அவனும் அவன் நினைவும் கூட இப்போது இல்லை. தண்டுவா? எந்த தண்டு? யார்?? இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமூலர் கவனித்து எழுதியிருக்கிறார்.
''ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கிப் பிணமென்று போட்டுச் சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே. இறைவனுக்கு வேண்டியது என்ன? ஒரே ஒரு பச்சி லையே போதும். ஒரு துளி நீர் போதும்.இது கஷ்டமில்லையே? எல்லோராலும் செய்ய முடிந்தது பசுவுக்கு ஒரு வாய் கீரைக்கட்டு .பசும் புல் கட்டு. அன்றாடம் செய்யக்கூடிய ஒரு சிறந்த தர்மம் சாப்பிடும் முன் ஒரு பிடி சாதம் காக்கைக்கு. அசோக் நகரில் என் பெண் வீட்டில் ஒரு காகம் வெகு காலமாக தினமும் சமையல் அறை ஜன்னலில் வந்து அமர்ந்து ஆகாரம் சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்துவிட்டு செல்கிறது. அதை அருகில் சென்று போட்டோ எடுத் தேன். என் நங்கநல்லூர் வீட்டு மொட்டை மாடியில் ஒரு சில காகங்கள் நான் அருகிலே சென்று நின்று அரை அடி தூரத்தில் அதற்கு மூக்குக்கு அருகில் காராபூந்தி தூவியதை ரசித்து சாப்பிடும். இதற்கு மேலும் சிறந்தது மற்றவர்க்கு ஒரு நல்ல இனிய வார்த்தை. திருமூலர் தனக்கே உரிய வழியில் அழகாக எளிமையாக இதை நான்கு அடியில் விளக்குகிறார். ''யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்கு மாம் பிறர்க்கு இன்னுரை தானே.'' தொடரும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...