Thursday, February 21, 2019

KRISHNA THE BUTTER THIEF


கள்வன் பிடிபட்டான் J K SIVAN
வெல்லம் இனிப்பு இவை இருப்பது, எறும்புக்கு எப்படி தெரிகிறது. பேப்பரில் படித்தோ, டிவி யில் பார்த்தோ, வாட்சப்பில் படித்தோ வா அறிகிறது. அதுபோல் தான் கிருஷ்ணன் வெளியே வந்திருக்கிறான் என்று ஒரு நண்பனுடன் அவன் பேசிக்கொண்டிருந்ததை மற்றவர்களும் அறிந்து கொண்டு விட்டார்கள். எல்லோரும் யமுனை நதிக்கரைக்கு ஓடினார்கள். அங்கே வழக்கமாக ஒரு பெரிய மகிழ மரத்தடியில் தான் சந்திப்பது வழக்கம். யார் யார் என்னென்ன தின்பண்டங்களை கொண்டுவந்தாலும் அங்கு தான் பங்கு போட்டுக் கொள்வது. அடுத்த கட்ட நிகழ்வு
களை திட்டம் போட்டு நிறைவேற்றுவது.

கிருஷ்ணா எனக்கு பயமாக போய்விட்டதடா?'' என்றான் ஒருவன்.
எதற்கு ?''
உன் வீட்டில் எல்லோர் அம்மாக்களும் சேர்ந்து வந்து ஏதோ சொல்லிவிட்டார்களாமே. நம்மைப் பற்றியா?
இல்லையே. உங்களைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. என்னைப் பற்றி தான் முறையிட்டார்கள்.
நான் அதை பொய் என்று சொல்லிவிட்டேன்.
நாம் இனிமேல் எந்த வீட்டுக்கும் போய் வெண்ணெய் தேட திருட வேண்டாம் கிருஷ்ணா.
சரி நான் இனிமேல் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.''
''ஐயோ கிருஷ்ணா உன்னோடு விளையா
டாமல் இருக்க முடியாது கிருஷ்ணா. கட்டாயம் நீ எங்களோடு சேர்ந்து தினமும் ஏதாவது சொல்லி நாம் அதை செய்ய வேண்டும். அதில் இருக்கும் சுகமே தனி'' என்றான் ஒரு பையன்.

''சரி எல்லோரும் யமுனையில் குதியுங்கள் நீரில் சற்று விளையாடுவோம்.''
தொப் தொப் என்று அந்த சிறுவர்கள் நீரில் குதித்தார்கள். மூழ்கி தண்ணீரின் அடியில் ஒருவரை ஒருவர் பிடித்து விளையாடினார்கள். நீச்சல் போட்டி வைத்து அடுத்த கரை வரை நீந்தினார்கள். மரங்கள் மீது ஏறி அங்கிருந்து குட்டிக்கரணம் போட்டு நீரில் குதித்தார்கள். பொழுது போயிற்று.

கண்ணன் கரை ஏறினான். அவர்களும் பின் தொடர்ந்தார்கள்.

இத்தனை நேரம் கண்ணன் கவனித்துக் கொண்டிருந்த அந்த தனி வீட்டில் இருந்து ஒரு கோபி வெளியே வந்தாள் . தனது குடிசையின் வாசலை மறைத்துக் கொண்டிருந்த தட்டிக் கதவை சாற்றினாள் . இடுப்பில் குடத்துடன் யமுனை நோக்கி நடந்தாள் . சூரியன் மேலே நடு வானம் வந்துவிட்டான். சுள்ளென்று உஷ்ண காற்று வீசியது. கிருஷ்ணனும் மற்ற நண்பர்களும் மெதுவாக மரங்களின் பின் நகர்ந்து அந்த குடிசையை அடைந்தார்கள்.
ஏற்கனவே போட்டிருந்த திட்டம் தான்.

வெகுநேரம் நீரில் ஆடிய பையன்களுக்கு கபகப என்று பசித்தது. எப்போதுமே குளித்தவுடன் பசி தெரியும். கண் வயிறு இரண்டுமே ஆகாரம் தேடும்.

கண்ணன் தன்னையும் சேர்த்து தலை எண்ணி
னான். ஏழு பையன்கள் . ரெண்டு பேர் அந்த குடிசையின் வாசலில் இருந்த மரத்தின் மேல் ஏறி அங்கிருந்து ஆற்றை கண்காணித்தார்கள்.
ஒருவன் வாசலில் தட்டி கதவை திறந்து மற்றவர்களை உள்ளே அனுப்பி கதவை முக்கால் வாசி மீண்டும் மூடி அதன் வழியாக மரத்தில் இருப்பவர்கள் சைகைக்கு காத்திருந்தான். நாலு பேர் கிருஷ்ணன் உட்பட உள்ளே நுழைந்தார்கள். அந்த பெரிய குடிசை வீட்டில் வாசலை அடுத்து ஒரு பெரிய அறை . அதை அடுத்து ஒரு சிறு அறை . அதை ஒட்டி எதிர்புறம் இன்னொரு சிறு இருட்டு அறை அதன் கூரையில் ஒரு மாமர உத்தரம் குறுக்கே ஒரு சுவரில் இருந்து இன்னொரு சுவரின் மேல் படிந்து இருந்தது. பத்தடி உயரம். அதில் நான்கு உறி கள் தொங்கின. ஒன்றின் மேல் ஒன்றாக மூன்று சட்டிகள் ஒவ்வொரு உறியிலும். இந்த விஷயம் நேற்றே தெரிந்து விட்டது. இன்று அதை கொள்ளை அடிப்பது தான் திட்டம்.

கிருஷ்ணன் கண்கள் துழாவின. எப்படி அந்த உயரத்தை அடைவது. எங்கும் ஏணியோ பலகையோ எதுவும் காணப்படவில்லை. படு பாதகி கோபி. எப்படி உயரத்தில் நமக்கு தேவையான வஸ்துவை கைக்கெட்டாமல் வைத்திருக்கிறாளே . ஒருகணம் யோசித்தான். நேரம் நழுவிக்கொண்டிருக்கிறதே.

''கிருஷ்ணா,,,நம்மை என்ன வென்று நினைத்துக்கொண்டிருக்கிறாள் அவள் . நம்மால் முடியாதது என்ன '' என்றான் ஒருவன்.

சரி இப்படி செய்வோம். இருப்பவர்களில் பெரிய பையனை குனிந்து நிற்க செய்தான். முதல் அறையில் ஒரு சுவர் மீது நீளமான ஒரு கொம்பு சாற்றி வைத்திருந்ததை கண்டுவிட்டான் . அதை பிடித்துக்கொண்டு முதல் பையன் குனிந்தான்.அந்த பையன் மேல் இன்னொருவன் ஏறி அவனும் கொம்பை பிடித்துக்கொண்டு முதலில் குனிந்து நினறவன் மேல் ஏறி குனிந்து கொண்டான். மூன்றாமவன் சற்று சிறியவன் அவன் குதிரைமேல் ஏறுவது போல் தாவி கீழே இருந்த இருவரின் முதுகிலும் ஆடாமல் ஆசையால் ஸ்திரமாக குனிந்து கொண்டான். இரு கைகளாலும் கொம்பை கெட்டியாக பிடித்துக் கொண்டான். அடுத்தது கிருஷ்ணன். அவன் ஆதாரமான கொம்பை பிடித்துக்கொண்டு மூன்று பேரின் மேலும் மெதுவாக ஏறி அந்த உயர கொம்பை இடது கையால் பிடித்துக்கொண்டு வலது கையை உயர்த்தினான். சட்டிகளை தொட முடிந்தது. சற்று எம்பி அந்த உறியில் இருந்த சட்டிகளை எடுத்து கீழே அனுப்பினான். அவை தரையில் இறங்கின. மெதுவாக நகர்ந்த அந்த சிறுவர்கள் அடுத்து இரண்டு உறிகளையும் அணுகி சட்டிகளை தரை இறக்கினர். நான்காவது உறியை நெருங்கும் சமயம் மரத்தில் இருந்த இருவர் சைகை கொடுத்து விட்டனர். வாசலில் காவல் காத்துக்கொண்டிருந்தவன் ''டேய் கிருஷ்ணா அந்த கோபி வீடு நோக்கி வந்து கொண்டிருக்கிறாள்.'' என்று எச்சரித்தான். கண்ணன் மேலே இருந்து குதித்தான். மற்ற மூவரும் எழு ந்தார்கள். ஒன்பது சட்டியிலும் பால், தயிர், வெண்ணெய் இருந்தது. பாலை எல்லாம் மடக் மடக்கென்று கண் இமைக்கும் நேரத்தில் குடித்து விட்டு சட்டிகளை தரையில் வீசினார்கள். தயிரையும் வெண்ணையும் பெரிதாக இருந்த நான்கு சட்டிகளில் நிரப்பிக்கொண்டு ஆளுக்கு ஒன்றை தூக்கிக்கொண்டு சிட்டாக ஓடினார்கள். வீட்டை திறந்து போட்டு விட்டு கொம்பை ஒரு அறையில் வீசி விட்டு அவர்கள் யமுனைக் கரையில் வழக்கமான மரத்தடியில் சந்தித்தார்கள்.
கண்ணனின் மயில் இறகு அவன் கீழே குதித்தபோது தலையிலிருந்து விழுந்ததை அவன் கவனிக்க வில்லை.
யமுனை நதியிலிருந்து அந்த கோபி நீர்க்குடத்தோடு வீடு திரும்பியவள் ''ஏன் கதவை நான் சரியாக மூட வில்லையோ? கவனக்குறைவு ரொம்ப இருக்கிறது எனக்கு '' என்று தன்னைத் தானே சாடிக்கொண்டு உள்ளே சென்றவள் கண்ணில் உடைந்த சில சட்டிகள் தென்பட்டன. எப்படி இந்த சட்டிகள் உடைந்தன. உறி அறுந்து விட்டதோ என்று பார்த்தாள். உறி தொங்கிக்கொண்டிருந்ததே. ஏன் சட்டிகளில் இருந்த பால் தயிர் வெண்ணெய் கீழே சிதறாமல்,கொட்டாமல் சட்டிகள் மட்டும் உடைந்திருக்கிறது. அதில் இருந்ததெல்லாம் என்ன ஆயிற்று.. ஒரு உறியில் மூன்று சட்டிகள் அப்படியே வைத்தபடியே இருக்கிறதே.

என்ன அதிசயம் இங்கே நடந்தது. அவள் கண்கள் துழாவும் காற்றில் மயில் இறகு அசைந்தது. மயில் இறகு இங்கே எப்படி வந்தது? ஒரு கணம் யோசித்தவளுக்கு கிருஷ்ணன் வீட்டிற்கு சென்று யசோதையிடம் முறையிட்டது கவனத்துக்கு வந்தது. அந்த கிருஷ்ணன் பயல் அல்லவோ இது போன்ற பெரிய மயில் இறகை தலையில் செருகிக் கொண்டு காட்சி அளிப்பவன். அவன் தான் வந்திருக்கிறான். உடனே சென்று யசோதையை அழைத்து வந்து இங்கு நடந்ததை காட்டவேண்டும்..... என்று யசோதை வீட்டை நோக்கி வேகமாக நடந்தாள். கையில் மயில் இறகை மறக்காமல் கொண்டு சென்றாள் .
எல்லோரும் வெற்றியைக் கொண்டாடினார்கள். கூத்தாடினார்கள். கை நிறைய, வாய் நிறைய தயிர், வெண்ணெய் . ஏழு ஆயர்பாடி சிறுவர்களுக்கும் விருந்து....



கண்ணன் மெதுவாக வீடு திரும்பினான். ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது.....

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...