சாட்சியம் கலைந்தது - J K SIVAN
வெளியே ஒளிந்துகொண்டு அந்த கோபி வீட்டில் நுழைந்து என்ன செயகிறாள் என்று ஒரு சில பையன்கள் நோட்டம் விட்டனர்.
அவள் கோபமாக தனக்குத்தானே பேசிக்கொண்டாள். கிருஷ்ணன் கிருஷ்ணன் என்ற பெயர் அவள் கோபமாக பேசும்போது வெளிப்பட்டது. சற்று நேரத்தில் வெளியே வந்தாள் . அவள் கையில் ஒரு மயிலிறகு.
ஒருவன் ஓடிப்போய் கிருஷ்ணனிடம் சொல்லிவிட்டான்.
''கிருஷ்ணா, நீ வகையாக மாட்டிக்கொண்டாய். அந்த கோபி கோபமாக வெளியே எங்கோ போகிறாள். அவள் கையில் ஒரு மயிலிறகு ஏன் வைத்திருக்கிறாள் என்று புரியவில்லை'' என்றவன்.... ''அடேடே கிருஷ்ணா உன் தலையில் நீ செருகி வைத்திருப்பாயே அந்த மயிலிறகு எங்கே காணோம் ?'' என்று கேட்டான். கிருஷ்ணன் தனது தலையை தொட்டுப் பார்த்துக்கொண்டவன் சிரித்தான்.
''ஓஹோ என் தலையிலிருந்து தான் நான் உறியை காலிபண்ணிவிட்டு கீழே குதிக்கும்போது அங்கே விழுந்திருக்கிறது. நான் வந்திருந்தேன் என்பதற்கு சாக்ஷி என்று சொல்ல என்வீட்டுக்கு தான் போகிறாள் போல் இருக்கிறது ''என்றான் கிருஷ்ணன்.
கிருஷ்ணா உன்னை எப்படி காப்பாற்றுவது. உன் மூலம் நாம் எல்லோரும் அங்கே சென்று வெண்ணெய் சட்டியை உடைத்தது. வெண்ணெய் எடுத்து தின்றது எல்லாம் வெளியே வரப்போகிறது. இப்போது என்ன செய்வது'' என்று கவலைப்பட்டான் கிருஷ்ணனின் பால்யநண்பனான விஜயாக்ஷன்.
ஒரு கணம் யோசித்த கிருஷ்ணன் சுற்று முற்றும் பார்த்தான் . வசந்தகாலத்தின் எழிலில் மரங்களும் கொடிகளும் செடிகளும் பூத்து குலுங்குகின்றன. யமுனையில் கரை புரண்டு குளுமையான நீர் ஓடுகிறது.. . கிருஷ்ணன்இடுப்பில் செருகி இருந்த புல்லாங் குழலை எடுத்து இதழ் ஓரம் கொண்டு போனான். கண நேரத்தில் இன்னிசை வெள்ளம் பெருகியது. மழை வரலாம் என்று அறிவிக்க கார்முகில் கூட்டம் மெல்ல மெல்ல கவிந்து வர அந்த பிரதேசத்தில் உள்ள மயில்களுக்கு கொண்டாட்டம். இந்த சூழ்நிலையில் தானாகவே தோகை விரித்தாடும் அவற்றுக்கு கண்ணனின் குழலோசையின் பதங்கள் சற்று அதிக சந்தோஷத்துடனேயே ஆட வைத்தது.
"என்னமாக வாசிக்கிறான் இந்த கிருஷ்ணன் பார்த்தாயா?" என்றது மயில் கூட்டத்தின் தலைவன் மயில் ராஜா தன் ராணியிடம்.
"நீ எப்போதும் தப்பாகவே தான் எதையும் செய்வாய், சொல்வாய்" என்றது மயில் ராணி.
" நான் என்ன தப்பாக சொல்லி விட்டேன்" என்று ஆட்டத்தை நிறுத்தி கேட்டது ராஜா மயில்
" பின்னே என்ன, கிருஷ்ணன் குழல் ஓசையை பார்த்தாயா, என்கிறாயே. கேட்டாயா என்று தானே சொல்லணும்.
''ஓ, நீ அப்படி சொல்கிறாயா?? என்ன செய்வது சொல்; கிருஷ்ணனைப் பார்த்தால் எல்லாம் மறந்து விடுகிறதே. அப்பறம் எப்படி கேட்பது?"
உனக்கு எப்போதும் எங்கோ எதிலோ யார் மேலோ தான் ஞாபகம் என்று என்று ராணி மயில் வழக்கம் போல் சொல்லவே "ஆமாம் நீ எப்பவும் எதிலும் சரியே" என்று பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தது ஆண் மயில்.
"இவ்வளவு அழகாக இன்னிசை பொழிந்த கண்ணனுக்கு நாம் என்ன பரிசு கொடுப்பது?" என்று கேட்டது தலைவன். எதாவது தப்பாக சொல்லி மாட்டிக் கொள்வதை விட ராணியையே யோசிக்க வைக்கலாமே என்று சாமர்த்தியமாக கேட்டது.
"நீ தான் நம் கூட்டத்திலேயே அழகன், உன்னிடம் என்ன அழகான பொருளோ அதையே அவனுக்கு கொடேன்" என்றது ராணி மயில்.
யோசித்து பார்த்த ராஜா மயில் நடமாடிக்கொண்டே கிருஷ்ணனை அணுகியது. அவன் மடியில் தன் தலையை வைத்து கொண்டது. குழலை வாயிலிருந்து எடுத்து விட்டு கிருஷ்ணன் கேட்டான்.
"அழகிய மயிலே எதற்கு என்னிடம் வந்தாய்.சொல்."
"கிருஷ்ணா, எங்களை உன் கீதத்தால் பரவசப்படுத்திய, ஆடவைத்த நீ எல்லோரையும் பரவசப் படுத்தவேண்டும் என்பதற்காக உனக்கு நாங்கள் மயில்கள் எல்லாரும் சேர்ந்து எங்களால் இயன்ற ஒரு பரிசு தருகிறோம் ஏற்றுக் கொள்வாயா சொல் ?"
"மிக சந்தோஷமாக பெற்றுகொள்கிறேன் மயில் ராஜா "
" இந்தா" என்று அந்த அழகு ஆண் மயில் தன்னிடத்தில் இருந்த ஒரு அழகிய இறகை கண்ணனுக்கு பரிசாக கொடுத்து " என்னிடம் பெருமைப்பட இருப்பது இது ஒன்றுதான்; இதை எப்போதும் உன்னிடம் வைத்துக் கொள்வாயா?" என்றது
" அப்படியே அழகு மயிலே, இந்த உன் அழகிய மயில் இறகு இந்த கணம் முதல் என்றும் என் தலையில் செருகப்பட்டு இருக்கும் திருப்தியா" என்றான் கிருஷ்ணன்.
எல்லோரும் வீடு திரும்பினார்கள்.
அம்மா என்று தேனொழுக குரல் கொடுத்தான் கிருஷ்ணன். யசோதை வெளியே வந்தாள் . அவளோடு வெண்ணெய் பறிகொடுத்த கோபியும் இருந்தாள் .
இருவர் கண்களும் கண்ணனின் முகத்தை பார்க்கவில்லை. அவன் தலையில் செருகி இருந்த மயிலிறகை மட்டுமே பார்த்தன.
''கண்ணன் தலையில் மயிலிறகை பார்த்தாயா.. இருக்கிறதா இல்லையா ?'' என்றாள் யசோதை.
''ஆமாம் ..
அவன் ஒரு மயிலிறகுக்கு மேல் செருகிக் கொள்வதில்லையே.......
என்ன அம்மா என் தலை மயிலிறகு பற்றி பேச்சு. நீ தானே இன்று காலை இதை வழக்கம்போல் செருகி விட்டாய்.''
அப்போது.... நான் பார்த்த என் வீட்டில் இருந்த மயிலிறகு....
காற்றில் எங்காவது பறந்து வந்திருக்கும்... உன் வீட்டைச் சுற்றி மயில்கள் நடமாட்டம் அதிகமாச்சே.'' என்றாள் யசோதை.
No comments:
Post a Comment