உறக்கத்துக்கொருவன் - J.K. SIVAN
எனது தாய் வழி பாட்டனார் ப்ரம்ம ஸ்ரீ வசிஷ்ட பாரதியார் ஒரு கம்பராமாயண உபன்யாசகர், சிறந்த சிந்தனையாளர் தமிழறிஞர். பல தலைமுறைகளாக ராமனை நினைத்து, தொழுது, ராமனின் பெயர் தாங்கி, ராமாயணத்தால் வாழ்ந்த குடும்பங்கள். அருணாச்சல கவிராயரின் ராமநாடக கீர்த்தனைகளை பாடி பேசி பிரசங்கம் செய்து எல்லோரையும் மகிழ்வித்த குடும்பம். பிரபுக்கள், ஜமீன்தார்கள், ராஜாக்கள் ஆதரித்த குடும்பம்.
என் தாத்தா மறைந்த போது ஆறு வயது கூட நிறையாதவன் நான் எப்படி அவரை ரசித்திருக்க முடியும். அந்த வம்சத்தில் என் தாத்தா பேசிய பேச்சுக்கள், குறிப்பேடுகள் எதுவுமே இல்லாமல் போனது துரதிர்ஷ்டம். அவர் தனது முன்னோர்கள் பற்றி நினைவு கூர்ந்து சொன்னவற்றை அந்த கால ''நல்ல '' ஹிந்துநேசன் பத்திரிகையில் வந்த விபரங்களின் ஒரு நகல் கிடைத்து அவரை என் தாய் தந்தை சொல்லிய விஷயங்களோடு சேர்த்து முழுமையாக புரிந்துகொண்டேன். ''எங்கள் பாரதி வம்சம்'' என்ற தலைப்பில் சில குறிப்புகளை சேகரித்து என் தாத்தாவின் முன்னோர்களை பற்றி ஒரு புத்தகம் எழுதி அதை அவரது 150வது நினைவு நாள் விழாவில் இலவசமாக விநியோகித்தேன். முக்கிய நண்பர்கள் சில பிரதிகளை கேட்டு வாங்கிக் கொண்டது அவரது புலமைக்காக.
நானும் இப்போது ஒரு தாத்தா தான் 80+ என்றாலும் எந்த பிறவியிலும் என் தாத்தாவாக முடியாது. ஆங்கிலம் தவிர்த்து தமிழிலும் ஈடுபாடு வளர என் வாழ்க்கையில் என் தாத்தா ஒரு மைல் கல்.
இனி என் மனம் கவர்ந்த சில கம்பனின் பாடல்களை பகிர்ந்து கொள்கிறேன்.
கம்பனை எப்படி வேண்டுமானாலும் சுவைக்கலாம். ஆரம்பம்முதல் படித்தால் தான் புரியும் என்பதற்கு இது தொடர்கதை அல்ல. முடிவு தெரிந்தால் தான் சுகம் என்றவகையில் மர்ம நாவலும் அல்ல. படித்தவுடன் மறக்க சிறுகதையும் அல்ல. கரும்பு. அடிமுதல் நுனிவரை இனிப்பது.
கும்பகர்ணன் விதி வசத்தால் தூக்கம் வரமாக பெற்றுவிட்ட மகா பலசாலி. நமது இதிகாசத்தில் வரும் ரிப்வான் விங்கிள். யுத்தம் துவங்கி ராவணன் இதுவரை சந்திக்காத தோல்விகள் ஒன்றன் பின் ஒன்றாக அவனை திகைக்க வைத்து அவன் தனது மஹா வீர தம்பி கும்பகர்ணனை தூக்கத்திலிருந்து எழுப்பி வரவழைக்கிறான்.
நாம் தூக்கத்திலிருந்து விழிக்க தேடுவது அலாரம் டைம் பீஸ், செல்போன் வேக் அப் கால், சிலரது வீட்டில் மனைவியின் அதட்டல். சிறுவயதில் முகத்தில் சில்லென்று நீர் தெளித்தால் தான் எழுவோம். பெருமாளுக்கு சுப்ரபாதம் பல்லாண்டு பாடி எழுப்புவார்கள். திருப்பதி மலையில் விடிகாலை மூன்று மணிக்கு ஸ்ரீ அனந்தசயனம் ஐயங்காரின் கணீர் குரல் வெங்கடேச சுப்ரபாதம் பாடி பாலாஜியை துயிலெழுப்புவதை அருகே நின்று கண்ட பாக்யம் என் வாழ்வில் கிட்டியது.
ராவணனின் தூதர்கள் நால்வர் கும்பகர்ணன் மாளிகைக்கு சென்று கும்பகர்ணனை எழுப்ப முயல்கிறார்கள். முடியாமல் போகவே, தம் கையிலிருந்த இரும்புத் தூணால் அவன் தலையிலும் செவியிலும் மோதினார்கள். ஹுஹும் அவன் அசைந்து கொடுக்கவில்லை. பலம் மிக்க கிங்கரர்கள் கும்பகர்ணனை இரும்பு உலக்கையினால் இடித்தும் பலனில்லை.
கோடு, இகல் தண்டு, கூடம், குந்தம், வல்லோர்கள்
கூடி, தாடைகள், சந்து, மார்பு, தலை எனும் இவற்றில் தாக்கி,
வாடிய கையர் ஆகி, மன்னவற்கு உரைப்ப, 'பின்னும்
நீடிய பரிகள் எல்லாம் நிரைத்திடும், விரைவின்' என்றான். 52
கட்டுறு கவன மா ஓர் ஆயிரம் கடிதின் வந்து,
கட்டுறு கவன மா ஓர் ஆயிரம் கடிதின் வந்து,
மட்டு அற உறங்குவான் தன் மார்பிடை, மாலை மான
விட்டு உற நடத்தி, ஓட்டி, விரைவு உள சாரி வந்தார்;
தட்டுறு குறங்கு போலத் தடந் துயில் கொள்வதானான். 53
கொய்ம் மலர்த் தொங்கலான் தன் குரை கழல் வணங்கி, 'ஐய!
கொய்ம் மலர்த் தொங்கலான் தன் குரை கழல் வணங்கி, 'ஐய!
உய்யலாம் வகைகள் என்று, அங்கு எழுப்பல் ஆம் வகையே செய்தும்;
கய் எலாம் வலியும் ஓய்ந்த; கவன மா காலும் ஓய்ந்த;
செய்யலாம் வகை வேறு உண்டோ ? செப்புதி, தெரிய' என்றார். 54
என்றலுமே அடி இறைஞ்சி, ஈர்-ஐஞ்ஞூற்று இராக்கதர்கள்,
வன் தொழிலால் துயில்கின்ற மன்னவன் தன் மாடு அணுகி,
நின்று இரண்டு கதுப்பும் உற, நெடு முசலம் கொண்டு அடிப்ப,
பொன்றினவன் எழுந்தாற்போல், புடைபெயர்ந்து அங்கு எழுந்திருந்தான். 56
மூவகை உலகும் உட்க, முரண் திசைப் பணைக் கை யானை தாவரும் திசையின் நின்று சலித்திட, கதிரும் உட்க, பூவுளான், புணரி மேலான், பொருப்பினான், முதல்வர் ஆய யாவரும் துணுக்குற்று ஏங்க, எளிதினின் எழுந்தான், வீரன். 57
மூவகை உலகும் உட்க, முரண் திசைப் பணைக் கை யானை தாவரும் திசையின் நின்று சலித்திட, கதிரும் உட்க, பூவுளான், புணரி மேலான், பொருப்பினான், முதல்வர் ஆய யாவரும் துணுக்குற்று ஏங்க, எளிதினின் எழுந்தான், வீரன். 57
கிங்கிரர்கள் கும்பகர்ணனை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடித்தும் எழுப்ப முயன்றும், அவன் எழுந்திருக்கும் வழியாக இல்லை. இராவணனிடம் சென்று என்ன முயன்றும் கும்பகர்ணனை உறக்கத்தினின்றும் எழுப்ப முடியவில்லை என்று சொல்ல, ஒன்றன் மேல் ஒன்றாக யானைகளையும், யாளிகளையும் விட்டு மிதிக்கச் செய்கிறான். பிரயோஜனம் இல்லை. ஆயிரம் மல்லர்கள் கும்பகர்ணனை எழுப்ப முயல்கிறார்கள். தூங்கும் கும்பகர்ணனின் வாயையும், மூக்கையும் கண்டு மல்லர்கள் நடுங்கினார்கள். அவன் காதருகில் சங்கு, தாரை, சின்னம் முதலான ஊது கருவிகளைக் கொண்டு பெருத்த ஓசை எழுப்பினார்கள். ஊகூம். அவன் தூக்கம் கலையவில்லை. கொம்பு, வலிமையுடைய தண்டு, சம்மட்டி, ஈட்டிகளை படையினர் கும்பகர்ணன் தாடைகளிலும், மூட்டுகளிலும், மார்பிலும், தலையிலும் அடித்தும், அவன் தூக்கம் கலையவில்லை. குதிரைப் படைகளை அவன் மேலே ஏவினார்கள். அவை அவன் மேல் ஓடியபோது தாலாட்டி தட்டிக் கொடுப்பது போல இருந்தது. மீண்டும் ஆழ்ந்த தூக்கம் தந்தது. சூலம், மழு, வாள் இவற்றைக் கொண்டு அவன் உடலில் தாக்கினார்கள் .ஆயிரம் வீரர்கள் கும்பகர்ணனின் இரு கன்னங்களிலும் உலக்கையால் அடிக்க, இறந்தவன் எழுந்ததைப் போல கும்பகர்ணன் புரண்டு படுத்து துயில் நீங்கி எழுந்து அமர்ந்தான்.
No comments:
Post a Comment