Thursday, February 21, 2019

TAGORE



  ரவீந்திரநாத் தாகூர்      -       J.K. SIVAN

                                                    5   'ஒரே அடியாக  லீவ் விட்டாச்சு''

இது நான் எழுதும்  ரவீந்திரநாத் தாகூரின்  ஐந்தாவது சிறுகதை.  HOME  COMING  என்ற கதை.  பெயர்களை தமிழாக்கி தமிழ் மண் வாசனை தந்திருப்பது ஒன்று தான் நான் செய்த மாற்றம். கதையின் கருவை சிதைக்கவில்லை.

கோபு என்றாலே அனைவரும் காத தூரம் ஓடுவார்கள். அவ்வளவு விஷமம்.. எப்போது எந்த விஷமம் பண்ணுவான் என்று பிரம்ம தேவனால் கூட சொல்ல முடியாது என்பார்கள். விஷமத்தில் ராம்பூர்  கிராமத்தின் முடிசூடா மன்னன்.  கல்கத்தாவிலிருந்து தொலை தூரம் உள்ள அந்த  கிராமம்  அமைதியானது. எங்கும் நீர் மயம். குட்டைகள், ஏரிகள், குளங்கள். பச்சைப் பசேலென்று மரங்களும் செடிகளும் கொடிகளும் எங்கும் மனதை வருடும்.  கோபுவுடன்  எப்போதும் பத்து பன்னிரண்டு வானரங்கள். அவன் அந்த  கிராமத்தையே கிஷ்கிந்தா புரியாக்கி அதன் அரசன். வால் தனத்தில் நிகரில்லாத வாலி.

அன்று அவன் மனதில் ஒரு புது விஷமம் உதயமாகியது. அதன் விளைவு??

ஆற்றங்கரையில்  கோபுவின்  வானரங்கள்  நின்று கொண்டிருக்கும்போது  அவன்  கண்ணில்  ஒரு படகுக்கு  பாய் மரக் கம்பம் செய்வதற்காக ஒரு  நீளமான மரத்தை  யாரோ வெட்டி போட்டிருந்தது  தெரிந்தது.  அந்த நீண்ட உருளை மரத்தை  சரியாக செதுக்கி ஒரு கனமான ஸ்தம்பமாக்கி படகின்  நடுவில்  பாய்மரமாக நிறுவ ஆற்றங்கரையில்  மேட்டில்  அதை கிடத்தி இருந்தார்கள்.  கீழே சரிவு, சேறு. ஆற்று நீர்.

''வாங்கடா நாம்ப இதை  கீழே  உருட்டிவிடுவோம். ''  கோபு ஆணையிட்டான் .'' சொந்தக்காரன் வந்து தேடுவான். மரம் தண்ணீரில் மிதந்து போனதை கண்டு  துடிப்பான். வேடிக்கை பார்க்கலாமா?''

பாபு கோபுவின் தம்பி. அண்ணனையே மதிக்காத சுக்ரீவன். அவன் அந்த மரத்தின் மீது ஒரு முனையில் இரண்டு பக்கமும் கால்களை போட்டுக்கொண்டு குதிரை மீது அமர்ந்திருப்பது போல் உட்கார்ந்தான். எப்படி மரத்தை உருட்டி தள்ளுவது?

'டேய் எழுந்திருக்கிறாயா, உதைக்கட்டுமா? '' கோபுவை  பாபு லட்சியம் செய்யவில்லை.இன்னும் சௌகரி
யமாக உட்கார்ந்துகொண்டான்.

''பாபு, இன்னும் ஒரு நிமிஷத்திலே நீ எழுந்திருக்கலேன்னா இங்கே என்ன நடக்கப்போகிறது பார். மரியாதையாக எழுந்திரு'     'கோபுவிற்கு தன்னை எவர் எதிர்த்தாலும் பிடிக்காது. ஒப்புக்கொள்ளவே மாட்டான் பாபுவோ எது வந்தாலும் பரவாயில்லை என்று லட்சியம் செய்யாமல் மரத்தின் மேல் கெட்டியாக உட்கார்ந்து கொண்டிருந்தான்''

''எல்லோருமா நான் ஒண்ணு ரெண்டு மூணு நாலு என்று சொல்லி நாலு சொல்லி முடிக்கும்போது இந்த மரத்தை உருட்டி விடவேண்டும். சரியா'' என்றான்  கோபு -வாலி.   பதி மூன்று வயது கோபு வின் அதிகார கட்டளையின் விளைவு எட்டு வயது பாபுவுக்கு மட்டுமல்ல மற்ற வானரங்களுக்கும் புரியவில்லை. புரியும் வயதுமில்லை.

''ஒண்ணு , ரெண்டு, மூணு, நாலு... எல்லோருமாக ஒன்று சேர்ந்து பலத்தோடு அந்த மரத்தை உருட்டினார்கள். அதன் மீது பாபு. மேட்டிலிருந்து சரிந்து அந்த பெரிய மரம் உருண்டது பாபுவுடன் சேர்ந்து.

நல்ல வேளை, ஒரு கல் மரத்தின் ஒரு முனையை தடுக்க, அந்த முனையில் உட்கார்ந்திருந்த பாபு கீழே தள்ளப்பட்டு, காயங்களுடன் உயிர் தப்பினான். எழுந்து ஓடிவந்து பாபுவை தாக்கினான். முகத்தில் நகத்தால் பிராண்டினான். அழுதுகொண்டே வீட்டுக்கு ஓடினான். கோபுவுக்கு பயம் வந்தது., ஆற்றங்கரையில் ஒரு பாதி முழுகிய படகின் மேல் அமர்ந்து யோசித்தான்.

ஆற்றின் அக்கரையிலிருந்து  அப்போது ஒரு படகு வந்து நின்றது. அதிலிருந்து ஒரு ரெட்டை நாடி மனிதர், நரைத்த தலை, தொங்கு மீசையுடன், கையில் குடையோடு இறங்கினார். கோபு வைப் பார்த்த அவர்

''தம்பி, உனக்கு சக்கரவர்த்தி சார்  வீடு எங்கே என்று தெரியுமா? சொல்கிறாயா?''

கோபுவிற்கு அந்த ஆள் தனது அப்பா சக்ரவர்த்தியை தேடிவந்த ஆள் என்று புரிந்தது.   கையை நீட்டி வீடு இருக்கும் திசையை அடையாளம் காட்டினான். நிறைய வீடுகள் இருந்ததால் எது என்று அவருக்கு புரியவில்லை. மீண்டும் அவனைக் கேட்டார். ''நீயே போய் தேடிக்கோ'' என்று சொல்லிவிட்டு  அங்கிருந்து நகர்ந்தான் கோபு .     அவன் எதிர்பார்த்தபடியே அவன் வீட்டிலிருந்து ஒரு ஆள் வந்து ''அம்மா கூப்பிடறாங்க வா''. கோபு வரமாட்டேன் என்று தலை அசைத்தான். பாபு போய் கோள் மூட்டி இருக்கிறான். அம்மா அடிப்பாள் என்று தெரியும் கோபுவுக்கு.   வந்தவன் பெரிய ஆள்.  கோபுவை பிடித்து கர கர என்று இழுத்துக் கொண்டு சென்றான்.

''ஏண்டா கோபு இன்னிக்கு மறுபடியும் பாபுவை அடித்தாயா?'' கோபமாக கேட்டாள் அம்மா
''இல்லை, யார் சொன்னது. நான் பாபுவை தொடவே இல்லை. ''
'' பொய் சொன்னா தொலைச்சுடுவேன். நீ அவனை அடிச்சிருக்கே''
''நான் அடிக்கலேன்னு சொல்றேனே. நீ பாபுவையே கேளு நான் அவனை அடிச்சேனா என்று ''
பாபு விடுவானா சந்தர்ப்பத்தை. ''அவன் தான் என்னை அடிச்சான்'' . இன்னும் பெரிதாக அழுதான்.
''அடிச்சேன்னா  பொய் சொல்றே. இந்தா இப்போ நிஜமாகவே வாங்கிக்கோ. இது பொய் சொன்னதற்காக''
அம்மா பாபுவை விலக்கி விட்டு, கோபுவை சாத்து சாத்து என்று  நாலு சாத்தினாள்.
கோபு  அம்மாவை பிடித்து தள்ளினான்.

''அம்மா கிட்டேயே கையை ஒங்கு கிறாயா நீ'' அம்மா கோபமாக ஒரு கொம்பை தேடினாள் . அந்த நேரம் பார்த்து தொங்கு மீசை ரெட்டை  நாடி நரைத்த தலை மனிதர் உள்ளே நுழைந்தார். கோபு அவரைப் பார்த்ததும் ஆடு மாதிரி தலையைத்தொங்க விட்டுக்கொண்டான். அவன் தான் அவருக்கு தனது வீட்டைக் கூட அடையாளம் காட்டவில்லையே.

'' என்ன விஷயம் ?''என்று அவர் அம்மாவைக் கேட்ட போது அம்மாவுக்கு கோபம் மறைந்து ஆச்சர்யம்.' அண்ணா நீ எப்போ வந்தே ஊருக்கு ''

விஸ்வநாதன் சீதாவின் கல்யாணத்திற்கு பிறகு பம்பாய் சென்று வியாபாரம் செய்து வெகு காலம் கல்கத்தா திரும்பவில்லை. அவள் கணவன் இறந்து அவள் குழந்தைகளோடு எங்கிருக்கிறாள் என்று விசாரித்து பல வருஷங்களுக்கு பிறகு மீண்டும் கல்கத்தா இப்போது தான் வருகிறார்.

குழந்தைகளை பற்றி சொல்லும்போது சீதா அழுதாள். கோபுவின் பிடிவாதம், முரட்டுத்தனம், ஊரில் கெட்ட பெயர், பற்றி குறை கூறினாள் . பாபு படிக்கிறான், நல்ல பிள்ளை என்றாள் . விஸ்வநாதன் இனி நான் கோபுவை பார்த்துக் கொள்கிறேன் கவலையை விடு என்றார்.

''கோபு என்னோடு வருகிறாயா என் பிள்ளைகளோடு நீயும் படித்து கல்கத்தாவில் நான் உன்னை நன்றாக வளர்க்கிறேன்''. கோபு விற்கு உள்ளூர சந்தோஷம். மாமாவை பிடித்துவிட்டது. சிலநாள் எல்லோரும் சந்தோஷமாக சேர்ந்திருந்தனர் . சீதாவுக்கு இனியாவது தன் பிள்ளை கோபு திருந்தமாட்டானா என்று எண்ணம். பாபு-கோபு சண்டையும் இனி இருக்காது என்ற நம்பிக்கை. கோபுவுக்கு கல்கத்தா கனவுகள் நெஞ்சில் நிரம்ப, எனவே தனது கோலி, காற்றாடி நூல், கில்லி-தண்டு கம்பு, எல்லாவற்றையும் பாபுவுக்கு பரிசாக அளித்துவிட்டு மாமாவுடன் கல்கத்தா சென்றான்.

விஸ்வநாதன் மனைவி மாமிக்கு இந்த அழையா விருந்தாளி கோபுவை பிடிக்கவில்லை. ஏற்கனவே வீட்டில் மூன்று குழந்தைகள். இவன் வேறா?  ஒரு வார்த்தை கேட்டிருக்க வேண்டாமா இந்த மனுஷன்  இந்த பையனை கூட்டிக்கொண்டு வருவதற்கு முன்பு?   இந்த கிராமப் பையனை எப்படி சமாளிப்பது. பன்னிரண்டு- பதிமூன்று வயது பையன்கள் உலகத்திலேயே சமாளிக்க முடியாத ஜீவன்கள். சின்ன குழந்தை என்று கொஞ்சவும் முடியாது. பொறுப்பும் சுத்தமாக கிடையாது. கிடு கிடுவென்று வளர்வான். சட்டை சின்னதாக போய் விடும். சொன்னதை கேட்க மாட்டான். ரொம்ப தெரிந்தாற் போல் பேசுவான். மட்டு மரியாதை கிடையாது. குரல் உடைந்து கர கரப்பு தெரிந்தது. குழந்தை முகம் மாறி நீண்டு போனது. பேசும்போது பெரிய மனிதனாக காட்டிக்கொள்வான் அல்லது வெட்கம் கொள்வான். தன்னை விரும்பமாட்டார்களா என்று தேடும் வயது.

எங்கோ யார் வீட்டிலோ புதியவர்களிடம் பழகுவதில், வசிப்பதில் அதிருப்தி கோபுவிடம் தெரிந்தது. அதிகம் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. மாமியை பிடிக்கவில்லை. அவள் எது சொன்னாலும் அதை உடனே செய்து அவளிடம் நல்ல பேர் எடுக்க முயன்று கடைசியில் திட்டு தான் கிடைத்தது.

அந்த சிறிய வீட்டுக்குள் அடைந்து கிடக்க பிடிக்கவில்லை. வெளியே காற்றாட ஓடி நாலுபேரிடம் பேச, பழக மனம் விழைந்தது. எங்கே போவது, புது மனிதர்கள், புது இடம், எல்லாமே புதிது. என்ன செய்வது. கல்கத்தா பெரிய பட்டணம். தனது ஊரான ராம்பூரை மனது தேடியது. ஆற்றங்கரை, நண்பர்கள், மரங்கள், படகுத் துறை. உள்ளூர் கோவில், தபாலாபிஸ் கட்டிடத்தின் பின்புற மைதானம், இரவு வரை விளையாட்டு......பொல்லாத அம்மா.   இருந்தாலும் அவள் வேண்டுமே? நெஞ்சுக்குள்ளே  கோபுவுக்கு அழுகை பொங்கியது. .

பள்ளிக்கூடத்தில் கோபு  கடைசி பெஞ்ச் பையன். படிப்பில் கடைசியாக பின் தங்கிய பையன் என்று பேர் கிடைத்தது. வாத்தியார் கேட்ட கேள்விக்கெல்லாம் அவனிடம் பதில் இல்லை. கழுதை பொதி சுமப்பதை போல், கொடுத்த அடிகளை வாங்கிக்கொண்டான். மற்ற பிள்ளைகளின் கவனம் படிப்பில் இருந்தபோது, அவன் ஜன்னலுக்கு வெளியே தெரிந்த வீடுகளின் கூரைகளை பார்த்துக்கொண்டு காலம் தள்ளினான். அங்கு ஓடி யாடும் பிள்ளைகளோடு நாமும் சேர்ந்து கொள்ளமாட்டோமா என்று மனம் துடித்தது.

உள்ளம் வெடித்து ஒருநாள் மாமாவை மெதுவாக கேட்டான் கோபு .''மாமா எப்போ நான் ஊருக்கு போவது?''
'பள்ளிக்கூடத்தில் லீவு விட்டபோது''
இனிமேல் அடுத்து பெரிய லீவ் தீபாவளி கிறிஸ்மஸ் அப்போது தானே. அதுவரை? பேசாமல் பல்லைக் கடித்துக் கொண்டு காத்திருக்க வேண்டியது தான்.

ஒரு நாள் புஸ்தக பையை எங்கோ தொலைத்து விட்டான். புத்தகம் இருந்தபோதே அவன் படிப்பது கொஞ்சம். இப்போது அதுவும் இல்லை. வாத்தியார் கை இரண்டிலும் பிரம்பால் வெளுத்து வாங்கினார். மாமாவின் பையன்களுக்கு அவன் கிள்ளுக் கீரை. அவனைபார்த்து கேலி செய்தார்கள். மெதுவாக மாமியிடம் போய் '' மாமி என் புஸ்தகங்கள் தொலைந்து போச்சு'' என்றான்.

''நாட்டுப்புற சனியனே, உனக்கு மாசத்துக்கொரு தரம் புஸ்தகம் வாங்கித்தர எங்களுக்கு வசதியில்லை போ. இங்கே குடும்பம் நடத்தவே முடியாமல் கஷ்டப்படறோம்''

அன்றிரவு பள்ளிக்கூடத்தில் இருந்து வரும்போதே அவனுக்கு தலைவலி, உடம்பு குளிரால் நடுங்கியது. ஜுர வேகம் உடம்பு சுட ஆரம்பித்தது.  ஐயோ மாமிக்கு இன்னும் நம்மால் அதிக கஷ்டம் சேருமே.'' என்று அவளிடம் சொல்லவில்லை.

மறுநாள் காலை கோபுவை காணவில்லை. எங்கு தேடியும் அவன் தென்படவில்லை. இரவெல்லாம் மழை விடாமல் பெய்ததே. அவனைத் தேடி தொப்பமாக நனைந்தது தான் மிச்சம். விஸ்வநாதன் போலீசில் பையனைக் காணவில்லை என்று புகார் கொடுத்து விட்டு வந்தார்.     மழை விடாது பெய்தது. சாயந்திரமாக ஒரு போலிஸ் வண்டி வாசலில் வந்து நின்றது. தெருவெல்லாம் வெள்ளமாக தண்ணீர் ஓடியது. ரெண்டு போலிஸ் காரர்கள் கோபுவை பிடித்துக்கொண்டு வந்து விஸ்வநாதன் முன்னால் நிறுத்தினார்கள். தலையிலிருந்து கால் வரை அவன் மேல் தண்ணீர், சேறு. கண்களில் ஜுரம் சிகப்பாக தெரிந்தது. உதடு துடித்தது. உடல் நடுங்கியது. சக்தியற்று நின்ற அவனை போலிஸ் காரர்கள் தாங்கியபடி இருந்தார்கள். விஸ்வநாதன் அவனை அணைத்து உள்ளே கூட்டிக் கொண்டு போனார். ''இந்த பையனால் எவ்வளவு கஷ்டம் இன்னும் அனுபவிக்கணுமோ?' அவனை அவன் ஊருக்கு அனுப்பித் தொலையுங்களேன்?''

''மாமா, நான் ஊருக்கு போயிண்டு இருந்தபோது இந்த போலிஸ் காரர்கள் என்னை டிக்கெட் இல்லை என்று  பிடித்துக்கொண்டு வந்து விட்டார்கள் '' என்று ஜுர வேகத்தில் கோபு மெதுவாக பதில் சொன்னான்.

ஜுரம் அதிகமானது. இரவெல்லாம் நினைவு தப்பியது. உளறினான். மாமா ஒரு டாக்டரை அழைத்து வந்து காட்டினார்.
''மாமா ஸ்கூல் லீவு விட்டாச்சா?வீட்டுக்கு நான் போலாமா? -- ஜுரத்தில் கோப்பு முனகினான்.
மாமா கண்களில் ஜலம் பொங்கியது, கோபுவின் சக்தியற்ற சூடான கைகளை பிடித்துக்கொண்டார். இரவெல்லாம் அவன் பக்கத்திலேயே உட்கார்ந்திருதார். அவன் நினைவு தப்பி உளறிக்கொண்டிருந்தான்...
"அம்மா என்னை அடிக்காதே, வலிக்கிறது. நான் பொய் சொல்லலே.''
பொழுது விடிந்தது. கொஞ்சம் நினைவு வந்தது. கண்களை மெதுவாக திறந்தான். சுற்று முற்றும் பார்த்தான். யாருமே இல்லையே. களைத்து போய் மீண்டும் கண்கள் மூடியது. சுவற்றை பார்த்து தலையை திருப்பிக்கொண்டான். பெருமூச்சு வந்தது.

மாமா அவன் மனதை புரிந்து கொண்டார். யாரைத் தேடுகிறான் என்று புரிந்து கொண்டு ''கோபு , அம்மாவுக்கு சொல்லி அனுப்பியிருக்கிறேன். சீக்ரம் வந்துடுவா உன்னை பார்க்க''
மத்தியானம் வந்து பார்த்த டாக்டர், ''சார் பையன் நிலை மோசமாக போய் கொண்டிருக்கிறது''
ஆற்றில் படகு காரன் தள்ளும் கொம்பை விட்டு ஆறு அடி , ஐந்து அடி, நாலு அடி, என்று ஆழம் பார்த்து படகு தள்ளும் ஞாபகம் கோபுவுக்கு அதை திருப்பிச் சொல்லிக்கொண்டிருந்தான். ஆழம் காண முடியாத ஏதோ ஆற்றில் அவன் இப்போது தத்தளித்துக் கொண்டிருந்தான்.

இரவு வந்துவிட்டது. சீதா ஓடிவந்தாள். புயலாக ஓடிவந்த அவளால் அழுகையை கட்டுப்பட்டுத்த முடியால் ஒ வென்று கதறினாள் ..
விஸ்வநாதன் அவளை தேற்ற முயன்று தோற்றார். ''என் கண்ணே கோபு ராஜா ''
கோபு கடல் போன்ற ஆற்றின் ஆழத்தை கணக்கெடுத்துக் கொண்டிருந்தான். கைககள் மெதுவாக அசைந்தது. மெதுவாக கை கீழே விழுந்தது.
அம்மா அவனை வாரி அணைத்தாள் .''என் ராஜா நான் வந்துட்டேண்டா'' என்னைப் பாரு.''
கோபுவின் தலை மெதுவாக திரும்பியது. கண் மூடியிருந்தது. வாய் மெதுவாக வார்த்தைகளை வெளியிட்டது.
''அம்மா,  அம்மா லீவ் விட்டாச்சு.'

(கோபு  தாகூரின் home coming  கதையில்  ''படிக் சக்கரவர்த்தி''.  பாபு  ''  மக்கான்''.   இதை படித்து விட்டு கண்களில் நீர் வரவில்லை என்றால் உடனே ஒரு கண் டாக்டரை அணுகுவது நல்லது. அவளது எல்லோருமாக சேர்ந்து என்னை இனி எழுத கூடாது என்று கட்டளை போட்டுவிடுங்கள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...