பீஷ்மாஷ்டமி.
இன்று தான் உத்தராயண கால சுக்லபட்ச அஷ்டமி திதியில் பீஷ்மர் முக்தி அடைந்தார்.
நான் மகாபாரதம் எழுதியவன். பீஷ்மன் என்று எழுதும்போதே அளவு கடந்த மரியாதையும் பக்தியும் என் உடம்பை நடுங்க வைக்கிறது. கங்கையின் மகன் பீஷ்மன் தனது தந்தைக்காக செய்த தியாகத்துக்காக, ''என் மகனே தேவவ்ரதா, உனக்கு “இச்சா ம்ருத்யு” ( நீ விரும்பிய நேரத்தில் மரணத்தை ஏற்பது) எனும் வரத்தை வழங்குகிறேன் என்றான் தந்தை சந்தனு மகாராஜா. கொடுத்த வாக்கினால் கௌரவர் பக்கம் இருந்து அவர்களை தனது உயிர் போகும் வரை காக்க நேர்ந்தது.
''யுதிஷ்டிரா, உத்தராயண புண்ய காலம் வந்து விட்டது இன்னும் சில நாட்களில் பீஷ்மர் இந்த உலகத்தை விட்டு விண்ணுலகம் போய்விடுவார். அதற்குள் அவரிடம் நற் போதனைகளை பெற்றுக் கொள்'' என்று கிருஷ்ண பரமாத்மாவே சொல்கிறார்.
''அர்ஜுனா எனக்கு ஒரு படுக்கையை சௌகர்யமாக நான் படுப்பதற்கு அமைத்துக் கொடு. உத்தராயணம் வரை நான் இங்கே தான் குருக்ஷேத்திரத்தில் காத்திரு க்கபோகிறேன் விரும்பினார் பீஷ்மர். துரியோதனன் தலைகாணி மெத்தை தேடும் நேரத்தில் அர்ஜுனன் பீஷ்மர் விரும்பியவாறே அம்புகளால் ஒரு சரப்படுக்கை அமைத்து அதில் பீஷ்மர் சாய்கிறார். கங்கா புத்திரனுக்கு பாதாள கங்கையிலிருந்து அம்புகளால் அர்ஜுனன் குடிநீர் கொண்டு தருகிறான்..
ஸ்ரீமன் நாராயணனை நினைத்துப் பிரார்த்திக்கிறார் பீஷ்மர். கிருஷ்ண பரமாத்மாவும் அவருக்கு நாராயணனாக அவருடைய சதுர்புஜ தரிசனத்தை வழங்கினார். அப்பொழுது பீஷ்மர் துதித்ததுதான் விஷ்ணு சகஸ்ரநாமம். உலகிலேயே ஒரு கடவுளை மனிதன் பிரார்த்தித்து போற்றும்போது அதை நேரில் அருகிலேயே நின்று கேட்டது விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒன்று தான்.
உத்தராயண காலம் பிறந்தும் ஏன் பீஷ்மர் உயிர் பிரியவில்லை? விரும்பிய மரணம் ஏன் தடைபட்டது?அங்கே அப்போது வந்த வேதவியாசரிடம் ''வியாசா நான் என்ன பாவம் செய்தேன். ஏன் நான் விரும்பிய படி ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை?'' என்று வருத்தத்தோடு கேட்கிறார்.
''பீஷ்மா ஒருவன் தனது, மனத்தால், வாக்கினால், காயத்தால், மற்றவருக்கு அநீதி, தீமை நடக்கும்போது அதை தடுக்காமல் இருப்பதும் செயலற்று இருப்பதும் பாப கர்மா. அதற்கான தண்டனை அனுபவிக்காமல் தப்ப முடியாது. அதை தான் நீ இப்போது அனுபவிக்கிறாய்'' என்கிறார் வியாசர்.
பீஷ்மர் புரிந்து கொண்டார். துரியோதனன் சபையில் திரௌபதியை துச்சாதனன் துகில் உரிந்தபோது, எவருமே அதை தடுக்கவில்லை. உதவ முன் வரவில்லை. அவையில் பிரதானமானவர் பீஷ்மர். கூடாது இது அநீதி என்று குரல் எழுப்பவில்லை. அநியாயம் நடந்தும் தடுக்கக்கூடிய நிலையில் இருந்தும், விரல் குரல் அசைக்கவில்லை.
''ஆம் வியாசர். நான் தவறு செய்தவன். இதற்கு என்ன பிராயச்சித்தம்?''
''பீஷ்மா உன்னுடைய இந்த அங்கங்களையும் பொசுக்கக்கூடிய வல்லமை படைத்தவர் அந்தச் சூரியன்தான்''
'' வியாசா, சாதாரண அக்னியின் சூடு போதாது. என் அங்கங்களைத் தீய்க்க சூரியசக்தியைப் பிழிந்து தரவேண்டும் '' என்று வேண்டினார் பீஷ்மர்.
வியாசர் சில எருக்க இலைகளை பீஷ்மரிடம் காட்டுகிறார்.
''பீஷ்மா இந்த எருக்க இலைகள் சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் அர்க்கபத்ரம். அர்க்கம் என்றால் சூரியன் என்றே பொருள். சூரியனின் முழு சக்தியும் இதில் உள்ளது. ஆகவே இந்த இலைகளால் உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கப் போகிறேன். அவை உன்னைப் புனிதப்படுத்தும்'' பீஷ்மரின் அங்கங்களை, எருக்கன் இலைகளால் அலங்கரித்தார் வியாசர்.
அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மன அமைதியடைந்தார் பீஷ்மர். அப்படியே தியானத்தில் ஆழ்ந்தார். தியான நிலையிலேயே முக்தியும் அடைந்தார். பீஷ்மர் பிரம்மச்சாரி. சிரார்த்தம் போன்றவை செய்ய யாருமே இல்லையே. திருமணமாகாத நைஷ்டிக பிரம்மச்சாரியாயிற்றே என்று யுதிஷ்டிரன் வருந்துகிறான்.
''யுதிஷ்டிரா, வருந்தாதே . ஒழுக்கமான ழுக்கம் தவறாத நேர்மையான பிரம்மச்சாரிக்கும், தூய்மையான துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை. அவர்கள் மேம்பட்ட ஓர் உயர்நிலைக்குப் போய்விடுகிறார்கள். எனவே இனி வருங்காலத்தில் பாரத தேசமே பீஷ்மருக்காக நீர்க்கடன் அளிக்கும் என்று ஆசி கூறினார்.
இன்று பீஷ்மர் முக்தியடைந்த அஷ்டமி திதியன்று புனிதநீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணம் ஹிந்துக்கள் இருக்குமிடத்தில் எல்லாம் நிறைபெறுகிறது.
காலையில் எழுந்து ஸ்நானம் செய்து விட்டு, தூய ஆடை அணிந்து, சந்தியா வந்தனம் போன்ற நித்ய கர்மானுஷ்டங்களையும் முடித்து விட்டு, ஒரு பித்தளை சொம்போ அல்லது வேறு பாத்திரத்திலோ சுத்தமான தண்ணீர் எடுத்துக்கொண்டு, ஒரு தாம்பாளம் வைத்துக்கொண்டு, ஆசனப்பலகையில் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ளவும்.
“பீஷ்மாஷ்டமி புண்யகாலே பீஷ்ம தர்ப்பணம் கரிஷ்யே” என்று சங்கல்பம் சொல்லிவிட்டு, இடது கையினால் தீர்த்த பாத்திரத்தை பிடித்துக்கொண்டு, ஒவ்வொரு ஸ்லோக முடிவிலும் , வலது உள்ளங்கையில் நீரை ஊற்றி, விரல்கள் வழியாக நிறைய ஜலத்தை தாம்பாளத்தில் விடவேண்டியது மட்டுமே நாம் செய்ய வேண்டிய வேலை.
"வையாக்ரபாதி கோத்ராய ஸாங்க்ருதி ப்ரவராயச கங்கா புத்ராய பீஷ்மாய ஆஜநம ப்ரஹ்ம சாரிணே. பீஷ்மாய நம: இத மர்க்யம்' // என்று சொல்லி நீர் விடவும்.
"அபுத்ராய ஜலம் தத்மி நமோ பீஷ்மாய வர்மணே பீஷ்ம: ஸாந்த நவோ வீர: ஸத்ய வாதி ஜிதேந்த்ரிய:
ஆபி ரத்பி ரவாப் நோது புத்ர பௌத் ரோசிதாம் க்ரியாமி பீஷ்மாய நம: இத மர்க்யம்' //என்று சொல்லி நீர் விடவும்.
No comments:
Post a Comment