இதெல்லாம் நம்மால் முடியுமா ? J K SIVAN
ஒரு விஷயம் தெரியுமா. நாம் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே வருகிறோம். மாற்றம் உடலில் மட்டும் அல்ல, மனத்திலும் தான். இந்த வளர்ச்சி நாம் நமது முயற்சியால் பெற்றதல்ல. இயற்கையின் பரிசு. உடல் பரிமாணத்தில் குழந்தைப் பருவம் முதல் வயோதிகம் வரை ஒவ்வொரு கணமும் நாம் உருவத்தில் மாறிக்கொண்டே நம்மை நமக்கே அடையாளம் தெரியாமல் போகும் அளவு மாறுகிறோம். நமது எண்ணங்களும் சிந்தனைகளும் சமயத்துக்கு கேற்றவாறு மாறி மாறி நம்மை ஆட்டுவிக்கிறது.
இதில் ஒன்று மட்டும் நம்மால் நிச்சயம் முடியும். அதாவது மனத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும். அதற்கு தான் மன முதிர்ச்சி maturity of mind என்று பெயர். என்னென்ன செய்தால் மனம் முதிரும். நாம் சீர் படுவோம்? இப்படி நான் சொல்வதால் ஒரு பட்டியல் இடுவதால், இதெல்லாம் தான் என்று ஒரு முடிவுக்கு வரவேண்டாம். இது கொஞ்சூண்டு தான். இன்னொன்றும் சொல்லிவிடுகிறேன். கீழே சொல்லியிருக்கிற விஷயங்கள் அத்தனையும் ஒருமிக்க நம்மிடம் இருக்க வேண்டும் என்றும் பிரயாசைப்பட வேண்டாம். பாதிக்கு பாதி அதில் நம்மால் கடைப்பிடிக்க முடிந்தால் கூட நாம் தான் தேவர்கள்.
1. யாரும் நம்மை விட தாழ்ந்தவர்கள் இல்லை. எவரையும் திருத்த நமக்கு உரிமை இல்லை. திருத்தம் எதிலாவது இருக்கவேண்டும் என்றால் அது நம்மை நாமே திருத்திக் கொள்வதோடு நிற்கட்டும்.
2. அனைவரையும் அப்படியே அவர்களுடைய நிறைவோடும் குறைவோடும் ஏற்றுக் கொள்வோம். பிறர் குற்றம் பார்க்க நாம் குற்றமற்றவர்கள் அல்ல.
3. ஒவ்வொருவரும் அவரவர் கோணத்தில் சிந்திப்பவர்கள். அதைத் தவறு என்று குறை சொல்வதோ, எதிர்ப்பதோ, கூடாது. எல்லோருக்கும் அவரவர் சிந்தனை முக்கியம் அல்லவா? அவற்றை மதித்து வரவேற்கவேண்டும்.
4. எதை எல்லாம் விட வேண்டுமோ அதை எல்லாம் விட்டு விடும் மனப்பக்குவம் வேண்டும். வாழ்க்கை .நிம்மதியாக இருக்கும்.
5. எதிர்பார்ப்பு எவரிடமும், எதை பற்றியும் வேண்டாம். நடப்பது எல்லாமே நாராயணன் செயல் .
6. செய்வன திருந்த செய் என்பார்கள். எதை செய்தாலும் அதில் பூரண திருப்தி, மன அமைதி இருக்க வேண்டும். அப்போது தான் நாம் செய்த எந்த காரியமும் வெற்றி பெரும். பிறருக்கு பயனளிப்பதாக அமையும்.
7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நாமே நிரூபிக்க முயல்வதே முட்டாள்தனம். மதிப்பும், பாராட்டும் தானாகவே மற்றவரிடமிருந்து வெளிப்பட வேண்டும்.
8. நம் எண்ணங்கள் செயல்கள் தான் சிறந்தவை என்பது பூனை கண்ணை மூடிக்கொள்ளும் செயல். நம் கருத்துக்களை ஏற்பதும் ஏற்காததும் மற்றவர் உரிமை .
9. ஒருவரோடு மற்றவரை எந்த விதத்திலும் ஒப்பிடுவது தவறு. இதனால் துன்பம் தான் விளையும்.
10. எதற்குமே கவலையோ, மன வியாகூலமோ வேண்டாம், நடந்ததெல்லாம் நல்லதற்கே. அமைதியான மனது, தெய்வத்தின் இருப்பிடம்.
11. பார்ப்பதெல்லாம் வேண்டும் என்று ஆசைப்படுவது, அலைவது சிறுபிள்ளைத்தனம். நமக்கு எது தேவை என்பதே தெரியாமல் வாழ்கிறோம். அடிப்படைத் தேவை எது என்ற புரிதல் தான் விவேகம்.
No comments:
Post a Comment