ஐந்தாம் வேதம் J.K. SIVAN
மஹா பாரதம்
அல்பாயுசு கணவன்
காம்யக வனத்தில் மார்க்கண்டேய ரிஷி மேலும் யுதிஷ்டிரனுக்கு சொல்கிறார்;
தசரதர் ராமனைப் பார்த்து மகிழ்ந்து, என் மகனே, உன்னுடைய 14 வருஷ வனவாசம் முடிந்தது. நீ அயோத்திக்கு திரும்பி முடி சூட்டிக்கொண்டு ஆட்சி புரிவாய்.''
பிரம்மாதி தேவர்கள் வாழ்த்த பிரம்மன் ''ஸ்ரீ ராமா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்'' என்ற போது ஸ்ரீ ராமன் ''நீதி வழுவா நெறி முறை, நேர்மை, தீயவரை ஒடுக்கும் சக்தியும் திறனும் இருந்தாலே போதும். இந்த ராம ராவண யுத்தத்தில் மடிந்த அனைத்து வானர சைன்யமும் மீண்டும் உயிர் பெறவேண்டும்.'' என்கிறார்.
சீதையும் ஹனுமானுக்கு ஒரு வரம் தருகிறாள்: ''உலகில் ராமன் புகழ் நிலைத்து நிற்கும் வரை நீ சிரஞ்சீவியாக இருப்பாய்'' என்றாள். அப்படிஎன்றால் ஹனுமான் என்றும் சிரஞ்சீவி தான். இன்றும் நமக்கருள்புரிபவன்.
ராம லக்ஷ்மண, சீதா, ஹனுமான், சுக்ரீவன், விபீஷணன் ஆகியோர் திருப்புல்லாணிக்கு மீண்டும் திரும்பி வருகிறார்கள். அனைத்து வானரங்களும் ராமனிடம் விடைபெற்று திரும்பினார்கள். சுக்ரீவனோடு கிஷ்கிந்தை சென்று அங்கதனை இளவரசனாக பட்டம் சூட்டிவிட்டு அயோத்திக்கு திரும்பு முன் ராமன் ஹனுமனை நந்தி க்ராமத்துக்கு அனுப்பி தனது வருகையை பரதனுக்கு அறிவித்தான். அனைவரும் ஒன்று கூடுகிறார்கள். வசிஷ்டர் வாமதேவர் மற்றும் அனைத்து முனிவர்கள், ரிஷிகள், ராமனுக்கு பட்டாபி ஷேஷேகம் செய்வித்து, சுக்ரீவன், விபீஷணன் போன்றோர் தத்தம் தேசங்களுக்கு திரும்புகிறார்கள். வசிஷ்டர் முன் நின்று பத்து அஸ்வமேத யாகங்களை கோமதி நதிக்கரையில் நிகழ்த்துகிறார்.
''யுதிஷ்டிரா, உனக்கு எதற்கு இந்த ராமன் கதையை சொன்னேன் என்றால் வனவாச கஷ்டங்கள் தீர்ந்து எதிரிகளை வீழ்த்தி, நீயும் ராமனைப் போல் நாடாள்வாய். சுபிக்ஷமாக இருப்பாய். வனவாசம் உனக்கு சிறந்த அனுபவத்தை தந்ததால் நீ ஞானியாவாய்''
எனக்கு வருக்தம் ஒன்றுமில்லை குருதேவா. என்னால் இந்த திரௌபதி கஷ்டப்பட்டாள். அவளால் தான் நாங்கள் அடிமைத்தளையிலிருந்து விடுதலை அடைந்தோம். அவளை இந்த ஜெயத்ரதன் கடத்திச் சென்றது மனதை வருத்த மடைய வைத்தது. இவளைப் போன்ற சிறந்த பெண்மணி ஒருவள் பூலோகத்தில் இருக்க முடியுமா?
'யுதிஷ்டிரா, நமது புராணங்கள் சீதை போன்ற பல பதிவிரதா சிரோன்மணிகளை பற்றி சொல்கிறதே. அவர்களில் ஒருவள் தான் சாவித்திரி.''
''குருதேவா யார் அந்த சாவித்ரி என்று எனக்கு அறிய ஆர்வமாக இருக்கிறது. விவரமாக சொல்லுங்கள், கேட்க தயாராக இருக்கிறேன்''
''அசுவபதி என்று ஒரு ராஜா. அன்னதானங்கள், யாகங்கள் எல்லாம் செய்தும் வெகுகாலம் அவனுக்கு புத்திர சந்தான பாக்கியம் இன்றி, சாவித்திரி தேவியை நோக்கி தவம் இருந்து, ''உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?'' என்று சாவித்திரி தேவி அவன் முன் தோன்றி கேட்க, ''தேவி என் வம்சம் விளங்க எனக்கு நிறைய புத்ரர்கள் வேண்டும்'' என ''அசுவபதி, உனக்கு பிரம்மதேவன் அருளால் ஒரு புத்ரி பிறப்பாள் என்கிறாள் சாவித்திரி தேவி. சில மாதங்களில் பட்டத்து ராணி பெண் குழந்தை பெற்று சாவித்திரி தேவியின் பெயரையே அந்த குழந்தைக்கு நன்றியோடு வைத்து, சாவித்திரி அழகிய தேவதையாக வளர்ந்து அவளுக்கு ஒரு கணவனைத் தேடினான் அஸ்வபதி.
ஒரு நாள் நாரதர் அச்வபதியின் அரண்மனை வந்து பேசிக்கொண்டிருக்கும்போது ராஜகுமாரி சாவித்ரியை பார்க்கிறார்.
''பெண்ணே உனக்கு கணவனாக ஒருவனை தேர்ந்தெடுத்து விட்டாயா? '' என நாரதர் முன்பாக கேட்ட தந்தைக்கு சாவித்ரி
''ஆம் அப்பா. சால்வ தேச அரசன் த்யுமத்சேனனுக்கு பார்வை இல்லாமல் எதிரிகளிடம் நாட்டை நாட்டை இழந்து, தனது மனைவியுடனும் ஒரு ஆண் குழந்தையுடனும் காட்டில் வசித்தான். அந்த மகனே எனக்கு கணவன் என்று நான் நிச்சயித்து விட்டேன். ''
நாரதர் ஆச்சர்யமடைந்தார். ''தவறு செய்து விட்டாய் பெண்ணே. அவன் பெயர் சத்யவான். உண்மையே பேசும் தந்தை, தாய்க்கு பிறந்தவன். சிறுவயதிலிருந்தே குதிரைகள் மேல் ஆர்வம். குதிரை (அஸ்வம்) படங்கள் (சித்ரம் ) நிறைய போடுவான். ஆகவே அவனுக்கு ''சித்ரஸ்வன்'' என்ற பெயரும் உண்டு. சத்தியமே பேசுவான். குணவான். சத்யவான் என்றும் அவனை புகழ்வார்கள் ''
''மகரிஷி, சத்யவானிடம் ஒரு குறையுமில்லை போல் இருக்கிறதே'' என்றான் அஸ்வபதி நாரதரிடம்.
''ஒரே ஒரு குறை மட்டும் உண்டு அஸ்வபதி. அதைத்தான் சொன்னேன் உன் பெண் சாவித்திரி தவறு செய்துவிட்டாளோ '' என்று. அந்த ஒரு குறை அவன் எல்லா நற்குணங்களையும் சாப்பிட்டு விடும் அளவுக்கு ஒரு பெரிய குறை யாகும். ஆம் இன்றிலிருந்து சரியாக ஒரு வருஷத்தில் சத்யவான் மரணம் அடைவான். எந்த விதத்திலும் யாரும் அவனை மரணத்திலிருந்து காப்பாற்றமுடியாது. இது விதி.''
அஸ்வபதி உடனே ''சாவித்திரி நீ வேறு ஒருவனை விரும்பி ஏற்றுக்கொள்ளம்மா. நாரதர் சொன்னதை கேட்டாயா? சத்யவானை மறந்து விடு'' என்றான்.
No comments:
Post a Comment