ஐந்தாம் வேதம் J.K. SIVAN
மஹாபாரதம்
தான வீர சூர கர்ணன்
'ஜனமேஜயா, குந்தி போஜனின் அரண்மனை
யிலிருந்து துர்வாச மகரிஷி மிகவும் திருப்தி
யோடு குந்தி போஜனை வாழ்த்திவிட்டுச் சென்றார்.
அவர் சென்ற பிறகு ப்ரிதா யோசித்தாள். சிறு பெண்ணல்லவா? துர்வாச ரிஷி அளித்தது என்ன மந்திரம்?. இதால் என்ன பயன் கிடைக்கும் என்ற ஆர்வம் மேலிட்டது. அவள் கண் எதிரே கிழக்கே சூரியன் ஜகஜ்ஜோதியாக உதயமாகிக் கொண்டிருந்தான். ரிஷி சொன்ன மந்திரத்தை சூரியனைப் பார்த்துக்கொண்டே கண்ணை மூடி ஜெபித்தாள். அடுத்த கணமே அவள் முன்னே சூரியன் நின்றான்.
''பெண்ணே என்னை அழைத்ததன் காரணம் என்ன? உனக்கு என்னால் ஆகக்கூடியது எது இருந்தாலும் உடனே நிறைவேற்றுகிறேன்''
''ஐயோ தெய்வமே, ஏதோ ஒரு ஆர்வத்தால் இந்த மந்திரத்தை ஜெபித்து உங்களை வரவழைத்தேன். நீங்கள் திரும்பி போகலாம். எனக்கு ஒன்றுமே தேவையில்லை'' என்றாள் ப்ரிதா.
''பெண்ணே என்னால் அப்படி திரும்பிப் போக முடியாது. உனக்கு ஏதேனும் வரம் இருந்தால் அதை நிறைவேற்றியபிறகே எனக்கு போக அனுமதி. உனக்கு என்னைப் பார்க்கும் தெய்வீக பார்வை கொடுத்திருக்கிறேனே பார். இந்திராதி தேவர்கள் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உன்னால் நான் ஏமாற்றப்பட்டதாக தோன்றினால் உனக்கும், உன் குடும்பத்துக்கும், இந்த மந்திரத்தை உனக்கு உபதேசித்த ரிஷிக்குமே சாபம் நேருமே. எனவே உரிய காலத்தில் என் சக்தியால் உனக்கு ஒரு புத்திரன் பிறப்பான், அவன் நீ என்னிடம் அதிசயித்து விரும்பிய கவச குண்டலங்களோடு பிறப்பான். அவை எனக்கு அதிதியால் கொடுக்கப்பட்டவை. அவற்றை என் மகனான அவனுக்கு அளிப்பேன். ஒருவராலும் வெல்லமுடியாத சக்தியை அவற்றால் அவன் பெறுவான்'' என்று சூரியன் அனுகிரஹித்தான்.
பிறகு தான் யோசித்தாள் ப்ரிதா எனும் குந்தி. அடடா, கன்னியாகவே தாயானேன் என்ற அவச்சொல் எனக்கு நேருமே, இதை உலகம் ஏற்காதே என்று கருதி தாதியர் யோசனைப்படி தனக்கு பிறந்த குழந்தையை மிதக்கும் ஒரு பிரம்புப் கூடைப் பெட்டியில் பேழையில் வைத்து மெத்து மெத்தென்ற தலையணையோடு போர்த்தி அஸ்வா என்கிற நதியில் இரவில் அதன் போக்கில் அவர்கள் கொண்டுபோய் விட்டு விட்டார்கள். ப்ரிதாவிற்கு அந்த குழந்தையின் நினைவே இருந்தது. பிறக்கும்போதே கவச குண்டலங் களோடு குட்டி சூரியன் போலவே இருந்தான் அந்த குழந்தை.
''என் மகனே, நீ நல்ல ஒரு அரச குலத்தை அடைந்து பேரும் புகழும கொண்டு வாழவேண்டும். சூரியன் உன்னைக் காப்பாற்றட்டும்.'' என கண்களில் நீரோடு மனத்தில் அன்போடு பிரார்த்தித்தாள் .
பெட்டி அஸ்வா நதியில் மிதந்து அதிலிருந்து சர்மன்வதி நதியில்கலந்து அங்கேயிருந்து யமுனையை அடைந்தது மட்டுமல்லாமல் யமுனை அதை கங்கையில் மிதக்கவிட்டாள் .கங்கா பிரவாஹத்தில் மிதந்த பெட்டி சம்பா நகரத்தை ஒட்டி கரையோரமாக சென்றது. குழந்தை எந்த வித கஷ்டமுமில்லாமல் சிரித்துக்கொண்டே மிதந்தது.
சுத குலத்தை சார்ந்த அதிரதன் என்பவன் திரிதராஷ்ட்ரனின் நண்பன். அவன் கங்கை நதிக்கு தன் மனைவியோடு ஸ்நானம் செய்ய வந்தவன் கண்ணில் அந்த பெட்டி பட்டது. அதை தடுத்து நிறுத்தி வெளியே எடுத்து திறந்து பார்க்கையில் கவச குண்டலங்களோடு கண்ணைப் பறிக்கும் அழகோடு ஒரு ஆண் குழந்தை! என்ன ஆச்சர்யம். அவர்களுக்கோ குழந்தை பாக்கியம் இல்லை.
''தெய்வங்களாக பார்த்து எனக்கு இந்த தேவலோக குழந்தையை பரிசாக அளித்திருக்கிறார்கள். நான் பாக்யவான்'' என்றான் அதிரதன். குழந்தைக்கு வசு சேனன், வ்ரிஷன் என்றெல்லாம் பேர் சூட்டி அதிரதன் என்கிற அந்த தேர்ப்பாகன் வீட்டில் குழந்தை வளர்ந்தான். ஒற்றர்கள் மூலம் ப்ரிதாவுக்கு தன் மகன் அங்கதேசத்தில் அதிரதன் மகனாக வாழ்வது தெரிந்தது. காலம் ஓடியது.அந்த சிறுவன் ஹஸ்தினாபுரத்தில் துரோணரிடம் தனுர் வித்தை கற்றான். துர்யோதனனின் நண்பனானான். கிருபர், துரோணர், பரசுராமன் ஆகியோரிடம் அஸ்த்ர வித்தை பயின்றான். காதில் குண்டலங்களோடு எப்போதும் காணப்பட்ட அவனை எல்லோரும் கர்ணன் என்றே அழைத்தார்கள்.
சுத குலத்தவனானாலும் கர்ண குண்டலங்கள் கொண்ட கர்ணனை வெல்ல ஒருவராலும் முடியாது என்று அறிந்ததால் தான் யுதிஷ்டிரன் கலங்கினான்'' என்று கதையை முடித்தார் வைசம்பாயனர்.
காலம் ஓடியது.
ஒருநாள் இந்திரன் ஒரு பிராமணனாக உருமாறி கர்ணன் முன் நின்றான்.
''வாருங்கள்'' என்று உபசரித்தான் கர்ணன்
''ப்ராமணரே , உங்களுக்கு என்ன வேண்டும்? பொன்னா, மண்ணா, பணிப்பெண்ணா, பசு கன்று, ஏதாவது வேண்டுமா? கேளுங்கள் தருகிறேன்''
''இதெல்லாம் எனக்கு தேவையில்லை. அவற்றைக் கேட்பவர்களுக்கு நீ கொடு. உன்னை நாடி, வேண்டும் என்று வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாத வள்ளலே, எனக்கு உன்னுடன் பிறந்த கவச குண்டலங்களைக் கொடு. வேறெதுவும் வேண்டாம்'' என்றான் இந்திர பிராமணன்.
வந்தவன் இந்திரன் என்று கர்ணனுக்கு புரிந்தாலும், சூரியன் அறிவுறைப்படி ''உன்னுடைய சக்தி ஆயுதங்களை தந்து விட்டு எனது கவச குண்டலங்களைப் பெற்றுச் செல். கர்ண குண்டலங்கள் என் உயிரைப் பாதுகாப்பவை. அவற்றை இழந்தால் என்னுயிரை காப்பாற்றிக் கொள்ள எனக்குத் தக்க ஆயுதங்கள் அவசியம் இல்லையா '' என்கிறான் கர்ணன்.
''அப்படியே, வஜ்ராயுதத்தைத் தவிர மற்ற ஆயுதங்களைத் தருகிறேன். ஒரே ஒருமுறை மட்டுமே அவை உன்
எதிரிகள் மேல் பிரயோகப்படும். பிறகு என்னிடம் வந்து விடும்'' என்கிறான் இந்திரன்.
இதோ இந்த வாசவி ஆயுதம் எவராலும் எதிர்க்க முடியாதது. . எனவே உனக்கு எப்போது ஆபத்து என்று தோன்றுகிறதோ அப்போது இந்த வாசவியை உபயோகப் படுத்து. ஒரு தடவைக்கு மேல் உபயோகப்படாது '' என்று இந்திரன் ஆயுத பரிமாற்றம் செய்து கர்ணனின் கவச குண்டலங்களைப் பெற்றுச் செல்கிறான்.
'' ஆம் இதை என் ஒரே எதிரி அர்ஜுனன் மீதே பிரயோகிப்பேன். இல்லையென்றால் அவன் என்னைக் கொன்றுவிடுவான்'' என்கிறான் கர்ணன்.
''கர்ணா, நீ யார் மீது அதை பிரயோகப்படுத்த நினைக்கிறாயோ அவன் ஸ்ரீ நாரயாணனால் காக்கப்படுபவன். முயற்சி செய்து பார் '' என்கிறான் பிராமணனாக வந்த இந்திரன்.
கர்ணன் தனது உடலிலிருந்து வாளினால் அறுத்து பிரித்தெடுத்த கவச குண்டலங்களின் காயங்கள், வடுக்கள் வெளியே எவர் கண்ணுக்கும் தெரியாவண்ணம் இந்திரனால் வரம் பெற்று அவன் உடல் அழகுறுகிறது.
No comments:
Post a Comment