ஐந்தாம் வேதம் J.K. SIVAN
மஹா பாரதம்
சத்தியவானின் முடிவு.
அம்மா சாவித்திரி குழந்தே, இந்த சத்யவான் உனக்கு வேண்டாம் அம்மா. அவனுக்கு சிலகாலம் தான் வாழ்வு மரணம் எதிர் நோக்கி இருக்கிறது அவனை. வேறு ஒருவனை கணவனாக தேர்ந்தெடுப்பாய்'' என்று விளக்கினார் அப்பா அஸ்வபதி. சாவித்திரியோ பிடிவாதமாக இருந்தாள் .
''அப்பா மரணம் என்பது ஒவ்வொருவருக்கும் வாழ்வில் ஒருமுறை தான் வரும். ஒரு பெண் ஒருவனைத்
தான் மனதில் ஏற்றுக்கொள்வாள். ஒருதரம் முடிவு செய்தது செய்ததேதான். மாற்றமில்லை. என் கணவன் சத்யவானே. மனதில் குடிகொண்ட அவன் தான் என் மணவாளன். ''
'அஸ்வபதி, உன் பெண் சாவித்திரி தீர்மானமாக சொல்வது அவள் குணத்தை சீர் தூக்கி காட்டுகிறதே. அவள் முடிவை ஏற்றுக்கொள். அதுவே நல்லது'' நாரதர் வாழ்த்தி விட்டு சென்றார். விஷயம் தெரிந்து கண் பார்வை அற்ற த்யுமத்சேனன் தவித்தான். சாவித்திரி ஒரு பெரிய அரசனின் மகள், எவ்வாறு நடுக்காட்டில் ஒரு ஆஸ்ரமத்தில் வாழ்க்கை நடத்துவாள். சத்தியவான் இப்போது ஒரு சாதாரணன் தானே. இது பொருத்தமில்லாதது''என்று வருந்தினான் சத்தியவானின் தந்தை.
சாவித்திரி முடிவை மாற்றிக் கொள்ளாமல் சத்யவான் அவள் கணவன் ஆனான். காட்டில் கணவனையும் அவன் பெற்றோரையும் கண் போல் காத்து பணிவிடை செய்தாள். என்றாலும் அவள் மனதில் நாரதன் சொன்னது நெஞ்சை உறுத்தியது. சத்யவான் வெகுசீக்கிரம் மரணம் அடைவான் என்பது தாங்கமுடியாத சோகமாக இருந்தது அவள் மனதுக்கு.
''யுதிஷ்டிரா கேள், ''சத்யவானின் மரண சமயம் வந்தது. இன்னும் 4 நாளில் என் சத்யவான் என்னை விட்டு பிரிவான்'' என்கிற எண்ணம் சாவித்திரியை வாட்டியது . அன்ன ஆகாரமின்றி 'த்ரி ராத்ர' விரதம் பூண்டாள்.
''என் கண்ணே, மூன்று இரவு பகல் கண் மூடாமல், ஜலபானம் கூட செய்யாமல் இப்படி கடினமான ''த்ரி ராத்ர '' விரதம் இருப்பது கஷ்டம் அம்மா '' என்றனர் வயதான சத்யவானின் பெற்றோர். நான்காம் நாள் காலை சூரியன் உதித்தான். வழக்கம்போல் சத்தியவான் மரம் வெட்டும் கோடாலியோடு காட்டுக்கு புறப்பட்டான். '' நானும் உங்களோடு வருவேன்'' என்றாள் சாவித்திரி.
''என்றுமில்லாமல் இன்று ஏன் நீயும் கூட வருகிறேன் என்கிறாய்? வன விலங்குகள் உலவும் இடம், மிகக் கடினமானது காட்டுப் பாதை. மேலும் மூன்று நாளாக இரவும் பகலும் நீ ஏதோ விரதமிருந்து சக்தியின்றி இருக்கிறாயே. எப்படி நெடுந்தூரம் காட்டுக்குள் உன்னால் நடக்கமுடியும்.''
''இல்லை என் பிராண நாதா, எனக்கு களைப்போ, கஷ்டமோ, சக்தியின்மையோ எதுவுமே இல்லை. நான் உங்களோடு வருவேன். என்னை தடுக்க வேண்டாம்.''
''எனக்கு அப்படிஎன்றால் ஆட்சேபணை எதுவும் இல்லை, வயதானஎன் பெற்றோர் அனுமதியைப் பெற்று வா. அவர்கள் குறை ஏதும் மனதில் கொள்ளக்கூடாது.''
இதுவரை ஒருநாளும் அந்த ஆஸ்ரம வாசலை தாண்டாத சாவித்திரி இன்று கணவனுடன் காட்டுக்குப் போகிறேன் என்றபோது முதியவர்கள் தடுக்கவில்லை. அவர்களுக்கு காரணமும் தெரியுமே . வழியெல்
லாம் முதன் முறையாக அந்த வனத்தை சுற்றிப் பார்த்துக்கொண்டே சென்ற சாவித்திரிக்கு எல்லாமே புதிதாக இருந்தது. அரண்மனையில் வளர்ந்தவள் அல்லவா?.
'' என்ன யுதிஷ்டிரா திகைத்து உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்?. கேள்.
'' மகரிஷி சாவித்ரியை நினைத்தேன் என் மனம் நெகிழ்ந்துவிட்டது. கை கால்களில் சக்தி அற்று போய்விட்டேன். என்ன நடக்கப்போகிறதோ என்கிற கவலை......'' என்றான் யுதிஷ்டிரன்
''சொல்கிறேன். சாவித்திரி அந்த கொடிய நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தாள். சத்யவானோ, ஞாபகமே இல்லாமல், அல்லது தனக்கு நேரப்போவதை அறியாமல் கனிகளைக் கொய்தான், பைகளில் நிரப்பினான். மரங்களை வெட்ட தொடங்கினான். வியர்த்தது. உடம்பு வலி கண்டது.
''சாவித்திரி , எனக்கு என்னவோ இன்று உடல் தலை எல்லாம் வலிக்கிறது. என்னால் நிற்கமுடியவில்லை. சற்று படுக்கிறேன்'' என்று சாய்ந்தான்.
அவள் அவன் தலையைத் தனது மடியில் வைத்து படுக்க வைத்தாள் .''நாரதர் சொன்ன நேரம் வந்து
விட்டதோ தெய்வமே, ' என அவள் எண்ணிய நேரம் அவள் கண் எதிரே கரிய நெடிய ஒரு உருவம், சிவப்பு ஆடை உடுத்து தலையில் சிவப்பு கிரீடத்தோடு, சூரியனின் பிரகாசத்தோடு கையில் ஒரு கயிறோடு எதிரே நின்றது. சத்தியவானை உற்றுப் பார்த்தது.
சாவித்திரி சத்யவானின் தலையை மடியில் இருந்து எடுத்து மெதுவாக தரையில் வைத்துவிட்டு எழுந்து இரு கரம் கூப்பி அந்த உருவத்தை பார்த்து ''நீங்கள் யாரோ தெரியவில்லையே. ஒரு தெய்வம் போல் இருக்கிறீர்கள். யார் நீங்கள்? எதற்கு இங்கு வந்தீர்கள்? '' என்றாள்.
No comments:
Post a Comment