Friday, February 8, 2019

A DUMB GIRL


பேசா மடந்தை கதை .... J.K. SIVAN

நமக்கு தெரிந்த ஒரு சில விஷயத்திலிருந்தே ஆரம்பிக்கிறேன்.

குணத்திற்கும் பெயருக்கும் சம்பந்தமில்லாமலேயே இருப்பவர்களை நமக்கு தெரியும். புண்ய கோடி என்று பெயர் இருந்தாலும் பர்சை தர்மம் செய்ய திறக்காதவர், எச்சில் கையால் காக்கா ஒட்டாதவர் என்ற பட்டம் பெற்றவர்கள் -- இந்த ரகத்தில் எத்தனையோ கர்ணன் தர்மன் பெயர்கள் கொண்டவர்களையும் பார்க்கிறோம். கோடீஸ்வரன் என்று பெயரோடு கடனில் வாழ்ந்து கடனிலேயே மறைந்திடும் ஏகாதசிகள் எத்தனையோ பேர்.

கருப்பாக இருந்ததால் கிருஷ்ணன். கிருஷ்ணனின் சகோதரன் ராமனுக்கு இளம் வயதிலேயே அதீத பலம் இருந்ததால் 'பலராமன்'' என்று பெயர். இவர்கள் பெயருக்கு பொருத்தமானவர்கள்.

இப்படித்தான் ஒரு பெண் இருந்தாள் . சுபாஷிணி . ''இனிமையாக பாஷை பேசுபவள்'' என்று பெயர். ஆனால் அவள் பிறவியிலேயே ஊமை. இறைவன் பாரபக்ஷம் அற்றவனல்லவா. ஒன்றில்லாவிட்டால் மற்றவற்றை பரிபூரணமாக தருவானே. கொள்ளை அழகு அவளுக்கு. கண்களே பேசும். பிறகு வாய் எதற்கு? உதடு அசைவிலேயே மனதில் உள்ள எண்ணங்களை கண்களும் கைகளும் பேசியது. பேசத்தெரிந்தால் மட்டும் போதுமா? ஜப்பானிய மொழியிலே நான் சொல்வது உங்களுக்கு புரியுமா? அல்லது இந்த கட்டுரையை பிரேசில் காரர் தான் படிக்க முடியுமா. எனவே மொழி தெரிந்தாலும் அதை வெளிப்படுத்த அது ''மொழி பெயர்க்கப்'' படவேண்டுமே. கண்ணுக்கு இந்த நிபந்தனை இல்லை. எங்கும் எப்போதும் அது மனதை சுலபமாக வெளிப்படுத்தும்.

சந்திப்பூர் என்பது அவள் ஊர். சுபாவை மற்ற குழந்தைகள் விளையாட சேர்த்துக் கொள்ள வில்லை.
அவள் தனிமையிலேலே விளையாடினாள் . தன் மனதிற்குள்ளேயே அவர்களோடு பேசி விளையாடினாள்
சந்திப்பூர் அவளைப்போல் அமைதியான ஒரு அழகிய கிராமம். ஊரின் நடுவே ஒரு ஆறு. இரு கரையிலுமாக கிராம வீடுகள். தென்னை, மா, பல, வாழை மரச் சோலைகள் .அந்த மரச் சோலைகள் தான் சுபாவின் சாம்ராஜ்யம். அந்த ஆற்றில் நீர் வற்றியதே இல்லை. வெள்ளமும் வந்ததில்லை. அந்த ஊருக்கு அது குளிக்க குடிக்க ஜீவ நதி.

பாணி காந்தா என்பவர் சுபாவின் அப்பா, ஒரு நடுத்தர குடும்பம். அவர் வீடு நதியைப் பார்த்தவாறு அதன் கரையில். வீட்டிலிருந்தே படகுகள் வருவதும் போவதும் நன்றாக பார்க்கலாம். சுபா எப்போதும் அந்த நதிக்கரையிலே அமர்ந்திருப்பாள். தென்றல், பறவைகள், நதி படகுகள், மரங்கள், எல்லாமே அவள் பாஷையில் அவளோடு பேசும். இரவில் படகு நடமாட்டம் இருக்காது.அந்தகாரம், மௌனம் -- இது அவளின் அமைதியோடு ஜோடி சேரும்.

சுபாவுக்கு நண்பர்கள் உண்டு. இரண்டு பசுக்கள். அவை அவளோடு சந்தோஷமாக பழகும். அவற்றின் பெயர்கள் சர்பாஷி, பங்குலி. சுபாவின் உதடசைவுக்கு அர்த்தம் தெரியும் அந்த பசுக்களுக்கு. அவள் மொழியிலேயே பதில் சொல்லும். அவள் காலடி சப்தம் புரியும். அகன்ற கண்ணாலேயே, நாக்கால் நக்கியே, வாலை ஆட்டியே பதில் சொல்லும். அவள் கொஞ்சுவது, திட்டுவது, பாடுவது எல்லாமே அவற்றிற்கு தெரியும். அவற்றின் கழுத்தை கட்டிக்கொண்டபோதே அர்த்தம் புரிந்துவிடும். கை அவற்றின் கழுத்தை தடவும்போது பாஷை புரியும். சர்பாஷியைக் கொஞ்சும்போதே, பங்குலி அருகில் வந்து சுபாவின் முகத்தை நக்கி என்னையும் கொஞ்சு என்று கேட்கும்.

யாராவது அவளை விமர்சித்தபோது, கேலி செய்தபோது, நெஞ்சை சுட்ட போது பசுக்களிடம் ஓடி வருவாள். அவை ஆறுதல் சொல்லும். அவள் கண்ணீரை காதால் துடைக்கும். நாக்கால் அவள் முகத்தை பாசத்தோடு வருடும். தமது கொம்பால் அவள் கைகளை, முதுகை, இடுப்பை, வயிரை மெதுவாக தடவிக் கொடுக்கும். வீட்டில் ஆடுகளும் பூனைக் குட்டிகளும் அவளுக்கு நண்பர்கள் தான். அவளின் நிழல்கள் அவை. பாதிநாள் பூனைக்குட்டிகள் அவள் மடியில் தான் அவள் மனதாலேயே சொல்லும் கதைகளைக் கேட்டுக்கொண்டு' சுகமாக தூங்கும். அவள் விரல்கள் அவற்றை தடவிக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

பிரதாப் என்ற பசு மேய்க்கும் பையன் அவளிடம் பிரியமாக பழகுவான். உருப்படாதவன் என்று அவன் பெற்றோர் அவனை தண்ணீர் தெளித்து விட்டுவிட்டனர். ஊரெல்லாம் சுற்றிக்கொண்டே திரிவான். இரண்டு புறக்கணிக்கப்பட்ட, புண் பட்ட ஜீவன்கள் நட்பாக இருந்ததில் என்ன ஆச்சரியம்.? ஆற்றங்கரையில் மணிக்கணக்காய் மீன் பிடிக்க உட்காருவான். ஒரு மீனும் அவனிடம் அகப்படாது. சுபா அவனுக்கு நண்பியாவது இதனால் சுலபமாகியது ஏனென்றால் அவளுக்கும் ஆற்றங்கரை தானே வீடும் நண்பர்களும் கூடும் இடமும். அவன் வெயிலில் ஆற்றங்கரையில் மீன் பிடிக்க காத்திருக்கும்போது சுபா கரையில் புளியமர நிழலில் அமர்ந்திருப்பாள்.

சுபாவின் மனதில் பாவம் இந்த பிரதாப்புக்கு ஒரு மீன் கூட கிடைக்கவில்லையே. நாம் நீரில் ஒரு தேவதையாக இருந்தால் நதியின் அடியில் சென்று நிறைய மீன்களை கொண்டுவந்து அவன் வலையில் போட்டாவது அவனுக்கு உதவலாமே என்று தோன்றும். தனக்குள் சிரிப்பாள் .ஒருவேளை அவனும் நீரில் மூழ்க முடிந்தால், நீரின் அடியில் வந்து அவளது சாம்ராஜ்யத்தில் அவள் அரசியாக அங்கு வீற்றிருப்பதை கண்டு மகிழ்வானே'' என்ற எண்ணம் சிரிப்பை வரவழைக்கும். ச்சே. இதெல்லாம் முடிகிற காரியமா?

சுபா வளர்ந்தாள். இவளுக்கு எப்படி கல்யாணம் பண்ணுவது? பெற்றோரை கவலை தின்றது. ஒருநாள் இரவு சுபா எழுந்தாள் . கதவைத் திறந்து வெளியே அமைதியான முழுநிலவின் ஒளியில் நடந்தாள். உலகமே சுகமாக தூங்கிக் கொண்டிருந்ததே. சுகமும் துக்கமும் அவளை ஒன்று சேர்ந்து தாக்கியது. ஆற்றங்கரையில் அமர்ந்தாள் . ஆற்றில் நீர் மட்டும் அவளைப் போல் தூங்காமல் சப்தமின்றி ஓடிக்கொண்டிருந்தது.

ஊரில் இந்த ஊமைப் பெண் கல்யாணம் பற்றி எல்லோரும் கேலியாக பேசுவது பாணி காந்தாவுக்கு வருத்தம் தந்தது. இந்த கிராமத்தை விட்டு கல்கத்தா சென்று விடுவோமா என்று தோன்றியது. கல்கத்தா புது இடம். பெரிய நகரம். சுபாவுக்கு கண்களில் நீர். அவளது நண்பர்கள் அனைவரையும் அல்லவா விட்டு தனிமைப் படவேண்டும்? அவள் சாம்ராஜ்யத்தை துறக்கவேண்டுமே. கண்களால் பெற்றோர் முகத்தை அவர்கள் எண்ணத்தை புரிந்து கொள்ள முயன்றாள் .

ஒருநாள் மத்யானம் பிரதாப் மீன் ''பிடித்து'' கொண்டிருந்தான்.

''சுபா உனக்கு கல்யாணமாமே. என்னை மறக்கமாட்டியே'' என்று சந்தோஷமாக கேட்டான். அடிபட்ட பறவையாக சுபா அவனை பார்த்தாள் .''நான் உனக்கு என்னடா துரோகம் செய்தேன்?'' பார்வை பேசியது. இல்லை, கேட்டது. புளியமர நிழலை விட்டு எழுந்து போய் விட்டாள் .

வீட்டில் அப்பா சாப்பிட்டு விட்டு சுருட்டு பிடித்துக்கொண்டு படுக்கையில் அமர்ந்திருந்தார். அவர் காலடியில் தொப் பென்று விழுந்து சுபா கதறினாள். அவளை எடுத்து அணைத்து முதுகு தடவினார். முகமோடு முகம் வைத்தபோது அவர் கன்னங்களில் அவள் கண்ணீர்.

மறுநாள் கல்கத்தா பயணம் முடிவாகிவிட்டது. சுபா புழக்கடை ஓடினாள். பசுக்கள் வாலை ஆட்டி வரவேற்றன. ''என் கண்களா, உங்களை விட்டு போகிறேன். என்னை பிடித்துக்கொண்டு போகிறார்கள். என் செய்வேன். என் உயிர் என் மனம் இங்கேயே இருக்கிறது. உங்களோடு.

அன்று இரவு சந்திரன் 10வது நாளாக வளர்ந்திருந்தான். இரவு படுக்கை விட் டு எழுந்தாள். நதிக்கரை புல்லில் அமர்ந்தாள் .''நதியம்மா. இனி நாம் சந்திக்கப் போவதில்லை. எப்படி என் மனம் உடைந்திருக்கிறது தெரியுமா உனக்கு? பிரியவே மனம் இல்லை. என் பிரிய சகி உன்னை அணைக்க என் இருகைகளும் போதவில்லையே அம்மா. உன்னை விட்டு போகாதபடி பண்ணு. என் பூனைக்குட்டிகளா, என்னை மறக்காதீர்கள். நான் வேறு வழியின்றி உங்களைப் பிரிகிறேன்.''
சுபா கிராமத்தை விட்டு கல்கத்தா போய்விட்டாள் . ஒருநாள் சுபாவுக்கு கல்யாணம் நிச்சயமாகியது
அழுதாள். அம்மா கண்டித்தாள். தலை அலங்காரம், வண்ணப் புடவை. நகைகள். சிங்காரம். அவளது இயற்கை அழகை இவை குலைத்தன. யாரோ ஒரு மாப்பிள்ளை தன் நண்பனோடு அவளைப் பெண் பார்க்க வந்தான். அப்பா அம்மாவுக்கு ரொம்ப எக்சைட்மென்ட். யாகத்தில் பலிக்கு ஆடு தயார். ''மாப்பிள்ளை என்கிற வயசானவன் ''பெண் பரவாயில்லை ''என்றான்.

அவள் கண்களில் நீரைக் கண்டான். பாவம் பயமோ, இளகிய மனமோ, தாய் தந்தையரை விட்டு பிரியவேண்டுமே என்ற துயரம் போல் இருக்கிறது என்று நினைத்தான். ஒரு நல்ல நாளில் கல்யாணம் நடந்தது.

அந்த வாயில்லா ஜீவனை புது இடத்தில் விட்டு விட்டு பெற்றோரும் திரும்பினர். அவள் யாரையும் ஏமாற்ற வில்லையே. சில வீடுகளில் நாய் குட்டி போட்டுவிட்டால். அதை எங்காவது இரக்கமின்றி தூர கொண்டு விட்டு விடுகிறார்கள். பாவம் அவை புது இடத்தில் அங்கும் இங்கும் அலையும். தெருவில் நடக்கத்
தெரியாமல் ஏதோ ஒரு வண்டி ஏறி செத்துப் போகும்.

பத்து நாள் கழித்து தான் பிள்ளை வீட்டாருக்கு பெண் ஊமை என்று தெரிந்ததா?
அவள் பொய் சொல்லவில்லை. யாரையுமே ஏமாற்றவில்லையே.
அவர்கள் ஆத்திரம் அவள் மீது பாய்ந்தது.
அவள் மனம் அழுததை எவரும் கேட்கவில்லை.
அவள் தான் ஊமை. அவர்களுமா செவிடு ? .

இது ரபீந்திரநாத் தாகூர் எழுதிய சுபா என்கிற சிறுகதை. இதை படித்தபிறகு மனதை பிழியவில்லை என்றால் ரெண்டு விஷயம் நிச்சயம். உங்களுக்கு மனதே இல்லை. அல்லது என்னால் தாகூரின் உணர்ச்சியை கொண்டு வரமுடியவில்லை என்று தான் அர்த்தம். பாவம் அந்த தாடிக்காரர் இதற்கெல்லாம் பொறுப்பில்லை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...