Sunday, February 24, 2019

HANUMAN



வானர யூத முக்யன் J K SIVAN
''தாத்தா சார் என்ன பண்றீங்க?''''
''ஐநூறு ரூபா காகிதம் கையில் இருந்தால் பிரச்னையாம். என்னிடம் கொஞ்சம் இருக்கிறது.அதை எல்லாம் கொண்டுபோய் பேங்க் அக்கௌண்டில் கட்டிவிட போகப்போறேன்.''
''பெரிய க்யூ இருக்குமே தாத்தா சார்.''
''இதைவிட பெரிய பெரிய கியூலெல்லாம் நின்னவன் நான். இரண்டாம் உலக மஹா யுத்த காலத்தில் அரிசி கிடைக்காம பஞ்சம் வந்தபோது ஒரு நாள் முழுதும் நின்னு ஒரு படி அரிசி வாங்கியிருக்கேன். பிரேசில் அரிசி என்பார்கள் . வெள்ளையா நீளமாக இருக்கும். ரப்பர் மாதிரி இருக்கும் சாதம். வேதாந்திகள் போல ரசம், மோர் எதிலும் கூட சேராமல் தனியாக இருக்கும். அப்போதெல்லாம் படி தான், கிலோ வரவில்லை.
பர்மா ரைஸ் என்று ஒரு அரிசி. சாதம் வடித்தால் ஏதோ க்ளோரின் வாசனை அடிக்கும். பசிக்கு அதையும் சாப்பிட்டிருக்கிறோம்''
''எதிரே அதென்ன புத்தகம்?''
''ஓ இதை கேக்கறியா​?​. அது துளசி தாசர் ராமாயணம்.ஹிந்திலே ''ராமச்சரித மாநஸ் '' என்று ரொம்ப அழகா எழுதியிருந்ததை இங்கிலீஷீலே மொழிபெயர்த்தது உத்தமமான ராம பக்தர்.எப்போ இருந்தார்னா, கிட்டத்தட்ட நானூறு வருஷம் முன்னாலேன்னு என்று சொல்லலாம்.''
''கம்ப ராமாயணம் மாதிரியா தாத்தா சார்?
கம்பர் தமிழ் தெரிந்த எல்லோருக்கும் புரியமாட்டாரே. இதை ஹிந்திக்காரா எல்லோருமே படிக்கும்படியா பக்தியை பிழிஞ்சு எழுதியிருக்கார் துளசிதாசர்.

அதுவும் அவர் எழுதியபோது முழுக்க முழுக்க முஸ்லீம் ஆட்சி. அப்படி இருந்தும் எல்லா ஹிந்துக்களும் அதை படிச்சு சந்தோஷப்பட்டா. காரணம் அதிலே வர ஆஞ்சநேயன் தான்.

உனக்கு தெரியுமா ஹனுமான் சாலிசா? . இதே துளசி தாசர் எழுதினது தான். வீட்டுக்கு வீடு ஒலிக்கிறதே. மண் புழு மாதிரி இருக்கிறவன் கூட அனுமன் சாலிசா படிச்சா எங்கிருந்தோ அவர் கிட்டே இருந்து அவனுக்கு ஒரு வீரம் வந்து மஹா பலசாலி, தைரியசாலி ஆயுடுவான். அப்படி ஒரு சக்தி அதுக்கு.

துளசிதாசர் ஹநுமானோடு நேருக்கு நேரே பேசுவார் என்று சொல்றதுண்டு.. ரெண்டு பேருக்குமே மூல நக்ஷத்திர ஜனனம். ஹநுமானுக்கு '' வாத ஜாதன்'' என்று ஒரு பெயர் உண்டு. வாதம் என்றால் வாயு. குருவாயூரை வாதபுரி என்று சொல்கிறோமே அது போல். ஜாதன் என்றால் பிள்ளை. வாயுவின் பிள்ளை. வாதாத்மஜன். ஒரு ஸ்லோகத்தில் துளசிதாசர் ஆஞ்சநேயனை ஞானிகளுக்குள்ளே முதன்மையானவன் என்று வர்ணிக்கிறார். ''ஞானிநாமக்ரண்யன்''

''புத்திர் பலம் அசோதைர்யம், நிர்பயத்வம், அரோகதா,அஜாட்யம் வாக்படுத்வம்'' எல்லாம் கொண்டவன் ஹனுமான். புத்திமான், பலவான், தைர்யவான், பயம் கிலோ எவ்வளவு என்று கேட்பவன், நவவியாகர்ண பண்டிதன். ராம பக்தன். சிரஞ்சீவி, சமய சஞ்சீவி, அவனைப் போற்றி சரணடைந்து வணங்கினால், நமக்கு புத்தி, பலம், தைர்யம், பயமின்மை, வியாதிகள் அகலும், வாக் சாதுர்யம் எல்லாம் கிடைக்குமே.

இதோ ஆஞ்சநேயன் விழா வழக்கம் போல் நங்கநல்லூரில் அடுத்தமாதம் வருமே, கோலாகலம் தான்.

31ம் தேதி டிசம்பர் இரவு கால் கடுக்க ஹனுமார் வால் போல நீண்ட வரிசையில் நின்று, (வரிசை ஆஞ்சநேயர் கோவிலிலிருந்து நங்கநல்லூர் மார்க்கெட் ரோடு வரை கூட நீண்டு விடும் ) ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஸ்ரீ ரமணி அண்ணா கையால் ஒரு ரூபா காசு வாங்கினது ஞாபகம் இருக்கிறது.

ஆஞ்சநேயருக்கு குரு ஸ்ரீ ராமன் தான். ராமரின் குலகுரு வசிஷ்ட ரிஷியிடமிருந்தும் ஹனுமான் யோக வாசிஷ்டம் என்ற ப்ரம்ம ஞானத்தை பெற்றவர். இன்னும் என்ன வேண்டும் அவரைப் பூஜிக்க.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...