ரத சப்தமி j.k. sivan
ரிஷி காஷ்யபர் மனைவி அதிதி. பூரண கர்ப்பவதியாக இருந்த ஒரு சமயம் கணவர் காஷ்யப ரிஷிக்கு உணவு பரிமாறிக் கொண்டி ருந்தபோது யாரோ கதவை தட்ட, அவள் யாரென்று பார்க்க, ஒரு பிராமணன் ''பசிக்கிறது தாயே, ஏதாவது சாப்பிட கொடு'' என்று கேட்டான்.
'' இரு கொண்டுவருகிறேன்'' என்று அதிதி மெதுவாக நடக்கமுடியாமல் நடந்து உள்ளே வந்து கணவருக்கு உணவு பரிமாறி அவர் சாப்பிட்ட பின் ஆகாரத்தை எடுத்துக்கொண்டு அந்த பிராமணனுக்கு கொடுத்தாள் .
''ஏன் என்னை காக்கவைத்து, லேட்டாக வந்து உணவைக் கொடுத்தாய். என்னை உதாசீனமா பண்ணினாய். உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்'' என கோபித்து சாபமிட்டான் வந்த பிராமணன்..
பிராமணனின் சாபத்தை கேட்ட அதிதி அதிர்ச்சியடைந்து, கணவர் காஸ்யபரிடம் விஷயத்தைச் சொல்ல, ''நீ இதற்கெல்லாம் வருந்தாதே அதிதி, அமிர்த உலகில் இருந்து அழிவில்லாத ஒரு மகன் நமக்கு கிடைப்பான்'' என்று ரிஷிகாஷ்யபர் வாழ்த்துகிறார். ஒளி பிரகாசமான சூரியன் அதிதியின் மகனாக பிறந்தான். ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலகை சுற்றி வருவதால் திதிகளில் ஏழாவது நாள் சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
ரத சப்தமி அன்று ஏழு எருக்கம் இலைகளை எடுத்து தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து ஸ்நானம் செய்வது வழக்கம் 12/2/2019 அன்று காலை ஸ்நானம் பண்ணும் போது தலையில் வைக்கும் எருக்க இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும்.
ரதசப்தமி அன்று தர்மம் செய்தால் பலமடங்கு புண்ணியம். இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன புராணங்கள். இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது. சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கின்றது புராணம்.
ரத சப்தமி அன்று தஞ்சை, சூரியனார் கோவில், திருமலை ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயங்களில் திருவிழா நடக்கும். . ஏழு மலைகளை ஏழு குதிரைகள் என கருதி ரதசப்தமி அன்று ஏழு வாகனங்களில் மலையப்பர் சுவாமி மாட வீதிகளில் ஊர்வலம் வருவார். ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலும் ரத சப்தமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஒரு கதை சொல்கிறேன்.
மகாபாரதப் போரில் அர்ஜுனனால் /அம்பை ஆணாகிய சிகண்டியால் யால் வீழ்த்தப் பட்ட பீஷ்மர் நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்ற வரத்தினால் உத்தராயணத்தில் உயிர் விட அம்புப் படுக்கையில் காத்திருந்தார். உத்தராயணம் வந்த பிறகும் உயிர் பிரியவில்லை. அவரைப் பார்க்க வேத வியாசர் வந்தார்.
''வியாஸா, நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை?" என்றார் பீஷ்மர்.
"பீஷ்மா, நீ மனோ வாக்கு காயத்தால் தீங்கு புரியாவிட்டாலும் கௌரவர்கள் செய்த தீமைகளைத் தடுக்காமல் இருந்தது பாபம். அதற்கான தண்டனையிலிருந்து தப்பமுடியாது.'' --- வியாசர்.
''ஆம் வியாஸா , சபை நடுவே பாஞ்சாலியின் உடையை துச்சாதனன் பறித்து அவமானம் செய்தபோது அதைத் தடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு. வியாஸா இதற்கு பரிகாரம் என்ன, விமோசனம் எது ?
'பீஷ்மா, எப்பொழுது உன் தவறை உணர்ந்து வருந்துகிறாயோ, அப்போது அகன்று விட்டாலும், செய்த கொடுமைகள் அனைத்தையும் கண்டும் காணமல் இருந்த கண்கள், செவி, வாய், தோள், கைகள், புத்தி உள்ள தலை ஆகியவை தண்டனை அனுபவிக்க வேண்டும்'' என்றார் வியாசர். உடனே சூரியனின் நெருப்பைக் கொண்டு தன்னைப் சுட்டுப் பொசுக்குமாறு வேண்டுகிறார் பீஷ்மர்.
''இதற்கு எருக்க இலையை காட்டிய வியாசர், ''அர்க்கம்'' என்றால் சூரியன். இதை தலையில் சூடியுள்ளார் சூரியன். பிரம்மச்சாரியான விநாயகருக்கு உகந்தது எருக்கஇலை.அதேபோல் பிரம்மச்சாரியான உன்னையும் இந்த எருக்கஇலையால் அலங்கரிக்கிறேன் என்றார் வியாசர்..
உடனே சிறிது சிறிதாக அமைதியடைந்த பீஷ்மர் ஏகாதசி அன்று உயிர்நீத்தார்''.
நமது பாபங்கள் தீர நாமும் எருக்க இலையை என்று தலையில் வைத்து ஸ்நானம் செய்வது இதற்காகத்தான்.
எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு காரணம் உண்டு அல்லவா?
No comments:
Post a Comment