2 ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா.....
என் பாட்டி எனக்கு சொன்ன கதை தொடர்கிறது.
ராஜா பிள்ளை பெற தவம் இருந்து பன்னிரண்டு வருஷம் காட்டில் இருந்தான். அந்த பெண்ணை பற்றிய நினைவே இல்லை. பெண் இப்போது ரதியாக வளர்ந்து விட்டாள் . கல்யாணம் பண்ணவில்லை இன்னும். ராணிக்கு வருத்தம்.''என் தங்ககுழந்தை கல்யாணம் ஆகாமலேயே இறந்துவிடுவாளோ?. பகவானே இது .என்ன சோதனை?'' ஆட்களை அனுப்பி ராஜாவை வீட்டுக்கு ஒரே ஒருநாள் வரும்படி அழைத்தாள். ராஜா வந்தான். ராஜாவுக்கு தன் கையாலேயே சமைத்து 64 வகை உணவு பரிமாறினாள். தங்க தட்டில் சாப்பிட்டான். அவனுக்கு பின்னால் நின்று அவன் பெண் அவனுக்கு மயில் தோகை விசிறியால் விசிறினாள். அவள் முகம் பார்த்து அழகில் மயங்கிய ராஜா ராணியிடம்
''யார் இந்த அழகிய தேவதை போன்ற பெண்?'' என்று கேட்டான்.
'' என் தலை எழுத்து என்று நெற்றியில் அடித்துக்கொண்டே ராணி. இது என் விதி. பெற்ற பெண்ணையே உங்களுக்கு தெரியவில்லையா?'' என்றாள் .
''ஆ... என் பெண்ணா இவ்வளவு அழகாக வளர்ந்து விட்டாள் ?''
''பின்னே என்ன பன்னிரண்டு வருஷம் ஆகவில்லையா நீங்கள் அவளை பார்த்து?''
"ஏன் அவளுக்கு இன்னும் கல்யாணம் பண்ணவில்லை?'' என்றான் ராஜா.
''நீங்க போய் காட்டிலே உட்கார்ந்து கொண்டால் அவளுக்கு எப்படி கல்யாணம் ஆகும்?' நான் எங்கே போய் வரன் தேடுவது ' என்றாள் ராணி.
''நாளைக்கு காலையில் எவன் என் கண்ணில் முதலில் படுகிறானோ அவனே என் பெண்ணுக்கு கணவன்..''
அடுத்த நாள் காட்டிற்கு கிளம்ப ராஜா நடந்த போது அரண்மனை வாசலுக்கு எதிரே சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்த ஒரு ஏழு எட்டு வயது பிராமண சிறுவன் முதலில் ராஜா கண்ணில் பட்டான்.
''இவனுக்கே என் பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பேன்'' -- ராஜாவின் உத்தரவை யார் மீற முடியும்?
''அப்புறம் என்ன ஆச்சு பாட்டி ?'' பாட்டியின் மேல் காலைப் போட்டுக்கொண்டு அவள் கழுத்தை கட்டிக்கொண்டு கேட்டேன்.
''கல்யாணம் ஆச்சு.'' - என் ஏழு வயது மனதில் நான் அந்த 7வயது சுள்ளி பொறுக்கிய பிராமண பையனாக இருக்க கூடாதா என்று தோன்றியது.மழை விடாமல் பெய்தது. படபட வென்று வாசல் கூரையின் மீது தண்ணீர் விழும் சப்தம். நானும் பாட்டியும் படுத்துக் கொண்டி ருந்த அறையில் மினுக் மினுக் என்று எண்ணெய் விளக்கு எரிந்தது. ஒருகணம் நானே பெயர் தெரியாத அந்த ராஜ்யத்தில் அந்த ராஜா ராணி என் எதிரில் நிற்க, நானே அந்த பையனாகவும், அந்த இளவரசியோடு கழுத்தில் மாலையோடு அவள் கணவனாக நிற்பது போலவும் தோற்றம். தலையிலிருந்து கால் வரை அவளுக்கு தங்க நகைகள்..
இப்போ இருக்கும் குழந்தைகள் பாட்டியை கேள்விக்கணையால் துளைத்து விடும். ஏன் ராஜா 12 வருஷம் வீட்டுக்கு வரவில்லை? எதற்கு அவனுக்கு பெண் ஞாபகம் இல்லை. ஏன் பார்க்கவில்லை? ஏன் கல்யாணம் பண்ணாமல் இருந்தான்? எப்படி எழுவயது ஏழை ப்ராமண பையனுக்கு ஒரு இளவரசியை கல்யாணம் பண்ணி கொடுத்தான் ? ஏன் யாரும் எதிர்த்து கேட்கவில்லை? அந்த பெண்ணுக்கு இந்த கல்யாணம் பிடித்ததா?'' பாட்டி திணறி போயிருப்பாள்.
இந்த கதையை எதிர்த்து நிறைய பேர் பேப்பரில் கண்டனம் செயதிருக்க மாட்டார்களா? -- அப்போது எனக்கு இதெல்லாம் தெரியாது.
''அப்புறம் என்ன ஆச்சு பாட்டி?''
''இளவரசி ஒரு பெரிய மாளிகை கட்டி, அதில் 7 அறைகள். கணவனை ஜாக்கிரதையாக உபசரித்து சேவை செய்தாள்.
''அப்புறம்?''
''அவனை பண்டிதர்களிடம் அனுப்பி அவன் பாடங்கள் கற்றான். அவன் கூட கற்றவர்கள் ''யார் இந்த அழகி உன்னுடன் இந்த அரண்மனையில் இருப்பவள்?'' என்று கேட்டார்கள். அவனுக்கு யார் அவள் என்று தெரியவில்லை. ஏதோ ஒருநாள் வாசலில் சுள்ளி பொறுக்கும்போது நடந்த அதிசயம் என்று தான் தெரியும்.
''அப்புறம்''
''நாலைந்து வருஷம் ஓடியது. அவன் நண்பர்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்: ''இந்த மாளிகையில் உன்னோடு இருக்கும் அந்த தேவதை யார்?''
ப்ராமண பையன் அன்று இளவரசியை கேட்டான். ''என் நண்பர்கள் எல்லோரும் என்னை தொளைத்து எடுக்கிறார்கள். நீ யார்? என்று கேட்கிறார்களே. எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை. நீ யார் என்று சொல்லு?'' என்றான்.
''இன்னொரு நாள் சொல்றேன்'' இப்படியே அவன் கேட்டுக்கொண்டே இருக்க அவளும் பதில் சொல்லாமல் இன்னொரு ஐந்து வருஷம் சென்றது.
நாளைக்குள் நீ எனக்கு பதில் சொல்லாவிட்டால் நான் இந்த அரண்மனையை விட்டு போய்விடுவேன்.'' என்று ஒரு நாள் பையன் சொன்னான்.
''நாளைக்கு கண்டிப்பாக சொல்கிறேன்'' என்றாள் இளவரசி.
மறுநாள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தவன் அவளிடம் ''இப்போது சொல். யார் நீ ?''
இன்று இரவு நீ சாப்பிட்டவுடன் படுக்கையில் நீ படுக்கும்போது உனக்கு பதில் கிடைக்கும். "
சரி ''. அன்று இரவு சாப்பிட்டுவிட்டு தங்க கட்டிலில் போய் படுத்தான் அவன். எப்படியும் இன்று எனக்கு தெரிந்துவிடும் அவள் யார் என்று.'' அவனுக்கு வெகுநாட்களாக தெரியாமல் இருந்த ஒரு விஷயம் இன்று தெரிய போகிறது.
அவன் சாப்பிட்ட மீதியை அவள் சாப்பிட்டாள் . படுக்கை அறைக்கு வந்தாள் .
ஐயோ இது என்ன கோரம்.?? என்று ஓ வென்று கதறினாள் அந்த இளவரசி.
''ஐயோ பாட்டி என்ன ஆச்சு என்று என் பாட்டியை கெட்டியாக இறுக கட்டிப் பிடித்துக் கொண்டு கேட்டேன்.
''கட்டிலில் இருந்த பூக்கள் நடுவில் இருந்து ஒரு கொடிய விஷ நாகபாம்பு அந்த பிராமண பையனை கடித்து அவன் மரணம் அடைந்து விட்டான்.''
'எனக்கு அழுகை வந்தது. ஐயோ பாட்டி அப்புறம் அவனுக்கு என்ன ஆச்சு ?''
பாட்டி என்ன சொல்வாள்... இதுவரை இட்டுக்கட்டி கதை சொன்ன பாட்டிக்கு என்ன தோன்றி இருக்கும்? நடக்க முடியாததை எல்லாம் நடக்க செய்தவள் இனி என்ன சொல்வாள்? எந்த பாட்டியால் இதை தொடர்ந்து சொல்ல முடியும்? என்ன சொல்வது? குழந்தைகள் மனது அந்த பையனை உடனே உயிர் பெற செய்ய ஆசைப்படும்.
ஒரு நாள் டியூஷன் வாத்தியார் கொடுமையிலிருந்து மீண்டு விட்டோம் என்று ஆசைப்பட்ட பையனுக்கு எப்படிப்பட்ட ஒரு சோக கதை? கதை திடீரென்று முடிந்துவிட்டதே . பாட்டியை மார்பில் குத்தினேன். ''சொல்லு பாட்டி சொல்லு. அவனுக்கு என்ன ஆச்சு.என்ன பண்ணினான் ?''
பாட்டி தொடர்ந்தாள் .''ஒரு பெரிய வாழை மட்டையில் அந்த பையனை படுக்க வைத்து ஆற்றில் விட்டார்கள்..ஆற்றில் வாழை மட்டை மிதந்து கொண்டே போயிற்று.....
இருட்டில், சிறிய எண்ணை விளக்கு வெளிச்சத்தில், விடாது பெய்யும் மழை நேரத்தில், குளிரில், என் மனதில் வாழை மட்டை மிதந்து போகிறதே... யாரவது மந்திரம் சொல்லி அவன் எழுந்து வரவேண்டும் என்ற ஆசை தோன்றியது..அப்படியே நினைத்துக் கொண்டே கண்கள் மூடி தூங்கி விட்டேன் போல் இருக்கிறது...என் கனவில் அந்த வாழை மட்டையில் பையன் அசையாமல் படுத்துக்கொண்டு மிதக்கிறான். ஆறு வேகமாக அவனை தூக்கி செல்கிறது. பொழுது விடிந்து எழுந்து வருவானோ?.
இந்த கதை எப்படி?
No comments:
Post a Comment