Sunday, February 3, 2019

LIFE JOURNEY


நீண்ட ரயில் பயணம் J.K. SIVAN

அருமையான குரலில் பிபீ ஸ்ரீனிவாஸ் பாடிய ''.... எங்கே வாழ்க்கை தொடங்கும், அது எங்கே எவ்விதம் முடியும்... யாரோ வருவார் யாரோ போவார், வருவதும் போவதும் தெரியாது.....'' என்ற பாடலை கேட்டதும் சிந்தனை குதிரை தறி கெட்டு ஓடியது.

என் சிறுவயதின் போதெல்லாம் நாங்கள் பயணம் செய்தது ஜிகு புகு வண்டியில். கரிப் புகையை
ஏராளமாக வாரி புகைமண்டலமாக வீசிக் கொண்டு நீளமாக கத்திக்கொண்டே நீராவி புகையை, கீழேயும், கரிப்புகையை மேலேயும் பரப்பிக்கொண்டு வேகமாகச் செல்லும்.

ஜன்னலோரத்தில் கண்ணில் கரித் தூள் பட, கண்ணைக் கசக்கிக்கொண்டு, ரெயிலில் மர பெஞ்சில் உட்கார்ந்து பிரயாணம் செய்வோம். முதல், இரண்டாவது, மூன்றாவது வகுப்பு என்று உண்டு. மூன்றாம் வகுப்பில் தான் சென்றிருக்கிறேன். ரிசர்வேஷன் தெரியாது. கிடையாது. ஜன்னல் வழியாக ஓடும் ரெயிலில் உள்ளே பாய்ந்து தாவி முண்டி அடித்து மேல் துண்டு, ஒரு சவுக்கம், டவல், ஏதாவது பெஞ்சின் மீது போட்டு இடம் பிடிப்பது வழக்கம். மேலே சாமான்கள் வைக்க என்று ஒரு லாப்ட் பெஞ்ச் உண்டு. அதில் ஏறி துணி ரிசர்வேஷன் பண்ணி அது தான் சுகமான பெர்த். எக்ஸ்பிரஸ் ரயில் இல்லை. நின்று நின்று தான். போகும். மேலே மேலே ஜனங்கள் முண்டியடித்து ஏறுவார்கள். சண்டை கட்டாயம் உண்டு. ஒரு காலத்தில் அறியாமையினால் ஆரம்பம்முதல் வழியில் தோன்றிய மரங்களை எல்லாம் எண்ணிக்கொண்டே வந்திருக்கிறேன்...!!
நமது வாழ்க்கையும் ஒரு ரயில் வண்டியில் பிரயாணம் தானே. வாழ்க்கையில் எத்தனை கட்டங்கள். அதெல்லாம் வழியே வரும் ஸ்டேஷன்கள். பாதை மாறும். விபத்தும் நடக்கும்! பிறக்கும்போது ரயிலில் இடம்பிடித்தோம் என்று எடுத்துக் கொண்டால், சக பிரயாணிகள் நமது தாய் தந்தை உற்றார் உறவினர். வாழ்வில் நம்மோடு பிரயாணம் செய்பவர்கள். வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் அவர்களைப் பிரிகிறோம். அவர்கள் ஸ்டேஷன் வந்தாச்சே. நாம் தொடர்ந்து பயணிப்போம்.
வாழ்க்கை ரயில் பிரயாணத்தில் சில ஸ்டேஷன்களில் புதிதாக நம்மோடு சிலர். நம்மோடு கூடப் பிறந்தவர்கள், நண்பர்கள், குழந்தைகள், மனைவி மாமனார், மாமியார் இத்யாதி. அங்கங்கே அவரவர்கள் இறங்கவேண்டிய ஸ்டேஷன் வந்தால் அவர்களும் பிரிவார்கள். சிலரை நாம் வந்தது போனது கூட தெரியாமல் சக பிரயாணிகளாக அனுபவிக்கிறோம்!

இந்த வாழ்க்கை ரயில் பிரயாணம் சுகமானது என்று சொல்லமுடியாது. நிறைய இடங்களில் நிற்கும், மெதுவாக நகரும். வேகமாக ஓடும். சத்தம் அதிகமாக இருக்கும். மழை வெய்யில் எல்லாம் எதிர்கொள்ளும். இதெல்லாம் தான் சுகம், துக்கம், வேடிக்கை, குதூகலம், சந்தோஷம், மௌனம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், சலிப்பு , வெறுப்பு, கோபம், நன்றி மீண்டும் பார்ப்போம், வாழ்க, ஒழிக, சகலமும். . நல்ல நட்பு சிலரோடு வெகுநீண்ட பயணமாக தொடர்கிறது.

இந்த வாழ்க்கை ரயில் பிரயாணத்தில் என்ன ஆச்சர்யம் என்றால் பிரயாணம் செய்யும் நமக்கே எந்த ஸ்டேஷனில் நாம் இறங்கவேண்டும், பயணம் முடியும் என்று தெரியாது. எனவே எப்போதும் பிரயாணம் முடிய தயார் நிலையில் இருக்கவேண்டும். மூட்டை முடிச்சு அதிகம் இருந்தால் பயணம் கடினமாகிவிடுகிறதே. ஏறுவது இறங்குவது எதிலும் கஷ்டம் தான்!

நாம் இறங்கினால் ரயிலில் நம் இடம் காலி. இன்னொருவர் அங்கே அமர காத்திருக்கிறாரே. நம்மோடு நன்றாக பழகிய சக பயணிகளுக்கு நம் பிரிவு துயரத்தை அளிக்கும் வகையில் நமது வாழ்க்கையில் அனைவருடனும் சௌஜன்யமாக பழகவேண்டும். இது தான் அன்பு. பரஸ்பர மரியாதை. வாழ்க்கையில் ஒவ்வொரு பயணிக்கும் தெரியவேண்டியது. .

சக பிரயாணிகளே, நம் எல்லோருடைய பயணமும் வாழ்க்கை ரயிலில் சுமுகமாக இருக்க வேண்டுகிறேன். கையில் எடுத்துச் செல்லவேண்டிய அவசிய சாமான்கள் அன்பு, நன்றி, நட்புள்ளம், இறை உணர்வு. இவை உங்களிடம் நிறைந்து வாழ்க்கை பயணம் இன்பகரமாக வெற்றியாக, மகிழ்வாக தொடர கிருஷ்ணனை வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...