Tuesday, December 18, 2018

yatha vibaram


யாத்ரா விபரம் J.K. SIVAN
வாளாடி







          அமைதி பூத்த ஒரு பழைய அக்ரஹாரம் 
திருச்சி வெடித்துவிடும் அளவுக்கு பருத்து விட்டது. எங்கும் அடுக்காக உயர கட்டிடங்கள், மரங்கள் இறந்து விட்டன. விடாமல் அங்கும் இங்குமாய் எறும்புகள் போல சுறுசுறுப்பாக வித வித வாகனங்கள். மாற்றங்களுக்கு இடையே மாறாத மலைக்கோட்டை உச்சியில் தாயுமானவர் கோவில், உச்சிப்பிள்ளையார் கோவில் தெரிகிறது. நல்லவேளை உயரமாக இருந்தாலும் கட்டிடங்கள் தூரத்தில் கொள்ளிட காவேரி பாலத்தில் நான் ரயிலில் போகும்போது என் கண்கள் தேடிய மலைக்கோட்டையை மறைக்கவில்லை.

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் வாளாடி கிராமம். முப்போகம் விளையும் பூமி. அருகே பிரபல ஊர் லால்குடி. லால்குடி ஜெயராமனை உலகம் அறிந்தாலும், அவர் பிறந்தது வாளாடியில் தான்.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான திருவையாறு தியாகராஜ ஸ்வாமிகளின் ஒரு சிஷ்யர் லால்குடி ராம ஐயர். அவருக்கு ரெண்டு பிள்ளைகள், வாளாடி ராதாகிருஷ்ணய்யர், மற்றவர் குருசாமி ஐயர். ராம ஐயரின் பேரன் லால்குடி கோபாலயர், கொள்ளுப்பேரன் லால்குடி ஜெயராமன். எல்லோருமே வாளாடி ஊர்க்காரர்கள்.

வாளாடியில் மக்கள் பக்தியோடு வணங்கும் உலகாயி அனைவருக்கும் தாய். கிராம தேவதை. உக்கிரமானவள். ஆடு பலி உண்டாம். எல்லோரையும் ரக்ஷிப்பவள். ஒரு தனி கட்டுரை சுவாரஸ்யமாக எழுதவேண்டும் அவளைப்பற்றி.

இங்கு காசி விஸ்வநாதர் இருக்கிறார். அம்பாள் ஆனந்தவல்லி. பழைய சிவன் கோவில். கீழ சிவன் கோவில் ஒன்று. அங்கே மகா பெரியவா வந்து பூஜை பண்ணி இருக்கிறார்.

வாளாடி சிவன் கோவிலில் நவகிரகங்கள் சூரியனை பார்த்தவண்ணம் சுற்றியுள்ளது.
இந்த ஸ்தலத்தை பற்றி ஒரு சுவாரஸ்யமான கதை சொல்கிறார்கள்.

சத்தியாதரன் விதர்ப தேச ராஜா. நல்ல ராஜா. அதனால் அவன் மேல் பொறாமை பக்கத்த்து ஊர் ராஜா துன்பராசனுக்கு. படையெடுத்தான். வெகுநாள் யுத்தம் நடந்து சத்யாதரன் தோற்றுவிட்டான் . அவனை துன்பராசன் கழுத்தை வாளால் வெட்டி கொன்றான். கணவனை இழந்த சத்யாதரன் மனைவி தானும் உயிர் துறக்க முடிவு கொண்டாள் . அனால் அவள் வயிற்றில் ஒரு சிசு உருவாகிக் கொண்டு இருந்ததே. அதை காப்பாற்ற காட்டில் சில காலம் ஒளிந்து வாழ்ந்தாள். பிரசவம் நேர்ந்தது ஒரு பிள்ளை பிறந்தான். நல்ல தாகம் அவளுக்கு தண்ணீர் குடிக்க ஒரு ஆற்றில் இறங்கி நீர் பருகும்போது அவள் காலை பசியோடு இருந்த முதலை கடித்து அவள் இறந்தாள். குழந்தை ஆற்றங்கரையில் அழுது கொண்டிருக்க உமா என்பவள் அந்த பக்கம் வருகிறாள். அதை எடுத்து வளர்க்கிறாள். தர்மதத்தன் எனப் பேர் சூட்டி வளர்க்கிறாள். அவள் முதல் மகன் சுசீலன். அவள் ஏழை. ஒரு நாள் ஒரு முனிவர் ஊருக்கு வருகிறார். அவரிடம் தனது கஷ்டங்களை சொல்கிறாள்.

அந்த முனிவர் ''உன் வளர்ப்பு பிள்ளை ஒரு ராஜ குமாரன். முன் ஜென்மத்தில் பாண்டியன். சோழமன்னனை வெட்டிக் கொன்ற பாவத்தால் தானும் இப்பிறவியில் வெட்டிக் கொல்லப்பட்டான். அவன் தாய் சதி முற்பிறவியில் சதி செய்து ஓர் பெண்ணுக்கு விஷம் கொடுத்து கொன்றதால் இப்பிறவியில் முதலை கடித்து துன்புற்று இறந்தாள்''

உமா தன் பிள்ளை சுசீலனைப் பற்றிக் கேட்டபோது இவன் முற்பிறவியில் கஞ்சன் .வாங்கியே பழ்க்கப்பட்டதால் இப்பிறவியில் வறுமை. இவைகள் தீர சிவ வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும்'' என்கிறார் முனிவர்.

ஆகவே இந்த வாளாடியில் காசி விஸ்வநாதர் வழிபாட்டில் உமாவும் பிள்ளைகளும் ஈடுபட்டு ஒருநாள் தோட்டத்தில் எதற்கு குழி எடுக்கும்போது ஒரு பானையில் பொன்னும் பொருளுமாக புதையல் கிடைக்கிறது. அவர்கள் சுபிக்ஷமாக வாழ்கிறார்கள். தர்ம தத்தன் தன் தந்தை இழ்ந்த நாட்டை திரும்ப பெற்றான் . எல்லாவற்றுக்கும் காரணம் காசிவிஸ்வநாதர் அருள். யாராவது படம் எடுக்க கதை தேடினால் இந்த கதை உதவட்டும். படம் சக்கை போடு போடும்.

இங்கே மகிஷாசுர மர்த்தினி எப்போதும் சிவன் கோவில்களில் வடக்கு நோக்கி நிற்பவள் தெற்கு நோக்கி அருள் புரிகிறாள்.







வாளாடியில் ஒரு நூறு வயது பழைய வீட்டில் ஸ்ரீ தத்தாத்ரேயனுடன் தங்கி பல ஆலயங்கள் தரிசித்தேன். அற்புதமான மனிதர். ஒரு நூறு வயது நடராஜரை லக்ஷ்மிநாராயணன் ஆலயத்தில் காட்டினார். அக்னீஸ்வரர், ஹஸ்தாமலகர் இப்போது தத்தாத்ரேயர் என்றுபெயர்களை கொண்ட இந்த குடும்பம் வாளாடியில் வாழ்ந்து ஊரை வளமான ஒரு சொர்க்கபூமியாக எல்லோரும் சந்தோஷமாக வாழ தமது தொண்டை புரிந்தவர்கள். தத்தாத்ரேயனுடன் சென்ற மற்ற ஆலயங்கள் பற்றி சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...