Sunday, December 23, 2018

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்   J.K. SIVAN 
     RAJA RAVI VARMA'S  IMAGE OF KALKI AVATHAR 


             கலியுகம்  எப்படியிருக்கும்  தெரியுமா? 

ஜனமேஜயன் ஒரு பக்கம், வைசம்பாயனர் சொல்வதை கேட்டும்,  யுதிஷ்டிரன்  மார்க்கண்டேய ரிஷியின் தீர்க்க தரிசனத்தில் மயங்கியும் சிலையானது போல் நாமும்  எப்படி தான் கலியுகத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே  மார்க்கண்டேய ரிஷி அனுமானித்தார் என்று வியக்கிறோம்.
ரிஷியின் தீர்க்க தரிசனத்தை ரசிப்போம்:                                                                      
''யுகத்திற்கு யுகம்  ஜனங்களின்  தர்ம சிந்தனை  குறைந்து கொண்டே வரும்,  வயதும் உயரமும் அதனால் சுருங்கும். தர்மம், ஞாயம், நேர்மை நீதி எல்லாமே  சுயநலம் கலந்து சக்தியில்  குறைபாடு காணும். நற் பண்புகள், சீலம்  எல்லாம்  கறை  படியும். ஆத்ம ஞானம்  மறையும். சத்யம்  தேய்மானம் பெரும். அறியாமை  பரவும்.  ஞானிகள், முனிவர்கள்  விலகுவர்.  கலியுகத்தில்  மக்கள் குணத்திலும் பண்பிலும் உயர்ந்த நிலையிலிருந்து தாழ்வு பெறுவர். ஆண்கள் பெண்கள் ஆடையிலும் அநேக  மாற்றம் இருக்கும்.  கணவன் மனைவி நண்பர்கள் போல்  தான்  பழகுவர்.  பசுவிற்கு மாற்றாக , ஆடு, வெள்ளாடு  போன்றவற்றின் பாலைத்  தேடுவர். ஒருவரை ஒருவர் நம்பிக்கை, அன்பு இன்றி  கொலையும் செய்வர்.  இறைவன் மீது நம்பிக்கை குறையும். நதிகள் மறையும். பூமியில் விளைச்சலும் குறையும்.  பெற்ற தந்தை, மகன்  இருவருக்குள்ளுமே  ஒருவர் மீது ஒருவர்  பரஸ்பர நம்பிக்கை இன்றி விரோதிகளாகி  சுயநலத்தில் செல்வத்தை அபகரிப்பர்.  பிராமணர்களே  வேதத்தை மதிக்காமல்  விரதம் அனுஷ்டிக்காமல், அவற்றை எதிர்க்கலாம்.   யாகம் யஞம்  எல்லாம்  காணாமல் போகும்.  உலகத்தில்  எல்லாமே  தலைகீழாகும். திருடு,  கொள்ளை, ஆக்ரமிப்பு  என்பது மனசாட்சிக்கு  விரோதமாக  நடக்கும்.

பெற்றோர்  பிள்ளை பெண்களுக்கு மணம் செய்விப்பதோ,  பெண்ணோ  பிள்ளையோ  பெரியவர்களை எதிர்ப்பார்த்தோ  திருமணம்  நிகழாது. அவரவர்களே நிச்சயித்துக் கொள்வர்.

தவறுகள்  சரியானதாக  ஏற்றுகொள்ளப் பட்டு, நல்லவை அழியும்.  புண்யம்  குறைய  பாப கிருத்யங்கள் வளரும்.  யுக முடிவில்  மனிதர்களுக்குள்  வித்தியாசமின்றி எல்லாம்  பொதுவாக மாறிவிடும். வர்ணாஸ்ரம தர்மம்  மறைந்துகொண்டே போகும்.

மனிதர் ஸ்வதேசத்தை விட்டு  கோதுமை,  பார்லி  போன்ற  தானியங்கள் விளையும்  நாடுகளுக்கு  செல்வர்.   தெய்வத்துக்கோ,  பித்ருக்களுக்கோ  உரிய  காலத்தில் சடங்குகள், நேர்த்திகள் நேராது. பெரியோர்  சொல் அவமதிக்கப்படும்.''

இதெல்லாம்  மார்க்கண்டேயர்  சொல்வது  என்று  அறியும்போது  ஆச்சர்யமாக இருக்கிறது.  அவர் எந்த காலத்திலோ  யுதிஷ்டிரனுக்கு சொன்னது  இப்போது நேரில்  இருந்து பார்த்து சொல்வது போல்  இருக்கிறதே! .   இன்னொரு  பயங்கரமான  விஷயம் அவர் சொல்கிறார். அதையும் கேளுங்கள்.

கலியுக  முடிவில்  ஆண்கள் அதிக பக்ஷம்  பதினாறு வயதில் மரணம் அடைவர். பெண்கள்  ஐந்து, ஆறு வயதில் பிள்ளை பெறுவார்கள்.  ஆண்கள்  7 அல்லது 8 வயதிலேயே  தகப்பனாவார்கள்.  கணவன் மனைவிக்குள்  ஒற்றுமை, திருப்தி இருக்காது.  அவர்களுக்குள் பொறாமை , சந்தேகம்,  காழ்ப்பு, வளரும்.  சடங்குகள்  ஸாஸ்த்ரப்படியே  நடக்காது.  நம்பிக்கையில்லாத அர்த்தம்  புரியாத ஏதோ ஒரு  செயலாக  ஆகும்.

இயற்கையை மதியாமல்  செடி  கொடி மரங்கள் அழியும்,  காடுகள் காணாமல் போகும்.  இயற்கை உற்பாதங்கள் பெருகும்.  அதர்ம, அநீதி அரசுகளால்  வரிச்சுமை  வாட்டும். கொடுங்கோல் ஆட்சிகள் தோன்றும்.  கீழே  இருந்தவர்  மேலே போவார்கள், மேலே இருப்பவர் கீழே  தாழ்வார்கள்.

மார்கண்டேயர்  மற்று மொரு  அதிசய வாக்யம் சொல்கிறார்.  மஹா  பாரதத்தில்  (வன பர்வம் -  மார்கண்டேய  சமச்ய பர்வம்)  -- இன்னும்  சில  அதிர்ச்சி தரும் சம்பவங்களை  மார்கண்டேய  ரிஷி சொன்னதாக   வருகிறது:

ஆலயங்கள்  அழிந்து,  எலும்புகளை  உள்ளே  கொண்ட சமாதி (சர்ச்?? ),   நீண்ட உயர்ந்த  ஸ்தம்பம்( மசூதி ??) போன்றவை அந்த  இடத்தை நிரப்பும்.   மேகங்கள்  காலம்  கெட்டு  அகாலத்தில்  பொழியும் அல்லது  பொய்க்கும்.  கலியுகம் முடியும் காலத்தில் எவருக்குமே  எதிலும் திருப்தி இருக்காது. கிரகங்கள்  ஒளி குன்றும். பேய்க் காற்று  அழிவு தரும்.  எங்கும் சப்தம் அதிகரிக்கும். வறட்சி  உணவுப் பஞ்சம்  வாட்டும்.  பெண்கள் கருணையின்றி எவரையும்  மதிப்பு மரியாதை இன்றி கடினமாக பேசுவர்.

இன்னும்  எத்தனை எத்தனையோ  மாற்றங்கள்  யுகத்தை முடிக்கும்.  பிரளயம் தோன்றி மீண்டும்  புது யுகம் தோன்றும்.  மக்கள்  தோன்றுவர்.  நான்கு வர்ணங்கள்  மீண்டும்  உதிக்கும்.(ஜாதி இல்லை,  தொழில் சார்ந்த பிரிவு)  மக்கள் தத்தம் கடமையை  பரஸ்பர  எதிர்பார்ப்புடன்  துவங்குவார்கள். தர்மம் ஞாயம் தலை தூக்கும்.  கிருத யுகம் மீண்டும் மலரும். காலத்தில் மழை  பொழியும், சுபிட்சம் தோன்றும். எங்கும்  மகிழ்ச்சி  மக்களை  இணைக்கும்.

 கல்கி  என்று  ஒரு  யுக புருஷன்  விஷ்ணு அம்சமாக  சம்பலா என்கிற  நகரத்தில் ஒரு  ஆசார   பிராமண குடும்பத்தில் பிறப்பான். சர்வ ஆயுதங்களும் அவனை அடையும்.  அவனால்  கலியுக    திருட்டு, கொலை, கொள்ளை, போன்ற  எல்லா அக்ரமங்களும்  அழியும்.  புது யுகம்  அவனால்  பிறக்கும்.  கலியுகத்தின் பாபங்கள், அதர்மம், அநீதி, தீமைகள், அக்ரமம்  எல்லாமும்,  அதை புரியும் அனைவரும் கூட  கல்கியால் அழிவார்கள்.  கிருத யுகம் மலரும். வேதம்  சிறக்கும். இறை சிந்தனை பெருகும். மக்கள் தத்தம் கடமைகளை தவறாது செய்வார்கள். சுபிக்ஷம் எங்கும் காணப்படும்.''

 யுதிஷ்டிரா,  இப்படியே  முறையாக  ஒன்றன் பின் ஒன்றாக  பிறகு  த்ரேதா யுகம், துவாபர யுகம்  கலியுகம் எல்லாம் மீண்டும் மீண்டும் தோன்றும்.   நான் உனக்கு சொன்னதெல்லாம்  வாயு புராணத்தில் உள்ளது தான்.''

 மார்கண்டேய ரிஷி  ஒரு  கணம் பேச்சை நிறுத்தி  யுதிஷ்டிரனை ஆராய்கிறார். அவன் சொல் செயலின்றி எதிர்கால நிகழ்வுகள் தரும் திடுக்கிடும் உண்மைகளில் கலங்கி நிற்கிறான்.   நாமும்  மார்க்கண்டேய ரிஷி காலத்தில்  பாதி கூட இன்னும் நிறைவு பெறாமல் மேலும் அக்கிரமங்களை எதிர்பார்த்த வண்ணம்  நமக்கு வரப்போகும் தலைமுறைகளின் நிலை பற்றி ஒன்றும் புரியாமல் திடுக்கிட்டு நிற்கிறோம்.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...