Monday, December 17, 2018

AINDHAM VEDHAM


 ஐந்தாம் வேதம்     J.K. SIVAN 


         '' நமக்கு தெய்வம் துணையுண்டு  பாப்பா'' 

''மேற்கொண்டு சொல்லுங்கள்''   என்கிறான்  ஜனமேஜயன்.   வைசம்பாயனர் தொடர்கிறார். 

''ஏற்கனவே  காம்யக  வனத்தில் வசித்திருந்த  முனிவர்கள், ரிஷிகள், பிராமணர்கள்  ஆகியோருக்கெல்லாம்  மட்டற்ற மகிழ்ச்சி. பாண்டவர்கள்  மீண்டும் அங்கே  வந்ததை அறிந்ததால் தான் இந்த சந்தோஷம்.

சொல்லி வைத்தாற்போல பாண்டவர்கள் இருந்த அந்த வனத்தில் ஒரு நாள்  ஒரு தேர் வந்து  நின்றது.  இரண்டு குதிரைகள் சைவியன், சுக்ரீவன் என்று  அவற்றிற்கு பெயர்.  காற்றைக் காட்டிலும் வேகமாக பறக்கும்  குதிரைகள் அந்த  தேரை  இழுத்து வந்தன.  யாரென்று ஒரு பிராமண ரிஷி சென்று பார்க்கிறார். தூர  குதிரைகள் ஓடி வருவதிலிருந்து தேரில் யார் என்று தெரிந்து கொண்டு ஆனந்தமாக கூத்தாடுகிறார்.
 ''அதோ  கிருஷ்ணன் வந்திருக்கிறாரே, அர்ஜுனனைத் தேடி,  அதோ மார்கண்டேய ரிஷியும்  வருகிறாரே' என்று  கூவினார்.  காம்யக வனமே  திரண்டு விட்டது. எல்லோரும் ஓடிவருகிறார்கள்.

 தேர் நின்றது.  சத்யபாமாவோடு  கிருஷ்ணன் தேரிலிருந்து இறங்கினார். யுதிஷ்டிரனை, பீமனை, அர்ஜுனனை அன்போடு மார்புற  தழுவிக் கொண்டார் கிருஷ்ணன்.  தௌமியரை  வணங்கினார்.   அர்ஜுனனை  அர்த்த புஷ்டி யோடு (என்ன வேண்டிய ஆயுதங்கள்  கிடைச்சுதா! என்று பார்வையிலேயே கேள்வி ). அன்போது அர்ஜுனனின் கரங்களை தனது  கையோடு  பிணைத்துக் கொண்டார்.அர்ஜுனன் பாருங்கள் எவ்வளவு பாக்கியசாலி. இப்படி ஒரு தோழன் கிடைய்ங்க என்ன தவம்  செய்திருந்தானோ!.

 திரௌபதி ரிஷிகள் கிருஷ்ணன்  மற்றும் அனைவரையும்  வணங்கினாள் . நகுல சகாதேவர்கள் சாஷ்டாங்கமாக  நமஸ்காரம் பண்ணினார்கள்.

 'யுதிஷ்டிரா,  நீ  உன்  கடமையை,  தர்ம  ஞாய  சத்ய  வழியில் கடைப்பிடிப்பதால் உனக்கு  இந்த உலகில் மட்டுமல்ல, அடுத்த உலகிலும் நன்மையே கிட்டும். உன்னால்  உன் சகோதரர்களும்  நன்மை பெறுவார். வெற்றி கிட்டும். பொறுமையை கை விடாதே''  என்று சொல்லி,  புன்முறுவலுடன் அனைவரையும்  பார்த்து  கிருஷ்ணன் ''ரொம்ப  அதிருஷ்டம் பண்ணியவர்கள் நீங்கள்,  அர்ஜுனன் கடும் தவம் இருந்து  வெற்றியோடு  தெய்வங்களின் சக்தி ஆயுதங்களை பெற்று வந்திருக்கிறானே. 

 யுதிஷ்டிரா, துரியோதனனையும் அவனைச்   சேர்ந்தவர்களையும் விட  நீங்கள்  இப்போது சக்தி வாய்ந்தவர்கள் என்பது ஞாபகமிருக்கட்டும். விரைவில் உனது ராஜ்ஜியம் உன்னை வந்தடையும்''  என்றார் கிருஷ்ணன்.

''கிருஷ்ணா,  பன்னிரண்டு வருஷங்கள்  காட்டில் அலைந்து  திரிந்தோம். இன்னும் ஒரு வருஷம்  எவர் கண்ணிலும் படாமல் அஞ்ஞாதவாசம் இருந்து  திரும்புவோம். உன்னை சந்தித்து  மேற்கொண்டு நடக்க வேண்டியதை உன்  உதவியோடு செய்வோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. சத்யம், நேர்மை, ஞாயம் தவறாமல் சொன்ன வாக்குப்படி நடப்போம்.  எங்களுக்கு நீயே  உற்ற துணை  கேசவா!'' என்றான் யுதிஷ்டிரன்.

அவர்கள் பேசும்போது இடையே  முதிர்ந்த, நரையோடு, தவத்தின் பலனாக சரீர  பளபளப்போடு ஆயிரக்கணக்கான வருஷ  அனுபவத்தோடு, மரணமற்ற, மார்கண்டேய ரிஷி அங்கே வந்தார்.

அவரை உபசரித்து  ஒரு உயர்ந்த ஆசனத்தில் அமர்த்தி  கிருஷ்ணன் உட்பட அனைவரும்  வணங்கினர்.

கிருஷ்ணன் அவரிடம்  ''மகரிஷி, நாங்கள்  எல்லோரும்  உங்கள் அனுபவ  வார்த்தைகளை கேட்க  சித்தமாக  இருக்கிறோம். என்றார்.  அப்போது நாரதரும் அங்கே வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டார்.
''மகரிஷி  நீங்கள்  பாண்டு புத்ரர்களுக்கு  என்ன சொல்லவேண்டுமோ அறிவுரை வழங்குங்கள்'' என்று  நாரதரும் மார்க்கண்டேய  ரிஷியைக் கேட்டுக்கொண்டார்.

 யுதிஷ்டிரன்  அவரை வணங்கி, '' மகரிஷி, ஆயிரக்கணக்கான  ஆண்டுகள், எத்தனையோ, ரிஷிகள், தெய்வங்கள், ராக்ஷசர்கள், ராஜாக்கள் ஆகியோரை சந்தித்திருப்பீர்களே. உங்களைப் போன்ற  யுக புருஷர்களை தரிசிக்கும் பாக்கியம் எங்களுக்கு  கிட்டியது. இன்று நீங்கள் வந்த நேரம்,  கிருஷ்ணனும் வந்திருக்கிறார். நன்மை தீமை செய்தவர்களின் பலன் இந்த ஜென்மத்திலேயே  அனுபவிக்க வேண்டி வருமா அடுத்த பிறவியிலா என்று விளக்கிச் சொல்லுங்கள்.  தீங்கு செய்த, துரியோதனன் மற்றோர்  சுகமாக  ராஜ்ய பதவி சுகத்தை அனுபவிக்க  தர்மனும் மற்ற பாண்டவர்களும் சகல வீரமும் நற்குணமும் பெற்றும், காட்டில் வாட  நேரிட்டதே. இதை எப்படி எடுத்துக்கொள்வது?

 ''பகவான்  படைக்கும்போது  ஒவ்வொருவனையும் கறை யற்றவனாக,  குறையற்றவனாகத்தான் படைக்கிறார்  முதன் முதலில்  யுக ஆரம்பத்தில்  சத்தியமே பேசினார்கள் . நல்லதே நினைத்து நல்லதே  செய்தனர். இறைவனோடு  சேர்ந்து வாழ்ந்தனர், இறைவனோடு கலந்தனர்.  வாழ்வையும்  மரணத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். கஷ்டங்களோ, துன்பமோ இல்லாதிருந்தனர்.  நேர்மை நீதி பிறழாது, யோகிகள், ரிஷிகள், முனிவர்கள்  என்று  ஒன்றாக  கடவுளோடு  அன்றாட  வாழ்வு நடந்தது. பிறகு  மனிதன் பூமியில் விஷத்தை விதைத்தான்.  சுயநலம், பொய் , த்வேஷம், கருணை இன்மை,  ஆகியவை துளித்துளியாக  பெருகி  இறைவனைத்  தூரத் தள்ளி வைத்து விட்டது.யுகத்திற்கு யுகம்  க்ஷீணித்துகொண்டே  வந்தது.

 ஜீவனை  நரகத்திற்கு  அனுப்பி  அவனை மறுபடியும்  பூமிக்கு அனுப்பி  திருந்தச் செய்தும்  பயனற்ற செயலாகி விட்டது. எங்கும்  துக்கம், துயரம் துன்பம் பெருகிவிட்டது. பாபங்கள்  நிரம்பிவிட்டது. எனவே  அவனது பூலோக வாழ்க்கை முடிந்ததும் தான்,  அவனது செய்கைக்கு தக்கவாறு  தண்டனை அனுபவிக்க நேரிடுகிறது.  சூக்ஷ்ம சரீரத்தை  இந்த  பந்தங்கள்  பிணைத்து  அதன்  தன்மையை  அறியாதவாறு செய்கின்றது. இவற்றிலிருந்து எல்லாம் ஒருவாறு விடுபட்டு அந்த சூக்ஷ்மசரீரம்  அவனது ஆத்மாவோடு  அடுத்த பிறவிக்குள் நுழைகிறது. அங்கும் இதே  கதை தொடர்கிறது.

 யோகம், த்யானம்   ஒன்றே அவனை  சீர்திருத்த முடியும்.  வியாதி,  பயம், துக்கம்  அனைத்திலிருந்தும்  விடுபட உதவும். மனம் ஒரு நிலைப்படும்.  நற்பண்பு, நற்செயல்  அவனை  தேவலோகத்தில் கொண்டு சேர்க்கிறது.  சிலர்  இந்த பிறவியிலேயே நற்பலனை அடைவர். அடுத்த பிறவியில் துன்பம் காத்திருக்கலாம் , சிலருக்கும் இதிலும் அடுத்ததிலும்  சுகம்.  சிலர் இங்கு சுகம் அனுபவித்து  சேர்த்துவைத்து அடுத்ததில் துன்பத்தில் உழல்வார்கள். வேறு சிலரோ, கேட்கவே வேண்டாம்.  இதிலும், அடுத்ததிலும், அடுத்து அடுத்து  எல்லாவற்றிலும்  துன்பம் ஒன்றே  அவர்கள்  அறிந்தது  என்று  வரும்.  எல்லாம் கர்ம பலனின் விளைவே.'' என்றார்  மார்கண்டேயர்.

 'யுதிஷ்டிரா,  இப்போது  உனக்கு  நேர்ந்தவை சூரியனின் முன் பனித்துளி போன்ற  துன்பங்கள் தான். உனக்கு  இனி துன்பம் ஒரு காலும் இல்லை'' என்றார்  மார்கண்டேயர்.

அந்த  நேரத்தில் மார்கண்டேய ரிஷி  யுதிஷ்டிரனுக்கு   ஒரு சில கதைகளும் சொல்கிறார்.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...