Tuesday, December 25, 2018

GEETHAGOVINDAM



மஹநீயர்கள்    J.K. SIVAN 

ஜெயதேவர் 

                                         
                  ''ஓலைச் சுவடியை கொண்டுவா 

கிருஷ்ணன்  ''என்னைப் பாடவே உன்னைப் படைத்தேன்''  என்றுதான் ஜெயதேவரை படைத்து  தனக்கு பிடித்த பூரி ஜெகநாத க்ஷேத்ரத்திற்கு அழைத்திருக்கிறான். 

பூரி ஜகந்நாதர் கோவிலில் ஜெயதேவர் அஷ்டபதி பாடப்பாட அவர் மனைவி  பத்மாவதி  அபிநயம் செய்து பதம் பிடித்து  ஆடுவாள்.  இப்படித்தான்  பாட்டும் பரதமுமாக   கீத கோவிந்தம் உருவானது.   கண்ணன் ராதை நட்பை தத்ரூபமாக மனதில் கண்டு ஜெயதேவர்  எழுத அதற்கு ராதை எப்படி கிருஷ்ணன் முன் ஆடினாளோ  அதை மனதில்  அனுபவித்து பத்மாவதி ஜெகநாதன் முன்பு ஆடுகிறாள். ஒரு அஷ்டபதியில் இதை ஜெயதேவரே  சொல்கிறார்.

ஜெயதேவர் வங்காள தேச பர்த்வான் ஊர்  ராஜா இலட்சும சேனர் அரண்மனையில் இருந்த ''பஞ்சரத்னம்’  எனும்  ஐந்து சிறந்த கவிகளுள் ஒருவர்.  கீத கோவிந்தம் ஒரு கிருஷ்ண காவியம்.  தெய்வீக காதலோடு தேனிசை கலந்த பரிசு.  கிருஷ்ணன்  மானிடனாக வந்த தெய்வம். பூரண அவதாரம்.  மானிட தன்மை வெளிப்படும் ஒரு சில சந்தர்ப்பங்களை  கீத கோவிந்தம் படம் பிடித்து காட்டுகிறது.  ராதை தெய்வீக பக்தியின் உருவகம்.  அழகும்  அறிவும் பக்தியும் சேர்ந்த கலவை. பரமாத்மாவை பிரியாத ஜீவாத்மா.
அவளுக்கு உவமை சொல்ல ஆண்டாள், பக்த மீரா ஆகிய இருவரை தான் தேட வேண்டும். நாட வேண்டும். 

பிருந்தாவன, கோகுல  ராதா கிருஷ்ண லீலைகளை  12ம் நூற்றாண்டு ஜெயதேவர் எழுதிய  கீத கோவிந்தத்தை விட எந்த நூலும் விளக்க முடியாது.  மொத்தம்  24 பாடல்கள் தான்  ஒவ்வொன்று எட்டு கன்னிகள், பதங்கள் கொண்டதால் அஷ்டபதி.

ராதை எனும் பக்தை, தன் உடலாலும் மனதாலும் பக்தியாலும் இறைவனை அடையும் முயற்சியை வெளிப்படுத்தும் காவியமாக விளங்குகிறது. சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என்னும் கருத்துக்கு சிருங்கார ரசத்தில் விளக்குவது. மனித மனத்தில் எளிதில்  பதிவது, சிந்தையை கவர்வது.

இன்னும் ஏழு நாளில் உனக்கு மரணம் என்று அறிந்த  அபிமன்யுவின் மகன் பரீக்ஷித்  சுக ப்ரம்ம ரிஷியிடம்  ''ராச லீலையால் என்ன பயன்?'' என்று  கேட்க,  ''ராச க்ரீடை, ராசலீலை, பகவான் கிருஷ்ணனது பரிவின் வெளிப்பாடு. பக்தர்களுக்கொரு வரப்பிரசாதம். பக்தர் அல்லாதவர் அதன் வெளிப்படையான சிருங்காரத்தால் கவரப்பட்டு உள்ளே வருவார்கள். பிறகு, சிறிது சிறிதாகத் தெய்வீக நிலைக்கு உயர்வார்கள்''  என முனிவர் பதில் அளிக்கிறார்.

கீத கோவிந்தம் (அஷ்டபதி)  பாடல்களை  ஜெயதேவர்  பாடும்போது  அந்த கிராம மக்கள் அதையெல்லாம் ஆசையாக  கேட்டு மனதில் நிரப்பிக்கொள்வார்கள். அத்தனை ஆனந்தம் கிருஷ்ணன் ராதா தெய்வீக உறவை போற்றி பாட.  இது தான்  உண்மையில் காதலாகி கனிந்து கண்ணீர் மல்கி, பரவசத்தில் ஆழ்வது. 

நான் முந்தைய  கட்டுரையில் சொன்னதை ஞாபகப்படுத்துகிறேன்.  கீத கோவிந்தம் 19 வது அஷ்டபதியில் ஒரு இடம்.   கிருஷ்ணன்  ராதையின் மேல் உள்ள ப்ரேமையில் அவளோடு ஏதோ விவாதத்தில் அவள் கோபமாக இருக்கிறாள்.  ''என்னிடம் பேசு''  என்று அவளை கெஞ்சுகிறார் கிருஷ்ணன். ஜெயதேவர் இந்த இடத்தில் (10 வது சர்கம் 19 வது அஷ்டபதியில் ப்ரியே சாருசீலே என்ற பல்லவி  கொண்டது.. அதில்  ''அடியே ராதே,  விரகத்தினால் தவிக்கும் என் சிரத்திலே உன் பனிமலர் போன்ற தாமரை தளிர் பாதங்களை வைத்து அருள்வாய்''   என்று   சொல்வதாக எழுதுகிறார்.   அடுத்த கணம் அவர் உடல் நடுங்குகிறது.  வியர்க்கிறது. ''சே  என்ன தவறு செய்து விட்டேன்.  கவிதையின் அழகில் மயங்கி பகவான்     ஒரு சாதாரண  கோபியின் காலை  தனது சிரத்தில்  வை....... என்று...........!!     அவசரமாக  அந்த  ஓலைச் சுவடியை கிழித்து போட்டுவிட்டு, ஆற்றுக்கு சென்று எண்ணெய் ஸ்நானம் செய்து வருவதாக சொல்லி எண்ணையுடன் கிளம்பிவிட்டார். பத்மாவதியும் சமையலை கவனிக்க சென்று விட்டார்.

சற்று நேரம் கூட ஆகவில்லை.... திடீரென ஆற்றுக்குச் சென்ற கணவர் உடம்பில் எண்ணெய் வழிய வந்து ''பத்மாவதி நான் எழுதிக் கொண்டிருந்த ஓலை சுவடியை கொண்டுவா, திடீரென ஒரு வரி ஞாபகம் வந்தது எழுதி விட்டு போகிறேன்''  என்று  ஓலை சுவடியில்  தான் நினைத்ததை எழுதிவிட்டு மீண்டும் ஸ்நானம் முடிக்க  சென்று விட்டார். பத்மாவதி அவர் எழுதிய ஓலைச்சுவடியை பூஜையில் வைத்து விட்டு வேலையை பார்த்தாள் .

சற்று நேரம் சென்றது.  ஜெயதேவர்  ஸ்னானம் எல்லாம் முடித்து திரும்பி வந்து பூஜைகளை முடித்துவிட்டு அமர்ந்தார்.

காலையில்  ஆற்றுக்கு செல்லு முன்பு  தவறாக,  அபசாரமாக எழுதியதற்கு  பதில் வேறு வரிகள் யோசித்து வைத்திருந்தார். அதை  எழுதி நிறைவு செய்யலாம் என்று ஓலையை எடுத்தார்.   அட இது என்ன  ஓலையில் அவர் எழுதி தவறு என்று கிழித்து போட்ட  வரிகளே மீண்டும் இருக்க கண்டு  ஆச்சயமடைகிறார்.

''பத்மாவதி இங்கே வா...'''  வருகிறாள். 
'' நான்  ஆற்றுக்கு போனவுடன்  நீ   ஏதாவது  இந்த ஓலையில் எழுதினாயா?''
''இல்லையே சுவாமி. நீங்கள் தான்  பாதி  எண்ணெய்  உடம்போடு வந்து ஏதோ எழுதி விட்டு என்னிடம் ஓலைச்சுவடியை  கொடுத்து விட்டு போனீர்கள். மறந்து விட்டதா?''
''நானா, பாதி குளியலில் எண்ணெயோடு வந்து எழுதினேனா..? என்ன சொல்கிறாய் பத்மா?''
''ஆமாம்  நீங்களே  தான் வந்தீர்கள், ஓலையை கேட்டீர்கள், எடுத்து கொடுத்தேன். ஏதோ எழுதினீர்கள்.. என்னிடம் கொடுத்து விட்டு  போனீர்கள்...""

ஜெயதேவருக்கு யார் வந்தது என்று புரிந்து விட்டது..  ''பத்மா, நீ  புண்யவதி,  பாக்கியசாலி,  கிருஷ்ணனை நேரத்தில் காணும்  பேறு  பெற்றவள்.  நான்  அபாக்கியசாலி .என்னப்பா கிருஷ்ணா  எனக்கும் நீ ஏன் தரிசனம் தரவில்லை. இந்த பாபி மேல் உனக்கு  கருணை இல்லையா?  கதறுகிறார் ஜெயதேவர்.
பத்மாவதியோ '' என்ன பாக்யம் எனக்கு . என் கணவரின் ரூபத்தில் இறைவன் எனக்கு காட்சி அளித்தாயே கிருஷ்ணா'' என்று  மெய்ம்மறந்து புகழ்கிறாள். இந்த  அதிசய செய்தி ஊரில் கசிகிறது. 

ஜெயதேவர் பின்னால் போவோம்....

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...