தவத்தில் சிறந்த ரிஷி பத்தினிகள்
J.K. SIVAN
வேதகால ரிஷி பத்தினிகள் கூட தவமிருந்து ரிஷிகளை போல சக்தி வாய்ந்தவர்களாக இருந்தார்கள்.
ஒரு ராஜாவின் அரண்மனையில் ஒரு இரவு திருடர்கள் கொள்ளை அடித்து விட்டு காவலர்களிடமிருந்து தப்பி ஓடிவிட்டார்கள். அப்போதும் காவலர்கள் இப்போது இருப்பதை போல தான் இருந்தார்களோ. சிக்கிய குற்றவாளிகளை கோட்டை விட்டதால் தப்பிய திருடர்கள் துரத்திக்கொண்டு வரும் காவலர்களிடம் பிடிபடாமல் கண்ணில் பட்ட ஒரு ரிஷியின் ஆஸ்ரமத்தில் திருடிய பொருள்களை வீசிவிட்டு மறைந்து கொண்டார்கள். பிடிபட்டார்கள்.
மாண்டவ்ய ரிஷி கண்மூடி த்யானத்தில் இருந்ததால் திருடர்கள் வந்ததோ, ஆஸ்ரமத்தில் அவர்கள் திருடிய பொருள்களை வீசியதோ, உள்ளே மறைந்து கொண்டதோ, திருட்டு பொருள்கள் பிடிப்பட்டதோ ஒன்றுமே தெரியாது. பரப்பிரம்மம்.
காவலர்கள் மாண்டவ்யர் மலங்க மலங்க விழிக்க, ஒன்றும் பேசாததால், திருடன் என்று பிடித்து சென்று ராஜா அவரை கழுவேற்றுகிறான். கழுமரம் அவரை கொல்லாமல் தனது தவ வலிமையால் அதில் தொங்கிக் கொண்டி ருந்தார்.
ஒரு ரிஷி பத்னியான சுமந்தி என்பவள் ,தனது கணவன் கௌசிகனை முதுகில் சுமந்து அந்த பக்கமாக நடந்து வந்தாள். அவள் கணவன் கால் மாண்டவ்ய ரிஷி மேல் பட்டு, அவருக்கு கழு மரம் தந்த வலி அதிகமாகி ''நீ நாளை சூரிய உதயத்தின்போது மரணம் அடைவாய்'' என்று கௌசிகனை சபிக்கிறார்.
சுமந்திக்கு இது தெரிந்ததும் தன் கணவன் உயிரை காப்பதற்கு 'நாளை சூரியனே உதிக்க கூடாது'' என்று கட்டளை இட உலகமே சூரியனின்றி தவிக்கிறது.
பிரம்ம தேவன் மற்ற தேவர்களோடு அத்ரி மகரிஷி ஆஸ்ரமத்துக்கு ஓடுகிறான். சூரியன் உதிக்க
வேண்டுமே? ஒரு ரிஷி பத்னி ஆணையை, மற்றொரு தவ வலிமை வாய்ந்த ரிஷி பத்னியால் மாற்ற முடியும். எனவே தான் அத்ரி ரிஷி மனைவி அனசூயாவை நாடினார்கள்.
''தாயே, நீங்கள் தான் சுமந்தியின் ஆணையை மாற்றி சூரியன் உதிக்க செய்யவேண்டும்.
அனசூயை சுமந்தியிடம் ''அம்மா சுமந்தி , உனது ஆணையை வாபஸ் பெறலாமே. உலகம் உய்யவேண்டாமா ?'' என்றபோது ''அனசூயா, சூரியன் உதித்தால் மாண்டவ்ய ரிஷியின் சாபத்தால் என் கணவன் பிணமாவானே என்ன செய்வேன்?. இருவரும் பேசி யோசிக்கிறார்கள்.
''சுமந்தி, உன் கணவன் கௌசிகன் உயிரை நான் காப்பாற்றுகிறேன்'' என்கிறாள்அனசூயா . அவள் தவவலிமையால் கௌசிகன் சாகவில்லை. சூரியனும் உதித்து உயிர்கள் உலகில் வாழ்கின்றன.
சகல தேவர்களும் தேவதைகளும் மகிழுந்து ''அனசூயா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்? என கேட்க,
''ப்ரம்மா, விஷ்ணு, சிவன் மூன்று பேருமே எனக்கு குழந்தைகளாக வேண்டும் '' என்கிறாள். தத்தாத்ரேயர் இப்படி தான் அவதரித்தார்.
ரிஷி அத்ரிக்கு தனது பத்னி அனசூயாவின் தவ சக்தி ஆச்சர்யம் சந்தோஷம் ரெண்டையும் தந்தது. த்ரேதா யுகத்தில் ராமர் வனவாசத்தின் மீது அத்ரி ரிஷி ஆஸ்ரமம் செல்கிறார்.
பேச்சு நடுவில் ''ராமா அனுசூயா ஒருகாலத்தில் என்ன செய்தாள் தெரியுமா'' என்று மேலே கண்ட சம்பவத்தை விவரிக்கிறார். தன்னைவிட அவளை எல்லோரும் புகழ்ந்ததால் அனசூயை மேல் அசூயை படவில்லை, பொறாமை இல்லை. ஆதர்ச திவ்ய தம்பதிகள். கணவனுக்கு சேவை செய்வதில் நிகரில்லாத ரிஷி பத்னி என்பதால் அவர் புகழ் மேலோங்கியது. உலகம் இன்றும் தொழும் சதி பதிகள் . லோக சம்ரக்ஷணத்துக்கு தங்களை அர்ப்பணிக்கும் ரிஷி தம்பதியர்.
மந்தாகினி அருவி கரையில், சித்ரகூடத்தில் அடர்ந்த வனத்தில் ரிஷி அத்ரி அனசூயா ஆஸ்ரமம் இருக்கிறது.ராமாயணத்தில் ஒரு காட்சி. சித்ரகூட பகுதியில் ஒரு பத்து வருஷ காலம் மழை இல்லாமல் பஞ்சம் . சதி அனுசூயா, தனது தவ வலிமையால், மந்தாகினி நதியை பூமிக்கு கொண்டுவருகிறாள்.
அமைதியான ரம்ய பிரதேசம். ரிஷிகள் சந்தோஷமாக தவம் செய்ய உகந்தது. இங்கிருந்து தான் தண்டகாரண்யம் காடு துவங்குகிறது. அது ராவணன் ஆளுமையில் இருந்தது.
No comments:
Post a Comment