Saturday, December 8, 2018

SIVA VAKKIYAR

ஓம் நமசிவாய !! J.K. SIVAN

தமிழ் நாட்டில் நிறைய கிராமங்களுக்கு நத்தம் என்று பெயர். நஞ்சை நிலங்களுக்கு இடையே விவசாயிகள் மற்றவர்கள் வாழும் கிராமங்கள் நத்தம் எனப்படும். அப்படி ஒரு கிராம நத்தம் போகும் வழியில் எங்கள் வண்டி நின்றபோது ஒரு பெண்ணின் கையில் நாகலிங்க புஷ்பம் நிறைய பார்த்தேன். அதன் அழகில் மயங்கி அதையே பார்த்துக்கொண்டிருந்த எனக்கு அந்த கிராம பெண் ஒரு பெரிய நாகலிங்க புஷ்பத்தை எடுத்து நான் கேட்கும் முன்பே, எனக்கு அதை பரிசாக கொடுத்தாள். ரொம்ப நாளைக்கு பிறகு நாகலிங்க புஷ்பம் பார்த்ததில் சந்தோஷம். நாகலிங்க புஷ்பத்தை பார்க்கும்போதெல்லாம் சிவபெருமானை ப்ரத்யக்ஷமாக பார்ப்பது போல் ஒரு பிரமை ஏற்படுகிறது.

ஒரு பெரிய சர்ப்பராஜன் அரவணைத்துக்கொண்டு மேலே படமெடுத்து சாய்ந்து குடைபிடிப்பது போல், அவன் அணைப்பில் ஸ்படிகமாக சிவன் லிங்க ஸ்வரூபத்தில் கமகம என மணம் கமழ இருந்தால் எப்படி ..? அதே.

அதே போல் எனக்கென்னவோ உருத்ராக்ஷ சிவ லிங்கமும் கண்ணை விட்டு அகல்வதில்லை.

அழகுக்கு அழகு செய்தது போல் மஹா பெரியவா என்கிற எல்லோர் மனத்திலும் நடமாடும் தெய்வத்தையும் நிறைய ருத்ராக்ஷத்தில் பார்க்கும்போது தனி அழகும், அபரிமித பக்தியும் பொங்குமே.

ஒரு சிவலிங்கத்தின் மேலே பிரம்மாண்ட நாகம். லேபக்ஷி என்கிற ஊரில் இருக்கிறதே. தெரியுமா? அந்த படம் இணைத்திருக்கிறேனே என்னைப் போல் பார்த்து மகிழ வேண்டாமா.

இந்த சிவனைப் பாடிப் புகழ ஆசை. எனக்கோ பாட்டு எழுத வராது. (தெரியாது என்பதை நாசூக்காக இப்படித்
தானே சொல்வது) .

அருமையான பாடல்கள் சில ஏற்கனவே இருக்கிறபோது அதையும் இதோடு சேர்த்தால்? சர்க்கரைப்பந்தலில் தேன் மாரி தான் அல்லவா?
'சிவனை மறந்தவர் எவர் வாழ்ந்தார். சிவனை நினைந்தவர் எவர் தாழ்ந்தார்' -- இது ஒரு பிரபலமான பாடல். நாம் பாடுகிறோம். கேட்டிருக்கிறோம். சிவன் முழுமுதற் கடவுள். அவனை நெக்குருகி பாடிய ஞானிகள் சிலரின் பாடல்களிலிருந்து பக்தி பாவ பூர்வ சிறந்த பொருட் செறிவு, சொற் செறிவு கொண்ட சில வரிகளைப் படிப்போம், ஆனந்திப்போம், அருள் வேண்டி சிவானுபவத்தில் கரைவோம்.

'ஓம்'' என்ற சப்தத்திலே அஞ்சு கோடி மந்திர சக்தி இருக்கிறது. நெஞ்சு அதை விடாது சப்திக்க வேண்டும். ' ஓம் நம சிவாய' என்ற அஞ்செழுத்தில் சகல சக்தி மட்டுமல்ல. பாப விமோசனமும் உள்ளது. சிவவாக்கியர் பலே சித்தர். சகலமும் அறிந்த ஞானி. அவர் சொல்கிறார் கேளுங்கள்:

'அஞ்சு கோடி மந்திரமு நெஞ்சுளே யடக்கினால்
நெஞ்சுகூற வும் முளே நினைப்பதோ ரெழுத்துளே
அஞ்சுநாலு மூன்றதாகி யும்முளே யடங்கினால்
அஞ்சுமோ ரெழுத்ததா யமைந்ததே சிவாயமே'

நமசிவாய என்று சொல்லும் அக்ஷரம் சிவனே இருக்கும் இடம். சகல அபாயத்திலிருந்து தப்ப உதவும் உபாயம். பிராணனை பாபத்திலிருந்து மீட்டு நற்கதி தர உதவும் மந்திரம் 'ஓம் நமசிவாய'.

'சிவாய மென்ற அட்சரம் சிவனிருக்கு மட்சரம்
உபாய மென்று நம்புவதற்கு உண்மையான அட்சரம்
கபாடமுற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை
உபாயம் இட்டு அழைக்குமே சிவாயம் அஞ்சு எழுத்துமே'

'அப்பனே, பரம சிவா, நீ இருக்க எனக்கு வேறு யாரிடமும் பயம் இருக்குமா ? எனக்கு நீ கொடுத்த பலம் எது தெரியுமா?
என்னிரு கரம் சிரமேல் குவித்து 'ஹர ஹரா, ஓம் நமசிவாயா' என்று அடி வயிற்றிலிருந்து , நாபியிலிருந்து மனப்பூர்வமான ஒலி எழுப்பி கண்ணில் நீர் பெருக, நெஞ்சுருக, உன்னை நினைத்து கூப்பிடுவது ஒன்று தானே.

'பரமுனக்கு எனக்குவேறு பயமிலை பராபரா
கரம்எடுத்து நித்தலுங் குவித்திடக் கடவதும்
சிரம்உருகி ஆர்த்தலும் சிவபிரானே என்னலும்
உரம்எனக்கு நீயளித்த ஓம்நமசி வாயமே.

பராத்பரா, ஒன்றே ஒன்று, அது நீ ஒன்று தான். பலவாகத் தோன்றும் எல்லாமே நீ ஒன்றே தான். அழுக்காறு கயமை, வஞ்சகம், காழ்ப்பு போன்ற என்னுள்ளே களிம்புகள் நிறைய இருந்தாலும் அவற்றை நீக்கி நானாகிய இந்த களிம்பேறிய தாமிரப் பாத்திரத்தை மும் மலமகற்றி , பளபளக்கச் செய்வதும் நமசிவாயா எனும் உன் நாமந்தான். அது தான் என்னுள்ளேயே நிலையாக நிற்கிறதே.

ஒன்று மொன்றும் ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே
அன்றுமின்றும் ஒன்றுமே அனாதியான தொன்றுமே
கன்றல்நின்று செம்பொனைக் களிம் பறுத்து நாட்டினால்
அன்றுதெய்வம்உம்முளே அறிந்ததே சிவாயமே.

கடைசியாக ஒன்று சொல்கிறேன். சிவா, நீ ஆதி, அந்தம் மூல விந்து, நாதம், பஞ்ச பூதம். நீயே நமசிவாய என்கிற பஞ்சாக்ஷரம். வேறு என்ன இருக்கிறது சொல்ல?

ஆதியந்த மூலவிந்து நாதமைந்து பூதமாய்
ஆதியந்த மூலவிந்து நாதம்ஐந்து எழுத்துமாய்
ஆதியந்த மூலவிந்து நாதமேவி நின்றதும்
ஆதியந்த மூலவிந்து நாதமே சிவாயமே.

மேலே சொன்னது அத்தனையும் நானல்ல. சிவ வாக்கியர் எனும் மஹான். பெரிய சித்தர் பிரான்.

இப்படிப்பட்ட பிறவி, மனிதப்பிறவி நமக்கு எப்படியெல்லாம் அவஸ்தைப்பட்ட பிறகு கிடைத்திருக்கிறது தெரியுமா? அதெல்லாம் கடந்து உன் நாமம் பற்றி கடைத்தேற வழி வகுத்த விமலா, சிவபெருமானே, உன்னையே நான் ''சிக்'' க்கெனப்பிடித்தேன். என்கிறார் மணி வாசகர். நாமும் பிடித்துக் கொள்வோமா?

'புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்அசுரர் ஆகி, முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற, இத்தாவர சங்கமந்துள்
எல்லாப் பிறப்பும், பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள், கண்டுஇன்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள், ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா, விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி, ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
கண்டுஇன்று வீடுற்றேன் –

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...