Thursday, December 6, 2018

AINDHAM VEDHAM.

ஐந்தாம் வேதம்   JK. SIVAN 

மஹா பாரதம்
                                                                            

                          அர்ஜுனன் திரும்பினான்ஒரே விஷயத்தை  மூன்று  வித்யாசமான காலத்தில் மூன்று வகையானவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  அந்த மூன்று வகையினருக்கும் பரம சந்தோஷம் என்பது தான் அவர்களை இணைக்கும் விஷயம்.  கேட்கும் விஷயமும் ஒன்றே தான். சொல்பவர் வேறு, கேட்பவர் வேறு.

ஜனமேஜயன் கேட்க  வைசம்பாயனர் இதையே  சொல்கிறார்.  யுதிஷ்டிரர் கேட்க வ்ரிஷபர்வர்  அல்லது தௌம்யர் சொல்கிறார். மூன்றாவது கொஞ்சம் விஷயாசமானது.  நீங்கள் யாருமே கேட்காவிட்டாலும்  நானே மஹாபாரதம் சொல்லிக் கொண்டிருக் கிறேன்.

இனி  விஷயம்  தொடரட்டும்.
குபேரன்  தனக்கு நேர்ந்த சாப  விஷயத்தை நினைவு கூர்ந்தான்.

''யுதிஷ்டிரா, ஒரு காலத்தில், குசஸ்தலத்தில் தேவர்கள் நாங்கள் வாசம் செய்தோம். எங்களைச் சுற்றி, யக்ஷர்கள் முன்னூறு மஹா பத்மம் (இது ஒரு பெரிய எண்ணிக்கை, இப்போது கோடி என்று பெரிய எண்ணைச் சொல்கிறோமே , அதைவிட ரொம்ப  பெரியது என்று மட்டும் புரிந்தால் போதும்.) வீரர்கள் ஆயுதம் தாங்கி காவல். அங்கே தான் அகஸ்தியரை பார்த்தேன். யமுனைக்கரையில் நிறைய மரங்கள் சூழ்ந்திருந்த இடத்தில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார். குள்ளமான  முனிவர்  வேடிக்கையாக இருந்தார்.  மொத்தமாக, தவ ஒளி வீசும் உடம்பு. தாடி, அதே அளவு உயரம் தலை சிகையைத் தூக்கிக் கட்டியிருந்த அவர் தனது இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி சூரியனை நமஸ்காரம் பண்ணினார். அப்போது என் நண்பன், ராக்ஷச தலைவன் மணிமான் என்பவன் விளையாட்டுத்தனமாக அவரிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டுஅதனால் அவர் தவம் கலைந்து என்னை நோக்கினார்.

''குபேரா, நீயும் உன் நண்பன் மணிமான் செய்ததைப் பார்த்துக்கொண்டு பேசாமல் தானே இருந்தாய்? இதன் பலனாக உன் நண்பன் மணிமான், உன்னுடைய படைகள் எல்லோருக்குமே ஒரு மனிதனால் மரணம் சம்பவிக்கும்.    என்று அந்த மனிதனை நீ காண்கிறாயோ அன்று உன் பாபம் விலகும் '' என்று சாபம் கொடுத்தார்.  யார் அந்த மனிதனாக இருக்கும் என்று பல காலம் மண்டையை உடைத்துக்கொண்டும் புரியவில்லை, தெரியவில்லை.

எத்தனையோ காலம் காத்திருந்தேன். கடைசியில் உன் தம்பி பீமசேனன் என் நந்தவனத்துக்குள் அத்து மீறி நுழைந்தான். அவனைத் தடுத்த எனது அத்தனை காவல் வீரர்களையும், ராக்ஷசன் மணி மானையும் கொன்றான். மணிமான் ஒரு மானுடனால் இறந்தான் என்று அறிந்ததுமே நான் ஓடிவந்து பீமனைப் பார்த்தேன். என் சாபமும் விலகியது. யுதிஷ்டிரா உனக்கும் உன் சகோதரனுக்கும் நான் கடமைப் பட்டிருக்கிறேன்'' என்றான் குபேரன்.

''யுதிஷ்டிரா, ஒன்றை புரிந்துகொள், பொறுமை, திறமை, தக்க நேரம்- காலம், இடம், சக்தி , இந்த ஐந்தும் தான் ஒருவனை வெற்றிபெறச்  செய்கிறது .கெடுதி நினைப்பவன், செய்பவன், அதன் விளைவை அறியாது வெற்றி பெற்றதாக நினைத்து, இவ்வுலகில் மட்டுமல்லாமல் அவ்வுலகிலும் எல்லையிலாத துன்பங்கள் அடைவான்.

அர்ஜுனன் மிக உழைப்பாளி. கடுந்தவம் செய்து, பரமசிவனிடம் பாசுபதம் பெற்றான். இந்திரனை அடைந்து அவனிடம் ஆயுதங்கள் பெற்று அங்கு விருந்தினனாக மதிப்புடன் நடத்தப் பட்டான். தேவர்கள் அனைவருக்கும் அவனது பராக்கிரமம் கண்டு மகிழ்ச்சி. நானும் வருணன் அக்னி, யமன் மற்றோரும் கூட அவனுக்கு தக்க ஆயுதங்களை வழங்கியுள்ளோம். அவனால் உங்களுக்கு மிக்க நன்மையையும் வெற்றியும் உண்டாகும். உங்கள் ராஜ்யத்தை மீண்டும் பெறுவீர்கள்' ..   ' ஆசி வழங்கியபின் குபேரன் மறைந்தான். யுதிஷ்டிரன் முதலானோர் ரிஷியின் ஆஸ்ரமத்துக்கு திரும்பினர்.

எல்லோரும் ஆவலுடன் அர்ஜுனன் வருகைக்காக ஆஸ்ரமத்தில் காத்திருந்தபோது ஒருநாள் இந்திரனின் தேர் வந்தது. அர்ஜுனன் அந்த தேரில் வந்தான். இந்திரன், வருணன், குபேரன், யமன், அக்னி, பரமசிவன் அனைவரின் ஆசியோடு ஆயுதங்களையும், அஸ்த்ரங்களையும் பெற்று வெற்றியோடு திரும்பினான் அர்ஜுனன். ஐந்து வருஷங்கள் ஓடிவிட்டதே.

தௌம்யரையும் யுதிஷ்டிரனையும் பீமனையும் காலில் விழுந்து வணங்கினான்.

இந்திரன் தனது தேரில் வந்து யுதிஷ்டிரனை சந்திக்கிறான். அனைவரும் இந்திரனை வணங்கி ஆசி பெறுகிறார்கள். நீங்கள் காம்யக வனத்துக்கு திரும்புங்கள். யுதிஷ்டிரன் விரைவில் பூமி ஆள்வான்'' என்று வாழ்த்தி இந்திரன் செல்கிறான்.

''அர்ஜுனா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது உனது வெற்றிகரமான முயற்சி. விவரங்களைக் கூறு '' என்று யுதிஷ்டிரன் கேட்டபோது அர்ஜுனன் விவரங்களை சொல்ல ஆரம்பிக்கிறான்.
தொடரும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...