இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அதனால் தான் இந்த மாதிரி விஷயங்கள் எழுதினால் ''ஆஹா நன்றாக புரிகிறதே '' என்பார்கள்.
நமது எண்ணத்தில் தோன்றுகின்ற சம்பவங்களை கதைகளாக கற்பனைகளாக நாம் கருதினாலும் அதற்கு ஆதாரமாக எங்கோ எப்போது நடந்த ஒரு விஷயம், சம்பவம் பின்னால் இருப்பது நிச்சயம். இல்லாததை இருப்பதாக எப்படி கற்பனை பண்ண முடியும்? எங்கோ ஏதோ ஒரு ரூபத்தில் இருந்த ஒன்று தான் இப்போது வேறு ரூபத்தில் எழுத்தாகவோ, சொல்லாகவோ, பாட்டாகவோ வெளி வருகிறது.
கதைகள் எழுதும்போது இது உண்மைச் சம்பவம் அல்ல. வெறும் கற்பனையே என்று சொல்கிறோம்,. எழுதுகிறோம். ரொம்ப பெரிய பொய் அது. ஏதோ ஒரு துளியாவது உண்மையில் நடந்ததாக இருந்து அதே இப்போது விஸ்வருபம் எடுத்து கற்பனையாக வந்திருக்கிறது என்பது தான் அப்பட்டமான உண்மை. அசல் இருந்தால் தான் நகல் வரும். உருவம் இருந்தால் தான் நிழல் தோன்றும். சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்.
ஒருவரைப் பார்த்தால் இவரை எங்கே இதற்கு முன் பார்த்திருக்கிறேன் என்று தான் முதலில் தோன்றும். எங்கோ பார்த்தமாதிரி இருக்கிறதே என்று கேட்க வைக்கும்.
வழக்கம் போல் ஒரு சின்ன கதை.
ஒரு காட்டின் மத்தியில் ஒரு நீண்ட காட்டாறு . அதன் கரையில் ஒரு மாமரம். அதன் பழங்கள் விஷம் கொண்டவை. அதன் பழங்கள் குலை குலையாய் தொங்கும். எவராவது அந்த பழங்களை உண்டால் அவர்களை நீண்ட நேர மயக்கத்துக்கு தள்ளும். அவர்களுக்கு தக்க சிகிச்சை அளிக்காவிட்டால் மரணம் நிச்சயம். இரு ஊர்களுக்கு நடுவே அந்த காடு இருந்ததால் நிறைய வழிப்போக்கர்கள் அந்த வழியே போவார்கள். விஷயம் தெரியாத புது ஆசாமிகள் பழத்தை தின்று மயங்கி விழுந்து கிடப்பார்கள். அதை நம்பி சில திருடர்கள் அந்த மரத்தின் அருகே காத்திருப்பார்கள். மயக்கமாக விழுந்தவர்களுடைய நகைகள், பணம் மூட்டை முடிச்சுகளை திருடிச் செல்வது வழக்கம்.
ஒரு நாள் சில வியாபாரிகள் வேற்று ஊர்கள் சென்று வியாபார ம் முடிந்து வசூலோடு திரும்பினவர்கள் அந்த காட்டுப்பாதை வழியாக வந்தார்கள். ரெண்டு குரூப்பாக வந்தவர்கள். முதல் குரூப் புக்கு ஒரு வயதானவர் தலைவர். ரெண்டாவது ஒரு வாலிபன் தலைமையில்.
முதலில் வந்த முதியவர் குரூப் அங்கு வந்தபோது ஆஹா நிறைய பழங்கள் இருக்கிறதே. இந்த மாமரத்தடியில் தங்கி இளைப்பாறி நிறைய பழங்கள் பறித்து சாப்பிடுவோம் என்று அவர்களில் சிலர் சொன்னபோது தலைவர் '' இது ஜாக்கிரதையான இடம் இல்லை வேறு இடம் சென்று தங்குவோம்.
வேண்டாம் நகருங்கள் இங்கிருந்து'' என்று சொன்னார். அவர் கண்களில் தூர நிறைய சிறுவர்கள் ஒரு கிணற்றுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தது தெரிந்தது. தனது குரூப்பில் ஒரு வாலிபனை கூப்பிட்டு
''அடே கோபாலு, நீ இங்கிருந்து வந்த வழியே செல். அடுத்த குரூப் பின்னாலே வந்து கொண்டிருக்கிறதே அவர்களை இங்கே தங்க வேண்டாம் என்று சொல்லி அழைத்து வா நாங்கள் மேலே போகிறோம்'' என்று தலைவர் சொல்லி விட்டார்.
ரெண்டாவது குரூப் சற்று நேரத்தில் அங்கே வந்தது. அதன் தலைவன் வாலிபனிடம் கோவாலு விஷயத்தை சொன்னான். அந்த குரூப் தலைவன் கோவிந்துவுக்கு கிழத்தலைவரை பிடிக்காது. முட்டாள் கிழவர் என்று சொல்வான்.
''அடே கோபாலு, நீயும் உன் தலைவர் ரெண்டு பேருமே அடி முட்டாள்கள். இதோ பார் இத்தனை பழங்கள் கேட்பாரற்று தொங்குகின்றன. நமக்கோ பசி. பேசாமல் சில பழங்களை தின்றுவிட்டு ஓய்வெடுப்போம். பிறகு செல்வோம்.'' எல்லோரும் பழங்கள் பறித்து தின்றார்கள். மயங்கி விழுந்தார்கள்.
இதற்குள் முன்னாள் சென்ற முதல் குரூப் கிழவர் யோசித்தார். ''ஏன் இன்னும் வரவில்லை அந்த குரூப். ஏதோ ஆபத்து. என்று உடனே சில வீரர்களுடன் அந்த மாமரத்தடிக்கு வந்து பார்த்தபோது அனைவரும் தங்க ஆபரணங்கள், பணம், கொண்டுவந்த பொருள்கள் எல்லாமும் கொள்ளை அடிக்கப் பட்டு மயங்கி விழுந்திருந்ததை பார்க்கிறார்.ஊருக்குள்ளே சென்று சில வைத்தியர்களை கூட்டி வருகிறார். எல்லோரும் தக்க சமயத்தில் வைத்தியம் பெற்று குணமாகி வாலிப தலைவன் கேட்கிறான்.
''ஐயா உங்களை தப்பாக நினைத்தேன். எப்படி இந்த இடம் ஆபத்தானது என்று கண்டுபிடித்தீர்கள்?''''அதோ பார்த்தாயா ஒரு கிணறு. நிறைய பேர் அதில் நீர் மொண்டு செல்கிறார்கள். அங்கங்கே நிறைய குடிசைகள். குழந்தைகள் நிறைய பேர் விளையாடுகிறார்கள். அநேகர் ஏழை குடும்பங்கள் என தெரிகிறது. இத்தனை குழந்தைகள் இருக்கும் இடத்தில் அருகே ஒரு மரத்தில் நிறைய மாம்பழங்கள் தொங்கிக்கொண்டிருந்தால் விட்டு வைப்பார்களா? அதில் ஏதோ சூது இருப்பதால் தானே குழந்தைகள் இந்த பக்கமே வரவில்லை. இது சாப்பிட தகுதியல்ல என்று மனதில் ஒரு உள்ளுணர்வு சொல்லியது.
காந்தி சொல்வாரே. எனக்குள் ஒரு சின்ன குரல் என்னை சரியான வழியில் போக அடிக்கடி சொல்லும். எல்லோருக்கும் தான் அது சொல்கிறது. ஆனால் யாரும் அதை லக்ஷியம் பண்ணுவதில்லை. நாம் எதையாவது செய்யலாமா, சொல்லலாமா, என்று யோசிக்கும்போது செய், செய்யாதே என்று அது உணர்த்தும். அதை தான் மனசாட்சி, உள்ளுணர்வு என்கிறோம்.
நாம் ஒரு விஷயத்தை உடனே தீர்மானிக்காமல் சற்று யோசிக்கும்போது மற்றவர் நம்மை ஏளனம் செய்யலாம், பயந்தாங்குளி, சந்தேகப்பேர்வழி, யோசிக்கத்தெரியாத முட்டாள் என்றெல்லாம் பட்டம் கட்டலாம். ஏன் மசால்வடை ஒரு கம்பியில் தொங்குகிறது என்று யோசிக்காத எலி தான் கூண்டில் சிக்கி உயிர் இழக்கிறது. எதிலாவது ஈர்ப்பு தென்பட்டால் அது சரியானதா, உண்மையானதா என்று உள்ளுணர்வு சொல்லும். அதை கேட்காவிட்டால் அது என்ன செய்யும்? நமக்கே நம் மீது நம்பிக்கை வேண்டும்.
உள்ளுணர்வு கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். நமது உண்மையான நண்பன்.
No comments:
Post a Comment